1. ஆதி மனிதன் ஆதாம் ! ஞாயிறு, செப் 20 2015 

 

ஆதி மனிதன் ஆதாம் !

 

adam

 

ண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார்.  – ஆதியாகமம் 2 : 7

“ஒளி தோன்றுக !” உலகத்தைப் படைக்கும் போது கடவுள் சொன்ன முதல் வார்த்தை இது தான். அடுத்த நாள் வானத்தைப் படைத்தார். மூன்றாம் நாள் கடலையும், நிலத்தையும் நிலத்தின் தாவர இனங்களையும் படைத்தார்.  நான்காம் நாள் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைக்கிறார். ஐந்தாம் நாள் வானத்துப் பறவைகள், நிலத்து விலங்குகள், தண்ணீரின் உயிரினங்கள் போன்றவை படைக்கப்படுகின்றன.

ஆறு நாட்கள் கட்டளைகளின் மூலமாக அனைத்தையும் படைத்த கடவுள் கடைசியில் மனிதனைப் படைக்க முடிவெடுக்கிறார். “மனிதன் தோன்றட்டும்” என அவர் ஒரு வார்த்தையில் அவனைப் படைக்கவில்லை.

கொஞ்சம் மண்ணை எடுத்து, அதை ஒரு மனித உருவமாய்ச் செய்து, தனது உயிர் மூச்சை ஊதி அவனுக்கு உயிர் கொடுக்கிறார். உலகின் முதல் மனிதன் உயிர்பெறுகிறான். கடவுளின் இயல்புடன், கடவுளின் சாயலில், கடவுளின் ஆவியுடன் ! அவன் தான் ஆதாம் ! ஆதாம் என்பதற்கு “மண்ணால் ஆனவன்” என்று பொருள்.

அவனுக்காய் ஏதேனில் ஒரு தோட்டம் உருவாக்கி அவனை குடியமர்த்தினார் கடவுள். அந்தத் தோட்டத்தில் கண்ணைக் கவரும் பழ மரங்கள் நிரம்பி வழிந்தன.

தோட்டத்தின் நடுவே இரண்டு மரங்கள். ஒன்று வாழ்வின் மரம். இன்னொன்று, நன்மை தீமை அறியும் மரம். “இந்தத் தோட்டத்தில் எதை வேண்டுமானாலும் சாப்பிடு, நன்மை தீமை அறியும் மரத்தின் கனி மட்டும் வேண்டாம். அதைச் சாப்பிட்டால் நீ சாகவே சாவாய் ! “ இதுதான் மனிதனுக்குக் கடவுள் தந்த முதல் கட்டளை.

விலங்குகளையும், பறவைகளையும்  படைத்தவர் கடவுள் தான். ஆனால் அவற்றுக்குப்  பெயர் சூட்டியவன் ஆதாம் ! தனக்குப் பிடித்த பெயர்களை அவற்றுக்கு இட்டான். மனிதனின் முதல் பணி பெயர் சூட்டு விழா தான் !

பின் கடவுள், ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கம்  வரச் செய்தார். அவனுடைய விலா எலும்பில் ஒன்றை எடுத்தார். அந்த எலும்பைப் பெண்ணாகச் செய்து ஆதாமுக்குத் துணையாகக் கொடுத்தார்.

துணையானவள், ஆதாமுக்கு இணையானவளாக இருக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அதனால் தான் விலா எலும்பிலிருந்து அவளைப் படைக்கிறார். தலையிலிருந்து படைத்து ஏவாளைத் தலைவியாக்கவோ, காலிலிருந்து படைத்து அவளை அடிமையாக்கவோ இல்லை. விலாவிலிருந்து படைத்து இணையாக்குகிறார்.

ஆதாமுக்கு கடவுள் இட்ட கட்டளை, “படைப்புகள் அனைத்தையும் ஆண்டு நடத்த வேண்டும்” என்பதே. அதாவது, அனைத்துக்கும் தலைவனாகவும், அதிகாரம் மிக்கவனாகவும் ஆதாமே நியமிக்கப் படுகிறான் !

படைப்பின் முழுமை ஆதாம் ஏவாளின் படைப்புடன் முழுமையடைகிறது. ஆறாவது நாளில் மனிதப் படைப்பு முடிவடைய, ஏழாவது நாள் கடவுள் ஓய்வு நாள் என அறிவிக்கிறார். அதாவது, கடவுளுக்கு கடைசி நாள் ஓய்வு நாள். மனிதனுக்கோ! ஓய்வுடன் தான் துவங்குகிறது முதல் நாள்.

பாவம் எனும் சாயல் எதுவுமே இல்லாமல் பிறந்த ஒரே மனிதன் ஆதாம் தான். மழலையாய் பிறக்காத ஒரே மனிதனும் ஆதாம் தான். பெற்றோர் இல்லாமல் பிறந்த ஒரே மனிதனும் ஆதாம் தான்.  அதனால் தான் முன்னோர் செய்த பாவத்தின் நிழலும் அவனிடம் இல்லை. அவனே ஆதித் தந்தை !

ஆதாமைப் பொறுத்தவரை எல்லாமே அவனுக்கு முதல் அனுபவங்கள். அவனுக்கு புரட்டிப் பார்க்க முந்தைய வரலாறுகள் இல்லை. பாவம் என்றால் என்ன ? மீறுதல் என்றால் என்ன ? சாவு என்றால் என்ன ? என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது.

எதையுமே தெரியாத நிலை மனிதனை இறைவனோடு நெருக்கமாய் உறவாட வைக்கிறது. தன்னால் எல்லாம் செய்ய இயலும் எனும் தன்னம்பிக்கை உருவாகும் போது அவன் கடவுளை விட்டு விலகிச் செல்கிறான்.

இறைவன் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு திட்டம் வைத்திருக்கிறார். அது யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இனிமையானதும், மன நிம்மதி தரக்கூடியதுமான வாழ்க்கையாகும். ஆனால் மனிதன் இறைவனை விட்டு விலகி பாவத்தின் வழியில் செல்லும் போது தனக்கென வழியை அவனே உருவாக்கிக் கொள்கிறான். இறைவனின் விரலை விட்டு விடும் மனிதன், திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து விடும் சிறுவனைப் போல விழிக்கிறான். கிடைக்கும் சின்னச் சின்ன வாழ்க்கை அனுபவங்களை வெற்றியென்றோ, சாதனையென்றோ பேசித் திரிகிறான்.

உண்மையில், இறைவனை விட்டு விலகித் திரிகையில் நாம் இழப்பவையே அதிகம். நிலையான விண்ணக வாழ்வு உட்பட.

 

முடிவல்ல துவக்கம் ஞாயிறு, நவ் 23 2008 

 

முடிவல்ல துவக்கம்

jesus_200

நல்ல விதைகள் எப்போதுமே
பயன் தராமல் போவதில்லை,

இயேசுவின் மரணம்
புதைப்பல்ல,
விதைப்பு.

மனுக்குலத்தின் மீட்பு
மண்ணுக்குள் மரணிக்குமா ?
இல்லை
அது தரயில் பயணிக்கும்.

சதிகளின் சட்டங்கள்
உடலை வருத்தின,
நீதியின் தேவன்
புது உயிரை வருத்தினார்.

நிரந்தர மீட்பைத்
மக்களுக்குத் தரவே
மீட்பரின் உயிர்ப்பு வரமானது.

வரலாறுகள் எல்லாம்
நரை முடி தடவ,
புது வரலாறு ஒன்று
புதிதாய் இதோ இங்கே
நிகழ்ந்தது.

இது,
ஏழைகளுக்காய் விழுந்த
தங்கத் துண்டு,

மக்கள் தொண்டு
கொண்டு
வாழ்வை வென்றவரின்
ஓர்
இறவாக் காவியம் இது.

இயேசு,
மனிதராய் வந்ததால்
மனுமகனானவரல்ல,
மனுமகனாகியதால்
மனிதனாய் வந்தவர்.

எனவே
சாவு அவருக்கு
சாய்வு நாற்காலி.
சாவு அவருக்கு இன்னொரு ஓய்வு,
மரணம் அவருக்கு
விசுவாச ஊழியன்.

இதோ,
இந்த மகத்துவ சகாப்தம்
இங்கே முற்றுப் பெறவில்லை…
ஆரம்பமாகிறது.

இது
மண்ணில் விழுந்து
மனதில் முளைக்கும் விதை.

கேட்கச் செவியுள்ளவன்
கேட்கட்டும்.

 

 

jesus_098

 

 

 

விசுவசியுங்கள்,
நம்பிக்கையில்லாமல் செய்யும்
செயல்கள் எல்லாம்
நடுக்கடலில் விழுந்த
துடுப்பிழந்த படகு தான்.

விசுவசியுங்கள்
வாழ்வடைவீர்கள்
நம்புங்கள் மீட்படைவீர்கள்.

இயேசுவின் உயிர்ப்பு ஞாயிறு, நவ் 23 2008 

 

இயேசு உயிர்க்கிறார்
 

இயேசுவின் உடல்
கல்லறைக்குள்
அடைக்கப்பட்ட
மூன்றாம் நாள் வந்தது.

உயிர்ப்பேன் என்று
இயேசு
உரைத்திருந்த
மூன்றாவது நாள் வந்தது.

காவலர்கள்
கவனம் கூட்டினார்கள்
ஆர்வலர்கள்
புலன்கள் தீட்டினார்கள்.

திடீரென
பெரிய நடுக்கம் நடந்தது.
மலைகளின் தலைகளிலிருந்து
கற்கள்
புரண்டோ டின.jesus_120

பிணியாளிகள் பலரின்
அகம்
சுகமானது.

வானத்திலிருந்து
ஓர்
பேரொளி பாய்ந்தது.

அது
கல்லறைக் கதவுகளை
சொல்லாமல் திறந்தது.
காவலர்கள்
கண்மைக்காமல் வியந்தனர்.
உயிரின் ஆழம் வரை பயந்தனர்.

இதோ,
ஆச்சரியங்கள் எல்லாம்
விழிகளை அகலத் திறக்க,
இயேசு
உயிர்த்துவிட்டார்.

மரணத்தின் மதில் சுவரால்
தனியாக்கப் பட்ட
உடலும் உயிரும்
உயிர்ப்பின் கதவால் ஒன்றாயின.

இது,
உடல் உயிர்கொண்ட
சம்பவமல்ல,
மனுமகன் மகிமை கண்ட
சம்பவம்.

கிறிஸ்தவத்தின் மையம்,
மனுமகனின் உயிர்ப்பு.

இதோ
எல்லோருக்கும் முடிவுரையாகும்
கல்லறை,
கிறிஸ்தவத்துக்கு முன்னுரையாகிறது.

எல்லோருக்கும்
அவமானச் சின்னமாயும்,
வெறுப்பின் விளக்கமாகவும் இருந்த
சிலுவை,
கிறிஸ்தவத்தின்
அடையாளமாகிறது.

இயேசு,
உயிர்த்து விட்டார்.
நீதியின் சாவு நிரந்தரமல்ல
என்பது
நிரூபிக்கப் பட்டது.

ஆணிகளுக்குள் அறையப்பட்ட
இயேசுவோடு
மறைந்தன முன் பாவங்கள்.
உயர்த்தப்பட்ட மனுமகனோடு
உயிர்த்தெழவேண்டும்
நற்செயல் நாற்றுகள்.

அன்னைக்கு முதல் காட்சி

 

கதிரவன்
கடலில் குளித்துக் கரையேறி
காலைப் பயணம் துவங்கிய போது
மதலேன் மரியாளும்,
இயேசுவின் தாயாரும்
கல்லறை நோக்கி வந்தனர்.

பகலவன் உதித்த செய்தி
அறிந்த அவர்கள்
பரமன்
உயிர்த்த செய்தியை
அறிந்திருக்கவில்லை.

இதோ,
கல்லறைக் கதவு திறந்திருக்கிறது !

நம்பமுடியா கண்கள்
இமைகளை இயக்க மறுத்து,
உதடுகள்
ஒன்றையொன்று
தொட்டுக் கொள்ள தயங்கி,
ஆச்சரியம் உள்ளுக்குள்
நீர் சரிக்க வியந்தனர்.

ஓடினர்,
உள்ளே
மரணத்தின் கட்டிலில்
காற்று மட்டுமே கெட்டியாய்
கிடந்தது.

இயேசு இல்லை.

கல்லறைக் கதவருகே
ஓர்
தேவ தூதர்.
சந்தோஷச் சிறகுகளை
சுமந்திருந்தார்.

வந்தவர்களின் வினாக்களுக்கு
பரவசப் பதிலை
பகிர்ந்தளித்தார்.

இயேசுவைத் தேடுகிறீர்களா ?
அவர்
உயிர்த்து விட்டார்.
மண்ணுலகப் பணியை
முடித்துவிட்டார்.

வாடாதீர்கள்
தேடாதீர்கள்.

புன்னகையோடு
தூதன் சொல்ல,
இருவரும் இதயத்தில்
பெருமிதம் கொண்டார்கள்.

வான தூதன் விலக,
சற்று நேர மெளனமும் கண்ணீரும்
இருவரையும்
இறுக்கிக் கட்டியது.

அப்போது
அவர்கள் முன்
இயேசு தோன்றினார்.

இருவரும்
மகிழ்வின் மலையில்
விழுந்தார்கள்,
ஆனந்த அலையில் மிதந்தார்கள்.

மனிதனாய் மண்ணில் வந்த
இயேசு
கடவுளாய்
முதன் முதலாய்
கண்ணுக்கு முன் வந்தார்.

 

உயிர்ப்பு உறுதிப்படுகிறது

 

எம்மானூஸ்,
செல்லும் வழியில்
சீடர் இருவரைச் சந்தித்து
உரையாடினார் இயேசு.

அவர்கள்
அவரை அறிந்ததும்,
ஆச்சரியமானார்கள்,
ஓர்
பிரபஞ்சப் பாக்கியம் பெற்றார்கள்.

*

இன்னும் சில சீடர்களுக்கு
இயேசு
காட்சியளித்தார்,
கலிலேய மலையிலும்,
திபேரியக் கடற்கரையிலும்.

மரணத்தின் ரணத்தை
தாண்டிய
மனுமகன்
திபேரியக் கடற்கரையில்
தோன்றினார்.

பேதுரு, தோமா, நத்தனியேல்
செபதேயுவின் மக்கள்
இன்னும் இரு சீடர்
என
கூட்டமான இடத்தில்
இயேசு தோன்றினார்.

சீடர்கள்
இரவு முழுதும்
வலைகளை வீசி
தண்ணீரை மட்டுமே
பிடித்துக் கொண்டிருந்தார்கள்
மீன்கள் எதுவும்
வலைகளுக்குள் வரவில்லை.

விடியற்காலையில்
இயேசு
கடற்கரையில் தோன்றினார்.

மனிதரைப் பிடிக்க
தான் தயாராக்கிய மனிதர்
மீன்களோடு போராடுவதைக்
கண்டார்.

வெற்று வலைகளோடு
தொற்றிக் கொண்டிராமல்,
இடப்பக்கமாய்
வலை வீசுங்கள் என்றார்.

வீசினர்,
அதுவரை
மீன்களில்லா பிரதேசமாய்
தோன்றிய இடம்,
இப்போது மீன் பண்ணையாய்
மாறி விட்டிருந்தது.

வலைகளால்
பழுவைத் தாங்க இயலவில்லை.

அப்போது தான்
உருவத்தை அவர்கள்
உற்றுப் பார்த்தனர்.
ஆண்டவனைக் கண்டு
ஆனந்தப் பட்டார்கள்.

இயேசு அவர்களோடு பேசினார்,

சீமோனை அழைத்து
“நீ என்னை நேசிக்கிறாயா ”
என வினவ,

ஆம் ஆண்டவரே
என்ற சீமோனிடம்
தயக்கம்
தங்கியிருக்கவில்லை.

என்
ஆடுகளை பேணி வளர்.
இயேசு பணித்தார்.

“என்னை அன்பு செய்கிறாயா
என் அன்புச் சீடனே”
மீண்டும் வினா
சீமோனைச் சந்தித்தது.

ஆம்
என்பதை அறிந்த
ஆண்டவர் நீரல்லவா ?

சீமோன்
சற்றே சங்கடப்பட்டுச்
சொன்னார்.

என்
ஆடுகளைக் கண்காணி

மூன்றாம் முறையாகவும்
அதே கேள்வி
இயேசுவிடமிருந்து எழ,

சீடரின் விழிகள்
உப்புக் கடற்கரையில்
கண்ணீர் விட்டன.

இயேசுவே
உம்மை நேசிக்கிறேன் என்பதை
அறிவீர் அல்லவா

என் ஆடுகளை
கவனமாய் காத்துக் கொள்.
இயேசு மூன்றாம் முறையாக
சொன்னார்.

மூன்று ஆணிகளில்
தொங்கிய இயேசு
மூன்று முறை சீமோனிடம்
உறுதிமொழி வாங்குகிறார்.

சீமோனை
அருளினால் நிரப்பி
நற்செய்தி பரப்பும் பணிக்காய்
தேர்ந்தெடுத்தார் இயேசு.

சீமோனே,
இளைஞனாய் இருந்தபோது
உனக்குத் தேவையானதை
நீ
செய்தாய்.

உன் பணிக்கால முடிவில்
உன் கைகள் விரிப்பாய்
யாரோ உன்னை
இழுத்துச் செல்வார்கள்.

இறுதி வரை
உறுதியில் நில்லுங்கள்.
உறுதி உடையும் நிலை
இறுதி எனக் கொள்ளுங்கள்.
என்றார்.

 

தாழிட்ட அறையில் காட்சி

 
அரசனுக்குப் பயந்து
தனிமை அறையில்
தாழிட்டுக் கிடந்த தன்
அப்போஸ்தலர்களை சந்தித்தார்
இயேசு

அவர்கள்,
ஆளும் அரசாங்கத்தின்
தண்டனைக்குத் தப்ப
வெளிச்சத்தையே வடிகட்டும்
தாழ்ப்பாளுக்குள்
ஒளிந்து கிடந்தார்கள்.

கதவுகள் காற்றையும்
தடைசெய்யும் இறுக்கத்தில்
அடைக்கப்பட்டிருக்க,

இயேசு
அவர்கள் முன்னால்
ஒளிச் சிற்பமாய் நின்றார்.

உங்களுக்குச் சமாதானம்
என்றார்.

சீடர்களின் நரம்புகளுக்குள்
அத்தனை அணுக்களும்
சுத்தமாயின,
பயத்தின் பற்கள் பிடுங்கப்பட்டன,
தைரியத்தின் கால்கள்
திடீரென முளைத்தன.

சீடர்கள் மகிழ்ந்தனர்,
தங்கள் இயேசு
சாதாரண மனிதனல்ல,
மரணம் வந்து முத்தமிட்டதும்
சுவடு தெரியாமல்
சிதைந்து போகவில்லை !

சாவு
எல்லோருடைய சரித்திரத்தையும்
முடித்து வைக்கிறது,
இயேசுவுக்கு அது
ஆரம்பித்து வைக்கிறது.
என்று அகமகிழ்ந்தனர்.

இயேசு அவர்களிடம்,
செல்லுங்கள்
உண்மையின் வார்த்தைகளை
உலகுக்கு சொல்லுங்கள்,
நற்செய்தி அறிவித்தலை
ஆரம்பமாக்குங்கள்.
என்றார்.

தோமையார் மட்டும்
அன்று
அவர்களோடு இல்லை.

தோமையார் விசுவாசத்தில்
ஆமையானார்.
விரைவான விசுவாசம்
அவரிடம் இல்லை.
குறைந்த விசுவாசத்தால்
குறுகினார்.

சந்தேகத்தின்
சொந்தக்காரர் அவர்.
சீடர்கள் சொன்னதையும்
நம்பாமல் பார்த்தார்.

என் கண்கள் அவரைக் கண்டு
அவர்
ஆணிக் காயங்களை
என் விரல்கள்
ஆழம் பார்த்து,
அவர்
விலாக் காயத்தை என் கைகள்
ஆழம் பார்த்தால் மட்டுமே,
எனக்குள்
நம்பிக்கை பூக்கும்,
அப்போது தான் ஆசுவாசமாவேன்
தப்பாமல் நான்
விசுவாசம் வளர்ப்பேன் என்றார்.

இயேசு
பிறிதொரு நாள்,
பன்னிருவருக்கும் காட்சியளித்தார்.
தோமையாரும் இருந்தார்.

இயேசு தோமையாரை அழைத்தார்

வா,

வந்து என் கைகளின் காயங்களில்
உன் விரல்களால் தொடு.
என்
விலாவின் காயத்துள்
கைகளை இடு.
நம்பு…
அது தான் பணிவாழ்வுக்குத் தெம்பு.

என் காயங்களை தழுவு
மனச் சாயங்களைக் கழுவு
என்றார்

தோமையார் நம்பினார்,
என் ஆண்டவரே,
என் தேவனே என்று
உற்சாகக் குரலெடுத்தார்.

இயேசு
மென்மையாய் பதிலளித்தார்,
உன் கண்கள் சொன்னதால்
நம்பினவன் நீ,
இதயம் சொல்வதை
நம்புபவன் இன்னும் பாக்கியவான்.

கண்டதால் நீ விசுவசித்தாய்
காணாமல் விசுவசிப்பவன்
இன்னும் பாக்கியவான்.

 

மனிதப் பணி முடிகிறது. விண்ணேற்பு

 உயிர்த்த இயேசு
சீடரின்
உள்ளங்களில் உலாவினார்,
தூய்மையான
கருத்துக்களால் துழாவினார்.

இறந்த நாட்களின்
அனுபவப் பாடங்களில்
அலைக்கழிக்கப்பட்ட சீடர்கள்,
உயிர்ப்பின் உவகையின்
உட்கார்ந்திருந்தார்கள்.

அவர்களின் மத்தியில்
ஆண்டவர்
உறுதியான செய்திகளை
இறுதியாய் சொன்னர்.

எத்தனை அருவிகள்
கலந்தாலும்
கடல் ஒன்று தான்.

எத்தனை நாசிகள்
நுகர்ந்தாலும்
காற்று ஒன்று தான்.

எத்தனை மேகங்கள்
நகர்ந்தாலும்
வானம் ஒன்று தான்.

செல்லுங்கள்,
உயிருள்ள போதனைகளை
உடுத்திக் கொள்ளுங்கள்,
செத்த போதனைகளின்
சுடுகாட்டுச் சந்ததியினரை
பூத்திருக்கும்
புது போதனையால் கழுவுங்கள்.

உலகெங்கும்
நற்செய்தியை நம்புவோன்
பாக்கியவான்.

அவன்,
நோயுற்ற உடலிலிருந்து
நோயை பிரித்தெறிவான்,
நச்சுப் பாம்பையும்
புன்சிரிப்போடு பிடித்தெறிவான்,
பேய்களை
வன்மையாய் அறுத்தெறிவான்,
கடைசிவரை
என்னுடைய அருள் பெறுவான்.

நற்செய்தி அறிவியுங்கள்,
உண்மையின்
உலைக்களத்தை மக்களுக்கு
அறிமுகம் செய்யுங்கள்,
தீமையின்
கொலைக்களத்திலிருந்து
அவர்களை பறிமுதல் செய்யுங்கள்.

சட்டங்களின்
பாம்புத்தோலுக்குள்
பதுங்கிக் கிடக்கும்
கட்டுவிரியன்களை கண்டறியுங்கள்,
அவர்களின்
விஷப் பற்களை
போதனைகளால் பிடுங்குங்கள்.

என் போதனைகள்
ஆணிகள் அறையும்
அச்சுறுத்தல் போதனைகள் அல்ல,
நம்
தீர்ப்பிடல் கொலைக்களத்திலும் அல்ல.
அன்பே நம் தீர்ப்பு
அன்பே அனைத்திற்கும் தீர்வு.

உங்களுக்கு
என் வல்லமையின் ஆடைகளை
வழங்குகிறேன்,
மனங்களில் என்
கருத்துக்களை இருத்துங்கள்
மனிதர்களை
என் இருக்கைக்கு அனுப்புங்கள்.

சொன்னபின்,

இதோ…
சீடர்களின் கண்கள் சிலிர்க்க
உயிரோடு விண்ணுலகம்
சென்றார் இயேசு.
அங்கே
தந்தையின் அரியாசனம் அருகே
மீட்பின் மகன் அமர்ந்தார்.

இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர்கள்
இதயத்தால் தெளிவு பெற்றார்கள்.

காட்சிகள் கண்டவர்கள்
சாட்சிகள் ஆனார்கள்,
போதனைகளைப் பரப்பும்
பாதங்கள் பெற்றார்கள்.
விதையின் முடிவு
செடியின் விடிவு.

இயேசு,
மரணத்திற்கு மறுப்பெழுதியவர்.
உயிர்ப்புக்கு உரையெழுதியவர்.
அந்த சிலுவை மரம்
ஓரு சகாப்தத்தின் முதலெழுத்தானது,
கிறிஸ்துவின் உயிர்ப்பு
கிறிஸ்தவ மதத்துக்கு உதயமானது.

வேதனைக் காலம் ஞாயிறு, நவ் 23 2008 

 

பாடுகளின் முன்னறிவிப்பு

 

தனக்கு வரப்போகும்
பாடுகளின் பாதையை
விளக்கத் துவங்கினார்
இயேசு

துயரங்களின் துருவங்களுக்கே
தான்
பயணிக்கப்போவதை
அடுத்திருந்த சீடர்களுக்கு
எடுத்துக் கூறினார்.

மனுமகன்
மரணத்திற்குள் தள்ளப்பட்டு
மண்ணுக்குள் மூன்று நாள்
புதைக்கப்படுவார்.

மனுமகன்
முற்றுப்புள்ளி இடப்படும் கதையல்ல,
அவர்
ஆரம்பத்துக்காய் புதைக்கப்படும்
விதை.

மூன்றாம் நாள்
நான் உயிர்ப்பேன்.
மரணத்தின் சுருக்குக் கயிறுகளில்
மரணத்தைத் தூக்கிலிட்டு
நான் உயிர்ப்பேன்.

இயேசு சொல்ல
சீடர்கள் அதிர்ந்தனர்.

இயேசுவின் பின்னால்
கர்வத்துடன் பவனி வந்தவர்கள்,
இயேசு
மரணிப்பேன் என்றதை
ஜீரணிக்காமல் பார்த்தனர்.

சட்டென்று
சங்கடத்தின் வார்த்தைகள்
அவிழ்த்தார் சீமோன்.

ஆகாது ஆண்டவரே…
உமக்கிது நேராது,
என் விழிகள் அதை பாராது.

இயேசுவின் வார்த்தைகள்
கோபத்தில் எழுந்தன.

போ அப்பாலே சாத்தானே.
நீ
கடவுளின் கருத்துக்கு
விரோதமாய் நகர்கிறாய்.

இறப்பதற்காகவே
பிறந்தவன் நான்.
என் சாவு
தற்காலிக இருள் போன்றது
நிரந்தர வெளிச்சத்தின்
முன்னுரை அது.

கடவுளின் விருப்பத்தை
ஆமோதிக்காதவர்கள்
அகன்று போகட்டும்.

இயேசுவின் கோபத்தில்
சிக்குண்ட சீமோன்
பாயும் சிங்கத்தைக் கண்ட
பசு போல
சத்தமின்றி பின்வாங்கினார்.

 

 
துணிந்தபின் விலகாதே

ஒருவன்
கோபுரம் கட்ட
ஆசைப்பட்டால்,
அஸ்திவாரம் தோண்டும் முன்பே
அதை
ஆராய்ந்து பார்க்கட்டும்.

பாதியிலே
விட்டு விடுபவன்
பழிச்சொல்லுக்கு ஆளாவான்.

போரிடச் செல்லும் அரசன்
எதிர் படையை
எதிர்கொள்ளும் முன்
படை பலத்தை
கணித்துக் கொள்ளட்டும்.

வெல்லும் போரா
வெள்ளைக் கொடியா என்பதை
அந்த
முன் ஆராய்ச்சி
முடிவு செய்யட்டும்.

கிளைகளின் கனவுகள்
பலிக்க வேண்டுமெனில்
வேர்களின் கால்கள்
நிலைக்க வேண்டும்.

என்னை பின்செல்பவன்,
தன்னை வெறுத்து
தன்
சிலுவையைச் சுமந்துகொண்டு
பின் செல்லட்டும்.

இது
பூக்களின் பயணமல்ல.
சிலுவைகளின் பேரணி.

இது
சங்கீதங்களின் வழிசல்
பாதையல்ல.
சங்கடங்களின் நெரிசல்
பாதை.

ஆன்மாவை இழந்தவன்
ஆகாயம் வரை தனதாக்கினாலும்
ஆதாயம் என்ன ?

உலகையே உள்ளங்கைக்குள்
உருட்டி வைத்தாலும்
உயிரை இழந்தால் பயனென்ன ?

முதன்மைப் பட்டியலில்
முதலிடம் பிடிப்பவை
விண்ணக வாழ்வின்
நுழைவுச் சீட்டுகளாகட்டும்.

மண்ணுலக வாழ்வின்
மதிப்பீடுகளின் அளவைகளில் தான்
விண்ணக இருக்கைகள்
வழங்கப்படும்

மரணம் என்னை நெருங்கும்


               

            
இன்னும் இரண்டு நாளில்
பாஸ்கா விழா.
இறைமகன் அப்போது
மரச் சிலுவை மரணத்துக்கு
கையளிக்கப்படுவார்.

சீடர்களிடம்
தன் சாவின் காலத்தைச்
சொன்ன இயேசு,

நீங்கள் என்னைவிட்டு
விலகி விட
விரும்புகிறீர்களா ?
என கேட்டார்.

எதிர்ப்பின் சூறாவளிக்கு
சிதைந்துவிடாத
சிந்தனை இருக்கிறதா,

பயத்தின் புயலில்jesus_165
நிறம் மாறி விடாத
உரம் இருக்கிறதா என
அறியவே வினவினார்.

பேதுரு உடனே
பதிலளித்தார்,
ஆண்டவரே,
வாழ்வுதரும் வார்த்தைகள்
உம்மிடம் இருக்க,
வேறு யாரிடம் நாங்கள் போவோம் ?

இரையாவேனென்னும் பயத்தில்
மீன்கள்
கரையேறலாமோ
கடவுளே –
என்பதாய் ஒலித்தன
பேதுருவின் வார்த்தைகள்.

இயேசு புன்னகைத்தார்.
நீங்கள்
அகல மாட்டீர்கள் என்பதும்,
உங்களில் ஒருவன்
அலகை என்பதும்
எனக்குத் தெரியும் என்றார்.

 
தொடர்ந்தவனே இடர் தருகிறான்

 

இயேசுவின்
பன்னிரு சீடரில் ஒருவன்
யூதாஸ்.

யூதாஸ்
சலன மனதின் சொந்தக்காரன்.
மனக் குளத்தில்
வெள்ளிப் பணம் விழுந்தால்
துள்ளிக் குதிக்கும்
மீனாய் மாறுபவன்.

இயேசுவைக் கொல்ல
சதி வேலை செய்த
தலைமைக் குருக்கள்
வலையை வீசி
யூதாசைப் பிடித்தார்கள்.

இயேசுவை பிடிக்கப் போகிறோம்.
அவரை நீ
படைவீரர்களுக்கு
அடையாளம் காட்டினால்,
வெள்ளிப் பணத்தை
அள்ளிச் செல்லலாம்
செல்வம் கொண்டு உலகை வெல்லலாம்.
என
ஆசை விலங்குகளை
அவிழ்த்து விட்டார்கள்.

யூதாஸ்
சிந்தித்தான்
காட்டிக்கொடுக்கலாமா வேண்டாமா
என்றல்ல,
எத்தனை பணம் வாங்கலாம்
என.

காட்டித் தருவேன்
முப்பது வெள்ளிப்பணம்
தப்பாது தருவீர்களா ?

யூதாசின் விண்ணப்பம்
வாதிடாமல்
ஒத்துக் கொள்ளப்பட்டது.

ஒரு
சகாப்தத்தின் சரிவுக்கு
சதித் திட்டம் அங்கே
சப்தமில்லாமல் ஒப்பமானது.

சூரியனையே
எரித்துச் சாம்பலாக்க நினைத்த
அறிவிலிகளின்
அருகிருந்தான் அவன்.

கட்டளைகளுக்கு அப்பாற்பட்ட
கர்த்தரை
நான்
கட்டிப் பிடித்து காட்டித் தருவேன்.

ரத்தத்தின் மாளிகைக்கு
அவரை
முத்தத்தின் முன்னுரையோடு
அனுப்பிவைப்பேன்.
என்றான்.

சுயநல அழைப்புகளுக்கு
செவிகொடுத்ததால்,
யூதாஸ்
இறையின் வரலாற்றில்
ஓர்
கறையாய் உட்கார்ந்தான்.

இறுதி இரவு உணவு

 

மாலையில்,
பன்னிரு சீடரோடு
பந்தியமர்ந்தார் பரமன்.

அப்பத்தை எடுத்து
பிரார்த்தனை முடித்துப்
பகிர்தளித்து,
சீடர்களைப் பார்த்து சொன்னார்,

நண்பர்களே,
உங்களில் ஒருவன் என்னை
காட்டிக் கொடுப்பான்.

தெளிவாய் வந்தது
தெய்வ வாக்கு.

ஒட்டிக் கொண்டிருக்கும்
உங்களில் ஒருவன்
எனை காட்டிக் கொடுப்பான்.

என்னை
சுட்டிக் காட்டும் அவனுக்கு
ஐயோ கேடு.

அப்போஸ்தலர்கள்
அதிர்ந்தனர்,
எங்களில் ஒருவனா ?
ஏனிந்த சந்தேகம் ஆண்டவரே.

வானுக்கு எதிராய்
பறவைகள் வழக்கிடுமா ?
நதியின் துளிகள்
மழைக்கு எதிராய்
மனு கொடுக்குமா ?

யார் என்று சொல்லுங்கள்
ஆண்டவரே,
யார் அவன் சொல்லும் !
சினத்தில் சீடர்கள் சிவந்தனர்.

என் பாத்திரத்தில் கையிட்டு
என் முகத்தில்
புன்னகையிட்டு,
என்னோடு இருக்கும் ஒருவனே
அவன்.

நம்பிக்கை மீது
கோடரி வைத்த அவனுக்கு
ஐயோ கேடு என்றார்.

யூதாஸ் அவரிடம்,
காட்டிக் கொடுப்பவன்
நானா ஆண்டவரே என
அப்பாவியாய்க் கேட்டான்.

நீயே சொன்னாய்
புன்னகைத்தார் பரமன்.

 
பணி வாழ்வுக்குத் தேவை பணிவு

 

மரணத்துக்கு முந்திய,
இறுதி இரவுணவில்
இயேசு
சீடர்களின் பாதங்களை
தண்ணீரால் கழுவி
இடைத் துண்டால் துடைத்தார்.

உம் பாதம் பட்ட
நிழலில் நடந்தவர்கள் நாங்கள்
நீர்
எங்கள் பாதம் தொட்டு
கழுவுவதா ?

அரச கிரீடம் ஒன்று
அடிமை ஆடை துவைப்பதா ?
அதிர்ச்சிக் கேள்விகளால்
சீடர் குழு
நடுங்கியது.

தலைவன் என்பவன்
பணியாளன் என்பதை
பணி மூலம் புரியவைத்தார்.

பேதுரு வருத்த வார்த்தை
வருவித்தார்.

இயேசுவே
நீரா என் பாதங்களை
நீரால் கழுவுவது ?
நேராது பரமனே இது,
நேரானதல்லவே இது.jesus_112

நான் உன் பாதங்களை
கழுவாவிடில்,
உனக்கு என்னோடு பங்கில்லை.
தாழ்த்துவதே தலையாய செயல்.
நான் செய்வது
பின்னர் உனக்குப் புரியும்.

எனில்,
பாதம் மட்டும் ஏன் பரமனே ?
தலையில் கூட
தண்ணீர் ஊற்றலாமே ?
பதட்டத்தில் பேசினார்
பேதுரு.

குளித்தவன் தூய்மையாய்
இருக்கிறான்
எனவே,
பாதம் கழுவினாலே
போதுமானது.

தலையில் இருந்தாலும்
தரையில் கிடந்தாலும்
கிரீடம் கிரீடம் தான்.

பணிவில் இருப்பவன் மட்டுமே
பணியில் இருக்க வேண்டும்.

உங்கள் ஆண்டவரான
நானே
உங்கள் பணியாளனானேன் !

நீங்களும்
கர்வத்தை அணியாமல்,
கவனமாய் இருங்கள்.

தற்பெருமைத் தலைகளை
துளிர்க்க விடாதீர்கள்
பணிவின் துணிவை வளருங்கள்.
என்றார்.
 
 

உடலை உண்ணுங்கள்

 

இயேசு
கோதுமை அப்பத்தை
கைகளில் ஏந்தி,
இது என் உடல் என்றார்.

திராட்சை இரசக் கிண்ணத்தை
எடுத்து
இது என் இரத்தம் என்றார்.

என் உடலை உண்டு
என் இரத்தத்தைக் குடித்து
என்
செயல்களுக்குள் செல்லுங்கள்.

இதுவே,
என் சாவுக்கு முந்தைய
இரவு உணவு.
இனிமேல் வருவதெல்லாம்
வேதனையின் காலம்.

போ யூதாஸ்,
நீ
செல்ல வெண்டிய தருணம் இது
செய்ய வேண்டியதை செய்.
என்றார்.

யூதாஸ் விலகினான்.
இயேசு பேசத் துவங்கினார்.

இப்போது
மானுட மகனின்
மாட்சிமைக் காலம்.
இன்னும் சில நாள் மட்டுமே
என் காட்சிக் காலம்.
பின் நீங்கள் என்னைக்
காணல் இயலாது.

நான் வரும் இடத்துக்கு
இப்போது நீங்கள்
வருவதும் நேராது.

மீண்டும் வருவேன்,
உங்கள் நம்பிக்கையின் மேல்
சில
பூக்களைத் தூவ.

உங்களுக்கான என்
கட்டளை ஒன்றே,
அன்பு செய்யுங்கள்.

நான் உங்களுக்குக் காட்டிய
அன்பின் ஆழத்தை
நீங்கள்
எல்லோர் மீதும் காட்டுங்கள்

பேச்சினால் பெரியவர்களாகக்
காட்டிக் கொள்ளும்
மனிதர்முன்,
நீங்கள்
புயல் போன்ற
செயல்களால் அறியப்படுங்கள்.

நீங்கள் என் பணியாளர் அல்ல,
ஏனெனில்
தலைவன் செய்வதை
பணியாளன் அறியான்.

நீங்களோ
என் தோழர்கள்.
என்னோடான பயணத்திற்கு
இணங்கியவர்கள்.

உங்களுக்கும் எனக்குமிடையே
மறைக்கும் திரைகள்
தொங்கியதில்லை.
எதிர் கருத்துக்கள் எதுவும்
தங்கியதில்லை.

உலகம் உங்களை வெறுக்கும்.
கவலைப் படாதீர்கள்
என்னையே மறுத்தவர்கள் அவர்கள்.

நீங்கள் இனி
உலகின் சொத்துக்களல்ல,
விண்ணக வித்துக்கள்.

நீங்கள் துயருறுவீர்கள்
அப்போது உலகம் மகிழும்.
நீங்கள் புலம்புவீர்கள்
அப்போதும்  உலகம்  மகிழும்.

ஆனால்,
உங்கள் புலம்பல் நீளாது.
வலியின் எல்லையெல்லாம்
மீண்டும்
என்னைக் காணும்போது
மாண்டு போகும்.
ஆனந்தம்
மீண்டு வரும் மீண்டும்.

அபோது நீங்கள்
சந்தோசத்தின் சக்கரவர்த்திகளாய்,
பூலோக அரியணையில்
புன்னகை புரிவீர்கள்.

உங்கள் அகமகிழ்ச்சி
அழிக்கப் பட மாட்டாது !

என்னிடம் நீங்கள்
விண்ணப்பங்கள் வைத்ததில்லை,
இனிமேல்
கேளுங்கள்… தரப்படும்.
உங்களுக்கு எதுவும் மறுக்கப் படாது
என்றார்.

பின்
வானத்தை நோக்கி.
தந்தையே,
நேரமாகி விட்டது
மகனை மகிமைப் படுத்தும்
என்றார்.

சீடர்கள்,
இயேசுவின் வார்த்தைகளை
உள்ளத்துள்
உருட்டிக் கொண்டிருந்தார்கள்.

 
மறுதலிப்பாய் நீ

 

சீடர்களோடு இயேசு
ஒலிவ மலைக்கு சென்றார்.

இன்றிரவே,
நீங்கள்
என்னைக் குறித்து இடறல் படுவீர்கள்.

மேய்ப்பனை வெட்டியபின்
மந்தைகள் சிதறடிக்கப்படும்
என்றார்.

மரத்தை முறித்துவிட்டால்
பறவைகள்
பறந்துவிடும் என்பதை
இயேசு அறியாதவரா ?

பேதுரு வருந்தினார்.
யார் உம்மை மறுதலித்தாலும்
நான் மாட்டேன் மெசியாவே என்றார்.

இயேசு சிரித்தார்,
இன்று இரவு
சேவலின் சத்தம் கேட்கும் முன்
மும்முறை நீ என்னை மறுதலிப்பாய்
என்றார்.

பேதுருவோ,
இல்லை இயேசுவே…
சாவதென்றாலும் அது
உம்மோடுதான் என்று முன்மொழிந்தார்.
சீடர் அனைவரும்
அதை வழிமொழிந்தனர்.

 

தந்தையோடு செபம்

 

பின்னர் இயேசு
கெத்சமெனித் தோட்டம் வந்தார்.
பேதுரு,யாக்கோபு,யோவான்
அவரோடு இருந்தனர்.

இறப்புக்கு முந்தைய இரவின்
வேதனையில் இயேசு செபித்தார்.

தந்தையே
முடியுமெனில்
இந்த வலி மடிந்து போகட்டும்.
ஆயினும்,
என் விருப்பம் முக்கியமன்று
உம் விருப்பமே என் பாக்கியம்.
 
மனிதனாய் வந்த மனுமகன்
வேதனையின் வார்த்தைகளை
வெளியிடுகிறார்,
ஆனாலும்
தந்தையின் விருப்பத்துக்கு
தலைவணங்குகிறார்.

சீடர்களோ
நித்திரையின் உச்சத்தில்
விழுந்து கிடந்தார்கள்.

அவர்கள்
நிலமையின் வீரியத்தை
உணராதவர்கள்.
பெருமழை வருவதறியாமல்
பறந்து திரியும்
பஞ்சு போல,
ஓய்வில் சாய்ந்திருந்தார்கள்.

ஒருமணி நேரம் செபிக்க
உங்களுக்கு முடியாதா ?
உள்ளம் ஊக்கமானது,
ஊனுடல் வலுவற்றது தான்.
ஆயினும்
விழித்திருந்து செபியுங்கள்.jesus_046

கூறிய இயேசு,
இரண்டாம் முறையும்
தனியே சென்று
தந்தையிடம் செபித்தார்.

நான் பருகினால் மட்டுமே
இந்த
துன்பத்தின் பாத்திரம் காலியாகுமெனில்
விருப்பத்துடன் பருகுவேன்.
உம்
திட்டம் மட்டுமே நிறைவேறட்டும்
என்றார்.

மூன்றாம் முறையாக
மீண்டும் மனசும் உடலும் மண்டியிட
இயேசு செபித்தார்.

ஆழமான செபத்தின்
கரைகளில்
நிம்மதிக் காற்று அவரை வருடியது.
இதயம்
எதையும் தாங்க தயாரானது.

பின் சீடர்களிடம் வந்து,
தூக்கம் போதும்
துக்கத்தின் காலம் துரத்துகிறது.
என் சாவுக்கான மேளம்
சப்தமிடுகிறது.

எழுந்திருங்கள்
போகலாம் என்றார்.

நீளமான தூக்கத்தில்
மூழ்கிக் கிடந்த சீடர்கள்
அந்த
விடியலுக்கு வெகுதூரமிருக்கும்
அதிகாலையில்
தூக்கத்தை உதறி எழுந்தார்கள்.

 
இறுதிக்குள் நுழைகிறார் இயேசு
 

அப்போது
அவர்களை நோக்கி
ஆயுதங்களோடு
ஓர் அவசரக் கூட்டம் வந்தது
யூதாஸ் தலைமையில்.

யூதாஸ் முன் வந்தான்,
இயேசுவை முத்தமிட்டான்.

இயேசு அவனிடம்,

யூதாஸ்,
முத்தம் அன்பின் அடையாளம்,
அதை
சுட்டிக் காட்டும் அடையாளமாக்கி
அசிங்கப்படுத்தி விட்டாயே
என்றார்.

படை வீரர்கள்
உடைவாள்களை உருவிக் கொண்டு
கள்வனை வளைக்கும்
காவலர் போல
சுற்றி வளைத்தனர்.

சினந்த சீடர் ஒருவன்
கூர் வாளெடுத்து உருவி
வீரன் ஒருவனின்
காதைக் கத்தரித்தான்.

இயேசு தடுத்தார்.
உன் வாளை உறையில் போடு,
வாளெடுத்தவன் வாளால் மடிவான்.
இவை நிகழ வேண்டும்
என்பதே ஏற்பாடு என்றார்.

துண்டாய் விழுந்து
துடித்தச் செவியைத் தேடி எடுத்து
வெட்டுண்ட இடத்தில் தொட்டு
ஒட்டுப் போட்டார் இயேசு.

தீமையின் பறவைக்கும்
நன்மையின் சிறகுகளை
நல்குகிறார்.

தடவிப் பார்த்த காவலன் விரல்கள்
வெட்டுப்பட்ட
சுவடு கூட இல்லாததால்
திடுக்கிட்டுத் திரும்பியது.

தனக்கான
பலிபீடம் தயாரித்தவர்களோடும்
பரமனிடம் இருந்த பரிவு
பிடிக்க வந்த பரிவாரங்களை
உலுக்கியது.

ஆனாலும்
அவர்கள், ஆள்வோரின்
கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள்.

ஆணை யின்
மிதியடிகளை
தூக்கிச் சுமப்பவர்கள்.

இயேசு
அவர்களைப் பார்த்து.
திருடனைப் பிடிக்க வருவதுபோல்
இருட்டைக் கூட்டிக் கொண்டு
திரிவதேன் ?

எதற்கு இந்த
அதிகாரத் தடிகளும்,
மரணம் சுமக்கும்
உடை வாள்களும் ?

நான்
நாள் தோறும் கோயிலில்
நற்செய்தி அறிவிக்கிறேன்
அப்போதெல்லாம் நீங்கள்
ஆயத்தமாகவில்லையா
என்றார்.

இழுத்துச் செல்ல வந்தவர்கள்
இயேசுவை
அழைத்துச் சென்றார்கள்.

உடனிருப்பேன் என்ற சீடர்கள்
உடனே
ஓடிப்போயினர்.

 

காய்பாவிடம் கையளிக்கப் படுகிறார்

 

இயேசு
காய்பா என்பவனிடம்
கையளிக்கப்பட்டார்,
அவன் ஒரு தலைமைக் குரு.

பொய்சாட்சிகளுக்காய் அவர்கள்
பிணங்களைப்
பிராண்டினார்கள்.

எந்த வலையில் போட்டு
இவனை இறுக்குவதென்று
இதயத்தைக் கசக்கினர்.

இறுதியில்
இவன் ஆண்டவரின் ஆலயத்தை
இடித்துக் தள்ளுங்கள்
மூன்று நாட்களில்
மீண்டும் கட்டுவேன் என்றான்,
என்றனர்.

உன் பதில் என்ன?
தலைமைக் குரு
அதிகாரத் தோரணையில்
அகங்காரமாய் கேட்டான்.

இயேசுவோ
மெளனத்தின் மீதே
மனம் சாய்த்திருந்தார்.

நீ
மெசியாவா ?
குரு மீண்டும் கொக்கரித்தார்.

நீரே சொல்லிவிட்டீர்.
இனிமேல்
மனுமகனின்
மாட்சிமை வருகையை
நீர் கண்டிப்பாய் காண்பீர் என்றார்.

இதோ…
தேவ நிந்தனை.
இனியென்ன சாட்சி வேண்டும்
இவன்
சாட்சியின்றி சாவுக்குரியவன்.

கூடியிருந்தவர்கள்
தலைமைக் குருக்களின்
சூதுக்குள்
குடியிருந்தவர்கள்,

அவர்கள்
இயேவைக் கொல்லச் சொல்லி
நச்சரிக்க வேண்டுமென
எச்சரிக்கப் பட்டவர்கள்.

சதிகார எதிராளிகளின்
அவையில்,
நீதிப் பறவை
நிர்மூலமாக்கப் பட்டது.

வாழ்வின் உச்சத்தை போதித்தவர்
கன்னங்களில்
எச்சில் உமிழப்பட்டது.

உன்னதங்களின் தேவனின்
கன்னங்களில் அறைகள் விழுந்தன.

வீதிகளில் இன்னும்
வெளிச்சம் விழவில்லை,
மக்கள் இன்னும்
விழித்து எழவில்லை.
 

மறுதலிக்கப் படுகிறார் மனுமகன்

 

கூடத்தின் முற்றத்தில்
குளிரைக் கொலைசெய்ய
விறகுக்கு மேல்
வன்முறை வெப்பம்
கொழுந்து விட்டு எரிந்தது.

பேதுரு,
வெப்பத்தின் தெப்பத்தில்
முக்காடிட்டு
மறைந்திருந்தார்.

ஊழியக்காரி ஒருத்தி
பேதுருவைப் பார்த்ததும்
புருவம் சுருக்கினாள்,
ஐயம் பெருக்கினாள்.

நீ
இயேசுவோடு இருந்தவனா ?
கேள்வி விழுந்த வேகத்தில்
தடுமாறினார் பேதுரு.

நானா ? இல்லையே !
படபடத்தது பதில்.

முகத்தை இன்னும்
முறையாய்
மறைத்து
மறைந்திருந்தார் பேதுரு.

இயேசுவுக்கு என்ன நிகழ்கிறது
என்பதை
அறிந்து கொள்ளும்
வலி கலந்த ஆர்வம் அவருக்கு.

இரண்டாவதாய் இன்னொருத்தி
அருகே வந்து
பதுங்கிய
பேதுருவிடம் பேசினாள்.

பேதுருவின் பேச்சில்
உழைக்கும் வர்கத்தின்
வாசனை,
மீன் மணத்துடன் மிதந்திருக்க
வேண்டும்.

உன் பேச்சே உன்னை
காட்டிக் கொடுக்கும் கண்ணாடி,
நீ
அவனோடு இருந்தவன் தான்
அவள் அழுத்தமாய் உரைத்தாள்.

அது நானில்லை,
அவர் யாரென்றே அறியேன்
பேதுரு மீண்டும்
தப்பித்தல் பதிலை ஒப்பித்தார்.

அவள்
தன் சந்தேகத்தை
சில காதுகளுக்குள் ஊற்றினாள்.

மூன்றாம் முறையாக,
வேறு சிலர்
பேதுருவின் பக்கம் வந்தனர்.

உண்மையைச் சொல்.
நீ அவனுடைய சீடன் தானே
மிரட்டல் குரலில்
மிரண்டு பதிலிறுத்தார் பேதுரு.

இல்லை
இல்லை
இல்லவே இல்லை.

மறுதலித்த ஓசை
முடிவடைந்த வினாடியில்
சேவல் ஒன்று
எங்கோ சப்தமிட்டது.

பேதுருவின் உள்ளத்தில்
அதிர்ச்சிப் பருந்து
வந்தமர்ந்தது.

சேவல் ஒலி
கேட்கும் முன்
மும்முறை என்னை மறுதலிப்பாய்
எனும்
இயேசுவின் ஒலி
மனதில் எதிரொலிக்க
வெளியே சென்று கதறி அழுதார்.

 

அடுத்தகட்ட விசாரணை

 

இயேசு,
பிலாத்துவின் அரண்மனைக்கு
பழிவாங்க
அழைத்துச் செல்லப்பட்டார்

செய்திகள் கேள்விப்பட்ட
யூதாஸ் வருந்தினான்.
இயேசு
தண்டனைகளிலிருந்து
தப்பிவிடுவார் என்ற கணக்கு
தப்பாகிவிட்டதில் கலங்கினார்.

சூரியனை உருக்கி
குடுவையில் கொட்டுவது
இயலாதென்றே
இறுமாந்திருந்தான் அவன்.

பலமுறை இயேசு
சதிகாரர்களின் சதி வளையத்தை
எளிதாக
வளைத்தெறிந்திருக்கிறார்.

பிடிக்க வந்தவர்களிடமிருந்து
மாயமாய்
மறைந்திருக்கிறார்.

அப்போதெல்லாம்
இயேசுவின் வேளை வரவில்லை
இப்போது
வந்ததென்பதை
யூதாசின் மனம் அறியவில்லை.

மாசற்ற இரத்தத்தை
மாட்டி விட்டேன்
முத்தத்தின் ஈரத்தால்
காட்டி விட்டேன்.

வெள்ளை மனிதனை
வெள்ளிக் காசுக்காய்
விற்று விட்டேன்.

கதறிய யூதாஸ்
குருக்களிடம் போய்
கையேந்தினான்.

விட்டு விடுங்கள்.

இயேசு
கடவுளின் மனிதன்
மனிதனின் கடவுள்.

வெள்ளிக் காசுகள் இதோ
இந்த
சுருக்குப் பையில் இருக்கின்றன.
பெற்றுக் கொள்ளுங்கள்
அவரை
விட்டுத் தாருங்கள்.

முட்டையை விட்டு
வெளிவந்த பறவை
மீண்டும்
முட்டைக்குள் போவது
சாத்தியமில்லையே.

யூதாசின் விண்ணப்பமும்
நிராகரிக்கப் பட்டது.

யூதாஸ்
கையிலிருந்த காசை
ஆலயத்தில் விட்டெறிந்தான்.
இயேசுவே மன்னியும் என
இதயம் கதறினான்.

வெள்ளிக் காசுகள்
ஆலயமெங்கும் அனாதையாய்
ஓட,

சுருக்குப் பை
பாவத்தின் அடையாளமாய்
சுருங்கிக் கிடக்க,
யூதாஸ்
சுருக்குக் கயிற்றில்
ஜீவன் சுருக்கினான்.

 

 
இயேசு,
பிலாத்துவின் முன்
பிணைக்கப்பட்டு நிறுத்தப்பட்டார்.

நீ,
யூதனின் அரசனா ?
கிரீடம் சூட்டிய பிலாத்து
கைதிக் கோலத்தில் நின்றிருந்த
இயேசுவிடம்
ஏளனக் கேள்வியை எறிந்தான்.

அரசன் என்பது
நீர் சொல்லும் வார்த்தை.
என் பணி
கிரீடத்துக்குள் தலை கொள்வதல்ல
உண்மைக்குள் நிலை கொள்வது.

உண்மைக்குச் சான்று
பகர வந்தவன் நான்
பகர்ந்து விட்டேன்
பகிர்ந்து விட்டேன்.

பிலாத்து நெற்றி சுருக்கினான்
உண்மையா ?
அது என்ன என்று
வினவினான்.

பொய்களின் புகலிடங்களில்
உண்மை உறைவதில்லை,
வெளிச்சக் குதிரைகள்
வெளியேறிப் போனபின்
இருட்டுக் கொட்டகைக்குள்
தெளிவு தங்குவதில்லை.

இயேசு
பிலாத்துவுக்குப் பதில் சொல்லவில்லை.

உனக்கு எதிராய்
குற்றச் சாட்டுகள்
குவிகின்றன,
உன் பதில்
உடனே சொல்.
பிலாத்து கட்டளையிட்டான்.

இயேசுவோ,
தப்பிக்கும் பதில்களில்
தலைவைக்கவில்லை.
மெளனத்தின் மீதே மீண்டும்
மனம் வைத்துக் கிடந்தார்.

பிலாத்து திகைத்தான்.

மன்னனின் முன்னால்
மெளனத்தின் முடியவிழ்க்காத
இயேசுவின் நிலை கண்டு
நிலை குலைந்தான்.

தன் முன்னால்
மன்னிப்பு மடியவிழ்க்காத
இயேசுவின் உறுதியில்
பயந்தான்.

உன்னை விடுவிப்பதோ
மரணத்துள் இடுவிப்பதோ
என்
ஆணையில் அடங்கியிருக்கிறது
பேசு
பிலாத்து கர்ஜித்தான்.

இயேசு நிமிர்ந்தார்.
விண்ணகத்திலிருந்து
வழங்கப்படாதிருந்தால்
உனக்கு
என்மீது
எள்ளளவும் அதிகாரமில்லை.

பிலாத்துவின் மனைவி
பிலாத்துவை
ரகசியமாய் அழைத்து
காது கடித்தாள்.

அவர் மனைவிக்கு
இயேசுவின் மீதுள்ள குற்றச்சாட்டுகள்
பொறாமையின் பிள்ளைகள்,
உண்மையின் வாரிசுகளல்ல
என்பது விளங்கியே இருந்தது.

எப்படியேனும்
இயேசுவை விடுவியுங்கள்,
பாவத்தின் துளிகளால்
நம்
கரங்களைக் கறையாக்க வேண்டாம்
என
பிலாத்துவிடம் பரிந்துரைத்தாள்.

பிலாத்து
சிந்தித்தான்.
வெறிநாய்களிடையே வீசப்பட்ட
வெள்ளாட்டை
எப்படித் தப்புவிப்பது ?

 
வாழ்வுக்கு மரண தண்டனை

 

இயேசுவை விடுவிக்கும்
வாய்ப்புக்காய்
மூளை கசக்கிய பிலாத்துவுக்கி
முளைவிட்டது
அந்த யோசனை.

பாஸ்கா நாளில்
கைதி ஒருவரை
கருணை அடிப்படையில்
விடுவிக்கும் வழக்கம்
தொடர்கிறதே.

இயேசுவை
வழக்கிலிருந்து விடுவிக்க
அந்த
வழக்கத்தையே
வழியாகக் கொள்ளலாமே !

பிலாத்து சிந்தனையை
ஆழப்படுத்தினான்.

இரண்டு கைதிகளில்
ஒருவரை விடுவிப்பதே வழக்கம்
ஒருவர் இயேசுவெனில்
இன்னொருவர்
மக்களின் ஏகோபித்த
வெறுப்பைப் பெற்றவனாய் தான்
இருக்க வேண்டும்.

பரபாஸ் !

பிலாத்துவுக்குள்
வந்தது அந்த பெயர்.

பரபாஸ்,
கலகக் காரன் என்று
சகலராலும் சபிக்கப்பட்டவன்.

அவனை விடுவிக்க
கூடியிருக்கும் கூட்டம்
தூசித் துளியளவும்
ஆசைப்படாதென்பது
பிலாத்துவின் எண்ணம்.

இயேசுவும் பரபாசும்
கூட்டத்தினரின் முன்னால்
நிறுத்தப்பட்டனர்.

இரு துருவங்கள்
அருகருகே நின்ற
அதிசயம் அது.

மன சலவைக்காரனும்
வன் கலகக் காரனும்
முன்னால் நின்றார்கள்.

பிலாத்து
எதிர்பார்ப்பு பொதிந்த
கேள்வியைக் கேட்டான்.

இருவரில் ஒருவர்
விடுவிக்கப் படுவார்.
யார் வேண்டும் என்பது
உங்கள்
தெரிவின் உரிமை.

யார் வேண்டும் ?
பரபாஸா ? இயேசுவா ?

வினாடி நேரம் நிலவிய
மெளனத்தை
இயேசுவின் எதிர்ப்பாளர்கள்
உடைத்தார்கள்.

பரபாஸ் போதும் எங்களுக்கு.

கூட்டத்தினர்
முன்வந்த குரலைப்
பின் தொடர்ந்தனர்.
பரபாசை விடுதலை செய்யுங்கள்.

பிலாத்து
இருந்த வாசலும்
இறுக அடைக்கப்பட்டதில்
திகைத்தான்.

இயேசு ?

இயேசு இறக்கட்டும்
கூட்டத்தின் குரல்கள்
விட்டத்தை எட்டின.

யார் வாழ வேண்டும் என்று
உயிர் தேய உழைத்தாரோ,
அந்த கூட்டம்
இன்று சாவுக்கு சம்மதிக்கிறது.

நிழல் தந்த பெரிய மரம்
வேர்களுக்குள்
வேதனை பாய்ந்து நிற்கிறது.

இயேசுவை நான்
என்ன செய்யட்டும் என்றான்
பிலாத்து.

சிலுவைச் சாவே
அவனுக்குத் தேவை.
கத்தியது கூட்டம்.

சாவுக்குரிய குற்றமொன்றும்
இயேசுவிடம் இல்லை
சாவுக்கு இவனை
சம்மதிக்க முடியாது.

இவன் தீங்கு என்ன ?
பிலாத்துவின் கேள்விகள்
கூச்சலில் மடிந்தன.

சாவு வழங்கு,
அதுவே வழக்கு.

இயேசுக்கு ஆதரவானால்
நீர்
பேரரருக்கு எதிராவீர்
மிரட்டியது கூட்டம்.

கலகத்திற்கு
பயந்த பிலாத்து
இறைமகனை
இறக்க விட சம்மதித்தான்.

இவன் இரத்தத்தின் மீது
நான் குற்றமற்றவன்,
இனி உங்கள் பாடு
என்று
கைகழுவி நழுவிச் சென்றான்.

பரபாஸுக்கு
விடுதலையும்,
விடுதலை நாயகனுக்கு
சிலுவைச் சாவும் தீர்ப்பிடப்பட்டது.

 

வலியின் விளைநிலம்

 

தீர்ப்பிடாதீர்கள்
என்று போதித்த இயேசு
சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டார்.

சாட்டை நுனிகள்
மாட்டை அடிப்பது போல்
மனுககனை அடித்தன.

சங்கிலிகள் பிணைக்கப்பட்டு
அகப்பட்ட
ஆயுதங்களெல்லாம்
மேனியெங்கும்
வீரியத்துடன் பாய்ந்தன.

ஒருகன்னத்தில் அறைந்தவருக்கு
மொத்த உடலையும்
மறுப்பின்றி வழங்கினார்
இயேசு.

வலிகளின் விளைநிலமானது
மெய்யானவரின்
மெய்.

ஏளனப் பேச்சுகள்
அவருடைய உள்ளத்தையும்
ஆயுதப் பேச்சுகள்
அவருடைய உடலையும்
கிழித்துக் கொண்டே இருந்தன.

இரத்த நாளங்கள்
உடலுக்கு வெளியே ஓடுவதாய்
உடைபட்ட இரத்தம்
சொன்னது.

இயேசுவின் ஆடைகள்
அவிழ்க்கப்பட்டன
அவமானம்
அவருக்கு அளிக்கப்பட்டது.

வானம் தந்தவருக்கு
செந் நிறப் போர்வை ஒன்று
மானம் மறைக்க
போர்த்தப்பட்டது.

பூவின் தலைக்கு
முட்கிரீடம் ஒன்று மாட்டப்பட்டது.
முட்களின் முனை பாய்ந்து
குருதியின் பாசனம்
விழிகளில் வழிந்தது.

ஆடையின் சிவப்பும்,
குருதியின் சிவப்பும்
இயேசுவை
சிவப்புச் சாயம் பூசிய
வெள்ளைப் புறாவாய் வெளிக்காட்டியது.

ஏளனப் பார்வைகள்
இயேசுவைத் தைத்தன.
கேலியின் குரல்கள் காதுகளை
பிய்த்தன.

வலியின் மீது இயேசு
வலிய நின்றார்.

பரமன் தோள்களில்
பாரச் சிலுவை ஒன்று
சாய்க்கப்பட்டது.

பலிபீடம் சுமந்து
செல்லும் ஓர் செம்மறியாடாய்
சிலுவையுடன்
பரமனின் பாதங்கள்
கற்களை மிதித்தன.

கல்வாரி மலை
பரமனின் பாதம் பட்டுப்
புனிதமடையக்
காத்திருந்தது.

 

எனக்காக அழவேண்டாம்

 

இயேசு-வின்
சிலுவைச் சாலையின் இருபுறமும்,
வேடிக்கை பார்க்கும்
வாடிக்கை மனிதர் கூடினர்.

மெல்லிய மனம் கொண்ட
மங்கையர் சிலர்
ஒப்பாரி வைத்தனர்.

தங்கள் சுமைகளை
தாங்கியவர்
சிலுவைச் சுமையை
ஏந்திச் செல்லும் கவலை
அவர்களுக்கு.

தங்கள் நோய்களை
நீக்கியவர்
தன்னை மரணத்துக்கு
உயிலெழுதிய வலி
அவர்களுக்கு.

இயேசு அவர்களிடம்,
எனக்காக அழுதது போதும்
உங்களுக்காகவும்
உங்கள் பிள்ளைகளுக்காகவும்
அழ ஆரம்பியுங்கள்.

பச்சை மரத்தையே
எரிக்கிறார்கள் எனில்,
பட்ட மரம் மட்டும்
எரிவதை தவிர்க்குமா ?
என்றார்.

சிலுவை
தோளில் அழுத்த,
படைவீரர்கள் கேலியால் அமிழ்த்த

தன்
மனித அவதாரத்தை
உறுதிப் படுத்தும் விதமாய்
இயேசு
தடுமாறி விழுந்தார்.

மலையொன்று சரிந்து
மலர் மீது விழுந்ததாய்
சிலுவை
விழுந்தவரை அழுத்தியது.

எழுந்தார் இயேசு.
அவர்
எழுவதற்காகவே விழுந்தவர்
விழுந்தவர்கள் எழுவதற்காகவே
வாழ்ந்தவர்.

பயணம் தொடர
கால்கள் இடற
மீண்டும் விழுந்தார் இயேசு.

தடுமாறினாலும்
தடம் மாறாமல்
மீண்டும் பயணம் தொடர்ந்தார்.

மூவொரு தேவன்
தந்தை
மகன்
தூய ஆவியாய் உறைந்தவர்,

மூன்றாவது முறையாய்
மீண்டும் விழுகிறார்.

ஒரு முறை விழுந்தாலே
தாவியோடும்
தாயன்பு கொண்டவர்
விழுந்து விழுந்து நடந்தாலும்
உதவிக் கரங்கள் வரவில்லை.

மலைக்குச் செல்லும் முன்
இறைவன்
இறந்துவிடுவாரோ
என்னும் பயம் படைவீரர்களுக்கு.

அவர்கள் கண்ணுக்கு
சக்திமானாய் தெரிந்தார்
சீரேனே ஊரைச் சேர்ந்த
சீமோன்.

சீமோன்
சிலுவையைச் சுமக்க
இயேசுவுக்கு உதவினார்.

உலக வரலாற்றின்
உதடுகளால்
உச்சரிக்கப்படும் பாக்கியம்
பெற்றார்.
 

ஆணிகளுக்குள் ஆகாயம்

 
பயணம்
கொல்கொதா என்றழைக்கப்பட்ட
மலைக்கு வந்தது.

கொல்கொதா என்றால்
மண்டையோடு
என்பது பொருள்.

தன்
கொலைக்கருவியை
தானே தூக்கி வரும் வலிமை
அவருக்கு இருந்தது.

சிலுவை
தரையில் போடப்பட்டது.
இயேசு
சாவுக்குத் தயாரானார்.

படைவீரர்கள்
இயேசுவை
சிலுவையில் கிடத்தினர்.

நீளமான ஆணி ஒன்று
வலது
உள்ளங்கையை துளைத்தது.
இன்னொன்று
இடது கையைக் குடைந்தது.

உள்ளங்களை தேடி நடந்த
இயேசு
உள்ளங்கையில் குருதி
வெள்ளம் பாய சிலுவையில் கிடந்தார்.

கால்கள் இரண்டும்
சேர்த்து,
மூன்றாவது ஆணி அறையப்பட்டது.

இயேசு கதறவில்லை.
சிந்தை சிதறவில்லை.
வேதனையை உண்டார்.

வலியின் விஸ்வரூபம்
வாழ்வுக்கு
வழங்கப்பட்டது.

பூ பூத்த குற்றத்துக்காய்
பூச் செடிக்கு
தீச் சூளை பரிசு.

பாதைகளைச் செதுக்கியதற்காய்
பாதங்களுக்கு
மரண தண்டனை.

சுட்டது என்பதற்காய்
சூரியனுக்குச்
சிறைச்சாலை.

சிலுவை மரம் பின்னர்
நேராக நிறுத்தப்பட்டது.
இயேசுவின் கரங்களும் கால்களும்
உயிரோடு சேர்ந்து
கசிந்தன.

 

வருந்திய திருடன், திருந்துகிறான்

 

இயேசுவைத்
திருடனாய்ச் சித்தரிக்க
அவர் சிலுவையில்
இருபுறமும்
கள்வர் இருவர்
சிலுவைகளில் தொங்கினர்.

அவர்களில் ஒருவன்
சாவின் விளிம்பிலும்
ஆண்டவனைப் பழித்தான்,

நீ
ஆண்டவன் தானே
காயத்திலிருந்து எங்களைக்
காப்பாற்றேன், என்றான்.

மற்றவனோ,
அவனைக் கடிந்து கொண்டு
நாம்
தவறுகளுக்காய்
சிலுவையில் தொங்குகிறோம்,
அவரோ
தவறியும் தவறிழைக்காதவர்.

நம் சாவு
நீதி வாழ்வதன் அடையாளம்
அவர் சாவு
நீதி செத்ததன் சாட்சி.
என்றான்.

ஆண்டவரே
உம் விண்ணக வாழ்வில்
என்னையும் ஏற்றுக் கொள்ளும்
என
விண்ணப்பமும் வைத்தான்.

இயேசு அவனிடம்,
இன்றே நீ என்னோடு
வான் வீட்டில் இருப்பாய்
என்றார்.

தற்கொலை முனையில்
வழுக்கியவனுக்கு
மீண்டும் ஆயுள் அளிக்கப் பட்டதாய்,
சாவுக்கு முந்தைய
நிமிடத்தில்
அவன் நம்பிக்கைக்கு
வாழ்வு வழங்கப் பட்டது.

இயேசு
வேதனையின் வெடிப்புகளிலும்
தன்னை
சிலுவையில் அறைந்தவர்களின்
மன்னிப்புக்காய் மன்றாடினார்.

எதிரியை நேசிப்பதை
மலை மேலிருந்து
பேசியதோடு நின்று விடாமல்
சிலுவை மேலும்
போதித்தார்.

“தந்தையே இவர்களை மன்னியும்”
இவர்கள்
அறியாமல் தவறிழைக்கிறார்கள்.

 
வேலிகளற்ற கேலிகள்

 

சிலுவையின் தலையில்
‘யூதர்களின் அரசன்”
எனும் கேலி வாக்கியம்
ஒட்டப்பட்டிருந்தது.

சமாதானப் பறவையை
சிலுவையில் அறைந்தபின்
அதன் இறக்கைகளை
பிய்ப்பதுபோல,
இயேசுவின் ஆடைகளை
சீட்டுப் போட்டு பகிர்ந்து கொண்டனர்.

ஆலயத்தை இடித்துக் கட்டுவோனே
உன்னையே
நீ காப்பாற்றிக் கொள்.

கடவுளின் மகனுக்கு
கீழே இறங்கி வர
கால்கள் இல்லையா ?

ஏளனப் பேச்சுகள்
இயேசுவை காயப்படுத்தவில்லை.
உணராத உள்ளங்களுக்காய்
அவர்
இதயம் கதறியது
மன்னிப்பு வழங்க வேண்டி.

சிலுவையின் கீழ்
இயேசுவின் ஆதரவாளர்கள்
நிராயுதபாணிகளாய்
நின்றார்கள்
கண்ணீர் கவசங்களுடன்.

 

இதோ உன் தாய்

 

இயேசுவின் சிலுவை அடியில்
தாயும் சீடரும்
கண்ணீர்க் கடலில்
உயிர் கிழியும் வேதனை உடுத்தி
நின்றிருந்தனர்.

தாய்ப்பாசம் மாதாவை
ஆழமாய் ஊடுருவியது,
செல்ல மகன் சிலுவையில்
கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் சிந்த,
கீழே
அன்னை கண்ணீர் சிந்த
காண்கின்றாள்.

விளக்க முடியா வேதனை !
ஆனாலும் இயேசு
விளக்குகிறார்.

தாயை நோக்கி
சீடரைக் காட்டி
இதோ உன் மகன் என்றார்,
சீடரை நோக்கி
இதோ உன் தாய் என்றார்.

அன்னை
மனுக்குலத்தின் தாயானாள்
சீடர்
அன்னையைத் தத்தெடுக்கும்
பிள்ளையானார்.

 விடைபெறுகிறார் வருகைக்கு

 

நண்பகல் துவங்கி
மூன்று மணி வரை
நகர் முழுவதும்
இருட்டு விரிக்கப்பட்டது.

சிலுவையில் தொங்கிய
இயேசு
தாகமாயிருக்கிறேன்
என்றார்.

மனிதம் மீதான
அவருடைய தாகத்தை
புரிந்து கொள்ள இயலாத
படைவீரர்கள்
தண்ணீரை நீட்டினார்கள்.

இயேசு
நாவை நனைத்துக் கொள்ள
ஆசைப்படவில்லை
உலகை அணைத்துக் கொள்ளவே
ஆசைப்பட்டார்.

மூன்று மணிக்கு,
இயேசு
உரக்கக் கத்தினார்.
ஏலி, ஏலி, லெமா செபக்தானி

என் கடவுளே, என் கடவுளே
ஏன் என்னை கை நெகிழ்ந்தீர்

கீழே நின்ற
கூட்டத்தினருக்கு
வழக்கம் போலவே
விளக்கம் தெரியவில்லை.

ஏலியைக் கூப்பிடுகிறானா
என்று
ஏளனம் செய்தது.

மீண்டும் ஒருமுறை
உரக்கச் சொன்னார்.

எல்லாம் நிறைவேறிற்று
என்று
இறுதியாய் சொல்லி
உயிரை உடலிலிருந்து
விடுவித்தார்.

தனக்காய் வாழாத
தவறுக்காய்,
உருகித் தீர்ந்தது
ஓர் மெழுகுவர்த்தி.
வீதிகளில் வெளிச்சத்தை
நிரப்பிவிட்டு.

கருணைக் கடல்
அடங்கிய வினாடியில்
நகர் முழுதும்
அதிர்ச்சி அலை அடித்தது.

ஆலயத்தின் திரை
மேலிருந்து கீழ் வரை
இரண்டாய் கிழிந்தது.

நிலம் நடுங்கியது,
பாறைகள் வெடித்தன,
கல்லறைகள் பல திறந்தன.

இதுவரை இல்லாத
ஆச்சரியச் செயல்களால்
நகர் முழுதும் அதிர்ந்தது.

மனுமகனுக்கான
முன்னுரையை
வானம் சொன்னது
வால் நட்சத்திரத்து வடிவில்.

பணி வாழ்வின் முதல் படியையும்
வானமே தெரிவித்தது.
இறைமகனுக்காய்
வானத்துப் புறா ஒன்று
இறக்கை அடித்து
வாழ்த்துச் சொன்னது.

இப்போது
முடிவுரையையும் அதுவே
கருப்புப் போர்த்தி
அறிவித்துப் போகிறது
மேகங்கள் வழியாய் கசிந்து விட்டு.

 

கல்லறைக்குள் உடல்

 

இயேசுவின்
இறப்பை உறுதிசெய்ய
குருக்கள் விரும்பினார்கள்.

இறக்காமல் இறங்கிவிடுவானோ
என்னும்
பயம் அவர்களுக்கு.

படைவீரர்கள்
இயேசுவின் சிலுவையருகே
வந்தார்கள்.

இயேசு
மரணத்தோடு எப்போதோ
பயணித்து விட்டிருந்தார்.

படைவீரர்கள்
ஈட்டியை எடுத்து
இயேசுவின் விலாவில் குத்தினர்.

இரத்தத் துளிகளும்
நீரும்
கசிந்தன
சாவுச் செய்திக்கு அது
முற்றுப் புள்ளியானது.

இறைவனின் உடலில் பட்ட
கடைசிக் காயமாய்
அது
உடலில் தங்கியது.

இயேசுவின் உடலை
எடுக்கவும்
அடக்கவும்
அனுமதி விடுக்கப்பட்டது
சூசை என்னும் சீடரால்.
பிலாத்து அனுமதி அளித்தான்.

இயேசுவின் உடல்
சீடர்களால் தரையிறக்கப்பட்டது
தாயின் மடியில்
சேயின் உடல் சலனமற்றிருந்தது.jesus_004

அன்னையின் மனதில்
வேதனை வாள்
ஊடுருவியது.

தொழுவம் முதல்
கல்வாரி வரை
காட்சிகள் கண்ணீரோடு கசிந்தன.

இயேசுவை
யூத முறைப்படி
புதுக் கல்லறை ஒன்றில்
அடக்கம் செய்தார்.

 

சூட்சியின் சந்ததியினர்
பிலாத்துவிடம் வந்தனர்.

இயேசு,
உயிரோடு இருந்தபோது
மூன்று நாளுக்குப் பின்
மீண்டு வருவேன்
என்றான்

உயிர்த்தெழுதல் உண்டெனக்கு
சாவு எனக்கு
தற்காலிக ஓய்வு என்றான்.

எனவே கல்லறையை
காவல் காக்க வேண்டும்
இல்லையேல்
உடலை எடுத்துச் சென்றுவிட்டு
இயேசு
உயிரை உடுத்துச் சென்றதாக
சீடர்கள் கதையளக்கக் கூடும்
என்றனர்.

சதிகாரர்களின்
விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

காவலர்கள் கல்லறைக்குக்
காவலர் ஆனார்கள்.
கல்லறைக்கு
முத்திரை சங்கிலிகள் கட்டப்பட்டன.

 சிலுவை.
 

சிலுவை.
ஓர் அவமானச் சின்னம்.
இயேசுவின் குருதி தான்
அதை
புனிதமானதாய்
புதுப்பித்தது.

சிலுவை,
இரு மரச்சட்டங்கள் இணைந்த
கொலைக் கருவி,
இயேசுவின் இரத்தம் தான்
அதை
இதய இணைப்பின் கருவியாய்
நிறம் மாற்றி நீட்டியது.

சிலுவை,
இயேசுவின் சிரம் தொடும் வரை
வெறும் மரம்,
பிறகே அது
வரமாய் உருமாறியது.

சிலுவை,
தாழ்த்தப்பட்ட சின்னம்
இயேசு
உயர்த்தப் படும் வரை.

ஓர் வலியின் சின்னமாய்
ஒலித்துக் கொண்டிருந்த
சிலுவைக் குரல்கள்,
ஒளியின் மின்னலாய்
மிளிரத்துவங்கின அந்த
மயான மத்தியானம் முதல்.

சில புனிதச் சின்னங்கள்
அவமானச் சின்னமாக
அவதாரம் எடுப்பதுண்டு.
யூதாஸின் கபடம் கலந்த
முத்தத்தைப் போல.

சில
அவமானச் சின்னங்கள்
வாழ்வின் சின்னங்களாக
விஸ்வரூபம் எடுப்பதும் உண்டு
இயேசுவைச் சுமந்த
சிலுவையைப் போல.jesus_018

கொலை கொம்பாய் இருந்த
சிலுவை,
தன் ஜென்ம பாவங்களைக் கழுவி
கொழு கொம்பாய் மாறியது.

சிலுவை
இனி சாவின் சின்னமல்ல,
ஓர்
சாவு அதை
வாழ்வின் சின்னமாய்
வழிமொழிந்து சென்றது.

இறுதி நாளுக்கான எச்சரிக்கைகள் ஞாயிறு, நவ் 23 2008 

முடிவுக்கான அறிகுறிகள்
 

இறுதி நாளின்
அறிகுறிகளென்ன ஆண்டவரே ?
சீடர்கள்
தூவிய கேள்விக்கு
தூயவன் பதில் சொன்னார்.

என் பெயரைச் சொல்லி,
நான் தான் மெசியா என்று
ஈசல் கூட்டங்கள்
எழும்பி அலையும்.
எச்சரிக்கையாயிருங்கள்.

போர் முழக்கங்களையும்,
மரணத்துக்கான பறையடியையும்
கேட்டு
கலங்கவேண்டாம்.
இவை நிகழவேண்டிய நிஜங்கள்.

இது
ஒரு முடிவின் துவக்கம் மட்டுமே.
இதுவே
முடிவின் முடிவொலி அல்ல.

நாடுகள் தாகம் கொண்டு
நாடுகளை
அழிக்க எழும்பும்.

அரசுகள் அரசு வெறி கொண்டு
அரசர்களோடு
ஆயுத போதனை நடத்துவர்.

நோய்களும்
பஞ்சங்களும்
உயிர் குடித்து
வீர்த்துக் கிடக்கும்.

உங்களை மக்கள்,
வேதனைக்கு விற்று விடுவார்கள்,
கொலைக் கயிறுகள்
உங்களுக்கு பரிசாக விழும்.
தெய்வத்தில் தைரியமாயிருங்கள்.

என்னை நேசிப்போரை
மக்கள் வெறுப்பார்கள்.
மக்கள் பலர்
இடறல் வெள்ளத்தில் வீழ்ந்து
மனுமகனை மறுதலிப்பர்.

ஒருவன் விரல்
இன்னொருவன் நெஞ்சுக்கு நேராய்
உயிர் கொல்லியாய்
உருமாறி நீளும்.

அக்கிரமங்களின் அணிகலன்கள்
மட்டுமே
அகிலம் முழுதும் அணியப்படும்.

உலகம் முழுதும்
விண்ணக போதனை
விரிந்த பின்னரே
இறுதி காலம் இறங்கிவரும்.

இறுதிவரை
உறுதிகொள்பவன்
பேறுபெற்றவன்.

 

ஏமாந்து போக வேண்டாம்

 

இயேசு
சீடர்களுக்கு
இறுதி நாள் நெருங்குகையில்
உறுதி உரையாற்றினார்.

யாரேனும் வந்து,
மனுமகன் அதோ
பாலைவனத்தில் பயணிக்கிறார்,
உள்ளறையில்
உட்கார்ந்திருக்கிறார்,
என்றால் நம்ப வேண்டாம்.

ஏனெனில்,
மின்னலின் வேகத்தில்
மனுமகன் வருகையும்,
ஒளியின் பாதையில் அவர்
பயணமும் இருக்கும்.

பிணம் எங்கேயோ,
அங்கே தான்
கழுகுகள் கூடும்.

உங்கள் உடலில்
பிணவாடை வராதபடி
பரிசுத்த எண்ணங்களால்
அழுக்ககற்றி வாழுங்கள்

வருகை நாட்களின்
வேதனைக்குப் பின்,
சூரியன் ஒளியிழந்து
இருட்டுக்குள் விழும்.

இருட்டுக்குள் சூரியன் விழுவதால்
இரவல் ஒளியின்றி
நிலவும் மங்கி அணைந்துபோகும்.

விண்மீன்கள் சருகுகளாய்
பூமிக்கு
பணியக்கும்.

அத்தி மர இலைகள்
அழகாய் மிருதுவாய் மலரும் போது,
கோடை இதோ
விரலிடை தூரம் என்பீர்கள்.

இறுதி நாளின் வருகையையும்,
இந்த
அறிகுறிகளால் அறியுங்கள்.

பாவிகள் அப்போது
புலம்பி அழுவார்கள்.
தூதர்கள் வந்து
நீதிமான்களை மட்டுமே
அழைத்துச் செல்வர்.

விழிப்பாய் இருங்கள்,
இதயத்தின் இமைகளை
கவனமாய் இமையுங்கள்,

ஒரு நாள் வரும்,
அது
மனுக்குலத்துக்குச்
சோதனைக் காலம்.

நானே அவர் என்று சொல்லி
கடவுளாய் காட்டிக் கொண்டு
பல
கபட ஓநாய்கள்
மாசற்ற குருதியின் மேல்
குறிவைத்துப் பாயும்.
அவற்றின் நகக் கீறலுக்கு
பலியாகாதீர்கள்.

உள்ளத்தின் உறுதியை
உற்றுப் பார்த்து
இற்றுப் போகச்செய்யும்
பல
தந்திர வேலைகளைச் செய்து
தலைவன் என்று
சில
குள்ள நரிகள் உள்ளம் தாவும்.
பரிசுத்தத்தைப் பாதுகாத்துக்
கொள்ளுங்கள்.

தொலைதூரப் பயணத்துக்கு முன்
தலைவன்
பணியாளனிடம் ஒப்படைக்கும்
வீட்டுச் சாவி
பத்திரமாய் இருக்கட்டும்,
தலைவனின் வருகையின் போது
வாசல்
ஒளியாய் இருக்கட்டும்.

நீங்கள்
துயிலும் நேரம் தலைவன் வந்தால்
இப்போது
பயிலும் பாடங்களுக்கு
அப்போது
அர்த்தமிருக்காது.
 

தீயவற்றுக்கு எதிராக தீ மூட்டுவேன்

 

நான்
மண்ணுலகில்
தீ மூட்ட வந்தேன்.
இது
விண்ணகத் தீ.

கருத்துக்களோடு கருத்துக்கள்
மோதி
ஆழ்ந்து கிளம்பும் அக்கினியில்
இனி
குடும்பங்களிடையே
பிளவுகள் வரும்.

ஒன்றாயிருந்த ஐவரில்
மூவர் மனம் திரும்புவர்
இருவர்
எதிராவர்.

விபத்துக்களும் சாவுகளும்
தீயோருக்கானது
என்கிறீர்களே,
அவர்களை விடத் தீயோர்
உங்களிடையே உண்டு
என
உறுதியாய் சொல்லுகிறேன்.

அறிந்து கொள்ளுங்கள்
வாழ்வுக்கான வழியை.
விலக்கி விடுங்கள்
சாவுக்கான சாலையை.

  

விழித்திருப்பவன் விவேகி

 

விழிப்பாய் இருங்கள்.
உங்கள் செயல்களில் இனிமேல்
செத்த வாசம் வீசாமல்
சுத்த வாசம் வீசட்டும்.

இறுதி நாள்
அறிவிப்புகளோடு வருவதில்லை,
நினையாத நேரத்தில்
உங்கள் முன் வந்து நிற்கும்.

திருடனின் வருகை
வீட்டுத்தலைவனுக்குத் தெரிவதில்லை,
தெரிந்தால்
திருட்டு நடக்க விடுவதில்லை.

மனுமகன் வருகையும்,
முன்னறிவிப்பின்றி
பின்வரும்.

வயலில் இருவர்
வேலை செய்வர்.
அதில் ஒருவன் 
எடுக்கப்பட்டு மற்றவன் விடப்படுவான்.

இருவர் இருந்து
மாவாட்டுவர்,
அதில் ஒருத்தி எடுக்கப்பட்டு
மற்றவள் விடப்படுவாள்.

தலைவன் ஏற்படுத்திய
விசுவாச ஊழியன்,
நம்பிக்கைக்குள் நிற்கும் வரை
அனைத்துக்கும் அதிபதியாவான்.

தலைவன் வரும் வரை
கும்மாளமிட்டு கடமை தவறுபவன்,
நினையா நேரத்தில்
அழிவுக்குள் அனுப்பப்படுவான்.

விழிப்பாயிருங்கள்,
இன்றே… இப்போதே
உங்கள் செயல்களில்
வாழ்வின் வாசனை சேருங்கள்,
நிச்சயமாய் நேசனை சேர்வீர்கள்.

 

இறுதித் தீர்வு இது தான்

 

இறுதி நாளில்
பொதுத் தீர்வை நடக்கும்.

இறந்தவர் அனைவரும்
உயிருடன் எழுவர்
இறைவன் முன்னால்
பணிவுடன் தொழுவர்.

இடையன் ஆடுகளை
தனித்தனியே பிரிப்பதுபோல்
மனுமகனின்
இனம்பிரித்தலும் இருக்கும்.

செம்மறிகளும் வெள்ளாடும்
இடையனுக்கு
பார்த்ததும் புரிவதுபோல்,
நல்லோரும் தீயோரும்
கடவுள் கண்ணுக்கு காட்சி தருவர்.

நல்லவர் வலப்பக்கமும்,
தீயோர் இடப்பக்கமும்
இருபிரிவாக இருப்பர்.

வலப்பக்கம் இருப்போரை
விண்ணக வாழ்வு
வரவேற்கும்.

மனுமகன் அவர்களுக்கு சொல்வார்,
வாருங்கள்,
நன்மையை விதைத்து
நல்லவற்றை அறுவடை செய்தவர்களே
வாருங்கள்.

உங்கள்
நேசத்தின் கிளைகளில்
என்னை
இளைப்பாற விட்டவர்கள்
நீங்கள்.

நான் பசித்தபோது
புசிக்கக் கொடுத்தவர்கள்,
என் தாகத்தின் நாவுக்கு
தண்ணீர் வடித்தவர்கள்,
என் நிர்வாணத்துக்கு
ஆடை உடுத்தவர்கள்,
என் தனிமைச் சிறையில்
ஆறுதல் கரமானவர்கள்,
என் நோயின் வலிகளில்
உடனிருந்தவர்கள் நீங்கள் தான்.
வாருங்கள் என்னோடு
என்பார்.

அப்போது நீதிமான்கள்,

இவையெல்லாம் எப்போது
நிகழ்ந்தது நாயகனே
என்பர்.

இதோ,
ஓர் சின்ன ஏழைக்கு நீங்கள்
செய்த நன்மைகள் எல்லாம்
எனக்காய் செய்த
தவங்களாயின.
இப்போது அதற்கான வரம்
வழங்கப்படுகிறது.

எப்போதெல்லாம்
சுயநல மிருகங்களை
சிறையில் அடைத்துவிட்டு
பொது நலப் புறாக்களோடு
பவனி வந்தீர்களோ,

எப்போதெல்லாம்
தனி மனித விருப்பங்களை
விலக்கி விட்டு
சமுதாய துயர் துடைக்க
கைக்குட்டை கொடுத்தீர்களோ

எப்போதெல்லாம்
தேவையின் தேடல்களுக்கு
நீங்கள்
விடையானீர்களோ
அப்போதெல்லாம்
என்னோடு உறவாடினீர்கள்.
என்பார்.

இடப்பக்கம் இருப்போரிடம்
கோபக் கண்களோடு
கடவுள் பேசுவார்.

சபிக்கப்பட்டவர்கள் நீங்கள்
என்னை
நிராகரிப்பதை மட்டுமே
நிராகரிக்காதவர்கள் நீங்கள்.

என்னை ஏற்றுக் கொள்வதை
மட்டுமே
ஏற்றுக்கொள்ளாதவர்கள்
நீங்கள்.

செல்லுங்கள்,
அணையா நெருப்பு
உங்களை அணைத்துக் கொள்ளும்.
மரணம் இல்லா
வேதனையின் விளைநிலமாகட்டும்
உங்கள் தேகம் என்பார்.

இடப்பக்கம் இருப்போர்
திடுக்கிடலோடு
இறைவனிடம்,

ஐயோ கடவுளே
எப்போது உம்மை நாங்கள்
நிராகரித்தோம்.
நீர் எங்களிடம்
வரவே இல்லையே
பின் எப்படி தரவே இல்லை என்கிறீர்
என்பார்கள்.

உன் அயலானின்
வலி களையா வினாடிகள் எல்லாம்
என்னை
அழவைத்த தருணங்களே.

எனவே,
மண்ணுலக மனிதரில்
என் பிம்பத்தைப் பார்ப்பவன்
பாக்கியவான்.
எதிர்பலன் எதிர்பாராமல்
நன்மை தூவுபவனே நீதிமான்.

அயலானைப் புறக்கணிக்கும்
ஆன்மீகப் பணிகள்
எதுவுமே
வான் வீட்டுக்கு உகந்ததல்ல
என்பதே
இறுதித் தீர்வை தரும் பாடம்.

சில நிகழ்வுகள் ஞாயிறு, நவ் 23 2008 

 
நிகழ்வுகள்

யோவான் கொலையாகிறார்

ஏரோது மன்னன்
பிறர் மனை நோக்கிய
பாவத்தில் விழுந்தான்.

அவன் சகோதரன் மனைவி
ஏரோதியாளை,
மோகத்தின் வேகத்தால்
தன்
திருட்டு உறவில் திணித்திருந்தான்.

செய்தி அறிந்த யோவான்
மன்னனிடம் வந்தார்.

முதுகு நிமிர்த்த
மக்கள் மறுக்கும்
மன்னனின் அரியணை முன்
எதிர்ப்புக் குரலை எறிந்தார்

நீ
அவளை வைத்திருக்கலாகாது.
இச்சையின்
கச்சையைக் கழற்றி எறி.
பறவையை
உரிய இடத்தில் பறக்கவிடு.

யோவானின் அறிவுரை
ஈட்டிகள்
ஏரோதின் அரச கர்வத்தைச்
சீண்டியது.
அவன் கோபத்தின் திரியைத்
தூண்டியது.

ஆனாலும்
மக்களின் மனதில்
யோவான் இருந்ததால்
மலைகளை விழுங்கி அமைதியாய்
கிடக்கும்
பெருங்கடலாய் பொறுமை காத்தான்.

யோவான் திரும்பினார்
ஏரோது திருந்தவில்லை.

ஏரோதின் பிறப்பு விழாவில்
ஏரோதியாள் மகளின் நாட்டிய விருந்து.

சபையின் நடுவிலே
வானவில் வளையங்களை
விரித்தாடும் மயிலென
அவள்
நாட்டியச் சுடரில் அனைவரும்
நனைந்தனர்.

மன்னனின் ஆனந்தம்
கொழுகொம்பின்றி
அலைந்தது.

சிறுமியே
எது வேண்டும் கேள்
அதைத் தருவேன் நான்
என்றுரைத்தான் ஏரோது.

சிறுமி ஓடினாள்
தாயை நாடினாள்.

காமத்தில் கட்டுண்ட ஏரோதியாள்
சிறுமியின் நாவில்
நஞ்சு விண்ணப்பத்தை நட்டாள்.

சிறுமி
மன்னனின் முன்னால் வந்தாள்.
“யோவானின் தலையை
கழுத்திலிருந்து கழற்றி
தட்டில் தர வேண்டும்”
என்றாள்.

ஏரோது
திடுக்கிட்டான்.

வண்ணத்துப் பூச்சியின்
வாயிலிருந்து
எரிமலை எண்ணங்கள்
சிதறுமென்று
எதிர்பார்த்திருக்கவில்லை அவன்.

வேறேதும் கேட்கிறாயா?
தடுமாறிய
ஏரோதின் குரலுக்கு முன்
சிதறாத குரலில்
சிறுமி மீண்டும் அதையே சொன்னாள்.

ஏரோது
சங்கடத்துடன் சம்மதித்தான்.

சிறையில் யோவான்
சிரச்சேதம் செய்யப்பட்டார்.

தலையாய பரிசாய்
தலையொன்று தட்டில் விழுந்தது.
ஏரோதியாளின் மனதில்
நிம்மதிப் பூக்கள்
மெல்ல மெல்ல முளைவிட்டன.

யோவான்
தலை இழந்ததில்
நீதி
நிலை குலைந்தது.

 தந்தையின் இல்லம் சந்தையல்ல

 ஓர் முறை
ஆலய வாயிலில்
சந்தடியால்
உந்தப்பட்டால் இயேசு.

வழியை அடைத்து நிற்கும்
வியாபாரிகள்.

விற்பனைக்கு
பலி புறாக்கள்,

சில்லறை மாற்றித் தரும்
சின்னக் கடைகள்,

ஆதாய நோக்கத்தில்
அணி அணியாய்
விற்பனைத் தளங்கள்.

சாந்தத்தின் மைந்தன்
கோபத்தின் கொழுந்தானார்.

வணக்கத்துக்குரிய
இடத்தில்
வணிகமா ?

அமைதியின் இருக்கையான
தந்தையின் இல்லத்தில்
கூச்சல் குழப்பங்களின்
கூட்டுக் குடும்பமா ?

சத்தியத்தின் மைந்தன்
சாட்டையை
சுழற்றினார்.

புறாக்களை
பறக்கவிட்டு,
கடைகளை உடைத்து,
வியாபாரிகளை விரட்டி,
ஆலயத்தின் உள்
அமைதியை அடைத்தார்.

இது
என் வீடு.
என் செப வீடு.

தந்தைக்கான இல்லம்
இது
சந்தைக்கானது இல்லை.

இது
கள்வர்கள் கலந்துரையாடும்
குருட்டுக் குகையல்ல.
விலகிப் போங்கள்.

வெள்ளை மேகம் ஒன்று
வினாடி நேரத்தில்
பெருமழையாய் கொட்டியதாய்,
தென்றல் ஒன்று
கல் தடுக்கி விழுந்ததால்
புயலாய் புறப்பட்டதாய்,

வண்ணத்துப் பூச்சியாய்,
மென்மையான புறாவாய் திரிந்த
இயேசுவின்,
நிறமாற்றம் நிகழ்ந்தது
அங்கே தான்.

சலவை செய்யவேண்டிய கற்கள்
அழுக்கை விற்கும் அவலம் கண்டதால்
இயேசு
சலவைக் கற்களையே சலவை செய்யத்
துவங்கினார் அங்கே.

அமைதியின் சின்னமான
இயேசு
ஆவேச சிங்கமான
நிகழ்ச்சி அது.

யூதர்களின் கோபம்
தொண்டைக்குகை தாண்டி
கர்ஜித்தது.
எந்த அதிகாரம் உனக்கு
இப்படிச் செய்ய,
உன் அதிகாரத்தின் அடையாளம்
என்ன சொல்.

இயேசு சொன்னார்,
இந்தக் கோயிலை இடித்து விடுங்கள்,
மூன்றே நாளில்
கட்டி விடுகிறேன்.

யூதர்கள் சிரித்தனர்,
நாப்பத்து ஆறு ஆண்டுகள்
வியர்வையும் குருதியும்
சரி விகிதத்தில் கலந்து கட்டிய
கோயில் இது,
மூன்று நாளில் கட்டிவிடும் மணல்வீடல்ல.

அவர்கள்
கற்களால் கட்டப்பட்ட கோயிலையே
கர்த்தர் சொன்னார் என்று
சொற்களால்
சொல்லிச் சென்றார்கள்,
இயேசுவோ,
தம் உடலெனும் கோயிலையே
உருவகமாய் சொன்னார்.

 

தேவையானதைத் தெரிந்துகொள்

 

இயேசுவின்
பயணத்தின் வழியில்
மார்த்தா எனும் பெண்ணொருத்தி
இயேசுவை
இல்லம் வரப் பணித்தாள்.

பிழையில்லா
அழைப்புக்கு இணங்கி
பரமனும் வந்தார்.

மார்த்தாவுக்கு
மரியா எனும் சகோதரி,
இயேசுவைக் கண்டதும்
கால்களருகே அமந்து
காதுகளை
கருத்துக்களுக்காய்
திறந்து வைத்திருந்தாள்.

மார்த்தாவோ,
பணிவிடைப் பராமரிப்புகளுக்காய்
அறைகளெங்கும்
அலைந்து கொண்டிருந்தாள்.

வந்தவர்களுக்கு
பந்தி வேண்டும்,
உணவுப் பணிகள்
முடிக்க வேண்டும்.

மார்த்தாவால் தனியே
எல்லாம் செய்ய
இயலாமல் போகவே
கர்த்தரை நோக்கி,

‘இயேசுவே மரியாவை என்
உதவிக்காய் அனுப்பும்’
என்றாள்.

இயேசுவோ,
மார்த்தா…
நீ
தேவையற்றவைகளுக்காய்
உன்
ஆற்றலை அழிக்கிறாய்.

தேவையானது ஒன்றே,
அதை
மரியா தெரிந்து கொண்டாள்.
அது
அவளிடமிருந்து எடுக்கப் படாது.
என்றார்.

கனிகள் வினியோகம்
நடக்கையில்
விறகுகளிடையே துயில்பவன்
வீணனே என்பதை
இருவரும் புரிந்தனர்.

 
மகிழுங்கள்..

 சீடர்கள்
உற்சாகத்தின் பொற்சாடிகளாய்
முகம் மின்ன
அகம் துள்ள
இயேசுவிடம் வந்தார்கள்.

இயேசுவே,
இதோ
உம் பெயரால் நாங்கள்
புதுமைகள் செய்கிறோம்,
பேய்களைத் துரத்துகிறோம்
என
மகிழ்ந்தார்கள்.

கடல்களை நோக்கிய
பயணத்தில்
துளிகளைக் கண்டே சீடர்கள்
துள்ளுவதைக் கண்ட
இயேசு
புன்னகையுடன் பேசினார்.

வானிலிருந்து விழும்
மின்னல் போல
சாத்தான் மறையக் கண்டேன்.

மகிழுங்கள்
களிகூருங்கள்.

பேய்களை துரத்தும்
பெருமைக்காக அல்ல,
விண்ணகத்தில் பெறப்போகும்
வாழ்க்கைக்காக
என்றார்.

 
குள்ளமான சக்கேயு உயரமாகிறான்

 

யெரிக்கோ வழியே
இயேசு சென்றார்.

சக்கேயு எனும் ஓர் செல்வன்
உருவத்தில் ஒரு குள்ளன்
உள்ளத்தால் அவன் கள்ளன்.

இயேசுவைக் காண
சாலைகளெங்கும்
மனித கூட்டம்
மதில்களாய் நின்றது.

சக்கேயு சிந்தித்தான்.
அருகில் நின்ற
அத்தி மரத்தின்
உச்சியில் ஓர்
பறவையைப் போல பதுங்கினான்.

பரத்திலிருந்து வந்த
இயேசுவை
மரத்திலிருந்து பார்க்க
ஆயத்தமானான்.

இயேசு அவ்விடம் வந்து
நின்றார்.
மேல் நோக்கி அழைத்தார்.

சக்கேயு
இறங்கி வா.

இன்று
விருந்து எனக்கு
உன் வீட்டில் தான் என்றார்.

முண்டியடித்த கூட்டம்
முணுமுணுத்தது.
பாவியோடு பந்தியமர்வதே
இவர் பணியா என்றது.

சக்கேயு விருந்தளித்தான்.
விருந்தின் முடிவில்
மனம் திருந்தினான்.

வெளிச்சம் புகும் இடத்தில்
இருட்டு இருக்க முடிவதில்லையே.
கடவுள் நுழைந்ததும்
களவு வெளியேறி ஓடியது.

உள்ளத்தை வெற்றிடமாய்
விட்டு விட்டு
களஞ்சியத்தை நிறைத்த
பேதமையைப் புரிந்தான்.

பரிவு பற்றிப் பேசிய இயேசுவிடம்
பரிகாரம் பற்றிப் பேசினான்
சக்கேயு.

என்
சொத்தில் பாதியை
ஏழைக்காய் எழுதுகிறேன்.

பிறரை
ஏமாற்றிய பணத்தை
நான்கு மடங்காய் திருப்பிக் கொடுக்கிறேன்.
என்றான்.

உருவத்தில் குள்ளமான சக்கேயு
உருமாற்றத்தால் உயர்ந்தான்.

இயேசு மகிழ்ந்தார்.
இன்றே இவ்வீடு
இறை மீட்பில் இணைந்ததென்றார்.

 
இயேசு உருமாறுகிறார்

 

பேதுரு,யாக்கோபு,யோவான் இவர்களோடு
உயர்ந்த மலையின்
உச்சந்தலைக்கு
இயேசு சென்றார்.

அங்கே
உருமாற்றம் ஒன்று உருவானது,
ஓர் ஒளி வெள்ளம்
இயேசுவைச் சுற்றியது.
அவர் ஆடைகள்
தூய வெண்மையாய் பளிச்சிட்டன.

அங்கே அவர் முன்
மோசேவும், எலியாவும்
உயிரோடு வந்து
உரையாடிக்கொண்டிருந்தனர்.

வானம் திடீரென்று
வார்த்தை ஒன்றுக்கு வழிவிட்டது.
இவரே என் அன்பார்ந்த மகன்
இவருக்கு
செவிசாயுங்கள் என்ற குரல்
வானத்திலிருந்து எழுந்து
பூமியில் விழுந்தது.

சீடர்கள் மூவரும்
சிரசுக்குள் சில்லிட்டனர்.

உங்களுக்காய் நாங்கள்
கூடாரங்கள் எழுப்பவா ?
உதறிய சீடர்கள்
உளறினர்.

இது தேவ சந்திப்பு
என்
உயிர்த்தெழுதல் வரை
இந்தக் காட்சி
உங்களுள் புதைபட்டிருக்கட்டும்.
என்றார் இயேசு.

மோசேவும், எலியாவும்
மறைந்தனர்
சீடர்கள் உயிர் உறைந்தனர்.

 

குழந்தை இதயம் கொள்ளுங்கள்

 குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு
பரமன் பாதம் வந்தனர் பலர்.
சீடர்கள் சிறுவர் மேல்
சினம் கொண்டனர்.

இயேசுவோ,
சிறுவர்களை தடுக்காதீர்,
விண்ணரசு இத்தகையோரதே
என்றார்.

மழலைகளின் மனதை
எடுத்துக் கொள்ளுங்கள்,
அவர்களின்
நிர்மல நேசத்தை
உடுத்துக் கொள்ளுங்கள்.
அதுவே
பெரியவனாவதற்கான முதல் படி.

குழந்தை மனதில்
ஓர்
வெள்ளை விண்ணகம் இருக்கிறது
அதை
குழந்தையாய் மாறுபவன்
கண்டு கொள்வான்

 

குருத்தோலை அங்கீகாரம்

 

யெருசலேம் வந்த இயேசு
கழுதை மேல் போர்வை போர்த்தி
அதில் அமர்ந்து
ஊருக்குள் ஊர்வலம் வந்தார்.

ராணி தேனீயை
பற்றிக் கொள்ளும் தேனீக்களாய்
பெருங்கூட்டம்
இயேசுவை சூழ்ந்து கொண்டது.

அவர்கள் கரங்களில்
ஒலிவ மரக் கிளைகள்
முளைத்திருந்தன.
குருத்தோலைகள் அசைந்தன

தாவீதின் மகனுக்கு ஓசான்னா
எனும்
வாழ்த்தொலிகள்
தூர வான்
மேகங்களைத் தட்டி எழுப்பின.

இயேசு,
தலைவராக அங்கே
அங்கீகரிக்கப் படுகிறார்,

மறை நூல் தலைவர்களில்
தலைகளுக்குள்,
பய பாம்புகள்
அடுக்கடுக்காய் புற்று கட்டின,

சட்ட வல்லுநர்களின்
அங்கிகளுக்குள்
சில
அவஸ்தைப் பூச்சிகள் நெளிந்தன.

சராசரி மக்களின்
குடிசைகளுக்குள்
இயேசு எனும் சிகரம்
சிரம் கொண்டது,
மாளிகையின் இருக்கைகள்
திடீர் ஜுரம் கண்டது.

இறைவாக்கினர்களின்
தீர்க்கத் தரிசனத்தை
உண்மை எனச் சொல்லும்
தீர்மான நிகழ்வாய்
அந்த உற்சாக ஊர்வலம் அமைந்தது.

பாதைகளின் மேல்
போர்வைகள் படர்த்தி,
கிளைகளை வெட்டி
தோரணம் கட்டி,
வழிமுழுதும் வாழ்த்துக்கள் ஒலிக்க
இயேசு
பரபரப்புப் பயணம் நடத்தினார்.
 
 

வெளிவேடக்காரர்களுக்கு எச்சரிக்கை

 

பிரித்தறியுங்கள்

இயேசு,
மக்கள் கூட்டத்திற்கு
வெளிவேடக்காரரை
வெளிச்சமாக்கினார்.

மறைநூல் அறிஞர்களும்,
பரிசேயர்களும் போதிப்பதை
கேளுங்கள்,
ஆனால் அவர்கள்
நடக்கும் பாதையில் நடக்கவேண்டாம்.

அவர்கள்
பரம்பரை பரம்பரையாய்
விளம்பரப் பிரியர்கள்.

அறிவுரைகள் சொல்ல மட்டுமே
ஆயத்தமாகும் அவர்கள்,
நேர் வழியில் நடப்பதற்கு
ஆர்வம் கொள்வதில்லை.

பாரங்களின் பழுவை
பாமரர் தோளில் சுமத்துகிறார்கள்.
ஆனால்
விரல்களால் கூட அதை
அசைக்க மறுக்கிறார்கள்.

வெளியே விளக்கெரித்து
இதயத்துள்
இருட்டு விற்பவர்கள் அவர்கள்.

வானகம் வரை
விளம்பரம் செய்துவிட்டு
வார்த்தைகளை நெய்கிறார்கள்,
செயல்களின் நகங்களால்
நன்மையின் கழுத்தைக் கொய்கிறார்கள்.

வேத வாக்கியங்களை
வரைந்த சீட்டுப் பட்டங்களை
சிரம் முதல் கால் விரல் வரை
அகலமாய் கட்டுகிறார்கள்.
ஆனால்
மனசுக்குள் அதை நட்டு வைப்பதில்லை.

பட்டாடைகளின் விட்டங்களை
அதிகப்படுத்தி,
பொதுவிடப் பெருமையை
விரும்பி நடக்கிறார்கள்.

ஏழைகளின் மிச்சத்தையும்
சுரண்டிச் சேர்த்துவிட்டு,
பார்வைக்கு
முச்சந்தியில் மறையுரைக்கிறார்கள்.

நீங்கள்,
ஆடைகளோடு சேர்த்து
ஆன்மாவையும் சலவை செய்யுங்கள்.

பெரியவனாகும் தகுதி,
பணியாளனாகப் பிரியப்படுபவனுக்கே.
உயர்த்தப்படும் உரிமை
தன்னை
தாழ்த்துகிறவனுக்கே.

வேஷங்களின் வால் பிடித்து
கோஷங்களில் கழிந்த காலங்கள்
போதும்,
இனிமேல்
மனசின் நிழல் மட்டும்
மண்ணில் விழ நடங்கள்.

வெளி வேடக்காரர்கள்
வெளியேற்றப்படுவார்கள்
என்றார்.

 திருந்துங்கள்
 

இயேசு
வேஷதாரிகளை நோக்கி
ஏவுகணைகளை ஏவினார்.

வெளிவேடக்காரரே
உங்களுக்கு
அழிவு ஆரம்பமாகிவிட்டது.

விண்ணக வாசலுக்கான
வரவேற்புச் சீட்டு
உங்களுக்கு அளிக்கப்படாது.

நீங்கள்,
விண்ணகம் வருவதுமில்லை,
அதன் வாயிலில்
வருவோருக்காய்  வழிவிடுவதுமில்லை.

ஒருவனை,
கடல், காடு கடந்து
மதத்தில் இணைக்கிறீர்கள்,
பின்
அவனுக்கு
நரகத்தின் நடுவே நிற்கவே
இடம் கொடுக்கிறீர்கள்.

மதக் கதவுகளுக்குள்
நுழைவதால் மட்டுமே
ஒருவன்
மதவாதி ஆகிவிடுவதில்லை.

ஆலயத்தின் மீதும்
ஆண்டவன் மீதும் ஆணையிட்டால்
மன்னிப்பும்,
பொன் மீதும், பொருள் மீதும்
ஆணையிட்டால் தண்டனையும்
தருகிறீர்கள்.

மேகத்தை விட பெரியது
வானம் அல்லவா ?
உங்கள் கலனில்
கடலை அடைக்க நினைப்பதேன் ?

பொருள் மீது காட்டும்
பேராசையின் ஆழம்,
அருள் தரும் ஆண்டவனிடம் காட்டுங்கள்.
மீட்பு,
பொன்னால் வருவதல்ல
மனுமகனால் வருவதே.

நீங்கள்,
இருட்டுக்கு மக்களை
இழுத்துச் செல்லும்,
குருட்டு வழிகாட்டிகள்.

காணிக்கையாய் காய்கறிகள்
கேட்கிறீர்கள்,
நீதி,
விசுவாசம்,
இரக்கம் இவற்றை
இறக்க விட்டு விடுகிறீர்கள்.

வயிற்றுக்கான வாழ்வை விட
வாழ்வுக்கான
இதயத்தை வாழவையுங்கள்.

உங்கள்,
தினசரி வாழ்வின் தேடல்களில்,
கொசுவை வடிகட்டி
ஒட்டகத்தை விழுங்குவதை
கட்டோ டு களையுங்கள்.

எப்போதுமே நீங்கள்,
கிண்ணத்தின் வெளிப்புறத்தை
வெள்ளையாக்கும்
பிள்ளைத்தனத்துள் உழல்கிறீர்கள்,
உள்ளுக்குள்
அழுக்கை அழகாய் மறைக்கிறீர்கள்.

நீங்கள்,
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்,

நினைவுச்சின்னங்கள்
அழகாய் இருந்தாலும்
உள்ளுக்குள் கிடப்பது
உளுத்துப் போன உடலும் எலும்புமே.

சுத்தம்,
சுற்றி இருப்பதை விட
உள்ளுக்குள் இருப்பதே
உன்னத வாழ்வு.

 

அடையாளங்கள் தேவையில்லை ஆதவனுக்கு
 

மறைநூல் அறிஞர்கள்
எழுந்து,
ஏதேனும் அடையாளம் காட்டும்
என்று
இயேசுவைக் கேட்டனர்.

இயேசுவின் பாதை முழுதும்
அடையாளச் சுவடுகள்
ஆழப் பதிந்திருந்தும்,
அந்தத் தலைமுறை
திருப்திப் படவில்லை.
இயேசு திரும்பினார்.

வானம் சிவந்திருந்தால்
கால நிலை நன்று என்பீர்கள்.
மந்தாரமாய் இருந்தால்
மழை வரும் இன்று என்பீர்கள்,
வானத்தின் மாற்றத்தை உணர்வீர்கள்
காலத்தின் மாற்றத்தை அறியீர்களா ?

வெறும்
அடையாள வாழ்க்கையில்
அடைந்து கிடந்தவர்களை
அர்த்த வாழ்க்கை வாழ
அழைப்பவரல்லவா இயேசு.

மூன்று நாட்கள்
மீனின் வயிற்றில் இருந்தார்
யோனா,
மனுமகனும்
மூன்று நாள் நிலத்தின் வயிற்றில்
இருப்பார்.

சாலமோனின்
வார்த்தைகளிலும்,
யோனாவின் செய்திகளிலும்
மனசின்
துரு விலக்கியவர்கள்
ஏராளம் பேர் இருக்கிறார்கள்.

மனுமகன்,
அவர்களை விடப் பெரியவர்.

ஒருவனின்,
இதயம் விட்டு வெளியேறும்
தீய ஆவி,
ஊரின் எல்லைகளெங்கும்
சுற்றி அலைந்து
தங்கும் இடம்
எங்கும் இல்லாமல்
பழைய இடத்துக்குத் திரும்பும்.

பழைய இடம்,
ஆளில்லாமல் சுத்தமாய் இருந்தால்,
இன்னும் ஏழு
பேய்களோடு வந்து
சத்தமாய் குடியேறி
பலமடங்கு பாதிப்பு தரும்.

உங்களுக்கு,
இதுவே நேரும்.
நீங்கள் உள்ளுக்குள் இருக்கும்
பேய்களைப் பிரிய
பயப் படுகிறீர்கள்,
மனுமகன்
நுழையாத இதயங்களெல்லாம்
பேய்களுக்குப் புகலிடங்களே.

 

பாம்புகளுக்கு எச்சரிக்கை

 

பாம்புகளே,
விரியன் பாம்புக் குட்டிகளே,
பற்களில் விஷம் வார்த்து
தலைமுறையைக் கடிப்போர்களே
கேளுங்கள்.

வெள்ளைப்புறாக்கள்
உங்களிடம் வந்தபோது
கற்கள் வீசி விரட்டினீர்கள்.

உங்களிடம் அனுப்பும்
ஞானியரையும், நல்லோரையும்,
அடித்தும்,
அறைந்தும் கொல்வீர்கள்.
இப் பழியெல்லாம்
உங்கள் சந்ததியினரின்
சொத்தாய் வந்து சேரப் போகிறது.

ஜெருசலேமே,
ஜெயத்தோடும் ஜெபத்தோடும்
பகைமை பாராட்டும்
கல் நெஞ்ச நகரமே.

கோழி
இறக்கைக்குள் அணைத்துக் கொள்ள
குஞ்சுகளைத் தேடுவது போல்
உங்களைத் தேடினேன்,
நீங்களோ,
உடன்படாமல் தீய
உடன்படிக்கை செய்தீர்கள்.

இதோ,
கூரைகளின் மேல் சாரைகள் ஊரும்
அழிவுக்குள் நீங்கள்
அமிழ்ந்தாக வேண்டுமோ ?

ஏற்றுக் கொள்ளும் வரை
உங்கள் வாழ்வு
உன்னதத்துக்கு உள்ளே வராது.

இயேசு சொன்ன உவமைகள் ஞாயிறு, நவ் 23 2008 

 

 உவமைகள்

 
உவமைகள்,
அறிவுரைகளை ஏற்றிச் செல்லும்
அற்புத வாகனம்,
செய்திகளை செவிவழியாய்
உள்ளத்தில் ஊன்றும்
உன்னத வழி.

அறிவுரைகள் ஆழமானவை
உவமைகளோ அழகானவை.
வாசத்தை பூக்களில் ஊற்றி
நுகரவைக்கும் கலையே
உவமைகளில் உரையாடல்.

இயேசுவின் உவமைகள்
அழகானவை,
ஆழத்தைச் சுமந்ததால் அழகானவை.

எளிமையானவை,
எளியவரின் மனம் நோக்கிச் சென்ற
இலகுவானவை.

 
விண்ணரசு, விவசாயி
 

இயேசு
விண்ணரசு குறித்த
விளக்கங்களை
உவமை விளக்குகளாய்
ஏற்றி வைத்தார்.

விண்ணரசு
தன் விவசாய நிலத்தில்
நல்லவிதைகளை
பதியனிட்ட
ஒருவனுக்கு ஒப்பாகிறது.

பயிர் விதை விதைத்த
நிலத்தில்
களை விதை விதைக்கிறான்
பகைவன் ஒருவன்.

பூமிக்குள் பதுங்கும் வரை
விதைகளின் வித்யாசம்
வெளிச்சத்துக்கு வருவதில்லையே.

முளைகள் மெல்ல
காற்றைக் கிழித்து
பூமியைக் கடந்தபோது தான்
களைகள் கலந்திருப்பது
கண்களுக்குள் விழுந்தது.

வேலையாள் வருந்தினான்
பயிர்களின் உரத்தை
களைகள் களவாடுகிறதே
என்று
கவலைப்பட்டான்

களைகளைப் பிடுங்கி
களைந்திடவா என்றான்.

எஜமான் சொன்னார்.
வேண்டாம்,
களை பிடுங்கும் வேளை
நீ
பயிர் பிடுங்கக் கூடும்.

பயிர் ஒன்றேனும்
உயிர் விடுதலில்
எனக்கு
உடன்பாடில்லை.

அறுவடை வரை
இரண்டையும் இணைந்தே வளரவிடு,
அறுவடையின் போது
பயிரை
களஞ்சியத்துக்கும்,
களையை
தீக்குழிக்கும் அனுப்பு.

சுவர்க்கத்தின் வாசலுக்குள்
தீயவற்றின் மிதியடிகள்
கடந்து செல்ல முடிவதில்லை,
சுவர்க்கம்
பயிர்களுக்காய் பாதுகாப்பாய்
பத்திரப்படுத்தப் பட்டிருக்கின்றது.

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட
நல்ல விதை,
தானால் முளை விட்டு
தானாய் கிளை விட்டு
ஆழமாய் வேர் விட்டு
தானாய்
தானியங்களை தரும்.

இதயத்தில் ஊன்றப்படும்
நற்செய்திகளும் அவ்வாறே.

நீங்கள்
பூமியெனும் வயலில்
மனிதர்களாய் முளைத்தவர்கள்,

பயிரா ? களையா ?
என
உங்களையே கேளுங்கள்,
களையானால் பயிராகும்
வழிமுறையை நாடுங்கள்.

 
விண்ணரசு, விதை


 
விண்ணரசு
ஓர் சிறு விதைக்கு ஒப்பாகும்.

விதையைப் பாருங்கள்
அது
பறவையின்
ஒரு அலகு ஆகாரம்.
அது வளர்ந்தபின்போ
ஆயிரம் பறவைகள்
அடையுமிடம்.

நல்ல செய்திகளின்
விளைச்சலும் அவ்வாறே.

o

மண்ணின் மார்பில்
புதைக்கப்பட்ட
விதை
கதை முடிந்து போவதில்லை

விதைத்த பின்
நீ
விலகிச் செல்வாய்,
விதைவெடிக்கும் வேளையோ
முளை துப்பும் காலையோ,
உனக்குத் தெரிவதில்லை.

விதைகள் விடரும்,
வினியோகம் தொடரும்.

நிலங்கள் சில
விலகிச் செல்லும்
ஆயினும் விதைகள் அவற்றை
விடாமல் தொடரும்.

 

விண்ணரசு, மாவு

 

விண்ணரசை,
புளிப்புமாவோடும் பொருத்தலாம்.
மாவோடு கலக்கப்பட்டால்
அது
மொத்த மாவுக்கும்
புளிப்புச் சுவையை பகிர்ந்தளிக்கும்.

 
விண்ணரசு வெள்ளிக்காசு
 

இருட்டுக்குள் விழுந்து விட்ட
ஒரு வெள்ளிக்காசை
விளக்கின் கைகள்
இருட்டை
விலக்கித் தேடுவதில்லையா ?

மூலை முடுக்கில்
கதவின் இடுக்கில்
எங்கேனும் அதைக்
கண்டெடுத்தபின்
களிகூர்வதில்லையா ?

மனம் திருந்தும் மனிதன்
தொலைந்து போன
வெள்ளிக் காசே.

வெளிச்சக் கைகள்
அவனை
தேடித் திருகின்றன.

மனம் திரும்புதலே
மகத்துவமான மாற்றம்.

 விண்ணரசு, புதையல்


 
விண்ணரசை,

பூமியில் புதைந்த
புதையலுக்கும் ஒப்பிடலாம்.

பூமியில் புதையலிருப்பதைப்
புரிந்து கொண்டவன்
தன்
சொத்துக்களை எல்லாம் விற்று
அந் நிலத்தைச்
சொந்தமாக்குவான்.

முழுதையும் இழந்து
முத்தமிடும் புதையலே
விண்ணரசு.

 

விண்ணரசு,
வியாபாரி தேடும்
விலைமதிப்பில்லா முத்து.

அதைக் கண்டவன்.
தன் சொத்தெல்லாம் விற்று
முத்தைப் பெற்று முத்தமிடுவான்.

விண்ணரசு,
எதை இழந்தும் பெறத் தகுந்த
ஒரே
இலட்சிய இலக்கு.

 

விண்ணரசு, வலை

 

விண்ணக வாழ்வை
கடலில் வீசப்பட்ட
வலையெனக் கொள்க.

வலை
வேறுபாடுகளை விடுத்து,
தொடுத்தும் மீன்களை எல்லாம்
எடுத்து வரும்.

நல்லவை கூடைகளில்
அள்ளப்படும்,
தீயவை தெருவோரம்
தள்ளப்படும்.

சாவுக்குப் பின் சம்பவிப்பது
இதுவே.

 

நல்ல விதை, நல்ல நிலம்

 

விதைகளை வாரிக் கொண்டு
விதைக்கச் சென்றான்
ஒருவன்.

விதைகளில் சில
சுவடுகள் அலையும்
சாலைகளில் சிதறின.
அவை
பறவைகளின் அலகுகளால்
கொத்தப்பட்டு குற்றுயிராகி
உணவாக நிறம் மாறின.

முட்களிடையே
சில தெறித்தன,
முளைகள் வெளிவந்து
வெளி உலகைப் பார்த்தபோது,
முட்களின் முனைகளால்
நெறிபட்டு முறிபட்டு
உயிர்விட்டன.

பாறை மீதும் சில விதைகள்
விழுந்தன,
வேர் நுழையும் வழி இன்றி
வெயிலுக்கு உயிலெழுதி
சருகாகி செத்து மடிந்தன.

சில
உழவு நிலத்தில் விழுந்தன.

வயலில் விழுவது தானே
விதைக்கே விருது.

விழுந்தவை
எழுந்தன.
நூறுமடங்கு, அறுபது மடங்கு, முப்பது மடங்கு
என
அமோகமாய் அறுவடையாயின.

விதைப்பவன் நானே.
விதைகள் என் வார்த்தைகள்,
நிலம் உங்கள் மனம்.

வழியோர விதைகள்
என் வார்த்தைகளைப் புரியா,
புரிய முயலா
உள்ளங்களில் விழுந்தவை.

அவை தீமையின் தீனியாகி
தின்னப்பட்டு மறைந்து போகும்.

பாறை மீதான விதை
இதயம் தீண்டி முளைப்பவை,
ஆனால்
ஆணி வேரின்றி அறுபடுபவை.
இதயம் தீண்டிய விதைகள்
பதியம் ஆகாமல் புறக்கணிக்கப்படும்.

முள்ளிடையே விதை,
அரைகுறை இதயத்தின்
அழுத்தமான உதாரணம்.
உலக நெரிசல்களால்
என்
வார்த்தைகள் அங்கே
வலுக்கட்டாயமாய் கிழித்தெறியப்படும்.

நல்ல நிலம்,
வார்த்தைகளைக் கேட்டு,
வளமாய் இதயத்தில் ஊன்றி,
அதன் நிழலில் நடப்பவன்.

பலன் தருபவன்
அவன் தான்.
விண்ணக வாழ்க்கை அவனுக்கானதே.

 
அறிவற்ற செல்வன்.
 

ஒருவன்
பரமனை நெருங்கி,
பாகம் பிரிப்பதில் நடுவராக்கப்
பார்த்தான்.

இயேசு சொன்னார்,
நான்,
சொத்துப் பிரச்சனைகளின்
நீதிபதி அல்ல.

பணக்காரன் ஒருவன் இருந்தான்.
அவன்,
இரவு பகல் எல்லாம்
செல்வம் சேமிக்க செலவழித்தான்.

களஞ்சியத்தின்
அகலத்தை அதிகரித்து
தானியம் நிறைய சேமிப்பேன்.
பல்லாண்டு
உண்டு குடித்து
உல்லாசத்தில் உட்கார்வேன்
என்றான்.

பணம் ஈட்டுவதிலேயே
மனம் நாட்டியவன் அவன்.

அந்த அறிவிலியின்
உயிரை
அன்றிரவே இறைவன் எடுத்தால்
சேமித்ததை
எவன் வந்து சொந்தம் என்பானோ?

நெல் களஞ்சியங்களல்ல
நல் களஞ்சியங்களே தேவை.
களஞ்சியங்களில்
நற்செயல்களைச் சேமியுங்கள்.

சுற்றிக் கட்டி சேமிப்பதை விட
விற்று விற்றுப்
பகிர்ந்தளியுங்கள்.
இற்றுப் போகாத பைகள்
பெற்றுக் கொள்ளுங்கள்
அதில்
நற்செயல் நாணயத்தை
நாள்தோறும் சேமியுங்கள்.

கடவுளுக்கான
செயல்களை களைந்து,
பூமியின் பொருட்களை
கட்டிக் கொள்பவன்,
புயலில் பிழுதெறியப்படும்
தானியக் குவியலாய்
சட்டென்று கலைவான்
சிந்தையில் கொள்ளுங்கள்

 

உதவு, அதுவே வாழ்வுக்கான கதவு.

 

ஆத்மார்த்த அன்பை
அயலானுக்குச் செய்
என்றார் இயேசு ?

அயலான் யார் ?
ஓர்
உவமை வாய் திறந்தது.

நெடிய பயண நடுவே
கள்வர்களின் குருட்டு ஆயுதங்களில்
காயங்களின் கொள்முதல்
நிலையமாய்
குற்றுயிராய்க் கிடந்தான்
ஒருவன்.

போதகர் ஒருவர்
அவ்வழியே வந்தார்.
பார்த்தார் சில வினாடி,
போதனையே பெரிதென்று
பாதை மாறி பாதம் வைத்தார்.

லேவியன் ஒருவன் வந்தான்
கண்ணைக் கட்டி
கடந்து போனான்.

இன்னும் சிலர் சென்றனர்,
பரிதாபப் பார்வைகளும்
அவசரப் பாதங்களும் சுமந்து.

சாராசரிச் சமாரியன் ஒருவன்
சரியாய் வந்தான்.
காயம் கண்டு கண்ணீர்
விட்டு கடந்து செல்லவில்லை.

கண்ணீர் காயத்தின் அடையாளமே
களிம்பல்ல என்பதை
புரிந்து நெருங்கினான்.

காயம் துடைத்து
கட்டுகள் இட்டு,
முதலுதவி முகம்கொண்டு
சாவடிக்கு தூக்கிச் சென்றான்.
வெள்ளிக்காசுகள் செலவிட்டு
வைத்தியம் செய்தான்.

நீங்கள்,
பட்டியலாளராய்
பார்வையிடல் வேண்டாம்,
பணியாளராய்
மண்டியிடுங்கள்.
அதுவே மனித மாண்பு.

 

விண்ணரசு, தோட்டத் தலைவன்

 

விண்ணரசு,
தன் திராட்சைத் தோட்டத்திற்கு
வேலையாள் தேடிய
வீட்டுத் தலைவன் போன்றது.

கதிரவன் வானத்தில்
கதிரறுக்கப் புறப்படுகையில்
தேடி வந்தான்
தலைவன்.

வழியில் கண்ட சிலரை அழைத்து
வேலைக்கு அனுப்பினான்.
நாளொன்றுக்கு
ஒரு வெள்ளிக்காசென்று
கூலி விவரத்தையும்
குறித்துக் கொள்ளச் சொன்னான்.

பின் ஒன்பது மணிக்கும்
பிற்பகல் மூன்று மணிக்கும்
அவ்வாறே
வேலையாட்கள் அழைக்கப்பட்டனர்.

மாலை
ஐந்து மணிக்கும்
வெளியே சென்றான் தலைவன்.

அப்போதும் சிலர்
வெறுமனே நின்றுகொண்டிருந்தனர்
பொழுதை
வீணாய்த் தின்று கொண்டிருந்தனர்.

ஏன் நீங்கள்
சோம்பித் திரிகிறீர்கள் ?
வாழாவிருப்பது வாழ்வுக்கு நல்லதா
என்றான்.

ஐயா..
வேலை தருபவர் இருந்தால்
நாங்கள் ஏன்
கவலையுடன் கைகோர்த்து
சோகத்தில் சுற்றித் திரிகிறோம் ?

வேலையிலமர்த்த
யாரும் வரவில்லை
பகல்
வேளையும் முடிகிறது
இனியென்ன செய்ய ?

தலைவன் இரங்கினான்
அவர்களையும்
வேலைக்காய்
திராட்சைத் தோட்டம் அனுப்பினார்.

மாலை
ஆறுமணி
கூலியின் நேரம்
வேலையாட்களின்
குதூகலத்தின் நேரம்.

ஐந்து மணி ஆட்கள்
வந்து நின்றனர்
வெள்ளிக்காசு ஒவ்வொன்றை
பெற்றுச் சென்றனர்.

விடியலில் வந்தவர்
அதிகம் கிடைக்குமென்று
ஆவல் கொண்டனர்,
ஆனால் ஆச்சரியமாய்
அவர்களுக்கும்
ஒரு வெள்ளிக்காசே தரப்பட்டது.

தலைவனிடம் அவர்கள்
தர்க்கம் செய்தனர்,
ஒரு மணி நேரம் உழைத்தவனுக்கும்
ஒரு நாள் முழுதும்
உழைத்தவனுக்கும்
ஒரே கூலியா ?

மாலை மட்டும்
வேலை செய்தவனுக்கும்,
வெயில் முழுதும்
உயிர் காய்ந்தவனுக்கும்
சரி நிகர் சம்பளமா ?

நியாயம் இல்லாத தலைவர் நீர்
எங்களுக்கு
அதிகமாய்த் தந்திருக்க வேண்டும்
இல்லையேல்
அவர்களுக்குக்
குறைவாய்க் கொடுத்திருக்க வேண்டும்.

தலைவன் சொன்னான்,
உனக்கான
வெள்ளிக்காசு,
வழங்கப்படவில்லையெனில்
வழக்கிடு.

ஒரு வெள்ளிக்காசு என்பது
உன்னிடம் நான் செய்த
ஒப்பந்தம்.
தப்பென்றால் சொல்.

இன்னொருவனுக்கும்
அதயே வழங்க
எனக்கு
உரிமையில்லை என்பது சரியில்லையே.

தலைவனின் விளக்கத்தால்
தலை குனிந்தனர்
அவர்கள்.

கடைசியானோர்
முதலாவர்.
தேவையின் அடிப்படையில்
தரப்படுவதே என் கூலி.

 

மூலைக்கல் எது ?

 

நேர்மையான தலைவன்
ஒருவனிடம்
திராட்சைத் தோட்டம்
ஒன்று இருந்தது.

அழகிய அத் தோட்டத்தில்
ஆழக் குழி தோண்டி
கோபுரம் ஒன்றை கட்டி
குத்தகைக்குக்
கொடுத்துவிட்டு
வெளியூர் சென்றான் தலைவன்.

குத்தகைக்காரர்கள்
நம்பிக்கைக்குக்
குந்தகம் விளைவிக்க மாட்டார்கள்
என்பது
தலைவனின் நம்பிக்கை.

பழக் காலம் வந்த போது
பலன் வாங்க
ஊழியரை அனுப்பினான்
உடையவன்.

குத்தகைக் காரர்கள்
சுயநலவாதிகள்.
கனிகளைக் கொய்வதை
விட்டு விட்டு
மரத்தையே கொள்ளையடிக்க
வழி தேடினர்.

தலைவன் அனுப்பிய
ஊழியர்களில்
ஒருவனைன்
குத்தகைக் காரர்களால்
குற்றுயிராக்கப் பட்டான்.

இன்னொருவன்
கற்களால் நொறுக்கப்பட்டான்.

இன்னொருவன்
கொல்லப்பட்டு
வேலிகளுக்கப்பால் வீசப்பட்டான்.

கதை சொன்ன இயேசு
இடைவேளை விட்டார்.
ஒரு கேள்வியோடு.

குத்தகைக்காரர்களைத்
தலைவன்
என்ன செய்வான் ?

நம்பிக்கைத் துரோகிகள்
கண்டிக்கப் படவேண்டியவர்கள்
கருணையின்றி
தண்டிக்கப் படவேண்டியவர்கள்.
பதில் வந்தது.

இயேசு சொன்னார்,
உண்மை தான்.
தலைவன்
குடியானவரை கொடுமையாய்
தண்டித்து,
தரமான தரப்பினருக்கு
திராட்சைத் தோட்டத்தைத் தருவான்.

நீங்கள்,
திராட்சைத் தோட்டத்தின்
குத்தகைக் காரர்கள்,
பூமி
மனித தலைமுறைக்கு உரியதல்ல
தலைவனுக்கு உரியது.

தலைவனுக்குரிய
பலனைக் கொடுக்காமல்
அவன்
ஊழியர்களை நிராகரிப்பவன்
அழிக்கப்படுவான்.

உங்கள் விவசாய காலத்து
வியர்வை
அறுவடை காலத்தில்
அளக்கப்படும்.

வாசனையை நுகரச் சொன்னால்
பூக்களைப்
பிழிந்து விடும் கூட்டம்
திகிலுடன் கேட்டுக் கொண்டிருந்தது.

இயேசு தொடர்ந்தார்.
கட்டுவோன்
விலக்கிய கல்லே
வீட்டுக்கு
மூலைக்கல்லாயிற்று.

இரு விழிக்கு வியப்பே
இது இறையின் செயலே.

 

விண்ணரசு, மணமகனின் தந்தை
 

இளவரசனுக்கு
தடபுடல் திருமண விருந்த
ஏற்பாடு செய்த
அரசன் எனலாம்
விண்ணரசை.

மணவிருந்து தயாரானபின்,
பந்திகள் பரிமாறத் தயாராயின
ஆனால்
அழைக்கப்பட்டவர்களோ
விருந்தை நிராகரித்தனர்.

கொழுத்தக் கன்றுகள்
அடித்தாகிவிட்டது,
விருந்துக்காய் எல்லாம்
சமைத்தாகிவிட்டது,
அழைக்கப்பட்டோ ரை
அழைத்துவாருங்கள்,
அரசன் ஆணையிட்டான்.

அழைக்கப்பட்டோ ரோ
அவரை
அவமானப்படுத்தினர்.

தோட்டத்தில்
எனக்கின்று
வேலை இருக்கென்று
ஒருவனும்,

வியாபார இருக்கும்போ
விருந்தென்ன விருந்தென்று
இன்னொருவனும்,

சாக்குப் போக்கு எனும்
போர்வை போர்த்தி
பார்வை விட்டு விலகினர்.

பழமரத்தைப்
பறவைகள் நிராகரிப்பதை
ஆத்திரத்தோடு
பார்த்தான் அரசன்.

பணியாளர்களை அழைத்தான்.
செல்லுங்கள்,
அழைக்கப்படோ ர்
விருந்துண்ணும்
தகுதியை தவற விட்டனர்.

நீங்கள் போய்
பார்வையில் படுவோரையெல்லாம்
திரட்டி வாருங்கள்.

வீதியில் நடப்போர்
முடமாகிக் கிடப்போர்
வறுமையில் உழல்வோர்
பெருமையில் சுழல்வோர்
எல்லோரையும் கூட்டி வாருங்கள்.

சமத்துவ விருந்து
சமைத்தாகி விட்டது.
என்றார்.

ஊழியர் சென்றனர்,
வழியில் தங்கள்
விழியில் விழுந்தோரையெல்லாம்
ஆராயாமல் அழைத்து வந்தனர்.

அதில் ஒருவன்
திருமண ஆடையின்றி இருந்தான்.

அரசன் பந்தி அருகே
வந்து நின்றான்.
கூட்டத்தைப் பார்த்து
ஆனந்தமடைந்தான்.

சுற்றுமுற்றும் பார்த்த
அரசனின் பார்வை
ஓவியத்தில் குறைகண்ட
ஓவியனின் கண் போல
சுருங்கியது.
அங்கே நின்றிருந்தான்
திருமண ஆடையின்றி வந்தவன்.

அரசன்
தாமதிக்கவில்லை.
பொருத்த ஆடை அணியாதவனை
புறந்தள்ளினார்.

அரச விருந்து
ராஜ கிரீடம் போல
கம்பீரமாய் இருந்தது.
விருந்து உண்டவர்கள்
தெரிந்து கொண்டவர்கள்.

சதுரங்க விளையாட்டுக்கு
மட்டையோடு செல்பவன்
மடையனாய் தான்
இருக்க முடியும்.
அதுபோலவே இறையரசு.

தீமையோடு
யுத்தம் செய்யாமல்,
தேவையான
ஆயத்தம் செய்யாமல்
விண்ணக வாழ்வு வருவதில்லை.

விண்ணரசின் அழைப்பு
மண்ணகத்துக்கு அனுப்பியாயிற்று.
அசுத்தமாயிராமல்
ஆயத்தமாயிருங்கள்

தயாராய் இல்லாத எவரும்
தரிசனம் பெறல் இயலாது.

அழைக்கப்பட்டோ ர் பலர்
தேர்ந்து கொள்ளப்பட்டோ ர் சிலர்.

 

கனி கொடு, இல்லையேல் வரும் கேடு

 

ஒருவன்
அத்திமரம் ஒன்றை நட்டு
பத்திரமாய் வளர்த்தான்.

அது
வேர்விட்டுக் கிளைவிட்டு
வளர்ந்தாலும்,
கனிவிட மட்டும் மறுத்தது.

கனிகள் தராத மரங்கள்
விருதுக்கானவையல்ல
வெறும்
விறகுக்கானவையே.

தலைவன்
மூன்று ஆண்டுகள்
முயன்றான்.
முடியவில்லை,
கனிகளைப் பெறும் வழியும் புரியவில்லை.

தண்ணீர் இல்லாத ஏரி போல
யாருக்கும்
பயனே இல்லாமல் கிடக்கும்
மரத்துப் போன
மரத்தின் மீது வெறுப்பு கொண்டான்.

வேலையாளை
அழைத்தான்,

வெட்டி விடு இதை
கனிதராத இந்த மரம்
மண்ணின் வளத்தை விழுங்கி
ஏமாற்றத்தைக் காய்க்கிறது.

பறவைகளின் பட்டினிக்கும்
இதனிடம் பழமில்லை,
உரிமையாளனின் தேவைகளும்
எந்தக் கிளையிலும்
முளைவிடவில்லை.
வேண்டாம் இது என்றான்.

வேலையாளோ,
தலைவரே,
இன்னும் ஓராண்டு போகட்டும்.
நிலத்தை இன்னும்
பதப்படுத்துவேன்,
வேருக்கு
எருவைத் தருவேன்.

ஒருவேளை
மண்ணின் மாற்றங்கள்
கிளையில் பூக்களை வரவைக்கலாம்
பூவில் கனியைத் தரவைக்கலாம்.

மாற்றங்களும்
ஏதும் மாற்றம் தராவிடில்,
அழித்திடலாம் என்றான்.

தலைவன்
கனிக்காய் காத்திருக்கிறான்,
வேலையாள்
தன் பணியை பழுதின்றிச் செய்கிறான்.
கனி தராதவர்க்கு
அக்கினி தரப்படும்.

மனிதனின் பணியை
மரத்தோடு ஒப்பிட்டுப் பேசி
மனிதரின்
சிரங்களுக்குப் புரியவைத்தார்
இயேசு.

 
எருசலேமே,
எருசலேமே.

கற்களோடு நற்செயல்களை
எதிர்கொள்ளும்
பதற்களே.

எத்தனையோ முறை
ஏங்கினேன்,
குஞ்சுகளாய் உங்களை
சிறகின் கீழ் மூடினேன்,
நீங்களோ
சிறகைத் தாண்டி வெளிவந்து
பருந்துக்கு
பந்தியாகிக் கொண்டிருக்கிறீர்கள்.

சொல் கொண்டு வரும்
இறைவாக்கினர்களை
கல்கொண்டு கொல்கிறீர்கள்.

மருந்தை அருந்துங்கள்
இல்லையேல்
நோய்க்கு விருந்தாவீர்கள்.
என்றார்.

 
பெற்றுக் கொண்டதை பயன்படுத்து

 
செல்வன் ஒருவன்
பயணம் சென்றான்.

பயணம் துவங்கும்
மணிக்கு முன்,
ஊழியரை அழைத்து
செல்வத்தை அவர்களுக்குப்
பகிர்ந்தளித்தான்.

ஒருவனுக்கு ஐந்து,
இன்னொருவனுக்கு இரண்டு,
மூன்றாமவனுக்கு ஒன்று
என
தாலந்துகளை தந்து சென்றான்.

ஐந்து பெற்றவன்,
வியர்வைக்குள் விழுந்து
உழைத்தான்
மேலும் ஐந்து சம்பாதித்தான்.

இரண்டு பெற்றவன்,
இரவும் பகலும் இடைவிடாமல்
உழைத்து
மேலும் இரண்டு சம்பாதித்தான்.

ஒன்று பெற்றவன்
ஒன்றுக்கும் உதவாதவன்,
அவன்
தாலந்தை மண்ணுக்குள்
புதைத்து வைத்து தூங்கினான்.

புதைத்தது விதையானால்
முளைக்கும்,
பணம் என்ன செய்யும்?

தலைவன் திரும்பினான்
ஊழியரை பார்க்க விரும்பினான்.

ஐந்து தாலந்துக்காரன்
பத்தோடு வந்தான்,
தலைவன் உச்சி குளிர்ந்தான்.

நீ
நல்ல ஊழியனின் உதாரணம்.
உன்னை
அதிக பணிகளுக்கு
அதிபதியாக்குவேன்
என்று பாராட்டினான்.

இரண்டு பெற்றவன்
நான்கோடு வந்தான்
தலைவன் பெருமிதப்பட்டான்.

நீ
பெருமைக்குரிய பணியாளன்
சிறியவற்றில்
நம்பிக்கை காத்தாய்
பெரியவற்றிற்கு
உரியவன் ஆவாய் என்றான்.

ஒன்று பெற்றவன்
ஓரமாய் வந்தான்,

ஐயா,
நீர் விதைக்காத இடத்தில்
அறுவடை செய்வீர்,
தூவாத இடத்தில் சேர்ப்பீர்.

இதோ
உமக்குப் பயந்து நான்
நிலத்தில் புதைத்த
உம் தாலந்து.

நீர் கொடுத்தது
அப்படியே இருக்கிறது.
பாழாக்கவில்லை
என்றான்.

வந்த தலைவன் நொந்தான்.
கெட்ட ஊழியன் நீ.
வட்டிக்காவது என்காசை
விட்டிருந்தால்
வட்டியோடு நான்
பெற்றிருக்கக் கூடும்.

உன்மேல் வைத்த நம்பிக்கை
எனக்கு
வருத்தம் வருத்துகிறது.

நீ
எதிர்பார்ப்புகளை
எரித்துவிட்டாய்.

பாறையில் பெய்த
பருவ மழைபோல
வீணாய் போன தாலந்து
வெறுமனே இருந்தது.

இதோ,
பயன் படாத இவன் தாலந்தைப்
பிடுங்கி,
பத்து இருப்போனுக்கு கொடுங்கள்.

இவனை
வெளியிருளில் தள்ளுங்கள்,
அங்கே அவன்
அழுகையை அள்ளட்டும்
பற்கடிப்பை மேற்கொள்ளட்டும்.

பயன்படுத்தத் தந்தவற்றைப்
பயன்படுத்தாததும்
பாவமே.

உள்ளவனுக்குக் கொடுக்கப்படும்
இல்லாதவனிடமிருந்து
உள்ளதும் பறிக்கப்படும்.

காலம் உங்களை
கால்களில் சக்கரம் கட்டி
கடத்திச் செல்கிறது,
நீங்கள்
நன்மையின் அச்சாயை
நழுவவிடாதீர்கள்

 

திரும்பி வா, திருந்தி வா

 

மனந்திரும்பும் மானிடனை
இன்னோர் உவமையால்
இயேசு சொன்னார்.

தந்தை ஒருவனுக்கு
இரு புதல்வர்கள்
இருந்தனர்.

தரமற்ற தம்பி
சொத்தைப் பிரிக்க
தந்தையோடு தர்க்கமிட்டான்.

கைகளில் கரன்சி இருந்தால்
உலகத்தின்
இன்பங்களையெல்லாம்
சட்டைப்பையில்
சுருட்டிக் கொள்ளலாம்
என்பது அவன் எண்ணம்.

தந்தையின் அறிவுரைகள்
எருமையில் காலில் மிதிபட்ட
பறவை முட்டையாய்
பயனற்றுப் போயின.

வேறு வழியின்றி
தந்தையும்
இருந்த சொத்தை
இரண்டாக்கினார்.

பாதி சொத்தை
இளையவனுக்குக் கொடுத்தார்.

அவன்
சுவர்க்கத்தையே தன்
சுருக்குப் பைக்குள்
சொருகிக் கொண்டதாய் ஆனந்தித்தான்.

சொத்துக்களை விற்று
பணமாக்கினான்,
ஊதாரி நண்பர்களே
ஆதாரமென்று நம்பினான்.

நண்பர்களோடு
தூரதேசம் சென்று
பணத்தைப் பாய்ச்சி
ஆனந்தத்தை அள்ளினான்.

மதுவின் கரைகளில்
கண்ணயர்ந்து
மாதுவின் கரங்களில்
விழித்தான்.

தகாத பாதைகளில்
தவறாமல் நடந்தான்.

மதகு திறந்த
அணையில்
தண்ணீர் தீர்வது எளிதல்லவா.
அதுவும்
தண்ணீர் வரத்தே இல்லாத
அணையெனில் ?

சொத்துக்கள்
தீப்பந்தம் பட்ட
பனித்துளி போல
உலர்ந்து மறைந்தது.

ஊதாரித்தனத்தின் உச்சத்தில்
உறங்கி
விழித்தவனிடம்
உணவுக்கே மிச்சமில்லை.

தண்ணீர் பாயாத
அருவிகளில்
குளிப்பதற்கு ஆளிருக்குமா ?

பணம் தீர்ந்தது புரிந்ததும்
நண்பர்கள்
இரவோடு இரவாக
கூடு மாறி ஓடினர்.

உணவுக்காய்
வேலை தேடி அலைந்தான்
பன்றி மேய்க்கும் வேலை
பரிதாபத்துடன்
கொடுக்கப்பட்டது அவனுக்கு.

வறுமை துரத்த
பட்டாடை உடுத்தியவன்
பன்றிகளோடு புரண்டான்.

பட்டினி துரத்த
மதுவில் நீந்தியவன்
பன்றி உணவை பகிர்ந்துண்டான்.

பின்
அதற்குக் கூட வழியின்றி
அவதித் தீயில் விழுந்தான்.

வேதனைகளின்
வேல் குத்தியதில்
நிஜம் தெளிந்து வருந்தினான்.

தந்தையின் நேசம்
நெஞ்சுக்குள் நெளிய,
புத்தி தெளிந்தான் புத்திரன்.

மனதுக்குள் மொழியுரைத்தான்.
என் தந்தையிடம் செல்வேன்,
பாவங்களின் மேல்
படுத்துக் கிடந்த என் மேல்
அவர்
பரிதாபம் கொண்டால்,
‘வேலையாளாய் இருந்து
வேளை நகர்த்தவா’ என்று
வேண்டுவேன் என
உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான்.

அவமானம்
தலைமேல் அமர
தலை கவிழ்ந்தான்.

இல்லம் நோக்கி
இளையவன் வந்தான்.

தொலைவில் அவன்
நிழல் கண்டதும்,
தந்தையின் கரம் நீண்டது.
அவர் மனம்
மகிழ்ச்சித் தோட்டத்தில்
மலர் கொய்தது.

மண்ணை நோக்கிப் பாயும்
மழையாய்
மகனை நோக்கிப் பாய்ந்தார்
அவர்,

திரும்பியவன்
திருந்தியிருந்தான்.

அப்பா,
உமக்கும் வானகத்துக்கும்
எதிரான பாவம் ஏராளம் செய்தேன்.
மகனெனும் மரியாதை
என் உரிமையில்லை இப்போது.
வேலையாள் ஒருவனாக்கி
வேளைக்கு உணவளிப்பாயா
என்றான்.

கண்களில் சோகக்கடல் கொந்தளிக்க
இமைகளை உடைத்துக் கொண்டு
உப்பு அலை
கன்னங்களில் குதித்தது.

தந்தையோ
மகனைக் கட்டியணைத்தார்.
ஆனந்தக் கண்ணீரால்
அவன் முகம் நனைத்தார்.

கொழுத்த கன்றைக்
கொன்றார்
விருந்தொன்றை அமைத்தார்.

முதல்தர ஆடையணிவித்து
மிதியடி மோதிரம் தருவித்து
மகனை உச்சி மோந்து
உச்சத்தில் உலாவினார்.

மூத்தவன் வந்தபோது
ஆடல் சத்தத்தில் ஆடிப்போனான்,
விவரம் அறிந்து
கோபத்தில் குதித்தான்.

தந்தையை நோக்கி கேள்விகளை
எறிந்தான்.

தகாத உறவுக்காரனுக்கு
தரமான விருந்தா,
தவறாமல் இருந்த எனக்கு
தந்ததென்ன தந்தையே…
மூத்தவன் மூச்சில் வெப்பமிருந்தது.

தந்தை சொன்னார்.

உன் தம்பி
இறந்திருந்தான்
இப்போது உயிர்த்துவிட்டான்.
காணாமல் போயிருந்தான்
கிடைத்துவிட்டான்.
அதற்கே இந்த விருந்து.

நீயோ,
என்னுடனே இருக்கிறாய்
பிரியாத பிரியத்துடன்.
எனக்குள்ளதெல்லாம்
உன்னுடையதே.

தொலைந்தவை கிடைக்கையில்
ஆனந்தப்படு.

தவறுதல் மனித இயல்பு,
மீண்டு வருதலே
மனிதனின் மாண்பு.
என்றார்.

 

எண்ணையற்ற விளக்குகள்

 

விழிப்பாய் இருப்பதன்
தேவையை
விளக்கினார் இயேசு.

விண்ணரசை,
மணமகனை எதிர்கொள்ளச் சென்ற
பத்துக் கன்னியருக்கு
ஒப்பிடலாம்.

மணமகன் வருகையில்
விளக்குடன் சென்று
வரவேற்கவேண்டும்,
அவருடன்
மணவீட்டில்
பிரவேசிக்க வேண்டும்.

இரவின் ஆரம்பத்தில்
விளக்குடன்
காத்திருந்தார்கள் காரிகைகள்.

காத்திருந்த பத்துபேரில்
ஐவர் அறிவிலிகள்.
அவர்கள்
விளக்கை எடுத்தார்கள்
அழுக்கைத் துடைத்தார்கள்.
திரியை சரி செய்தார்கள்
கரியை சரி செய்தார்கள்
ஆனால்
எண்ணை எடுக்க மறந்தார்கள்.

மிஞ்சிய அஞ்சு பேர்
விவேகிகள்.
அவர்கள்
விளக்கும் எண்ணையும்
தனித் தனியே எடுத்தார்கள்.
திரிக்கும் ஒளிக்குமான
உறவு
எண்ணையின் வழி என்பதை
விவேகிகள் விளங்கியிருந்தார்கள்.

இதோ,
இரவு அடர்த்தியாகிறது
மணமகனை காணவில்லை.

தூக்கம்
மங்கையரை திருடிக் கொள்ள
இருட்டு
விளக்குகளை இழுத்துக் கொள்ள
அடர் தூக்கத்தில்
அனைவரும் அடங்கினார்கள்.

நள்ளிரவு மெல்ல
நகர்ந்து வந்த போது,
‘ மணமகன் வருகிறார்
  எதிர் கொள்ள வாருங்கள் ‘
அழைப்பு கன்னியர்க்கு
அனுப்பப்பட்டது.

விவேகிகளின் விளக்குகள்
கம்பீரமாய் எரிய
அறிவிலிகளின் விளக்குகள்
அணைந்து போயின.

விவேகிகளின் விளக்குகள்
தீபத்தை விழிக்க வைத்தன,
அறிவிலிகளின் விளக்குகளில்
இரவு உறங்கிக் கிடந்தது.

எண்ணையின் தேவை
அப்போது தான் புரிந்தது
அவர்களுக்கு.

அணையும் எங்கள்
விளக்குகளைப் பாருங்கள்
கொளுத்திக் கொள்ள கொஞ்சம்
எண்ணை தாருங்கள்.

அறிவிலிகளின் விண்ணப்பம்
நிராகரிக்கப்பட்டது.

இல்லை
உங்களுக்கு எண்ணையளித்தால்
எங்கள் விளக்குகளும்
இருட்டைப் போர்த்திக் கொள்ளும்
குருடாகிப் படுத்துக் கொள்ளும்

கடைக்குக் செல்லுங்கள்
தேவையைச் சொல்லுங்கள்
பின்
விளக்குகளை
கொளுத்திக் கொள்ளுங்கள்
என்றார்கள்.

அறிவிலிகள் கடைகளைத் தேடி
நடந்தார்கள் அந்த
நள்ளிரவில்.

காத்திருந்த கன்னியர்
மணமகனை வரவேற்று
மணவீட்டில் புகுந்தார்கள்
வாசல் கதவுகள்
பூட்டப்பட்டன.

காலம் கடந்து
கதவு தட்டும் ஓசை,
வெளியே
அறிவிலிகளின் அவல ஓசை.

ஆண்டவரே எங்களுக்காய்
கதவுகளைத் திறந்து விடும்.

மணமகன் பதில் சொன்னார்,
கதவைத் திறப்பது
கனவிலும் நடக்காது.
நீங்கள் யாரென்பதே
எனக்குத் தெரியாது.

விழிப்பாய் இருப்பவரே
விண்ணரசிலும் இருப்பார்.

விதைக்கையில் தூங்கியவன்
அறுவடையில்
விழித்தெழுந்தாலும்
களஞ்சியம் காலியாகவே கிடக்கும்.

மனுமகன் வருகை
எப்போதும் நடக்கலாம்,
இதயங்களை நீங்கள்
இருக்கைகளாக்குங்கள்.

வருகைக்குப் பின்
வாசல் பெருக்கத் துவங்காதீர்.

 

ஏழையை நேசி

 

மெல்லிய ஆடையால்
மேனி பொதிந்த
பகட்டுப் பணக்காரன்
ஒருவன் இருந்தான்.

அவன்
மிதியடிகள் கூட
செல்வத்தைப் பறைசாற்றின.

அவன் வீட்டு வாசலில்
புண்களின் புகலிடமான
பழுத்த உடல் ஏழை ஒருவன்
பசிக்கு உணவு கேட்டு
படுத்திருந்தான்.

பட்டினியோடு
ஆயுட்கால ஒப்பந்தம் கொண்டிருந்த
அவன் பெயர்
லாசர்.

பந்தியில் சிந்திய உணவு கூட
பாவம் இவனுக்கு
உணவாகவில்லை.

பணக்காரனோ
உண்டு குடித்து
உல்லாசத்தின் உச்சியில்
நில்லாமல் நாட்டியமாடினான்.

ஏழை லாசரோ
பருக்கைகளுக்காய்
இருக்கைகளை நோக்கி
இரு கைகளை ஏந்திக் கிடந்தான்.

நாய்களின் நாக்குகள்
இவன் புண் கழுவும்.
வேதனையின் நாவுகள்
இவன் உயிர் கவ்வும்.

ஏழை இறந்தான்
தேவதூதரின் தேரிலேறி
விண்ணரசில் அமர்ந்தான்.

பணக்காரனும் மடிந்தான்
எரியும் நெருப்பில்
எறியப்பட்டான்.

ஏழையவன் இறைவனின்
அருகே இருப்பதை கண்டு
பணக்காரன் கதறினான்.

ஆண்டவரே,
ஏழையின் விரல் நுனியின்
ஒரு சொட்டு ஈரத்தை அனுப்பும்.
அனலுக்குள் அழிகிறேன்
இரக்கம் கொண்டு
அவனை இறங்கச் சொல்லும்.

ஆண்டவர் சொன்னார்,
வாழும்போது நீ
சுயநல சிந்தனைகளில்
சுருக்கு மாட்டிக் கிடந்தாய்,
சொகுசுப் பெட்டிகளில்
அடைகாக்கப்பட்டாய்
இவனோ
வலியோடு மட்டுமே வாழ்ந்தான்.

அங்கே நீ
செல்வங்களின் வாசனையில்
மயங்கிக் கிடந்தாய்
இவன்
உன் வீட்டு வாசலில்
பசியில்
மயங்கிக் கிடந்தான்.

இப்போது
வலி உனக்கு
வாழ்வு இவனுக்கு.
இங்கே
தீர்வுகளே தீர்ப்புகள்.

பணக்காரன் பதறினான்.
அப்படியென்றால் அவனை
என் வீட்டுக்கு அனுப்பும்,
என் சகோதரர்களாவது
சாபத்துக்கு அப்பால் சஞ்சரிக்கட்டும்.

என்னைப் போல் அவர்களும்
எரியும் நெருப்பில்
கரிய வேண்டாம்.
பயத்திலாவது கொஞ்சம்
பொதுநலம் பேணட்டும்.

இறந்த ஒருவன்
இறங்கிச் சொன்னால்
நம்புவர் அவர்.
பணக்காரன் விண்ணப்பித்தான்.

கடவுள் மறுத்தார்.

இல்லை.
அவர்களுக்கு
இறவா
இறைவாக்கினர் உள்ளனர்.

மோயீசனை மறுதலிப்போர்
லாசரையும் மறுதலிப்பர்.

அவர்களின் முடிவு
அவர்களின்
செயல்களைச் சார்ந்ததே.
மனிதாபிமான முளைவிடாத விதைகள்,
பயனற்ற பதர்கள்.
அவற்றின் புகலிடம்
தீயின் நாக்குகளே
என்றார்.

பணக்காரன்
வழியின்றி அனலில் அழுதான்
ஏழை
வலியின்றி சுவர்கத்தில் சிரித்தான்.

 

தொடர் செபம் இடர் தீர்க்கும்

 

தொடர் செபம்
இடர் தீர்க்கும் என்பதை
சுடர் விடும் ஓர் உவமையால்
பரமன் இயேசு உரைத்தார்.

கடவுளுக்கு அஞ்சாமல்,
மனிதனையும் மதிக்காமல்
ஓர்
நீதியற்ற நடுவன் இருந்தான்.

எதிரியைத் தண்டிக்கச் சொல்லி
ஓர்
கைம்பெண் அவரை
தொடர்ந்து விண்ணப்பித்தாள்

நீண்ட நாள்
நடுவன்
தன் கொள்கையிலிருந்து
நகரவேயில்லை.

கைம்பெண்ணுக்கு
நீதி கைவரவில்லை.
அவள்
கண்ணீர் விண்ணப்பங்கள்
அவன் வீட்டுக்
கதவை விட்டு விலகவுமில்லை.

தொடர்ந்து தட்டினாள்
பாதி ராத்திரியிலும்
நீதி கேட்டாள்.

அவள்
தொந்தரவினால்
உந்தப்பட்டு தன்
உதவும் கரத்தை
கதவுக்கு வெளியே நீட்டினான்
அவன்.

அவள்
நிம்மதி நித்திரை கெடுக்கிறது
என்று சொல்லி
நீதி வழங்கினான்
நிம்மதியாய்த் தூங்கினான்.

நீதியற்ற நடுவனே
இப்படி
இதயம் மாறினான் என்றால்,
நீதியின் தேவன்
கருணை மழையை
கணக்கின்றி பொழியாரோ ?

எனவே
வேண்டுதல்கள் தொடரட்டும்,
வேண்டுவன தரப்படும்.
என்றார்.

செய்தி கேட்ட மக்கள்
நிம்மதியுடன் நடந்தனர்.
உதடுகளில்
செபத்தை உடுத்தியபடி.

இறைமகனின் விளக்கங்கள் ஞாயிறு, நவ் 23 2008 

 

 

பணியாளரே துணிவு பெறுங்கள்

 

சீடர்களுக்கு இயேசு
வார்த்தெடுத்த
வார்த்தைகளால்
வலுவான செய்திகள் சொன்னார்.

பயணத்தின் ஓரத்தில்
பயம் கொள்ளாமலும்,
வெப்பத்தின் வெப்பத்தில்
வெந்துபோகாமலும்,
மனசை மலையாக்கும்
ஒப்பற்ற அறிவுரைகள் அவை.

o

ஆன்மாவைக் கொல்லும்
ஆயுதம் இல்லாதவருக்காய்
அஞ்சவேண்டாம்.

மனிதரின் வாட்கள்
உடலோடு மட்டுமே உறவாடும்,
உடல் வலிக்காய்
அஞ்சாதீர்கள்.

சாவு என்பது
சரீரத்தோடு மட்டுமே
சம்பந்தப் பட்டதல்ல,
மனிதாபிமானம் மரித்துப் போனால்,
தரணியில் வாழ்வதில்
தரம் ஏதும் இல்லை.

o

ஓநாய்களிடையே
உலவும் ஆடுகளாய் நீங்கள்.
பாம்பின் விவேகமும்
புறாவின் பரிசுத்தமும்
அணிகலனாய் அணியுங்கள்.

சமாதானத்தின்
சாகுபடி செய்யுங்கள்.

o

மறைக்கப்பட்டவை
என்றேனும் வெளிப்பட்டே தீரும்.
இரவின் நிறம்
பகலால் துடைக்கப்படும்.

நான்
உங்கள் காதுக்குச் சொன்னதை
நீங்கள்
உலகிற்கு உரக்கச் சொல்லுங்கள்

o

உலகின் உறவுகள்
உன்னதரால் வழங்கப்பட்டவை,
உலக உறவுக்காய்
உன்னதரை உதாசீனப் படுத்தாதீர்கள்

o

 

யார் நன்மை செய்ய வேண்டும்

 

யோவான்
இயேசுவிடம் ஓர்
குழப்பக் கேள்வியை வைத்தார்.

உமது
பெயரைச் சொல்லி ஒருவன்
பேய்களை ஓட்டுகிறான்
நல்ல செயல்கள் செய்கிறான்.
அவன்
நம்மைச் சாராதவன்
குழுவில் சேராதவன்
தடுக்கவா? விடுக்கவா ? என்றார்.

தடுக்க வேண்டாம்
கொடுக்க விடுங்கள்.
இயேசு சொன்னார்.

நல்ல விதைகளை
யார் வேண்டுமானாலும் விதைக்கலாம்.
விதைப்பவனைப் பார்த்து
முளைகள் எழும்புவதில்லையே.
விதைக்கட்டும்.

நல்ல செயல்களுக்காய்
என் பெயரைப் பயன்படுத்தினால்
பழுதில்லை.
விழுதுகள் ஆலமரத்துக்கு
விருதுகள் தானே.

நமக்கு எதிராய் இராதவன்
நம்மைச் சார்ந்தவனே.

நம்
செய்திகளுக்குத் தீ வைப்பவன்
மட்டுமே
நம்மைச் சாராதவன்
நன்மையைச் சாராதவன்.
என்றார்.

யோவான்
குழப்ப முடிச்சுகள் அவிழ
ஆனந்த நேர்கோட்டில்
ஐக்கியமானார்.

 

ஓய்வு நாளில் ஏன் ஓயவில்லை

 

பழி சுமத்தப் பார்த்திருந்தது
பரிசேயர் கூட்டம்,
இவர்கள்
உள்ளுக்குள் கள்ளூற்றி
வெளியே மல்லிப்பூ வளர்ப்பவர்கள்.

ஓய்வு நாளில்
இயேசுவின் சீடர்கள்
வயலில் கதிர் கொய்து தின்றனராம்,
பூச்சியைப் பிடித்து
யானை என்றது கூட்டம்.

யூதர்களின் முறையோ
சட்டங்களில் சட்டங்களுக்குள்
அடைபட்டுக் கிடக்கும்
புகைப்படம் போன்றது.
வெளியேறி ஒரு நாளும்
புது சுவாசம் இழுக்காது.

ஓய்வு நாள் என்பது
ஓய்வெடுக்க மட்டுமே.
அன்று
எச்செயலும் செய்யலாகாதெனும்
எச்சரிக்கைக் கட்டளை உண்டு
அவர்களுக்கு.

இயேசுவோ,
நலன்களை நல்க
நாள்காட்டி பார்ப்பதில்லை.

மடிந்து கொண்டிருக்கும் உயிரை
ஓய்வுநாள் முடியவில்லை
என்று
மனசை மடித்து மடங்கிச் செல்ல
மனுமகன் ஒன்றும்
சட்டத்தின் வால் பிடித்துத் தொங்கும்
பட்டத்தின் நூல் அல்ல.

அடக்கப் பார்த்த கேள்விக்கு
ஆதாரத்தோடு பதில் வந்தது
இயேசுவிடமிருந்து.

தாவீதும்
அவரோடு இருந்தவர்களும்
ஓய்வு நாளில்
குருக்களுக்கான அப்பங்களை
பசிதீர்க்கத் தின்றதை
வாசித்ததில்லையா நீங்கள்.

குருக்களின் ஆலயப் பணி
ஓய்வு நாளிலும் தொடரலாம்
என்பதை
கேட்டதில்லையா நீங்கள் ?

அவர்களின் சட்டநூலிலேயே
அவர்களின்
கேள்வியின் பதிலிருப்பதை
கோடிட்டுக் காட்டினார்.

சட்டங்கள் இருப்பது மனிதனுக்காக,
மனிதன் இருப்பது
சட்டத்துக்காக அல்ல.
உங்கள் செல்லரித்துப் போன
சட்டங்கள் இனி செல்லாது.

மனுமகன்,
ஆறு நாளுக்கான ஆண்டவரல்ல,
ஓய்வு நாளுக்கும்
அவரே ஆண்டவர்.

குறை சொன்ன கூட்டத்திடம்
வேறு கேள்வி
வேர்விட வில்லை.
 

அழிவுக்கான புளிப்பு மாவு

 பரிசேயரின்
புளிப்பு மாவைக் குறித்து
கவனமாய் இருங்கள்
இயேசு சொன்னார்.

சீடர்களோ
சிற்பியோடே இருந்தாலும்
இன்னும்
உளிகளைப் பற்றி முழுதாய்
அறிந்து கொள்ளவில்லை.

தங்களிடம்
அப்பம் இல்லையே என
தர்க்கமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இயேசு
மெலிதான கோபத்தால்
அவர்கள்
சந்தேகம் விலக்கினார்.

நான்
உள்ளத்தைப் பாதுகாக்கச்
சொன்னால்
நீங்கள்
உணவைப் பாதுகாக்கவில்லை
என்கிறீர்கள்.

எப்போது தான்
நுனிப்புல் மேய்வதை விட்டு
வேர்கள் மீது
வேட்கை கொள்வீர்களோ ?

ஐந்து அப்பத்தை
ஐயாயிரம் பேர் உண்டபின்
மீந்தவற்றை
பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தீர்கள்.

ஏழு அப்பங்களை
நாலாயிரம் பேருக்கு அளித்தேன்
அதில்
மீந்த அப்பங்களே
ஏழு கூடைகள் இருந்தனவே.

இன்னும் ஏன்
அப்பத்துக்கான கவலை.
நான் சொல்வது
வயிறுக்கான வார்த்தைகளல்ல
மனசுக்கான
மந்திரங்கள்.

குழப்பத்தைக் கொன்ற
வேடர்கள் ஆனார்கள்
சீடர்கள்.

 

எண்ணிக்கையா, எண்ணமா ?

 
ஒரு முறை இயேசு

காணிக்கை போடுவோரை
ஆலயத்தில் அமர்ந்து
கவனிக்கலானார்.

பட்டுக்குள் சுற்றப்பட்ட
பணக்காரர் பலர்
பெட்டி பெட்டியாய்
பணம் போட்டு நகர்ந்தனர்.

பகட்டுக்காய் பலர் வந்து
கட்டுக் கட்டாய்
நோட்டுக்கள் இட்டு
கர்வத்துடன் கடந்தனர்.

கடைசியாய் வந்தாள்
கவலையின் பையுடன்,
இரண்டு காசு கையுடன்,
கைம்பெண் ஒருத்தி.

இயேசு சொன்னார்
அதிகம் போட்டவள் இவளே.
ஏனெனில்
அதிகமாய் போட்டவர் எல்லாம்
அதிகமிருந்ததில் எடுத்தனர்.
இவளோ
இருந்ததை மொத்தமாய் கொடுத்தனள்.

அவர்கள்
களஞ்சியத்தில்
எஞ்சியதைக் கொடுத்தார்கள்
இவளோ
வாழ்வுக்காய்
மிஞ்சியதை கொடுத்தாள்.

உள்ளுக்குள் உண்மை நேசம்
ஒரு காசை வானளவு விரிக்கும்.
நேசம் இல்லா பகட்டுக்கள்
வானத்தைகூட
வார்க்கச்சைக்குள் இறுக்கும்.

 

பாவிகளெனும் பள்ளத்தில் பரமனா ?

 
பாவிகள் என்று
புறக்கக்கப்பட்டவரோடு
இயேசுவின் இரக்கம்
இடைவிடாமல் இருந்தது.

பாவிகளோடும் வரிவசூலிப்பவர்களோடும்
விருந்து உண்டார்.
கண்ணில் எண்ணை ஊற்றிக்
காத்திருந்தது,
பிரச்சினை கிளப்பவே
பரம்பரை பரம்பரையாய்
பழக்கப்பட்ட கூட்டம்.

போதகராய் இருப்து
வெகுமானம்
அவன் பாவிகளின் பாயில் அமர்ந்து
விருந்துண்பது
அவமானம்.
உங்கள் போதகருக்குப் புரியவில்லையோ ?

பரமனின் உறவுகள் எல்லாம்
உதவாக்கரைப் பாவிகளோடா ?
கேலிக் கேள்விகள்
சுழன்றது சீடர்களை நோக்கி.

இயேசு,
கேள்வித் தீயாய் எரித்தவரை
பதில் நீரில்
நனைத்தெடுத்தார்.

என் பணி,
நீங்கள் தேடும் மக்களோடல்ல
இதயம் வாடும் மக்களோடு
உங்கள் எல்லைகளுக்கு அப்பால் தான்
என்
ஆரம்பமே ஆரம்பம்.

மருத்துவனின் பணி
ஆரோக்கியவானின்
அறைகளிலல்ல,
நோயாளிகளின் நிலையங்களில்.

பலியை புறந்தள்ளி விட்டு
இரக்கத்தை மட்டுமே
இதயங்களில்
இறக்க வந்தேன்.

செதுக்கி முடித்த சிற்பத்தில்
சிற்பியின் உளிக்கு
வேலையில்லை.
வரைந்து முடித்த ஓவியம் தான்
நீதிமான்கள்
என் தூரிகைத் தழுவல்கள்
ஓவியமாகக் காத்திருக்கும்
காகிதங்களோடு தான்.
காவியமாய் காத்திருக்கும்
ஓவியங்களோடல்ல.

என் தேடுதல்கள்
குற்றம் விலகிய மனங்களல்ல,
குற்றம் விலக வேண்டிய
மனங்கள்.

நீதிமான்
நீதிமானாய் இருக்கட்டும் !
ஆனால்
பாவி பாவியாய் இருக்க வேண்டாம்.

பாவிகளின் பாதை மாற்றி
நீதிக்குள் அவர்களை
நடக்கவைப்பதே என் பணி,
மீன்களுக்கு நீச்சல்
பயிற்றுவிப்பதல்ல.

கறையற்றவர்களை தழுவுகிறேன்
அவர்கள்
நேசத்தில் நனைகிறேன்,
கறையுற்றோரைக் கழுவுகிறேன்.
அவர்களை
நேசத்தால் நனைக்கிறேன்.

இயேசுவின் விளக்கம்
தப்பாமல் வந்தது.
தப்பு சொன்னவர்கள்
தப்பி ஓடினார்கள்.

 
படைத்தவனுக்கு இடமில்லை

 

மறைநூல் அறிஞன் ஒருவன்
இயேசுவை அணுகி,
போதகரே,
உம் பயணம் தொடருமிடமெல்லாம்
இனி
என் பாதங்களும் படரும் என்றான்.

இயேசு அவரிடம்,
நரிகளுக்கு வளைகள் உண்டு.

பறவைகளுக்குக் கூட
சிறகு வலித்தால்
சங்கமிக்க கிளைகளிடையே
கூடுகள் காத்திருக்கும்.

மனுமகனுக்கோ
தலைச்சாய்க்கக் கூட
இடமிருக்காது,
தொடரத் தயாரென்றால் தொடரலாம்.
என்றார்.

இன்னொரு சீடர் அவரிடம்,
ஆண்டவரே,
என் தந்தை
இறந்துவிட்டார்,
அடக்கம் செய்துவிட்டு வரவா ?
என,

வாழ்வை முடித்தவர்க்காய் நீங்கள்
கவலைப் படுகிறீர்கள்,
வாழ்வை
துவங்காதவர்களுக்காய் நான்
துக்கப்படுகிறேன்,

உலகக் கவலைகள் உங்களை
உலுக்குகிறதென்றால்
உன்னதப் பணிக்கு
இன்னும் நீங்கள்
தயாராகவில்லை என்பதே பொருள்.
என்றார்.

 

இடம், பொருள், ஏவல் முக்கியம்

 
 
பழைய ஆடையில்
புதுத் துணியை
ஒட்டுப் போட உபயோகிக்காதீர்,
அது
கிழிசலைப் பெரிதாக்கி
ஆடையை அழித்துவிடும்.

புதிய இரசத்தை
புதிய சித்தைகளில் ஊற்று,
பழைய சித்தைகளில்
அதை ஊற்றினால்
எல்லாம் வீணாகும்.

சரியானதைச் செய்யுங்கள்
சரியான இடத்தில்.

 
 
மீண்டும் ஓய்வு நாள் சர்ச்சை

 

இன்னொருமுறை,
சூம்பியக்கையன் ஒருவனை
சுகமாக்கினார் இயேசு
ஓய்வு நாள் அது.
இன்னொரு குற்றச்சாட்டு குதித்தது.

ஓய்வு நாளில் என்ன
பிணி மாற்றும் பணி?
ஓய்வு மட்டுமே
ஓய்வு நாளுக்கான பணி
புரியாதவன் பரமனா ?

இயேசு சொன்னார்,
உன்
ஆட்டுக்குட்டி
குழியில் விழுந்தால்
ஓய்வு நாளெனில் அதை
சாக சம்மதிப்பாயா ?
சாகசம் செய்தாகிலும்
காப்பாற்றி கரையேற்றாயா ?

பள்ளத்தில் உன் பசு விழுந்தால்
ஓய்வு நாளெனில்
அதை
உதறிவிடுவாயா ?

ஆட்டைவிட மேலானவன்
மனிதன்,
இதை மறுதலிப்பவன் எவன் ?

நன்மைகளின்
விற்பனைக் கூடத்தில்,
முட்டுக் கட்டைகளை இட்டு
நிரப்பி வைக்காதீர்கள்.

வழக்கம் போல்
விளக்கம் கேட்டவர்
விலகினர்.
விளக்கம் பெற்றவர்
நெருங்கினர்.

 
விண்ணக இருக்கைக்கு விண்ணப்பம்
 

செபதேயுவின் மனைவி
தம் மக்களோடு வந்து
இயேசுவிடம்
விண்ணப்பம் ஒன்றை வைத்தாள்.

நீர் ஆட்சி அரியணையில்
அமரும்போது,
இவர்களை உம்
இரு பக்கங்களிலும்
இருக்கச் செய்யும் என்பதே
அவ்விண்ணப்பம்.

இயேசு
அவளைப் பார்த்தார்.
புரியாமல் பேசுகிறாய் நீ,
என்
துன்பக் கிண்ணத்தில் இவர்கள்
குடிப்பது சாத்தியமா ?
என்றார்.

தம் சிலுவைச் சாவையே
அவ்வாறு கேட்டார்.
அவளுக்கோ அது விளங்கியிருக்க
நியாயமில்லை.

ஆனாலும்
முடியும் என்றாள்.

இயேசுவோ
என்
பாடுகளைப் பகிர்தல்
ஒருவேளை சாத்தியமாகலாம்.

ஆனால்
விண்ணக வீட்டில்
என் பக்கத்தில் அமர்வது
என் தந்தையின் விருப்பத்தைப்
பொறுத்தது.
என்று பதிலளித்தார்.

 

சிறியவனே பெரியவன்

 

சீடர்கள் இயேசுவை அணுகி
வானுலகில்
பெரியவன் யார் ?
சற்றே எங்களுக்கு சொல்லும் என்றனர்.

இயேசு,
ஒரு சிறுவனைச் சுட்டி
சீடரிடம் சொன்னார்
இந்தச் சிறுவனைப் போல
தன்னைத் தாழ்த்துபவன்
விண்ணரசில் பெரியவனாய்
உயர்த்தப்படுவான்.

உங்களில்
பெரியவனாக இருக்க விரும்புகிறவன்
பணியாளனாய் பணியாற்றட்டும்,
ஆழ்கடல் ஆரவாரிப்பதில்லை
கரைகளில் மட்டுமே
அலைகள் அலையும்.

உங்களில் தலைவனாக
இருக்க விரும்புபவன்,
தொண்டனாய் முதலில்
தொண்டாற்றல் வேண்டும்.

தற்பெருமை கொள்பவன்
தகர்க்கப் படுவான்,
தாழ்ச்சி உள்ளவன்
தலைவனாக்கப்படுவான்.

மனுமகன் வந்தது
கிரீடம் சூட்டி அரசாள அல்ல,
மனுக்குலத்தை
தீய சிந்தனைகளிலிருந்து
கரையேற்றவும்,
அதற்காக சிலுவையில்
உயிர் அறையப்படவும் தான்.

பூமியின் பொருட்களில்
பற்றுக் கொள்வதை விட்டு விடுங்கள்,
ஆவியின் அருட் கொடையில்
பற்றிக் கொள்ளுங்கள்.
என்றார்.

 

ஒன்றா, தொன்னூற்று ஒன்பதா ?

 

மேய்ப்பனுக்குச் சொந்தமாய்
நூறு ஆடுகள்
இருந்தாலும்,

மேய்ச்சல் முடித்துத் திரும்புகையில்
ஆடு ஒன்று
திரும்பும் வழியில்
தொலைந்து போனால்,

ஒன்று போனால்
ஒன்றும் நேராதென்று
மெளனமாய் இருப்பதில்லை
மேய்ப்பன்.

மிச்ச
தொன்னூற்றொன்பது ஆடுகளையும்
மலையில் விட்டு விட்டு,
தொலைந்த ஆட்டைத்
தேடுவான்.

கண்டெடுத்து கட்டியணைப்பான்
ஆனந்த சத்தமிட்டு
முகம் தொட்டு முத்தமிட்டு
கூட்டத்தோடு கொண்டு சேர்ப்பான்.

அவனே உண்மை ஆயன்.

தவறிப்போகாத
மிச்ச ஆடுகளோடு
முடிந்துவிடுவதில்லை
நல்ல ஆயனின் பணி.
மேய்ச்சல் நிலத்தில்
தவறிப்போன சின்ன ஆட்டை
தேடிப் பிடித்து
தோள் தடவும் வரை அது தொடரும்.

மனுமகனும் அவ்வாறே,
யாரும் அழிவுறுதல்
ஆண்டவன் ஆசையல்ல.
மீட்பு என்பது
சிலருக்கு வழங்கப்பட வேண்டிய
சலுகைச் சலவை அல்ல.
 

திருந்துவதற்காய் திருத்து

 

யாரேனும் தவறிழைத்தால்,
அன்பான வார்த்தையில்
அவனை நீ
திருத்து.

மீண்டும் மீளாமல்
தவறான வழியில் அவன்
தவறாமல் சென்றால்,

இன்னும் இருவரை அழைத்து
அறிவுரை அளி.

பின்னும்
அவன் தடம்
தவறான இடம் எனில்,
திருச்சபைக்குச் சொல்.

திருச்சபைக்கும் மறுப்பவனை
ஓரமாய் ஒதுக்கிவிடு.
பொதுத் தீர்வையில்
அவனுக்கு
மன்னிப்பு மறுக்கப்படும்.

மண்ணுலகில்
ஒரு வேண்டுதலுக்காய்
மனமொத்து
சில இதயங்கள் செபித்தால்
அது வழங்கப்படும்.

பிறருக்காக வாழும்
வாழ்வின் அடித்தளம்
இயேசுவின் போதனையில்
புதுத் தளம்.

 

எத்தனை முறை மன்னிப்பது முறை ?

 

எத்தனை முறை மன்னிப்பது ?
ஏழு முறையா ?
சீடன் ஒருவன்
கேள்வியை வைத்தான்.

ஏழு முறை என்றல்ல,
எழுபது முறை ஏழு முறை
என்றார் இயேசு.

எண்க்கை பாராமல்
மன்னிப்பு வழங்கு என்பதை
மறைமுகமாய்
வெளிப்படுத்தும் வாசகம் அது.

ஏழுமுறை தான்
மன்னிக்க வேண்டும் எனும்
பழைய சட்டங்களை இயேசு
தணிக்கைக்குள் தள்ளுகிறார்
எண்ணிக்கைக்குள்
ஏன்
மன்னிப்பை அடக்க வேண்டும்
திருந்தும் வரை மன்னிப்போம் என
திருத்தம் செய்கிறார்.

தொடர் மன்னிப்பின் பலன்
சில இதயம்  சரியாதல் தான்.
அதுவே
மன்னிப்பின் மையம்.
 

விலக்குதல் விலக்கு

 

மனைவியை விலக்குதல்
முறையா ?
மனுமகனிடம் கேள்வி ஒன்று
கொடுக்கப்பட்டது.

ஆதாம் ஏவாள்
காலத்து ஆரம்பம்
ஆண் பெண் இணைந்து வாழும்
உன்னதம்.

ஆணும் பெண்ணுமாய்
இணைந்து வாழ்தல்
இறைவனின் விருப்பம்
மனைவியோடு வாழ்தலிலே தான்
மனிதனுக்கு மகத்துவம்.

இரு மனங்கள்
ஒரு உயிரில் உற்பத்தியாதல்
தான்
தாம்பத்யம்.

விவாகரத்து அளிப்பது
விண்ணகத்துக்கு எதிரான குற்றம்,
நடத்தை கெட்ட பெண் தவிர
மற்றவரை
விலக்குபவன்
விபச்சாரப் பாவம் செய்கிறான்
விளங்கிக் கொள்ளுங்கள்.

பிரிவதற்குக் காரணங்களை
சட்டங்களின்
மூலை முடுக்குகளில் தேடாமல்,
வாழ்வதற்கான காரணங்களை
மனதின்
மூலை முடுக்குகளிலும்
நிரப்பி வைத்தலே
இயேசுவின் அறிவுரையின் சாரம்.

 

பகிர்ந்தளி, அதுவே மீட்பின் வழி

 

பணக்காரன் ஒருவன்
பரமனிடம் வந்தான்.

மீட்பின் வாசலுக்கு
நான் வர வேண்டும்,
என் கடமை என்னவென்று
கருணையில் சொல்வீர்.

இயேசு சொன்னார்
கட்டளைகளைக் கடைபிடி,
கொலை, விபச்சாரம், களவு, போன்றவை
செய்யாதே
உன்னைப்போல் அயலானை
அன்பு செய்.

இவையெல்லாம்
என்
சிறுவயதுப் பழக்கம்,
இம்மியளவும் நான் தவறியதில்லை,
வேறென்ன செய்யவேண்டும் ?
கேள்வி யில் மறுபடி
தொங்கினான் அவன்.

இயேசு அவனைப் பார்த்தார்.
நல்லவனுக்குரிய
ரேகைகள்
அவன் விழிகளில் நீந்தின.

ஒன்று உன்னிடம்
குறைவெனக் காண்கிறேன்.

உன்
சொத்துக்களை விற்று
ஏழைகளுக்குக் கொடு.

ஒருவனுடைய வாசலில்
பட்டினியின் பாயும்,
இன்னொருவனுடைய வீட்டில்
பட்டாபிஷேகமும் ஆகாது.

அயலானை
உன்னைப்போல் நேசி.

பணக்காரன்
விழிகள் சோர்ந்துபோய்
வெளியேறினான்.
அவனுக்குச்
சொந்தமாய் ஏராளம்
சொத்திருந்தது.

 

ஊசிக் காதுக்குள் ஒட்டகம்
 

உறுதியாக சொல்கிறேன்,
பணக்காரன்
விண்ணரசு வருவது
மிக மிக அரிதென்பதை
அகத்தில் எழுதுங்கள்.

பணக்காரனின் விண்ணகப்
பயணத்தை விட,
ஊசிக் காதுக்குள்
ஒட்டகம் நுழைவது எளிது.

ஒருவன்,
அயலானின் வியர்வை துடைக்க
விருப்பப்படால்,
பகிர்தலில் மிளிர்வான்,
பகிர்தலின் புதல்வர்கள்
பணக்காரர் ஆவதில்லை.
இதுவே இக்கருத்தின்
உட்கரு.

சமத்துவச் சிந்தனைகளை
அகத்தினில் கொள்வதே
ஆண்டவன் அறிவுரை.

 *
எனக்காய் நீங்கள்
இழப்பவை எல்லாம்,
தந்தையால் உங்களுக்கு
தவறாமல் தரப்படும்

  
சொல்லுக்கு விலை இல்லை

 

கேள்வியில் விடையை
கிளற வைப்பார் இயேசு.

ஒருவனுக்கு
பிள்ளைகள் இருவர் இருந்தனர்.

தோட்டத்தில் கொஞ்சம்
வியர்வைப் பணி
மிச்சமிருந்தது.
மகன்களை போகச் சொன்னார்
தந்தை.

முதலானவன் முரண்டுபிடித்தான்.
முடியாது என்பதே
என் முடிவு என்று
கண்களை மூடினான்.

பின் மனம் திறந்தான்
தந்தை சொல் தட்டிய
தவறுணர்ந்தான்
தோட்டம் நோக்கி
ஓட்டம் கொண்டான்.

இரண்டாமவனிடமும்
தந்தை சென்றார்.
விழித்திருந்த மகனோ
இதோ என்றான்
ஆனால்
வார்த்தை உறுதிமொழியை
நிறைவேற்றத் தவறினான்.

இருவரில் யார்
இறைவனுக்கு ஏற்புடையவர் ?
இயேசுவின் கேள்வி
இலக்கைத் தொட்டது.

முதலானவன் என்ற பதில்
முண்டியடித்து முன் வந்தது.

இயேசு
புன்முறுவல் பூத்தார்.,
நீங்கள் சொன்னது சரியே.
செயல்களே முக்கியம்
வார்த்தைகள் எல்லாம்
செயலில்லையேல் செத்தவையே.

 
இரு வாழ்வும் தேவையே

 

செசாருக்கு வரிசெலுத்த வேண்டுமா ?
இயேசுவைப்
பொறிவைத்துப்
பிடிக்கப் பார்த்தது
பரிகாசப் பரிசேயர் கூட்டம்.

இயேசு
அவர்கள் உள்ளக் கிடங்கை
அகக்கண்ணால் ஆராய்ந்தார்.

வேண்டாம் என்றால்,
அரசனைப் பழிக்கிறான் என்று
நீண்ட வழக்கிடும்.

வேண்டும் என்றால்,
மனுமகனின் பணி
மண்ணுலகப் பதானோ என்று
காது வரை கேலி நீளும்.

இயேசு கேட்டார்,
உங்கள் நாணயத்தில்
பொறிக்கப்பட்டிருப்பது யார் பெயர் ?

செசார் என்றனர்,
செருக்குற்றவர்.

இயேசு இரண்டே வார்த்தை
இயம்பினார்.
செசாருக்குரியதை செசாருக்கும்
கடவுளுக்குரியதை கடவுளுக்கும்
கையளியுங்கள்.

கூட்டம்
திடுக்கிடலோடு திரும்பிச் சென்றது

 

மறு உலகில் யாருக்கு மனைவி ?

 

சதுசேயர் சிலர்
சதிக்கேள்வி கேட்டனர்,
இயேசுவை வார்த்தை வலையில்
வீழ்த்த எண்ணி.

ஒருத்தி மணமாகி
மகப்பேறுக்கு முன்பே
கணவன் மரணமடந்தால்
அவன் சகோதரன்
அவளைக்
கைப்பிடித்தல் மோயிசன் சட்டம்.

ஒருத்தி,
ஏழு சகோதரரை
ஒருவர் பின் ஒருவராய் மணந்து
எழுவரையும் இழக்கிறாள்.
பின்
உயிர்த்தெழுதலில் அவள் யார் மனைவி ?

அசத்தல் கேள்வியைக்
கேட்டதாய்
ஆனந்தத்தை
அசை போட்டது கூட்டம்.

இயேசு சொன்னார்,
சின்ன விசுவாசக் காரர்களே,
வேடதாரிகளே கேளுங்கள்.

உங்கள் அறியாமைக் கண்கள்
மூட மறுக்கின்றன,
வெளிச்சம் உங்கள்
ஊனக்கண்ணுக்கு உள்ளே வர
மறுக்கிறது.

விண்ணரசு,
சமகால வாழ்வின் நகல் அல்ல,
அங்கே
பெண் கொள்வதும் கொடுப்பதும் இல்லை.

எல்லோரும்
தேவதூதப் பிறவிகளே.

அசை போட்ட கூட்டம்
வசை கேட்டு விலகியது.

 

பெரிய கட்டளை

 

சதுசேயரின் சதிக்கேள்வி
சிதைந்ததும்,
பரிசேயரின் ஒரு கேள்வி
மிதந்தது.

திருச்சட்டத்தின் மிகப் பெரிய
கட்டளை என்ன ?
காதுகளைச் செதுக்கி
காத்திருந்தது கூட்டம்.

இயேசு சொன்னார்,
கடுகளவும் குறைவின்றி
முழு மனசோடும் ஆன்மாவோடும்
ஆண்டவனை அன்பு செய்.

உன் மீது
நீ காட்டும் அதே அன்பை
உன்
அயலான் மீதும் வை.

இவ்விரண்டு கட்டளைகளுமே
அத்தனை சட்டங்களுக்குமான
அச்சாணி.

 
விலங்குகளை விலக்குங்கள்
 

யூதர்களைப் பார்த்து
இயேசு சொன்னார்.
நீங்கள்
அடிமைகளாய் இருக்கிறீர்கள்
விலங்குடைக்காவிடில்
நீங்கள்
விலங்குகளே.

யூதர்கள் கொதித்தனர்.
நாங்கள் அடிமைகளா ?

ஆபிரகாம் முதல்
நாங்கள்
ஆணையிடும் வம்சம்
அடிமையின் வாரிசல்ல
என்றார்கள்.

இயேசு சிரித்தார்.
பாவம் செய்யும் எவனும்
பாவத்துக்கு அடிமை !

விட்டொழியுங்கள்
இல்லையேல்
கெட்டழிவீர்கள் என்றார்.

 
தந்தையை நான் அறிவேன்
 

கடவுளைச் சார்ந்தவன்
கடவுளுக்குச் செவிகொடுப்பான்,
நீங்கள்
சார மறுக்கிறீர்கள்
சாரமற்றுப் போகிறீர்கள்
என்றார் இயேசு.

யூதர்கள்
குதித்தனர்
கோபத்தில் கொதித்தனர்.

வானத்தில் மிதக்கும்
நினைவுகளோடு வாழ்ந்தவர்கள்
பாதாளத்தில்
எறியப்பட்டதால் பதறினர்.

நீ பேய் பிடித்துப் பிதற்றுகிறாய்,
ஆதாரம் இல்லாமல்
சதிராடுகிறாய்.

உன் மனமெனும்
கூடாரம்,
சேதாரம் ஆகிவிட்டது.
என்றனர்.

இயேசு சொன்னார்,
நான்
எனக்குப் பெருமை தேடுபவனல்ல,
உங்கள்
விசாரணைகளுக்கு
விளக்கமளிக்கத் தேவையில்லை.

எனக்குப் பெருமை தருவது
தந்தையின் அருகாமையும்,
திருந்தும் மக்களின்
இருதயங்களும் தான்.

என்
மானிட வயது மிகச் சிறிதே.

ஆனால்
ஆபிரகாமுக்கு முன்பே
நான் இருக்கிறேன்.

வார்த்தையாயும்
இல்லாமையிலும் இருந்தேன்.

நான் தந்தையை அறிவேன்,
அவருக்காய் தருவதற்கே
நான்
வருவிக்கப் பட்டேன்.

என் உயிரைக் கூட
அவருக்கே தருவேன்
அவர்
அதை எனக்குத் திரும்பத் தருவார்.

என் நாவு
பொய் சொல்வதோ
எனக்குள்
பேய் செல்வதோ சாத்தியமில்லை.
என்றார்.

வார்த்தைகளைப் பொறுக்க
மறுத்து,
கற்களை மட்டுமே
எடுக்கப் பழகிய கூட்டம்
இயேசுவை நோக்கி
கற்களை எடுத்தது.

காற்றை எறிய
யாரால் கூடும்,
கர்த்தரைத் தாக்க
கற்களால் கூடுமோ ?

இயேசு
விலகிச் சென்றார்.
இடத்தை விட்டு
இதயங்களை விட்டல்ல.

 

எதிராய் இருப்பவனே எதிராளி

 
என் வார்த்தைகளை
நம்புங்கள்,
இல்லையேல் செயல்களையேனும்
நம்புங்கள்.

ஏன் இன்னும்
குருடாய் தான் இருப்பேனெனெ
முரட்டுப் பிடிவாதம்
பிடிக்கிறீர்கள் ?
முரடாய் தான் இருப்பேனென
குருட்டுப் பிடிவாதம்
பிடிக்கிறீர்கள் ?

0

இயேசுவின் அற்புதங்கள்
தலைமைக் குருக்களின்
நிலைமை தகர்த்தது.
பரிசேயரைப் பார்த்து
பரிகாசம் செய்தது.

அடக்கி விடு
இல்லையேல் அழித்து விடு
வட்டமிட்டது கூட்டம்.

இயேசுவை
வளைப்பது இயலாதென்பதால்
உடைத்திட திட்டமிட்டது.

அணையை உடைப்பது போல
கடலை உடைக்கலாமென
கங்கணம் கட்டியது .

கடலோ
சுயமாய் வற்றிப் போக
சம்மதித்தது
உள்ளுக்குள் கிடக்கும் வளங்களை
வெளிக்காட்டும் விதமாக.
 

இறைமகனென்றால் இறப்பில்லையே

 

மக்கள் கூட்டம்
இயேசுவைப் பார்த்து,

மெசியாவானால்
நிலைப்பார் என்பதே
நிலைப்பாடு.

மரணங்களைக் கடந்தவரே
மனுமகனாக முடியும்.
கையளவு நீர்
கடலென்ற பெயர் பெறாது.

நீர்
இறப்பேன் என்பதும்
உயர்த்தப் படுவேன் என்பதும்
ஆண்டவனுக்கான
அடையாளங்கள் அல்லவே ?
என்றது.

இயேசு சொன்னார்,
ஒளி
சிலகாலமே உங்களோடு இருக்கும்.
இருக்கும் போதே
பெற்றுக் கொள்ளுங்கள்.

இரவில் ஒளி வற்றிப் போகும்
வெளிச்சம் இருக்கும் போதே
வந்து
மனசுக்குள் ஊற்றிப் போங்கள்.

இற்றுப் போன மனசுக்காரர்கள்
தோற்றுப் போவார்கள்.

வாருங்கள்
ஒளியை பெற்றுக் கொள்ளுங்கள்.
வழியை
கற்றுக் கொள்ளுங்கள்.
என்றார்.

 

வல்லமையின் பிறப்பிடம்

 
இயேசுவின்
நோய்தீர்க்கும் செயல்களால்
காய்ச்சல் கண்ட
தலைமைக் கூட்டம்
இயேசுவை அணுகிக் கேட்டது.

எந்த அதிகாரத்தால்
இதைச் செய்கிறீர் ?

நம்பிக்கை இல்லா
அவர்களிடம்
விளக்கம் கூற விரும்பாமல்
இயேசு,
கேள்விக்குப் பதிலாய்
இன்னோர் கேள்வியை வைத்தார்.

யோவான்
திருமுழுக்கு அளித்தது
எந்த வல்லமையால் ?
விண்ணகமா ?
மண்ணகமா என்றார்.

கூட்டம் கேள்வியில்
மறைந்திருந்த
கண்ணிவெடியைக்
கண்டு கொண்டது.

விண்ணகம் என்போமெனில்
ஏன்
யோவான் விளம்பிய
விண்ணக வார்த்தையை
நம்பவில்லை என்ற கேள்வி வரும்.

மண்ணகம் என்றால்
நம்பிக் கொண்டிருக்கும்
மக்கள் கூட்டம்
கோபத்தில் கல் எறியும்.

சொல்லைக் கொடுத்து
கல்லை வாங்க
விருப்பப் படாத,

இருதலைக் கொள்ளி எறும்பாபென
உஷ்ணத்தில்
உழன்ற தலைவர்கள்
‘தெரியாது’ என்று தப்பித்தனர்.

இயேசு
எதிர்பார்த்த பதிலையே
எதிர்த்தவர்கள் கொடுத்தனர்.

அப்படியே,
இதுவும் உங்களுக்கு
தெரிவிக்கப் படாது என்றார்
இயேசு.

 
பாவமில்லையேல் கல் எறி
 

ஆலய வாசலில் ஒருமுறை
அலையாய் அலையும்
ஆட்களின் கூட்டம்.

விபச்சாரத் தவறுக்காய்
தீர்ப்பிடலின் திடுக்கிடலில்
பெண்ணொருத்தி
சபைநடுவில்.

பரிசேயரும்,
மறைநூல் வல்லுனரும்
இயேசுவை சோதிக்க
இக்கட்டாய் கேட்டனர்.

நீர் மதிக்கும் மோயீசன்
விபச்சாரக் குற்றம்
கல்லடி மரணத்துக்கானதென்று
கட்டளையிட்டார்.
நீர்
என்ன சொல்கிறீர்.

மோயிசனையே மறுதலிப்பீரா
இல்லை
இவளை
கல்லெறிந்து கொல்வதை
வழிமொழிவீரா ?

பெண்ணோ
காற்றில் அலையும்
முகிலாய்
திகில் அலையும் கண்களோடு
நடுங்கி நின்றாள்.

இயேசு
தலை தாழ்த்தி
தரையில் விரலால்
வரையத் துவங்கினார்

கேள்விகள்
மீண்டும் மீண்டும்
கர்த்தரின் காதுக்குள்
கொட்டப்பட்டது.

இமை நிமிர்த்திய
இயேசு,
வெறியரின் வேகம் பார்த்தார்.

எல்லோருடைய கைகளிலும்
கற்கள்.
கல்லெறிந்தால் அவளுக்குக்
கல்லறைதான்.

உங்களுள்
பாவமில்லாத கரம்
முதல் கல்லை
இப்பெண்மீது எறியட்டும்.

சொல்லியவர் மீண்டும்
தரையில் எழுதத் துவங்கினார்

ஆணிவேர் வெட்டுண்ட
அவஸ்தையில்,
கோடரி வீச்சில்
நிலை குலைந்த நாணல்
மண் மோதும் வேகத்தில்,

அவர்கள்
ஒருவர் பின் ஒருவராய்
கற்களை போட்டு விட்டு
கடந்து சென்றனர்.

தனிமையில் இருந்த பெண்ணிடம்
பரமன் கேட்டார்,
மாதே
யாருமே தீர்ப்பிடவில்லையா?

இல்லை என்றாள்
மரண வாசல் வரை சென்று
மறுபடியும்
உயிர் கொண்டவள்.

நானும் தீர்ப்பிடேன்.

பிறப்பின் சிறப்பு
இறப்பிலும் இருக்கட்டும்.
தவறுதல் தவிர்த்து
திருந்துதலே தெய்வீகம்.

மன்னிப்பு
தவறுகளுக்கான
அனுமதிச் சீட்டல்ல.
இனிமேல் நீ பாவம் செய்யாதே.

பாடம் கற்றுக் கொண்ட
பெண்
பாதம் பணிந்தாள்.

 

உள்ளம் வெளுக்கட்டும்

 

நல்லவற்றின்
கருவூலத்தில்
தீயவை இடப்படுவதில்லை,
தீயவற்றின்
தோட்டத்தில்
நல்லவை நடப்படுவதுமில்லை.

உள்ளத்தில் உள்ளவை
நல்லவை எனில்,
எடுக்கப்படுபவையும் நல்லவையாகும்.

உன் வார்த்தைகள்
உள் மனசின் சத்தங்கள்.

உன் வார்த்தைகள்
உன்னை வாழ்த்தும் ஒலிகள்,
அல்லது
உன்னை வீழ்த்தும் பொறிகள்.

வார்த்தைகளை அன்பில்
வார்த்தெடு.

உன்
வார்த்தைகளின் நெறியில்
நீ
தீர்ப்பிடப்படலாம்.
இயேசு சொன்னார்.

உண்மை தான்.
தாழம்பூக் கூடையில்
வாழைப்பூ வாசம் வருவதில்லையே.

வாசம்
வாசம் செய்யும் மனம் தானே
நேசர் நம்மிடம் வேண்டுவது.

 
உண்மையான செபம்

 

இருவர் ஆலயம் சென்று
ஆண்டவனிடம் செபித்தனர்.
ஒருவன்
பரிசுத்தனாய் பறைசாற்றப்படும்
பரிசேயன்
ஒருவன் பாவியென்று அழைக்கப்படும்
ஆயக்காரன்

பரிசேயன் செபித்தான்.
ஆலய பீடத்தைத்
தொடும் தூரத்தில் நின்று
அலட்சியமாய் செபித்தான்.

அவனுடைய செபம்
அகந்தையின்
அறிவிப்புக் கூட்டமாய்
கர்வத்தின்
திருவிழாவாய் தெரிந்தது.

ஆண்டவரே
நான் நல்லவனாய் இருப்பதற்கு
நன்றி.

நோன்புகளில் நான்
நாள் தவறியதில்லை,
காணிக்கையில் நான்
கணக்கு தவறியதில்லை.

ஆயக்காரனைப் போல
பாவியாய் என்னை
படைக்காததற்கு நன்றி.

ஆயக்காரன் செபித்தான்
ஆலயத்துள் நுழையாமல்
முற்றத்தில் நின்றே
குற்றத்தை ஒப்புக்கொண்டு
தலைகுனிந்தான்.

மார்பில் அடித்து
மண்டியிட்டான்.

ஆண்டவரே
நான் பாவி
என்மேல் இரக்கம் வையும்.

இருவரின் செபத்தில்
இந்த
இருவரி செபமே
இறைவனுக்கு ஏற்புடையதாயிற்று.

தன்னை
புனிதனென்று சொல்லிக் கொள்பவன்
பித்தனாய் இருக்கிறான்,
பாவி என்று ஒத்துக் கொள்பவன்
மனிதனாய் பிறக்கிறான்.

விளம்பரங்களின் விளக்கு வெளிச்சம்
இதயத்தை இன்னும்
இருட்டாக்கிவிடும்.
தாழ்ச்சியின் பீடத்தில் மட்டுமே
தலைசாயுங்கள்
 

புறம் அல்ல அகமே அவசியம்
 

இயேசுவின் மேல்,
இன்னொரு குற்றச்சாட்டு
எறியப்பட்டது.

உம் சீடர்கள்,
உணவு உண்ணும்போது
கை கழுவுவதில்லை.
இது
பரம்பரைச் சட்டம்
மீறுவோர் எல்லாம் மட்டம்.

அடையாளங்களால்
அடையாளம் காட்டப்பட்டவர்கள்
ஆண்டவனிடம்
படபடத்தனர்.

இயேசு சொன்னார்,
ஆண்டவன் கட்டளையை
நீங்கள் தான்
அவமதிக்கிறீர்கள்.

தாய் தந்தையரை
போற்றச் சொன்னது
கடவுளின் வேதம்
நீங்களோ
மாற்றுக் கொள்கை காட்டுகிறீர்கள்.

என் சொத்தெல்லாம் ஆண்டவனுக்கு
என்று
நேர்ச்சி கொடுத்தால்,
நோயில் அமிழ்ந்து
பெற்றோர்
பாயில் படுத்தாலும்,
உயிர் விட்டாலும் பாவமில்லை
என்கிறீர்கள்.

உண்மை அன்புக்கு முன்
உங்கள் சட்டங்கள் செல்லாது.

நீங்கள்,
தவறான வரைபடம் வைத்துக் கொண்டு
இல்லாத தேசம்
தேடிக்கொண்டிருக்கிறீர்கள்.

வெளிவேட வாழ்க்கைக்காரர்களே
உங்கள்
உதடுகளுக்கும்
உள்ளத்துக்குமிடையே,
ஏன் இத்தனை தூரம் ?

குருடனுக்கு வழிகாட்டும்
குருடனாய் இருக்கிறீர்கள்
நீங்கள்.
உங்கள் சட்டங்களுக்கோ
கண்களே இல்லை

அன்பே முக்கியம்.

மனிதனுள் செல்வது
மனிதனை மாசுபடுத்தாது.
உள்ளத்திலிருந்து
புறப்படும் ஊனமான உண்மைகளே
அவனை
மாசு படுத்தி அழிவில் தள்ளும்.

களைய வேண்டிய
களவு,
போக்க வேண்டிய
பேராசை,
தீர்க்க வேண்டிய
தீச்செயல்,
விலக வேண்டிய
வஞ்சகம்,
விலக்க வேண்டிய
விபச்சாரம்,
செல்ல வேண்டிய
செருக்கு
மறைய வேண்டிய
மதிகேடு

பொல்லாத பொறாமை
இழுக்கு தரும் பழிப்புரை
எல்லாமே
உள்ளிருந்து வெளிவந்து
மனிதனை
தீயவனாக்கி பழிவாங்கும்.

உள் செல்லும் உணவோ
செரிமானம் ஆகி மறையும்.

கரங்களை அல்ல
மனங்களைக் கழுவுங்கள்,
அழுக்கு
உள்ளங்கையில் உள்ளதல்ல
உள்ளங்களில் உள்ளது.

 

நான் யார் அறிவீர்களா ?

 நான் யாரென்று
மக்கள் சொல்கிறார்கள் ?
ஒரு பொழுதில்
இயேசு வினவினார்.

போதகர் என்கிறார்கள்
பலர்,
தீர்க்கத்தரிசி என்கிறார்கள்
சிலர்
சொன்னார்கள் சீடர்கள்.

நீங்கள் ?
கேள்வி பிறந்தது இயேசுவிடமிருந்து.

நீர் மெசியா,
கடவுளின் மகன்.
வினாடிக்கும் குறைவான நேரத்தில்
விடைசொன்னார் சீமோன்.

இயேசு அகமகிழ்ந்தார்
அவரை
ஆரத் தழுவினார்.

சீமோனே,
உன்னில்
நான் பெருமை கொள்கிறேன்,
உன் விசுவாசத்தின் விழுதுகளில்
என்
திருச்சபையைக் கட்டுவேன்.

உன் பெயர் இனிமேல்
பாறை.
உன்மேல் கட்டப்படுபவை
அஸ்திவாரம் இல்லாமல்
அழிக்கப்படமாட்டாது.

வானகத்தின்
திறவுகோல்கள் இனிமேல்
உன் விரல்களுக்கு
வழங்கப்படும்.

நீ,
மண்ணகத்தில் கட்டுபவை
விண்ணகத்தில் உனக்காய்
கட்டப்படும்.

இங்கே நீ
அவிழ்ப்பவை எல்லாம்
விண்ணகத்திலும் அவிழ்க்கப்படும்.

இயேசுவின் வலிமை வார்த்தைகள்
சீமோனுக்கு அளிக்கப்பட்டது.
திருச்சபையின்
வாசல் திறக்கும் வல்லமை
சீமோனுக்கு இங்ஙனம்
சொந்தமானது.

 சுயபுராணம் செல்வதில்லை

 

நீர் இறைமகனா
கேட்டது கூட்டம்.

அதெப்படிச் சாத்தியம் ?
என்னைப் பற்றி
நானே
சான்று பகர்தல் ?

நான் சுயபுராணச்
சக்கரங்களில்,
சுழன்று கொண்டிருப்பவனல்ல,
என்
வருகைக்கான தயாரிப்பாளன்
யோவான்.

விண்மீன் நடக்க
மின்மினியின்
விளக்கொளி தேவையில்லை

கடலுக்குக்
கால்வாயின்
சாட்சிகள் தேவையில்லை.

ஆனாலும்,
உங்கள் விசுவாசத்துக்காய்
அவர் வார்த்தைகளை
கேளுங்கள். என்றார்.

யோவான்
விடியும் வரை விளக்கெரிப்பவர்,
நானோ
உலகம் முடியும் மட்டும்
உடனிருப்பவன்.

அவர்
சில காலத்துக்காய்
செலுத்தப்பட்டவர்,
நானோ
காலங்களையே செலுத்துபவன்.

நீங்கள்
துருவித் துருவித் தேடும்
மறைநூலுக்குள்
மறைந்திருக்கிறது எனக்கானச்
சான்று.

நீங்கள்
கேட்டிராத பார்த்திராத
வானகத் தந்தையிடமிருந்து
வருகிறது
எனக்கான சான்று.

மோசே என்னைப் பற்றியே
பேசினார்.
யோவான் என்னைப் பற்றியே
பேசுகிறார்.
நீங்களோ
மரத்தைப் பாராட்டி விட்டு
நிலத்தை நிராகரிக்கிறீர்கள்.

மழையில் மகிழ்ந்து விட்டு
வானத்தை விரட்டுகிறீர்கள்.

நம்புங்கள்
என்னை நம்புபவன்
மீட்படைவான்.
மறுப்பவன் மீட்படையான்.
என்றார்.

மெய்யைப் புறக்கணிக்கும்
கூட்டம்,
பேய் பிடித்திருப்பதாய்
பிதற்றியது.

மெய் மெல்ல
புன்னகைத்து நகர்ந்தது.

 

பாதத்தில் பூசப்பட்ட பாசம்

 

பரிமளத் தைலத்தை,
இயேசுவின் பாதத்தில்
பூசினாள் பெண்ணொருத்தி.

இயேசுவின்
பொதுநலப் போதனைகளை
புரிந்து கொண்டிருந்த
சீடர்கள் அவளிடம்
இதை விற்று ஏழைகளுக்கு
அளித்திருக்கலாம்,
இதன் விலை ஏராளம் என்றனர்.

இயேசுவோ,
வேறு விளக்கம் வைத்திருந்தார்.

ஏழைகள் உங்களோடு
என்றும் உள்ளனர்.

இது,
என் சாவுக்கான ஓர்
முன்னுரையே.
அவளை தடுக்கவேண்டாம்
என்றார்.

இயேசுவின் போதனைகள் ஞாயிறு, நவ் 23 2008 

 

 

மலைப் பொழிவு
 

போதனைகள்!
அவை வாழ்வின் சுருக்கங்களைச்
சலவை செய்யும்
சாமர்த்திய சாலிகள்.

வாழ்வுக்கான போதனைகள்
மனசை வளமாக்கும்,
தடுமாற்றம் விடுத்து
தடம் மாற்றச் சொல்லும்.

இயேசு போதித்தார்.
அன்றாட வாழ்க்கையை
அலசிப் பிழியும் போதனைகள்.

கழுத்தறுக்கும்
ஆயுதப் போதனைகளல்ல
அழுக்கறுக்கும்
ஆயத்தப் போதனைகள்.

o

மலை மேல் ஒரு நாள்
மனுமகன் போதித்தார்.
அது
சட்டங்கள் மேல்
ஓர் எந்திரக்கல்லாய் அமர்ந்தது.
தாழ்வு மன இதயங்களை
இழுத்து நிமிர்த்தியது.
சோர்வுற்ற சமுதாயத்துக்கு
புத்துணர்வுத் தைலம் பூசியது.

அந்தப் போதனை
இது தான்.

o

எளிய மனம் கொண்டவர்கள்
பேறுபெற்றோர்
விண்ணரசு அவர்களதே.

துயருறுவோர்
பேறுபெற்றோர்
ஆறுதல் அவர்களுக்கானதே.

சாந்தமுள்ளோர்
பேறுபெற்றோர்,
மண்ணுலகு அத்தகைய மனிதருக்கே.

நீதி யின் மேல்
பசியும் தாகமும் கொண்டோ ர்
பேறுபெற்றோர்,
நிறைவு அவர்களுக்கான வரம்.

இரக்கம் கொள்வோர்
பேறுபெற்றோர்
இரக்கம் பெறுவோர் அவரே.

தூய உள்ளத்தோர்
பேறுபெற்றோர்,
கடவுளைக் காணும்
கண்கள் அவர்களதே.

சமாதானம் விதைப்போர்
பேறுபெற்றோர்,
கடவுளின் குழந்தைகள்
சமாதானத்தின் சந்ததிகளே.

நீதிக்காய் வதைக்கப்படுவோர்
பேறுபெற்றோர்
விண்ணரசு வாழ்க்கை
அவர்களுக்காய் ஆயத்தமானதே.

ஆண்டவர் பெயருக்காய்
அவமதிக்கப் பட்டால்
ஆனந்தப்படுங்கள்.
வானக வாழ்வில்
செல்வத்தின் அடர்த்தி அதிகமாகும்.

மனிதநேயத்தின்
மறைந்தபகுதிகளை
திறந்து வைத்து,
உறவின் உறைந்த பகுதிகளை
உருக வைத்தது
இறைமகனின் உயிர் வார்த்தைகள்.

மலைப்போதனையில்
மலைத்துப் போனது கூட்டம்.
இயேசுவை
இதய மலைகளில்
இருத்திச் சென்றது.
 

உப்பாய் இரு, தப்பாய் இராதே

 உன் ஆண்டவரை
நீ
துளியளவும் வெளியின்றி
தூயநேசத்தில் துதி.

உன்மேல் உனக்கான
உள் அன்பை
அயலானுக்கும் அளி.

o

நீ
உலகின் உப்பு.
சாரமற்ற உப்பு சாலைக்குச் சொந்தம்.
சமையலுக்கு அது
சாத்தியப்படாது.

சாரத்தைத் தொலைத்துவிட்ட
உப்பும்,
ஈரத்தைத் தொலைத்து விட்ட
மனசும்,
உபயோகமற்றுப்போன உதிரிகள்.

உப்பாய் இரு,
சாலைக்கு அல்ல
சாப்பாட்டிற்கு.

 ஒளியாய் இரு, ஒளியாதிரு
 

நீ,
உலகிற்கான ஒளி.

விளக்கின் பணி
மரக்காலின் கீழ் மறைந்து கிடப்பதல்ல
விளக்குத் தண்டின்
தலையில் அமர்ந்து
வெளிச்சத் திசைகளை
விளக்கி வைப்பது.

சூரியன் பூமிக்குள்
புதையுண்டு கிடந்தால்
யாருக்கேனும் பயனுண்டோ  ?

கலங்கரை விளக்கம்
பக்கவாட்டில் படுத்துக் கிடந்தால்
பயணிகளுக்கேது பயன் ?

மலைமேல் உள்ள ஊர்
மறைவாய் இருப்பதில்லையே !
சிகரத்தை யாரும்
திரைகட்டி மறைப்பதில்லையே,

உன் வார்த்தைகளுக்குள்
செயல்களின் சுடரை ஏற்றி வை.
விளக்குக்குத் திரியிட்டு
திரிக்குத் தீப் பொட்டிட்டு,
அதை
மூடிவைப்பது முட்டாள் தனம்…

உன் ஒளியும்
ஒளிக்கப்படவேண்டாம்.
தயக்கங்களை எல்லாம்
விலக்கிவை,
உள்ளுக்குள் உன்னை நீ
துலக்கிவை.
 

பாதைக்கான சில போதனைகள்
 

நீ,
கட்டளைகளைக் கடைபிடி,
துருப்பிடித்த இதயங்களின்
ஓரங்களிலும் கரம் தொடு.

கட்டளைகளால்
மனதின் துரு களை.
பூமியில் ஒழுக்கத்தில் வாழ்பவன்
வான் வீட்டுக்கு உரியவன்
அங்கே
பெரியவனாய் பவனி வருவான்.

o

கொலை செய்வது
மட்டுமல்ல,
சினம் கொள்வதே
தண்டனைக்கான சின்னம் தான்.

o

தன்னுயிரை கொலுவிலேற்றி
அயலானைக்
கழுவிலேற்றாதே.

0

ஒழுக்கமான மனைவியை
விவாகரத்து செய்வது
விபச்சாரக் குற்றம்.

விபச்சாரம்
உடல்சார்ந்த வன்முறை
மட்டுமல்ல.
இச்சைப் பார்வையின் மிச்சம்
விபச்சாரத்தின் எச்சமே.

o

கண்களே உன்
உடலுக்கான விளக்கு.
உன் கண்வாசல் அடைந்துவிட்டால்
உடல் முழுதும்
இருட்டுக்குள் இடம் பெயரும்
ஒளி வர வழிசெய்.

O

கவலைகளை
களஞ்சியத்தில் சேர்ப்போரே,
கவலைக் குவியல்களால்
ஆயுளில் அரை மணி நேரம்
அதிகரிக்க இயலுமா ?

பின் ஏன்
கவலைகளோடு
கை குலுக்குகிறீர்கள் ?
மகிழ்ச்சிக்கு மட்டுமே மாலையிடுங்கள்.

o

பன்றிகளுக்கிடையில்
முத்துக்களை இடவேண்டாம்.
அவை
சகதியில் தான் சங்கமிக்கும்.
சகதி கலந்த சந்தனம்
பின்
சுய முகம் காட்டுவதில்லை.
o

முள்ளில் மட்டுமே
நீ
முதலீடு செய்தால்
பூக்கள் உனக்காய் பூத்திருப்பதுமில்லை,
காய்கள் உனக்காய்
காய்த்திருப்பதுமில்லை.

0

தீமையின் நெடுஞ்சாலையை
நிராகரியுங்கள்,
நன்மையின் ஒற்றையடிப்பாதையை
கண்டு பிடியுங்கள்.
பயணங்கள் இலகுவானால்
இலக்கில் வேதனை வரவேற்கும்.
பயணங்கள் வலி தந்தால்
இலக்கில் இன்பம் வீற்றிருக்கும்.

o

சட்டங்களின் ஆகளுக்குள்
மனிதாபிமானம் மடிய வேண்டாம்.
மனிதத்துக்காய்,
காதறுந்து போன உங்கள்
சட்டங்களை சரிசெய்யுங்கள்.

இயேசுவின் அறிவுரைகள்
அளவில் சிறியதாய் தெரிந்தன.
பாதிப்பில்
பெரியதாய் விரிந்தன.

 
சினம் அழிவின் சின்னம்
 

கொலை செய்வது மட்டுமே
பாவம் அல்ல,
சினம் கொள்வதே
பாவத்தின் சின்னம் தான்.

சகோதரனைத் திட்டுபவனுக்கு
தீர்ப்பு காத்திருக்கும்,
அன்பின் மொட்டுகளில் மட்டுமே
உயிர் பூ பூத்திருக்கும்.

யாரோடேனும்
பகைகொண்டிருந்தால்
பீடம் வந்து காணிக்கை செய்யாதே.
சகோதரனோடு
சமாதானம் தான் முதல் பணி
அதன்பின்
கடவுளுக்கு காணிக்கை அளி.

.

ஆண்டவரே ஆண்டவரே
என்றழைக்கும்,
உதட்டுப் பிரார்த்தனைகளை விடுத்து,
செயல்களைப் பிரார்த்தனைகளாய்
உடுத்து.

o

எதிரிகளாய் யாரையும்
எண்ணுதல் தவிர்,
சமாதான சுவாசமே
விண்ணுலக உயிர்.

எதிரிகள்
எண்க்கை குறைந்தால்.
சமாதான மழையில்
நனைந்து நிறைவாய்.

 

விசுவாசமே சுவாசம்

 

நம்பிக்கையை குறித்து
இயேசு
இடைவிடாமல் போதித்தார்.

நம்பிக்கையே
செயல்களின் மையம்.

விசுவாசத்தோடு கட்டளையிட்டால்
மலையும் உருண்டு
கடலில் விழும்.
மரமும் பெயர்ந்து
இடம் மாறி நிற்கும்.

நம்புங்கள்
அதுவே வாழ்வுக்கான
நெம்புகோல் என்பதே
இறைமகன் போதனை.
0

தொடர் முயற்சியின்
தோள்களுக்கே
மரியாதையின் மாலைகள்.

கேளுங்கள் கொடுக்கப்படும்,
தட்டுங்கள் திறக்கப்படும்,
தேடுங்கள் கண்டடைவீர்கள்.

மீட்டாமல்
வீணையில் சுரமில்லை.
தவமில்லாமல்
தரப்படும் வரமுமில்லை.

உங்கள் செல்லப்பிள்ளை
பசி தீர்க்க,
கற்கள் தரும் தகப்பனில்லை.
மீன் கேட்டால்
பாம்பு தரும் பெற்றோருமில்லை.
உன் தந்தையே
இப்படியென்றால்
உலகத் தந்தை எப்படி இருப்பார்
என்பதை உணர்.

 
தவறுக்கானதை உதறு

 

தவறு செய்யத் தூண்டும்
விழிகளோடு நீ
அழிவிற்கு ஆளாவதை விட
குருடனாய்
வாழ்வுக்குள் வருவதே சிறந்தது.

பாவம் செய்யும் பாதங்களோடு
எரி நரகத்தில்
எறியப்படுவதை விட,
முடவனாய் நீ
மனுமகனிடம் வருதலே மாண்பு.

கயமை செய்யும் கைகளுடன்
நரகத்தில் நகர்வதை விட
கையில்லாமல் நீ
விண்ணுலகம் வருவதே
விண்ணவனின் விருப்பம்.

எனவே,
நெருடலானவற்றை விலக்கு
விண்ணகமே உன் இலக்கு.
 

அழியாச் செல்வம்

 

விண்ணுலகில் செல்வம்
சேமியுங்கள்,
உங்கள்
நற்செயல்களின் பொற்குவியகளால்.
மண்ணக செல்வங்களை
மனதில் குவிக்க வேண்டாம்,
களஞ்சியங்களின் கதவுகளில்
இதயங்களை தொங்கவிட வேண்டாம்.

மண்ணுலக செல்வங்கள்
திருடனால் திட்டமிட்டு
திருடப்படலாம்,
பூச்சிகளால் தானியங்கள்
தகர்க்கப் படலாம்.

விண்ணுலக செல்வங்களை சேகரி
உன் தினசரி வாழ்வின்
நற்செயல்களின் நிழலில்.

செயல்களின் செல்வங்களே
பூச்சிகளால் அரிக்கப்படாமல்
பூஜிக்கப் படும்.

 

ஒன்றில் இரு, ஒன்றித்திரு

 

இரு எஜமானர்க்கு
ஒருவன் ஊழியம் செய்யலாகாது.
ஒரு கத்தி
இரு உறைக்கு ஏற்புடையதல்ல.

ஒப்பீட்டுத் தராசுகளால்
ஒருவனோடு உறவாடி,
இன்னொருவன் வெறுப்பை
சத்தமில்லாமல் அது சம்பாதித்துவிடும்.

கடவுளுக்குரிய செயல்களும்
மனிதருக்குரிய செயல்களும்
உன் முன் இருக்கும்
இரண்டு எஜமானர்கள்.
துலங்கிய மனசோடு தேர்ந்தெடு
ஒன்றை மட்டும்.

 

பறவைகளுக்குப் பட்டினி இல்லை.

 
உணவுப் போராட்டத்துக்காய்
உடைவாளை உருவாதீர்.
உனக்கானது உனக்களிக்கப்படும்.
கவலைகளை கவிழ்த்துவிட்டு
கடமைகளை நிமிர்த்து.

சிறகுலர்த்திப்
பறக்கும் சிட்டுகள்,
அவை எந்த மருத நிலத்திலும்
நெல்மணி விதைப்பதில்லை,
எந்த அரிவாள் முனைகளையும்
அறுவடைக்காய் செய்வதில்லை,
அவற்றிற்கான உணவு
தவறாமல் வருகிறதே.

பூமியின் மலர்களைப் பாருங்கள்
எந்த
மாடமாளிகையின்
பஞ்சு மெத்தையும்,
எந்த சக்கரவர்த்தியின்
அரியாசன ஆடையும்,
அதன் மென்மை கொண்டதில்லையே.

பூக்களுக்கும் புற்களுக்கும்
புத்தாடை உடுத்தும் பரமன்
மனிதர்கள் மேல்
மகத்துவம் செய்ய மாட்டாரா ?

 

தீர்ப்புகள் தீர்வுகள் அல்ல

 

உன் உப்பள உள்ளங்களில்
உறைந்திருக்கின்றன
ஓராயிரம் கறைகள்.

உங்கள் குப்பை மனசை
குழிக்குள் மறைத்துவிட்டு,
பிறரின்
சின்னத் தவறுக்காய்
நீங்கள் நீதிபதியாகாதீர்கள்.
குறையற்ற கரங்கள்
மட்டுமே
கறை கழுவ நீளட்டும்.
.

அயலானுக்காய்
நீ
தொங்க விடும்
தராசுத் தட்டில் தான்,
உனக்கானதும் நிறுக்கப்படும்.

.

நீ இடும் தீர்ப்புக்கள்
நாளை
உன்வாசலில் கத்தியோடு காத்திருக்கும்.
உறைவாள் உருவியவன்
உறைவாளில் சொருகப்படுவான்.
ஆதலினால்
அன்பெனும் மயிலிறகில் மட்டுமே
ஆசனம் செய்யுங்கள்.
.

மலைபோன்ற பிழைகளுக்குள்
பிழைப்பு நடத்திக் கொண்டு
பிறரின் சிறு தவறுக்காய்
சிரச்சேதம் செய்யாதே.
முதலில் உன் பிழை அழி.
பின்பு வந்து பிறர் தவறு திருத்து.

.

பொய்யாணை இடாதே,
உன் தலைமயிரை
நிறம் மாற்றி வளரவைக்க
உனக்குத் திறமையில்லை.

உன் தலைமயிரின்
வளர்ச்சிக்கான கடிவாளமே
உன்னிடம் இல்லையெனும்போது,
எனவே
அகந்தை உன்னுள் இருப்பதில்
அர்த்தமே இல்லை.

.

ஆம், இல்லை,
இரண்டில் ஒன்றைப் பதிலாய் கொள்.
இது தவிர்த்த
மழுப்பல்கள் தீயவன் சொல்.

.

 
விழிப்பாய் இருங்கள்

 

விதைத் தேர்வில்
விழிப்பாய் இருங்கள்.
தீயவை தீய்க்குச் சொந்தம்,
நல்லவை மட்டுமே
நீதியாசனத்துக்குச் சொந்தம்.
எனவே,
விதைத் தேர்வில்
விழிப்பாய் இருங்கள்

போலிகளைப் பிரித்தறியும்
பக்குவத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்,
கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்களை
உள்ளுக்குள் உலவவிட்டு,
வெள்ளை ஆட்டுத்தோலை
வெளியே உடுத்தியிருப்போரை
அகக்கண் கொண்டு அறியுங்கள்.

உச்சரிப்பதில் அவர்கள்
எச்சரிக்கையாய் இருந்தாலும்,
செயல்களில் சுயமுகம்
தலை நீட்டும்.
வார்த்தைகளை விடுத்து
வாழ்கையிலிருந்து எடுக்கக்
கற்றுக் கொள்ளுங்கள்.

முட்செடிகளின் முனைகளில்
திராட்சைக் கொடிகள்
காய்ப்பதுமில்லை,
அங்கே யாரும்
அத்திப் பழங்களை கொய்வதுமில்லை.

சிந்தனையின் இமை விலக்கி
பார்வைகளை வடிகட்டி
விழிப்பாய் இருங்கள்.

விழிப்பாய் இருப்பவர்கள்
இழப்பதில்லை.

 

செயல்களின் வயல்கள் விளையட்டும்

 

செயல்களால் எனைத் தீண்டாமல்
வேண்டுதலால் மட்டும்
எனைத் தீண்டுவோர்,
விண்ணகப் படி தாண்டார்.
என்
வார்த்தைகளை வாழ்பவன் மட்டுமே
வாழ்வுக்குப் பின்னும் வாழ்வான்.

தீர்வு நாளில் என்னிடம் வந்து
ஆண்டவரே,
உம் பெயரால் இறைவாக்கு உரைத்தேனே,
நோய்களை நிவர்த்தினேனே,
பேய்களை துரத்தினேனே,
என்பார்கள்.

நான் அவர்களிடம்,
அறிவிலிகளே அகன்றுபோங்கள்.
உங்களை நான் அறியேன்,
என்
செயல்களுக்கும் உங்கள் சொல்லுக்கும்
இடையே
நிரப்பிட இயலா
பள்ளத்தாக்கைப் பறித்தீர்கள்.

உங்கள் வாழ்க்கை
ஆற்று நீரில் விழுந்து
தற்கொலை செய்துகொள்ளும்
மணல் வீட்டைப் போன்றதே.
பாறை மீது பதியனிடுவது
செயல்களின் அஸ்திவாரங்களே.

எனவே,
புயலுக்கும் காற்றுக்கும்
பலியாகும் மணல் வீட்டில்
அடித்தளமிட்டு அவதிப்பட வேண்டாம்.
அஸ்திவாரங்களை
பாறைமீது பதியமிடுங்கள்.

வாழ்வியல் செயல்களே
வாழ்வின் பாறைகள் !

 

எதிரிக்குப் பூ கொடு

 

கண்ணுக்குக் கண்
பல்லுக்குப் பல் எல்லாம்
வீணர்களின் விவாதங்கள்.
பழிக்குப் பழி
அழிவின் ஆரம்பம்.

யாரேனும் உன்
வலக்கன்னத்தில் அறைந்தால்
அடுத்த கன்னத்தையும்
அடி வாங்க நீட்டு.

தீமையைத் தீமை
தீயிட்டு அளிப்பதில்லை,
குருதியைக் குருதி
கழுவிடல் இயலாது.

புன்னகையின் நீளமே
தீமையின் வேகத்தை
தடைபோடக் கூடும்.

கோப மலைகளாய்
முட்டிக் கொள்வதை விட
சாந்த அலைகளாய்
கட்டிக் கொள்வது சிறந்தது.

உன்
உள் ஆடைக்காய் வழக்கிடுபவனுக்கு
மேலாடையையும் மகிழ்வோடு கொடு.

கேட்பவனுக்கு
கொடு,
வேண்டுவோர்க்கு வழங்கு,
கடன்கேட்போனுக்கு
முகம் கோணாதே.
o

நேசம் என்பது
நண்பனுக்கு மட்டுமான
நன்கொடையல்ல.
பாசம் என்பதை
பகைவனுக்கும் பகிர்ந்தளி.

நன்மைக்கு நன்மையை
எடைக்கு எடை கொடுப்பது
சாதாரண மனிதனின்
சராசரி நடைமுறைகள்.
நீங்கள்
தீமைக்கும் நன்மையையே
பதிலாய் வழங்கிடுங்கள்.

பகையற்ற பூமியே
திசையெட்டும் நீளட்டும்.

 
விளம்பரப் பூக்கள் மணப்பதில்லை
 

பிச்சையிடு,
ஒரு கை தானம் செய்கையில்
மறுகைக்குக் கூட
விளம்பரமிட வேண்டாம்.

புகழுரையின் புழுதித் தூறலுக்காய்
உன்
இதயத்தின் கரைகளை
கறையாக்க வேண்டாம்.

அலைகள் தொலைந்துபோன
ஆழ்கடலாய்.
சத்தங்கள் செத்துப் போன
தொலை மலையாய் இரு.
தானம் தருகையில்.

o

வெளிவேடம் வேண்டாம்,
நோன்பு கால நோவுகளை
முகத்தில் படர விடாதே,
புத்துணர்ச்சிப் புன்னகை உடுத்து,
நோன்பின் சாம்பல் நிழல்கள்
மறைவாகவே உறையட்டும்

o

தனிமைச் செபங்கள்
தாழிட்ட அறைக்குள்
நடக்கட்டும்.
அதிகமான வார்த்தைகளல்ல,
ஆழமான உணர்வே
உன்னதமான செபம்.

மனுக்களை மட்டுமே
அவிழ்த்து வைத்து செபிப்பது
மனுமகனுக்குப் பிடித்ததல்ல,
தவழும் குழந்தையின்
தேவைகள்
தந்தைக்குத் தெரியாதா ?

உன் தேவைகளையும்
உனக்கும் முன்
உன்
ஆண்டவர் அறிகிறார்.
 

தந்தை தந்த செபம்

 உணவு தரும் தாய்
அதை
ஊட்டியும் விடுவதுபோல,
வரம் தரும் இறைவன்
அதைக் கேட்கும்
வழிமுறையையும் சொல்கிறார்.

சிந்தை கொள்ளும்
அந்த செபம் இதுவே.

விண்ணக வீட்டின் தந்தையே
உமது பெயர்
தூயதென்று போற்றப்படட்டும்,
உமது அரசு வருக,
விண்ணகத்தில் நிறைவேறும் உம் திருவுளம்
மண்ணகத்திலும் நிறைவேறட்டும்,
தினசரி உணவை எங்களுக்குத் தாரும்.
நாங்கள்
பிறர் பாவம் மன்னிப்பதுபோல்
எம் பாவங்களை மன்னியும்.
சோதனைகளுள் எங்களை
உட்படுத்தாதேயும்,
தீயோனின் கைகளில் எங்களை
சிறைப்படுத்தாதேயும்.
மாட்சிமை என்றும் உமக்கு உரியதே.
ஆமென்
 

இடறல் வேண்டாம்

 

இயேசு பேசினார்.

பெண்களிடம் பிறந்தோரில்
திருமுழுக்கு யோவானே பெரியவர்.
ஆயினும்,
விண்ணக வீதியில் இருக்கும்
சின்னஞ் சிறுவனும்,
அவரிலும் பெரியோனே.

இதோ,
இந்தத் தலைமுறை
விளங்கிக் கொள்ள முடியாத
சிக்கலாய் இருக்கிறது,
ஒப்பீடுகளில் ஒப்பவில்லை.

எங்கள் புல்லாங்குழலிசைக்கு
உங்கள் பாதங்கள்
நடனமாடவில்லை,
எங்கள் அழுகைக்காய்
நீங்கள் மாரடிக்கவில்லை எனும்
சிறுவனின் சிணுங்கல் போன்றது
இவர்களின் செய்கை.

யோவான் வந்தார்,
உண்ணா நோன்பு இருந்தார்.
அவரை
பேய் பிடித்த பைத்தியம் என்றனர்.

நான்,
உண்டேன் குடித்தேன்.
போஜனப் பிரியன் என்று
பட்டப் பெயர் சூட்டுகிறீர்கள்.

நீங்கள் முடிவுகளை எழுதிவிட்டு
வீணாய் வாதிடும்
வீணர்கள்,
உங்கள்
வட்டத்துக்கு வெளியே வந்து
ஆராயத் துயாத அறிவிலிகள்.

நீதியின் முற்றங்களிலும்
குற்றம் தேடி நடப்போர்களே,
என்னைக் குறித்து
இடறல் படாதோன் பேறுபெற்றோன்.

 அமைதியின் ஆசனம்

 

இதயத்தில் பாரம்
அழுத்தி அழவைக்கிறதா,
வாருங்கள் என்னிடம்
நான்
சாந்தத்துக்கும் மனசாட்சிக்கும்
சொந்தக்காரன்.

ஆன்மாவின் அமைதி
என்
போதனையின் பகுதி.

o

உள்ளவனுக்கு கொடுக்கப்படும்
இல்லாதவனிடமிருந்து
இருப்பதும் பறிக்கப்படும்.

புலன்கள் கொள்ளுங்கள்,
கண்டும் காணாமலும்,
கேட்டும் கேட்காமலும்,
உள்ளத்தால் உணராமலும்,
மழுங்கடிக்கப்பட்ட மனசுக்காரர்கள்
வெளிவேடக்காரர்கள்.

நீங்கள் பேறுபெற்றோர்,
உங்களுக்கு உயிர் புலன்கள்
உள்ளன,
உள்ளவனுக்கு கொடுக்கப்படும்.

 

இயேசு எனும் நல்ல மேய்ப்பன்

 
கேளுங்கள் !

ஆட்டுப்பட்டிக்கு
வாசல் வழியாக வராமல்
குறுக்கு வழியாய் குதிப்பவன்
கொள்ளைக்காரன்.

பின்வாசலின் கதவுடைத்தோ,
கூரையின் தலையுடைத்தோ
நேர் வழியை
நிராகரிப்பவன் அவன்.

வாசல் வழியாய் வருபவனே
ஆயன்.
அவன் குரல்
ஆடுகளின் பரிச்சயக் குரல்
எச்சரிக்கை மணி அவிழ்க்கும்
நம்பிக்கைக் குரல்.

ஆயனின் சுவடுகளில்
ஆடுகள்
பாதுகாப்புப் பயணம் தொடரும்.
அன்னிய காலடிகளிலோ
அவலக் குரலையே அவிழ்க்கும்.

நானே நல்ல மேய்ப்பன்.
மீட்பின் முற்றமும்
வாழ்வின் வாசலும் நானே.

பழுதான போதனைகளிலும்,
எழுதாத சாதனைகளிலும்
விழவேண்டாம்.

வேலையாள்
ஓநாய்களின் கூட்டம் கண்டால்
ஆடுகளை விட்டுவிட்டு
உயிர்காக்க ஓடுவான்.
ஆயனோ அகலான்.

கிளைகள் வாடிப் போனாலும்
ஓடிப் போவதில்லை வேர்.
ஆழத்தில் அமிழ்ந்து
ஆடுகளைத் தாங்கும் ஆயனைப் போல்.

நல்ல ஆயன் நானே.
என் வார்த்தைகளைக் கேட்டு
வார்த்தைகளை வாழ்பவன்
செத்த பின்னும் த்தியமாவான்.

 

 

கோதுமை மணி
மண்ணில் விழுந்து மடியும் வரை
ஒற்றை மணி தான்.
மடிந்த பின்போ
கற்றை மணியாய் உருமாறும்.

இரண்டாம் ஜாமமும்
இருண்டபின்,
பூமியின் பாத்திரங்களில்
சூரிய ஒளி ஏது ?

ஒளி இன்னும் சிறிது நேரமே
ஒளிரும்,
இருட்டும் முன்
பாதை தேர்ந்தெடுப்பவன்
புத்திசாலி.

 
இயேசு எனும் திராட்சைக் கொடி

 

நான்
திராட்சைக் கொடி.
தந்தை பயிரிடும் பரமன்.
நீங்கள் என் கிளைகள்.

கனிதராக் கிளைகள்
தறிக்கப்பட்டு
விறகாகும்.
கனிதரும் கிளைகள்
கழிக்கப்பட்டு
அதிகமாய் கனிதரும்.

கொடியில் இல்லாத கிளைகள்
தானே
கனிதரல் இயலாது.
வேர்களில்லா கொடிகளுக்கு
கிளைகளிலேது கலகலப்பு.

என்னில் நிலைத்திருங்கள்
இல்லையேல்
சருகாகி எரிவீர்கள்.

நண்பனுக்காய்
உயிர்தருவதே
உயர்வான நட்பு.
நீங்கள் என் நண்பர்கள்.

வானக தந்தையின்
விருப்ப உரைக்கு மறுப்புரை
எழுதா மக்களே
என் தாயும், சகோதரரும்.

வாழ்வியல் பாடம்
ஒரு வரிதான்
‘அனைவரிடமும் அன்பு செய்யுங்கள்’
உன்னை நேசிப்பதுபோல்.
o

இயேசுவின் இளமைக்காலம் ஞாயிறு, நவ் 23 2008 

இயேசுவின் பிறப்பு


 
எல்லா பயணங்களும்
ஒரு
முதல் புள்ளியின் நீளல்களே.

பிறந்தபின் சிறந்தவராவர்
மனிதர்.
பிறப்பே சிறப்பானது
இறைமகன் பிறப்பில் தான்.

கலிலேயாவின் நாசரேத்தில்
கன்னியாயிருந்த மரியாளுக்கு
கபிரியேல் தூதர்
வான் வாழ்த்தொன்றை வழங்கினார்.

கன்னியான உமக்குள்
கடவுள் அவதரிப்பார்.

மரியாளின் மனதுக்குள்
அணையாது எரிந்தது
அந்த
சம்மனசு சொன்ன சங்கதி.

மரியாள் இன்னும்
தாயாராக
தயாராகவில்லை.

ஆண் வாசனை அறியாத
என் வாசலுக்குள்
ஓர்
ஆன்மீகக் குழந்தை அவதரிக்குமா ?

இதெப்படிச் சாத்தியம்
இல்லாமையிலிருந்து
ஓர்
இறைமகனின் அவதாரம் ?

ஏளனப் பார்வைகள் என்
கற்புக் கதவை
சந்தேகப் படாதா ?

ஆயிரம் கேள்விகளை
வினாடிக்குள் இழுத்து,
அத்தனை கேள்விகளையும்
அந்த
வினாடியின் முடிவில்
ஒடித்துப் போட்டது மரியின் உறுதி.

கோடி மக்களுக்குக்
கிடைக்காத பாக்கியம்
தேடி வந்திருக்கிறதே
என பிரமிப்புப் பூக்களை
விழிகளில் பயிரிட்டாள்.

சஞ்சலத்தின் வேர்களை
வெட்டிவிட
சம்மதம் செய்தாள்.

மண ஒப்பந்தமாகியிருந்த
மரியாள்,
மன ஒப்பந்தமும் கொண்டாள்.

புதியவனை உள்ளுக்குள்
பதியம் கொண்டு,
பூமிக்கு புதிய ஓர் தாயானாள்.

கணவனாகக் காத்திருந்த
யோசேப்பு அதிர்ந்தார்.

கவலை நெற்றியை தேய்த்தார்.
சந்தேகத்தின்
செந்தீயில் கண்களைத் தீய்த்தார்.

மரியாளின் கற்புக் கதவு
பலவீனமாகி விட்டதா
என பயந்தார்.

திருமணமே முடியாமல்
கரு உருவானதில்
கவலைப் பட்டார்.

வேருக்குள் விழுந்திருக்கும்
விஷயம்
ஊருக்குள் விழுவதற்குள்
மறைவாய் விலக்கி விடுதல்
நிறைவானது என்று
உள்ளுக்குள் முடிவெடுத்தார்.

இரவுத் தூக்கத்தில்
கடவுளின் தூதர்
அவருடைய
கனவின் கதவைத் திறந்தார்.
சந்தேகத்தின் கதவை மூடினார்.

தூய ஆவியால்
தாயானவள் தான் மரியாள்
பிறக்கும் பாலனுக்கு
இயேசு என்று பெயரிடு
தூதர் விளக்கினார்.

வந்திருப்பது
அவமானமல்ல,
வெகுமானம் என்பதை
குதூகலத்தோடு குறித்துக் கொண்டார்.

கடவுளின் சித்தம்,
எனக்குத் தேவை நித்தம் என்றார்,
ஓர்
வரலாற்றுக்குத் தந்தையாகும்
வரம் பெற்றார்.

 கன்னிக்குப் பிறப்பான்
மீட்பின் மகன் !
தீர்க்கத் தரிசனங்களின்
தீர்க்கமான முடிவின் துவக்கம் தான்
இறைமகன் வரவின் விளக்கம்.

பிறப்பின் காலம் பிறந்தது.
அப்போது
வான் தந்த நட்சத்திரம்
ஒன்றுக்கு
வால் வந்தது.

வானத்து நட்சத்திரங்கள் எல்லாம்
செதுக்கிய முனைகளோடு
நகர,
நட்சத்திரம் வால் நீட்டி
சூரியன்
பூமியில் இருக்கிறான் என
சுட்டிக் காட்டியது.

தூரத்து விடிவெள்ளி ஒன்று
ஈர நிலா
பூமியில் இருப்பதை
விரல்கள் நீட்டி விளக்கியது.

இயற்கையே இறங்கி வந்து
குடிலில் கிடந்த
கொட்டில் மகனைச் சுட்டியது

 
ஏரோதின் சூழ்ச்சி

 

மேய்ப்பன் பிறப்பு
ஆடு மேய்க்கும் சிலருக்கு
தூதர்களால் தெரிவிக்கப்பட்டது.

ஞானியர் சிலரின்
ஞானங்களில்
அச்செய்தி அறிவுறுத்தப்பட்டது

கீழ்த்திசை ஞானிகள்
மேல் நோக்கினர்,
வானவன் தேவன் கீழ்நோக்கினார்.
ஒளியின் வடிவம்
இருளிள் இடிவுக்காய்
இறங்கியது அவர்கள் இதயங்களில்.

யூதேயா அரண்மனையின்
அரியாசன மஞ்சங்களில்
இடியென இறங்கியது
இயேசுவைத் தேடி வந்த
ஞானிகளின் வார்த்தைகள்.

“யூதர்களின் அரசன் எங்கே ?”
விண்மீன் ஒன்று வித்தை செய்கிறது,
பூமிப் பந்துக்கு இதோ
புது ராஜா பிறந்திருக்கிறாரே.
அந்த
“யூதர்களின் அரசன் எங்கே ?”

ஏரோதின் இதயத்துள்
விரோத முள் தைத்தது.

என் சாம்ராஜ்யத்தின்
எல்லை ஆள
இன்னொரு அரசனா ?

என் தோட்டத்து
மலர்களின்
மாலைகளுக்காய் இன்னொரு கழுத்தா ?

என் வாளும் கேடயமும்
இன்னொரு தோளுக்கா ?

இல்லை,
இதை அனுமதிப்பது ஆகாது.

ஒற்றைக்கதிரவன் நானே.
என்னை எடுத்து
எரியும் குழிக்குள்
எறியும் அவன் யார் ?

நீள் கடலை
உறிஞ்சப் பிறந்த அந்த
பிஞ்சுப் பஞ்சு எங்கே ?

நெஞ்சில் பாய்ந்த ஈட்டியை
சூசகமாய் மறைத்து விட்டு
சாகசமாய் பேசினான் மன்னன்.

தலைமைக் குருக்களும்
மறைநூல் அறிஞரும்
அவசரமாய் அழைக்கப்பட்டனர்
அரசவைக்கு.

மெசியா பிறந்தால்
எங்கே பிறப்பார் ?
அரண்மனையில் எழாத
அழுகுரலுக்குச் சொந்தமான
அரச குழந்தை
எங்கே பிறந்திருக்கலாம்
சொல்லுங்கள்.
மன்னன் வினவினான்.

அவை
ஏட்டுச் சுருளை விரித்தது.
நரைத்த தலையுள்
நுரைத்த அறிவை பிரித்தது.

பெத்லேகேமில் பிறக்கலாம் பிதாமகன்,
இறைவாக்கினர் வாக்குகள்
இறவா வாக்குகள்
அவை அதைத்தான் அறிவிக்கின்றன.

தீய்க்குத் தூபமிட்டன
அவர்களின் தீர்மானம்.

அரசன் அசரவில்லை,
ஞானிகளிடம்
அகத்து அழகு
முகத்தில் தெரியாமல் பேசினான்.

ஞானிகளே.

பெத்லேகேம் பேறுபெற்ற இடம்
அரசனைப் பெற்றதால்
பெருமைப்படப் போகும் இடம்.

செல்லுங்கள்.
அரசனைக்கண்டு வாருங்கள்,
நானும்
ஆராதிக்க ஆயத்தமாகிறேன்.

கண்டு வந்து சொல்லுங்கள்
நான்
கண்டு வணங்க வேண்டும்.

ஞானிகள் விலக,
சூட்சும அரசவை
மெளனத்துள் மண்டியிட்டது.

மூர்க்கத்தனமான ஓர் முடிவுக்காய்
வாள்கள் உறைக்குள்
அசையாதிருந்தன.

அரசவையின் இரகசியங்கள்
அறியாமல்
ஞானிகள் நடந்தனர்.
வானம் வழிகாட்ட
பூமியில் சுவடுகள் நீளமாயின.

குளிரில் உடல்கள் குறுகுறுக்க
இதயம் எதிர்பார்ப்பில்
எரிந்து கொண்டிருந்தது.

இதோ
வால் நட்சத்திரம்
நடப்பதை றுத்தி,
நடப்போரைப் பார்த்தது.

ஞானியர்
ஆனந்தக் கடலின்
அலைகளாய் அலைந்தனர்.

வானத்தின் வால்பிடித்து
ஞாலத்தின் சிறப்பருகே
ஞானியர் வந்தனர்.
o

மாட்டுத் தொழுவம் ஒன்று
மீட்பின் மகனுக்காய்
மடிதிறந்து படி அமைத்திருந்தது.

நாடுகளின் மெத்தைகள்
அரசனுக்காய் விழித்திருக்க,
பெத்லேகேம்
தொழுவமொன்று
தொழுகை பெற்றது.

வைக்கோல் கூட்டுக்குள்
ஓர்
வைரம் வளர்க்கப்பட்டது
வரலாற்றில் இது ஒரே முறை.
வரலாறே இவருக்கு விரல் முனை.

முத்துக்கள் எப்போதுமே
மாளிகைகளில் பயிராவதில்லையே,
சிப்பியில் தானே
அவை சிரம் கொள்கின்றன.

தலை தாழ்த்தித் தரை வீழ்ந்து
வணங்கினர் ஞானியர்.
பொன், தூபம், வெள்ளைப் போளம்
வழங்கினர் ஞானியர்.

பிறந்ததன் பயனாய்
உயர்ந்ததை வழங்கினர்.

 
கனவுகள் பேசுகின்றன

 

இரவின் ஜாமம் அதிகரித்தபோது
ஞானியர்க்கு
நித்திரையின் ஆழத்தில்
கனவொன்று கசிந்தது.
‘ஏரோதை சந்திக்காமல் செல்க’ என்று
கடவுளின் தூதர் கட்டளையிட்டார்.

பாதைகள் எல்லாம்
பாதங்களால் தானே
பரிசீலிக்கப் படுகின்றன.
ஞானியர் பாதை மாற்றி பயணம் சென்றனர்.

ஞானியர் சென்றபின்
தேவதூதரால் யோசேப்பு
எகிப்துக்குச் செல்
என எச்சரிக்கப் பட்டார்.

தொழுவத்தில் இருந்த
சிறு சூரியனை எடுத்துக் கொண்டு
எகிப்தின் எல்லைக்கு
மீட்பர் குடும்பம் இரவில் விரைந்தது.

காற்றைக் கொய்யும் கத்தியை
எந்தப் பட்டறை
தீட்ட இயலும் ?
தண்ணீரைக் கொல்லும் வாளை
எந்தப் போர்க்களம்
எடுத்து வர இயலும் ?

ஞானிகளுக்காய் காத்திருந்த
ஏரோது எரிச்சல் கொண்டான்.
ஏமாற்றப் பட்டதைக் கேட்டு
எரிமலையானான்.

அவனுடைய இதயம்
வெறியில் நிறம் மாறியது.
தீப் பொறியாய்
கட்டளைகள் கட்டவிழ்ந்தன.

பெத்லேகேமின் வீதிகளில்,
சுற்றி இருக்கும் நாடுகளில்,
இரண்டு வயதுக்குட்பட்டவரெல்லாம்
இறக்கட்டும் என்றான்.

அரச ஆணை
புரவிகளில் மரணத்தை ஏற்றி
பெத்லேகேமுக்குப் பறந்தது.

முளைவிடத்துவங்கிய செடிகள்
யானை நசுக்கியதாய்
உயிர் புதைத்தன.

சின்ன ரோஜாக்களின் மேல்
நீளமான வாள்கள்
அகழ்வாராட்சி செய்தன.

எல்லா வண்ணப் பூக்களும்
குருதியில் தோய்ந்து
சிவப்பாய் சமாதியாயின.

பெத்லேகேமின் வீதிகளில்
ஒப்பாரிகள்
உச்ச வேகத்தில் உலவின.

எரேமியா இறைவாக்கினர்
என்றோ உரைத்தது
இன்று உறைத்தது.

 

தீர்க்கத்தரிசனம்

எட்டாம் நாள் விடிந்ததும்
யெருசலேமில்,
பரலோகப் பிரதிதிக்குப்
பூலோகத்தில் பெயர் சூட்டினர்.

இயேசு!!.

பிறக்கும் முன்பே
வானதூதரால் நவிலப்பட்ட
நாமம்.

மனிதரின் பாவங்களை
தீர்ப்பவர்
என்பதே அதன் பொருள்.

மீட்பின் மனிதர் என்பதே
அதன் பொருள்,
மீட்பிற்காய் வந்தவரே
பரம் பொருள்.

தலைப்பேறான தனையனை
ஆண்டவனுக்காய்
அர்ப்பணித்தல்
வழுவாத வழக்கமங்கே.
ஜோடிப்புறாக்களோ,
மாடப்புறாக்களோ பலியிடல்
அர்ப்பணித்ததன் அடையாளமங்கே.

ஆலயத்தில் அமர்ந்திருந்தார்
சீரிய பக்தியின் சின்னமான
சிமியோன்.
மெசியாவின் வருகைக்காய்
மெய்வருத்தும் மெய் பக்தர்.

ஆண்டவரைப் பார்த்தபின்பே
ஆவி அகலும் அகத்தை விட்டென்று
ஆவியானவரால்
அறிவிக்கப்பட்ட
பக்தியில் பித்தர்.

இயேசுவைக் கண்டவுடன்,
சிமியோனின் புருவங்கள்
உருவங்கள் மாறின,
உள்ளுக்குள் ஓராயிரம்
உற்சாக மலைச்சரிவுகளில்
ஒய்யார பனிச்சரிவுகள்.

கரங்களில் கர்த்தரை ஏந்தி,
சிரங்களில் சுரங்களை ஏற்றி
பாடினார் சிமியோன்.

இனிமேல்
சாவு எனக்கு சங்கடமில்லை
வாழ்வை தரிசித்து விட்டேன்.

புறவினத்தாரின் இருளகற்றும்
புது விளக்கை,
பூமிக்காய் பிறந்திருக்கும்
பொது விளக்கை,
என் கண்கள் கண்டுகொண்டன.

அல்லி மலரை அரையில் தாங்கி
முல்லை நிலவில் முகத்துடனே
தங்கத் தாமரை
தரையிறங்கியதாய்
அன்னை மரி அருகிருந்தாள்.

சிமியோன் தாயிடம்
தீர்க்கத் தரிசனம் பரிசளித்தார்.

இதோ,
இப்பாலன்
இஸ்ராயேலரின் வாழ்வை
காயப்படுத்தாமல் சாயப்படுத்துவான்,

பலருடைய
வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும்
வார்த்தை வாள்களால்
தீர்ப்பினைத் தருவார்.

உமது உள்ளத்தையும்
ஓர் வாள் ஊடுருவும்
அப்போது
பலருடைய உள்ளங்களிலிருந்து
எண்ணங்கள் வெளிவரும்.

மரியாள்
புரியாமல் பார்த்தாள்.

அப்போது
ஆலயத்தில் வந்த
ஆசேர் குலத்து அன்னாவும்
மழலையைக் கண்டதும்
மீட்பரென்றறிந்து மகிழ்ந்தாள்.
வானகத்து தேவனை
வாயார புகழ்ந்துரைத்தாள்.

சட்டங்களின் படி
சம்பிரதாயங்கள் செய்தபின்,
கலிலேயா வின் நாசரேத்துக்கு
திருக்குடும்பம்
திரும்பிச் சென்றது.

இயேசு வளர்ந்தார்.

அறிவின் ஆழம் அடைந்து,
ஞானத்தினால் ஞாலம் குடைந்து,
கடவுளுக்கும் மனிதருக்கும்
உகந்தவராய்
உள்ளுக்குள் உரமேறினார்.

மனித வடிவ மனுமகன்
யூத குலச் சட்டங்களை எல்லாம்
அக்குவேறு ஆவேறாய்
அலசித் தேர்ந்தார்.

அறியாத ஒன்றுக்கு
எதிராகப் பாய்தல்
சரியல்ல என்று
சரியாய் கணித்திருந்தார்.

 
 

ஞாலத்தில் சிறந்த ஞானம்

 
பாஸ்கா விழாவில்
பங்கெடுக்க
ஆண்டுக்கொரு முறை
யெருசலேம் யாத்திரை
தவறாமல் நடந்தது.

பாலன் இயேசுவின்
பன்னிரண்டாம் பருவத்தில்,
ஒரு முறை
திருக்குடும்பம்
திருவிழா சென்றது.

திருநாட்கள் முடிந்தபின்
திரும்பியது பயணம்
நாசரேத் நகர் நோக்கி.
இயேசுவோ
யெருசலேம் ஆலயத்திலேயே
இருந்து விட்டார்.

உண்மை அறியாத
பெற்றோர்
பயணிகளோடு பாலகன்
முன்னால் சென்றிருக்கலாம்
என
பின்னால் வந்து கொண்டிருந்தனர்.

இரவிலும் இயேசுவைக்
காணாத
பெற்றோர் மனதில்
பயம் விழித்தெழுந்தது.

பயணிகள் கூட்டத்தில்
பாலனைக் காணாமல்
பரிதவித்து,
பதட்டத்தின் படியேறி
யெருசலேம் விரைந்தனர்.

மூன்று நாள் தேடலின் முடிவில்
ஆலயம் ஒன்றில்
பாலனைக் கண்டனர்.

இயேசு அங்கே,
போதகர்களின் போதனைகளின்
விலா எலும்புகளை
உருவிக்கொண்டிருந்தார்,
கேள்விகளால் போதகர்களை
துருவிக்கொண்டிருந்தார்.

பிரமிப்பின் பிரமிடுகளில்
போதகர்கள்
புதைக்கப்பட்டுக் கிடந்தனர்.

சின்ன மொட்டுக்குள்
அறிவின் கட்டுக்களா ?
உள்ளங்கைக்குள்
உலகின் பூட்டுக்களா ?

இந்த நதி,
பிறக்கும் போதே கடலானது
எப்படி ?
இந்த அருவி மட்டும் எப்படி
இலக்கணம் கற்காமல்
உச்சி நோக்கி ஓடுகிறது ?

இத்தனை காலமும்
சாம்ராஜ்யம் ஆண்ட சட்டங்களை
ஓர்
பிஞ்சுக் கரம்
பஞ்சாய் கிழிக்கிறதே !!

இவனென்ன
அறிவு மேகங்களை அடுக்கி வைத்த
அகலமான வானமா ?
இல்லை
பிறக்கும் போதே
செழித்துக் கிடந்த
அடர்த்தியான வனமா ?

வியப்பின் விரல் நுனிகள்
நடு நடுங்க,
பயத்தின் முதல் துளி
அவர்களிடம் பரவியது.

இயேசுவின் தாய்
பாசத்தில் குரல் கொடுத்தாள்.
தனியே நீ
தங்கியதென்ன மகனே,
கண்ணீரின் காலத்தை
தந்ததென்ன மகனே…

பாலன் இயேசு பார்த்தார்,
இது என்
தந்தையின் இல்லமம்மா,
இது தான் இனியென்
விருப்பமான இருப்பிடமம்மா.

எரியும் கவலையில்
திரிந்த மரியாள்
புரிந்தும் புரியாமலும்
பாலனைப் பார்த்தாள்.

தாயின் தடுமாற்றம் கண்ட
நாயகன்
கரம் பற்றி,
நாசரேத் நகர் நோக்கி
நடந்தார்.

சிலகாலம்
தாயுடனே தங்கி,
பிள்ளையின் கடமையை
பிழையின்றி செய்தார்.

 
ஒளிக்குச் சான்று

 
ஆதியிலே வாக்கு இருந்தது,
அது
கடவுளோடும் கடவுளாயும்
இருந்தது.

படைப்புகள் எல்லாமே
அவரால் தான்
படைக்கப் பட்டன,
அவருடைய அறிவுக்கு அப்பால்
எதுவும் அறியப்படவில்லை.

மனிதனின் வாழ்வு
அவரோடு வாசம் செய்தது,
அது
மனிதரின்
அக இருட்டுக்களை அழிக்கும்
ஒளியாய் மிளிர்ந்தது.

அந்த ஒளியை வீழ்த்த
இருளின் ஆயுதங்களுக்கு
வலு இல்லாமல்
வீழ்ந்தது.

யோவான் !!!

ஞானத்தின் விளக்குக்கு
ஞானஸ்நானம்
தரும் பாக்கியம் பெற்றவர்.
ஒளிக்குச் சான்று பகரவே
அவர் வந்தார்,
ஆனால் அவர் ஒளி அல்ல.

ஒட்டக மயிராடை
கட்டியவர்,
வார்க்கச்சை ஒன்றை
வரிந்தவர்.
வெட்டுக்கிளிகளை உணவாக்கி
காட்டுத்தேனுடன் கலந்துண்டவர்.

அவருடைய பிறப்பே
ஓர்
அதிசயத்தின் ஆரம்பம் தான்.

செக்கரியா என்னும்
குருவுக்கும்
எலிசபெத்து என்னும்
ஆரோன் வம்ச
மங்கைக்கும் பிறந்தவர் அவர்.

நேர்மையின் வேர்வைக்கு
நிலமாய் இருந்தது
அவர்களின் இதயம்.

வருடங்கள்
தன் முத்திரை குத்திக் குத்தியே
முதுமையை
முத்தமிட்டவர்கள்.

ஓர்
மழலை தன் இடை தொடவில்லையே
எனும்
இடி போன்ற சோகத்தை
மடி மீது குடி வைத்திருந்தனர்.

கடவுளின் தூதர்
செக்கரியாவுக்குத் தோன்றி
இதோ உம்
வேண்டுதலின் தூண்டுதல்
ஆண்டவனை தீண்டியாயிற்று.
ஓர்
உத்தமர் உன் மகனாவார்

வாழ்வுக்கான வழி
நிகழ்கால அழுக்களுக்குள்
அமிழ்ந்து கிடக்கிறது,
அவர் வந்து
பாதையை புலப்படுத்துவார்
பதர்களையும் பலப்படுத்துவார்.

யோக்கியமான அவருக்கு
யோவான் என பெயரிடும்.
என்றார்.

செக்கரியா
சந்தேகத்தில் சஞ்சரித்தார்.
எங்கள்
கல்லறை நோக்கிய பயணத்தில்
எப்படிக்
கருவறைக் கதவு திறக்கும்.

சருகுக்குள் எப்படி
விருட்சம் இருக்கும் ?

அந்தி சாய்ந்த பின்பா
ஆதவன் உதயம் ?
பிந்தி வந்து சேருமா
முதுமைக்கு ஓர் பந்தம் ?
என வினவ.

வாக்கு நம்பாத உமது நாக்கு
இனிமேல் பேசாது.
சொன்னது நடக்கும்,
அதன் பின்பே
உம் வாயில் வார்த்தை பிறக்கும்.
என்றார்.

அப்படிப் பிறந்தவர் தான்
யோவான்,
இயேசுவுவின் பிறப்புக்கு
முன்னுரை சொன்ன
கபிரியேல் தூதராய்
முன்னுரை சொல்லப்பட்டவர்.

இயேசுவின் தாயால்
வாழ்த்துச் சொல்லப் பட்ட
பெருமைக்குரியவர்.
அவர்
இயேசுவுக்கு முன்னோடி.

இயேசு என்னும்
ஒளிக்குச் சான்று பகர்வதே
அவருக்கு அளிக்கப் பட்ட பணி.

உலகை உருவாக்கிய சிற்பியை
உலகமே
அறிந்து கொள்ளவில்லை,
தன்னைத் தீட்டிய ஓவியனை
புறந்தள்ளிய
ஓவியமாய்க் கிடந்தது அது.

ஆனால்,
ஆண்டவருக்கானவர்கள் அவரை
அறிந்து கொண்டு
பரமனில் மீண்டும் பிறந்தார்கள்.

இது
உடல் சார்ந்த பிறப்பு அல்ல,
ஆன்மா சார்ந்த பிறப்பு.

முட்டை உடைத்து
பிறந்த நாகம்,
மீண்டும் சட்டையுரித்தல்
இயற்கை திருப்பம்.

கருவில் பிறந்த மனிதன்
மீண்டும்
திருவில் பிறத்தல்
இறைவன் விருப்பம்.

யோர்தானின் கரையில்
யோவான் விசுவாசம் விதைத்தார்.
விரியன் பாம்புக் குட்டிகளே
சினத்துக்குக் தப்புவிக்க
நீருக்குள் வாருங்கள்.
ஞானஸ்நானமே மீட்பின் முதல் நிலை.

முதல் நிலை இல்லாமல்
திரு நிலை இல்லை.

உங்கள் உள்ளங்களை
உழுதிடுங்கள்,
நல்லெண்ணமெனும் உரமிடுங்கள்,
நற்செயல்களென்னும் விதையிடுங்கள்.

செயல்களற்ற வார்த்தைகள்
செத்தவார்த்தைகள்,
பிணம் தின்னும் கழுகுக்கு
பிணத்துள் வித்தியாசம் பெரிதல்ல.

அடிமரத்துக்கு கோடரி வைத்தாயிற்று
கிளைகளின் கனிகளுக்காய் இனி
உச்சாணிக்கு
ஏணி சாய்க்காதீர்கள்.

 
திருமகனுக்கு திருமுழுக்கு

 யோவானைக் குறிவைத்து
குருக்கள் வந்தனர்,
நீ என்ன மெசியாவா ?
எலியாவா ? இல்லை
தூதர்கள் சொல்லிச் சென்ற
இறைவாக்கினனா ?
அடுக்கடுக்காய் கேள்விகளால்
அடித்துப் பார்த்தனர்.

யோவான் மறுத்தார்,
நான் யாருமல்லேன்,
ஆதியின் வார்த்தை
மனித அவதாரத்தில் வந்துள்ளது,
நான் வெறும்
சான்று பகர்பவனே,
சரித்திரம் படைப்பவனல்ல.

என் தண்ணீர் திருமுழுக்கில்
நீங்கள்
தடுமாறிப்போகிறீர்களே,
நீரூற்றி நிறம் கொடுப்பவன் நான்.
நெருப்பூற்றி முழுக்கு கொடுப்பவர்
எனக்குப் பின்னால் வருகிறார்.

நான் செய்தியாளன்.
செருக்குற்றோரைச் சிதறடிக்கும்
அவர் சிறப்புக்கு முன் அல்ல,
அவர் செருப்புக்கு முன்னும்
நான்
மிகச் சிறியவன் !

அவருக்கு
பதர்களோடும் கதிர்களோடும்
பரிச்சயம் இருக்கிறது,
பத்தாயத்துக்கு கோதுமையை அனுப்பி
பதரின் தலைக்கு தீயிடுவார்.

நீ கதிராய் இருந்தால்
அவர் ஒளியில் கனிதருவாய்.
வைக்கோலாய் இருந்தால்
எரிந்துபோவாய்.

வார்த்தைகள் ஒவ்வொன்றும்
வீரியத்துக்குப் பிறந்த
சுருள் வாளாய்,
கூட்டத்தின் நெஞ்சம் சென்று
தஞ்சம் கொண்டது.

இயேசுவும் வந்தார்,
யோவானிடம்
திருமுழுக்கு பெற.

வரம் தரும் பரமன்
வரம் வேண்டி வந்ததாய்
தடுமாறினார் யோவான்.

கடவுளே
நீர் விண்ணகத்தின் விளக்கு
என்னிடம்
திருமுழுக்கு பெறுவது
இழுக்கு உமக்கு.
நான் வெறும்
மனித அழுக்கு என்றார்.

இயேசு புன்னகைத்தார்.
என்
பணி வாழ்வை
நீர் தான் துவக்க வேண்டும்
நீரால் துவக்க வேண்டும்
என்றார்.

யோவான்
பிரபஞ்ச பாக்கியம் பெற்றார்.
இயேசு
ஞானஸ்நானம் பெற்றார்.

திடீரென்று,
ஒற்றையாய் இருந்த வானம்,
முதுகு கிழிய,
வெள்ளைப்புறா வடிவில்
பரிசுத்த ஆவி கீழிறங்க,

“இவரே என் மகன்,
 இவரில் நான் பூரிப்படைகிறேன்”
வார்த்தைகள் வான வாயில் புறப்பட,
இயேசு அடையாளப்படுத்தப்பட்டார்.

தூய ஆவி
புறாவின் வடிவில்
இயேவில் இறங்க
தண்ணீருக்கே தலைசுற்றியது.

மொத்த ஜனமும்,
மொத்தமாய் அதிர்ந்தது,
கால்கள் வலுவிழக்க
பூமியில் முழங்கால் படியிட்டது.

 
உன்னத உரையாடல்.


 
செபம்,
அது கடவுளோடு கொண்ட
உன்னத உரையாடல்.

செபம்,
அது
சூல் கொண்ட சோகங்களை
கால் கொண்டு நசுக்குமிடம்.

செபியுங்கள்,
உள்ளுக்குள் உற்சாகம்
அலையாய் புரண்டாலும்,
நெஞ்சுக்குள் ஓர் சோகம்
மலையாய் அரண்டாலும்,
கண்களை மூடி செபியுங்கள்.

செபம்,
வேண்டுதல்களின் சுருக்குப் பைகளை
விரிக்கும் இடமல்ல,
அது
இதயத்தின் சுருங்கிய தசைகளை
நிமிர்க்கும் இடம்.

சோகத்தின் தள்ளுவண்டிகளை
மட்டுமே
செபத்தின் சக்கரங்கள்
தூக்கிச் சுமப்பதில்லை,
அது சந்தோஷப் தோணிகளுக்கான
துடுப்பையும் தயாரிக்கும்.

செபம்,
அது ஓர் உற்சாகமான உணர்வு.
நாளைய வாழ்வை
நெறிப்படுத்தும் நிறைவு.

இயேசு சொன்னார்,
மண்ணுலகில்
ஒரு வேண்டுதலுக்காய்
மனமொத்து
சில இதயங்கள் செபித்தால்
அது வழங்கப்படும்.

பிறருக்காக வாழும்
வாழ்வின் அடித்தளம்
இயேசுவின் போதனையில்
புதுத் தளம்.
 

சாதனைக்கான சோதனைக்காலம்
 

இயேசுவும் செபித்தார்.
நாற்பது நாட்கள் நோன்பிருந்தார்.

சோதனைகளின் காலுடைத்து
வருபவர்களால் தான்
வேதனைகளின் சங்குடைக்க இயலும்.

இயேசுவும் சோதிக்கப்பட்டார்.
அலகையினால்.

நாற்பது நாள் நோன்பில்
இயேசு,
பசியால் உண்ணப்பட்டார்.

அலகை சொன்னது.
நீதான் தேவ மகனாயிற்றே !
இதோ கல்,
இந்தக் கல் கொண்டு
அப்பம் செய்,
அப்பம் மெல் பசியை வெல்.

புன்முறுவலோடு பதிலுரைத்தார் பரமன்.
அப்பத்தினால் மட்டுமே
மனிதன் வாழ்வதில்லை,
ஆகாரங்கள் உடனடித் தேவையின்
ஊன்றுகோல்கள்.
வாழ்வுதரும் வார்த்தைகளே
ஊற்று நீர்.
வயிற்றுக்கு மட்டுமாய் வாழ்வது வாழ்வல்ல,
மீட்புக்காய் வாழ்வதே வாழ்வு.

அகல மறுத்த அலகை சொன்னது,
இதோ,
உலகனைத்தும் உனக்குத் தருவேன்,
என்னை வணங்கு.

நீ காணும்
நீள் வளங்கள் எல்லாம்
என் அரசவையின் பொக்கிஷங்கள்.

மெலிதாய் சிரித்து
மனுமகன் சொன்னார்.

உன்
கடவுளாகிய ஆண்டவரை மட்டுமே
வணங்கு என்பதே இறை வாக்கு.
இவ்வுலகின் செல்வங்கள்
என்னை
எள்ளளவும் வெல்லாது,
உன் ஆசை காட்டும் வேலை
என்னிடம் செல்லாது.

முயற்சியில் தளரா அலகை,
ஆலய உச்சி ஒன்றில் ஆண்டவனை
அழைத்துச் சென்றது.
இங்கிருந்து கீழே குதி,
நீ வான் ஆள்பவர் என்றால்
வானதூதர் உன்னை தாங்கிக் கொள்வர்.

இயேசு அலகையை நோக்கினார்,
உன்
ஆண்டவரைச் சோதியாமல்
அகன்று போ.
கண்டிப்பின் வார்த்தைகள்
நொண்டியடிக்காமல் வந்தன.

தோல்வியின் பாரம் முதுகில் ஏந்தி
அலகை அகன்றது.

சோதனைகள்.
வாழ்வின் மீது விழும்
முரட்டுத்தனமான அடி.
சோதனையின் அழைப்பை ஒதுக்கி
பிழைத்து வருவதே பெருமை.

ஆசைகளின் கூடாரத்துள்
அசை போட்டுக் கிடந்தால்
கால்நடைகளுக்கும்
மானிடனுக்கும் வித்தியாசம் ஏது ?

மனித வாழ்வு,
சோதனைகள் மோதினால்
இலட்சியங்களின்
இலக்குகளை இடம் மாற்றி வைக்கும்.

வயிற்றுக்கான சோதனைகளில்
சில சமயம்,
பொருளுக்கான சோதனைகளில்
பல நேரம்,
புகழுக்கான சோதனையில்
பெரும்பாலும்
என மனிதன்
இடறி விழாத இடங்கள் குறைவே.

மூன்று சோதனைகள்,
மூவொரு இறைவனின் முன்னேயும்
முந்தி விரித்தது,
அவரோ சூரியன் !
மெழுகுக் கால்கள் அவரை
மிதிக்கப் பார்க்கின்றன !.
எரிந்து போவோம் என்பதை
அறியும் அறிவும் இல்லாமல்.

இயேசு வென்றார்.
இயேசுவாய் நின்றார்.
 

பணிவாழ்வுக்காய் பயணியுங்கள்

 

கலிலேயக் கடல்
கரைகளில் ஈரக்காற்றை இறக்கிவைக்க
அலைகளை
அனுப்பிக் கொண்டிருந்தது.

அங்கே இருவர்,
வலைகளை அனுப்பி
மீன்களை இழுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருவர் பேதுரு,
மற்றவர் அந்திரேயா.

இயேசு
அவர்களைப் பார்த்தார்.
வாருங்கள்,
வலைகளோடும் மீன்களோடும்
வாழ்வோரே வாருங்கள்.

இன்னும் எத்தனை காலம் தான்
நீருக்குள் மூழ்கும்
மீன்கள் பின்னே அலைவீர்கள்,
மீன்கள் பிடித்தது போதும்
மீண்டுமிருக்கும் வாழ்வில்
மனிதர் பிடிக்கலாம் வாருங்கள்.

ஒரே அழைப்பு.
மீனவர்கள் வானவரை
பின்தொடரத் துவங்கினார்கள்.

கடலின் மணல் கைகளில்
கால் சுவடுகள் பதித்து
நடந்து போகும் வழியில்
இன்னும் இருவரைக் கண்டார்.
அவர்கள்,
செபதேயுவின் மகன் யாக்கோபு,
அவரது சகோதரன் யோவான்.

அவர்கள்
வலைகளின் பழுதுகளை
தந்தையோடு அமர்ந்து
திருத்திக் கொண்டிருந்தார்கள்.

இயேசு அவர்களையும் அழைத்தார்.
வாருங்கள்,
பழுதுகள் வலைகளில் அல்ல
மனங்களின் நிலைகளில்.
சீரமைப்போம் புது
பாரமைப்போம் வாருங்கள்.

தந்தையிடம் வலையை விட்டுவிட்டு
தனையர் இருவரும்
இயேசுவின் பணிக்குள்
இணைந்து கொண்டார்கள்.

அடுத்த சீடருக்கான அழைப்பு
கப்பர்நாகூமில் வந்தது.
வரிவசூலிக்கும் மத்தேயு
வசவுகளை
வசூல் செய்து கொண்டிருந்தபோது
அவருக்கு வந்தது
வாழ்வுக்கானதை வசூலிக்கும் அழைப்பு.

நாணயங்களை சேகரிக்கும் அவர்
நாணயத்தை சேகரிக்க
அழைப்புக்கு அடிபணிந்தார்.

பிலிப்பு,
பார்த்தலமேயு,
தோமா,
அல்பேயுவின் மகன் யாக்கோபு,
ததேயு,
சீமோன் மற்றும்
யூதாஸ் இஸ்காரியோத்து
இவர்களும் அழைக்கப்பட்டனர்.

தனி வாழ்வு சிந்தனைகள்
இனி வேண்டாமென்று,
சுய நல வாழ்க்கையை
கடலுக்குள் கரைத்து விட்டு
அழைக்கப்பட்டவர்
கடவுளின் கரம் பிடித்தனர்.

இயேசுவின் அழைப்பு
அடிமட்ட மக்களின்
வாழ்வுக்கான நெம்புகோலாய் விழுந்தது.
மதவாதிகளை
மதிக்காமல்,
சட்ட வல்லுனர்களை
சட்டை செய்யாமல்,
மாடமாளிகைகளுக்கு
தூது அனுப்பாமல்
ஏழைகளுக்காய் எழுந்தது.

இருக்கைகளின் தேடல்களை
வெறுத்து
இரக்கத்தின் தேடல்களையே
இறைமகன் நடத்தினார்.

 
வலுவாக்கும் அறிவுரைகள்

 

தேர்ந்து கொள்ளப்பட்டவர்களை
பண்ணையாளர்களின்
பண்ணைக்கு அனுப்பாமல்,
சிதறிப் போன
ஆட்டுக் கூட்டத்தை சேகரிக்கவே
இயேசு அனுப்பினார்.

இறை வல்லமையை
அவர்களுக்குள்
குறைவின்றி நிறைத்து.

செல்லுங்கள்,
ஓநாய் கூட்டத்து இடையே
செம்மறிகளை
அனுப்புகிறேன்,
சங்கடப் படாதீர்கள்.

சட்டங்களின் ஈட்டிகள் உங்களை
வழியில் தடுக்கும்,
சாட்டைகள் உங்களை
தொழுகைக் கூடத்தில் நிறுத்தி
தோல் கிழிக்கும், வருந்தாதீர்கள்.

என்ன பேசுவதென்று
பதட்டம் வேண்டாம்,
பரிசுத்த ஆவி பேசுவார்,
தயாரித்து வாசிக்கும் தளம் அல்ல
அந்த களம்.
உங்கள் தகுதியை தீர்மானிக்கும்
தளமுமல்ல.
நம் தந்தையின் வார்த்தைகள்
பரவும் இடம்.
அவசியமான போது
அவசியமானவை அருளப்படும்.

அச்சத்தை அவிழ்த்து விட்டு
ஆவியை அணிந்து கொள்ளுங்கள்.

காசுகளைச் சேகரித்து
எடுத்துச் செல்லவேண்டாம்,
உங்கள்
பணிக்கு உணவு
நல்லோரால் நல்கப்படும்.

வெளிப்படாமல்
மூடியிருப்பதும்,
அறிய முடியாதபடி
மறைந்திருப்பதும் எதுவும் இல்லை.
அறிவியுங்கள்,
உங்கள் காதுகளுக்கு நான்
சொல்வதை,
ஊரின் காதுகளுக்குள்
ஊற்றுங்கள்.

என்னையும்,
என் பொருட்டு உங்களையும்
ஏற்றுக் கொள்பவர்களை
நான்
இறுதி நாளில் உறுதியாய் ஏற்பேன்,
மறுதலிப்பவர்களையோ
நான்
மன்னிக்கவே மாட்டேன்.

உங்களுக்கு என் பெயரால்
ஒருகுவளை
தண்ணீர் கொடுப்பவன் கூட,
கைம்மாறு பெறத் தவறான்.

மனங்களைத் தயாரித்த
இயேசு,
அவர்களை
அறுவடைக்காய் அனுப்பினார்,
இதய அறுவடைக்காய்.

அடுத்த பக்கம் »

%d bloggers like this: