பணியாளரே துணிவு பெறுங்கள்

 

சீடர்களுக்கு இயேசு
வார்த்தெடுத்த
வார்த்தைகளால்
வலுவான செய்திகள் சொன்னார்.

பயணத்தின் ஓரத்தில்
பயம் கொள்ளாமலும்,
வெப்பத்தின் வெப்பத்தில்
வெந்துபோகாமலும்,
மனசை மலையாக்கும்
ஒப்பற்ற அறிவுரைகள் அவை.

o

ஆன்மாவைக் கொல்லும்
ஆயுதம் இல்லாதவருக்காய்
அஞ்சவேண்டாம்.

மனிதரின் வாட்கள்
உடலோடு மட்டுமே உறவாடும்,
உடல் வலிக்காய்
அஞ்சாதீர்கள்.

சாவு என்பது
சரீரத்தோடு மட்டுமே
சம்பந்தப் பட்டதல்ல,
மனிதாபிமானம் மரித்துப் போனால்,
தரணியில் வாழ்வதில்
தரம் ஏதும் இல்லை.

o

ஓநாய்களிடையே
உலவும் ஆடுகளாய் நீங்கள்.
பாம்பின் விவேகமும்
புறாவின் பரிசுத்தமும்
அணிகலனாய் அணியுங்கள்.

சமாதானத்தின்
சாகுபடி செய்யுங்கள்.

o

மறைக்கப்பட்டவை
என்றேனும் வெளிப்பட்டே தீரும்.
இரவின் நிறம்
பகலால் துடைக்கப்படும்.

நான்
உங்கள் காதுக்குச் சொன்னதை
நீங்கள்
உலகிற்கு உரக்கச் சொல்லுங்கள்

o

உலகின் உறவுகள்
உன்னதரால் வழங்கப்பட்டவை,
உலக உறவுக்காய்
உன்னதரை உதாசீனப் படுத்தாதீர்கள்

o

 

யார் நன்மை செய்ய வேண்டும்

 

யோவான்
இயேசுவிடம் ஓர்
குழப்பக் கேள்வியை வைத்தார்.

உமது
பெயரைச் சொல்லி ஒருவன்
பேய்களை ஓட்டுகிறான்
நல்ல செயல்கள் செய்கிறான்.
அவன்
நம்மைச் சாராதவன்
குழுவில் சேராதவன்
தடுக்கவா? விடுக்கவா ? என்றார்.

தடுக்க வேண்டாம்
கொடுக்க விடுங்கள்.
இயேசு சொன்னார்.

நல்ல விதைகளை
யார் வேண்டுமானாலும் விதைக்கலாம்.
விதைப்பவனைப் பார்த்து
முளைகள் எழும்புவதில்லையே.
விதைக்கட்டும்.

நல்ல செயல்களுக்காய்
என் பெயரைப் பயன்படுத்தினால்
பழுதில்லை.
விழுதுகள் ஆலமரத்துக்கு
விருதுகள் தானே.

நமக்கு எதிராய் இராதவன்
நம்மைச் சார்ந்தவனே.

நம்
செய்திகளுக்குத் தீ வைப்பவன்
மட்டுமே
நம்மைச் சாராதவன்
நன்மையைச் சாராதவன்.
என்றார்.

யோவான்
குழப்ப முடிச்சுகள் அவிழ
ஆனந்த நேர்கோட்டில்
ஐக்கியமானார்.

 

ஓய்வு நாளில் ஏன் ஓயவில்லை

 

பழி சுமத்தப் பார்த்திருந்தது
பரிசேயர் கூட்டம்,
இவர்கள்
உள்ளுக்குள் கள்ளூற்றி
வெளியே மல்லிப்பூ வளர்ப்பவர்கள்.

ஓய்வு நாளில்
இயேசுவின் சீடர்கள்
வயலில் கதிர் கொய்து தின்றனராம்,
பூச்சியைப் பிடித்து
யானை என்றது கூட்டம்.

யூதர்களின் முறையோ
சட்டங்களில் சட்டங்களுக்குள்
அடைபட்டுக் கிடக்கும்
புகைப்படம் போன்றது.
வெளியேறி ஒரு நாளும்
புது சுவாசம் இழுக்காது.

ஓய்வு நாள் என்பது
ஓய்வெடுக்க மட்டுமே.
அன்று
எச்செயலும் செய்யலாகாதெனும்
எச்சரிக்கைக் கட்டளை உண்டு
அவர்களுக்கு.

இயேசுவோ,
நலன்களை நல்க
நாள்காட்டி பார்ப்பதில்லை.

மடிந்து கொண்டிருக்கும் உயிரை
ஓய்வுநாள் முடியவில்லை
என்று
மனசை மடித்து மடங்கிச் செல்ல
மனுமகன் ஒன்றும்
சட்டத்தின் வால் பிடித்துத் தொங்கும்
பட்டத்தின் நூல் அல்ல.

அடக்கப் பார்த்த கேள்விக்கு
ஆதாரத்தோடு பதில் வந்தது
இயேசுவிடமிருந்து.

தாவீதும்
அவரோடு இருந்தவர்களும்
ஓய்வு நாளில்
குருக்களுக்கான அப்பங்களை
பசிதீர்க்கத் தின்றதை
வாசித்ததில்லையா நீங்கள்.

குருக்களின் ஆலயப் பணி
ஓய்வு நாளிலும் தொடரலாம்
என்பதை
கேட்டதில்லையா நீங்கள் ?

அவர்களின் சட்டநூலிலேயே
அவர்களின்
கேள்வியின் பதிலிருப்பதை
கோடிட்டுக் காட்டினார்.

சட்டங்கள் இருப்பது மனிதனுக்காக,
மனிதன் இருப்பது
சட்டத்துக்காக அல்ல.
உங்கள் செல்லரித்துப் போன
சட்டங்கள் இனி செல்லாது.

மனுமகன்,
ஆறு நாளுக்கான ஆண்டவரல்ல,
ஓய்வு நாளுக்கும்
அவரே ஆண்டவர்.

குறை சொன்ன கூட்டத்திடம்
வேறு கேள்வி
வேர்விட வில்லை.
 

அழிவுக்கான புளிப்பு மாவு

 பரிசேயரின்
புளிப்பு மாவைக் குறித்து
கவனமாய் இருங்கள்
இயேசு சொன்னார்.

சீடர்களோ
சிற்பியோடே இருந்தாலும்
இன்னும்
உளிகளைப் பற்றி முழுதாய்
அறிந்து கொள்ளவில்லை.

தங்களிடம்
அப்பம் இல்லையே என
தர்க்கமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இயேசு
மெலிதான கோபத்தால்
அவர்கள்
சந்தேகம் விலக்கினார்.

நான்
உள்ளத்தைப் பாதுகாக்கச்
சொன்னால்
நீங்கள்
உணவைப் பாதுகாக்கவில்லை
என்கிறீர்கள்.

எப்போது தான்
நுனிப்புல் மேய்வதை விட்டு
வேர்கள் மீது
வேட்கை கொள்வீர்களோ ?

ஐந்து அப்பத்தை
ஐயாயிரம் பேர் உண்டபின்
மீந்தவற்றை
பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தீர்கள்.

ஏழு அப்பங்களை
நாலாயிரம் பேருக்கு அளித்தேன்
அதில்
மீந்த அப்பங்களே
ஏழு கூடைகள் இருந்தனவே.

இன்னும் ஏன்
அப்பத்துக்கான கவலை.
நான் சொல்வது
வயிறுக்கான வார்த்தைகளல்ல
மனசுக்கான
மந்திரங்கள்.

குழப்பத்தைக் கொன்ற
வேடர்கள் ஆனார்கள்
சீடர்கள்.

 

எண்ணிக்கையா, எண்ணமா ?

 
ஒரு முறை இயேசு

காணிக்கை போடுவோரை
ஆலயத்தில் அமர்ந்து
கவனிக்கலானார்.

பட்டுக்குள் சுற்றப்பட்ட
பணக்காரர் பலர்
பெட்டி பெட்டியாய்
பணம் போட்டு நகர்ந்தனர்.

பகட்டுக்காய் பலர் வந்து
கட்டுக் கட்டாய்
நோட்டுக்கள் இட்டு
கர்வத்துடன் கடந்தனர்.

கடைசியாய் வந்தாள்
கவலையின் பையுடன்,
இரண்டு காசு கையுடன்,
கைம்பெண் ஒருத்தி.

இயேசு சொன்னார்
அதிகம் போட்டவள் இவளே.
ஏனெனில்
அதிகமாய் போட்டவர் எல்லாம்
அதிகமிருந்ததில் எடுத்தனர்.
இவளோ
இருந்ததை மொத்தமாய் கொடுத்தனள்.

அவர்கள்
களஞ்சியத்தில்
எஞ்சியதைக் கொடுத்தார்கள்
இவளோ
வாழ்வுக்காய்
மிஞ்சியதை கொடுத்தாள்.

உள்ளுக்குள் உண்மை நேசம்
ஒரு காசை வானளவு விரிக்கும்.
நேசம் இல்லா பகட்டுக்கள்
வானத்தைகூட
வார்க்கச்சைக்குள் இறுக்கும்.

 

பாவிகளெனும் பள்ளத்தில் பரமனா ?

 
பாவிகள் என்று
புறக்கக்கப்பட்டவரோடு
இயேசுவின் இரக்கம்
இடைவிடாமல் இருந்தது.

பாவிகளோடும் வரிவசூலிப்பவர்களோடும்
விருந்து உண்டார்.
கண்ணில் எண்ணை ஊற்றிக்
காத்திருந்தது,
பிரச்சினை கிளப்பவே
பரம்பரை பரம்பரையாய்
பழக்கப்பட்ட கூட்டம்.

போதகராய் இருப்து
வெகுமானம்
அவன் பாவிகளின் பாயில் அமர்ந்து
விருந்துண்பது
அவமானம்.
உங்கள் போதகருக்குப் புரியவில்லையோ ?

பரமனின் உறவுகள் எல்லாம்
உதவாக்கரைப் பாவிகளோடா ?
கேலிக் கேள்விகள்
சுழன்றது சீடர்களை நோக்கி.

இயேசு,
கேள்வித் தீயாய் எரித்தவரை
பதில் நீரில்
நனைத்தெடுத்தார்.

என் பணி,
நீங்கள் தேடும் மக்களோடல்ல
இதயம் வாடும் மக்களோடு
உங்கள் எல்லைகளுக்கு அப்பால் தான்
என்
ஆரம்பமே ஆரம்பம்.

மருத்துவனின் பணி
ஆரோக்கியவானின்
அறைகளிலல்ல,
நோயாளிகளின் நிலையங்களில்.

பலியை புறந்தள்ளி விட்டு
இரக்கத்தை மட்டுமே
இதயங்களில்
இறக்க வந்தேன்.

செதுக்கி முடித்த சிற்பத்தில்
சிற்பியின் உளிக்கு
வேலையில்லை.
வரைந்து முடித்த ஓவியம் தான்
நீதிமான்கள்
என் தூரிகைத் தழுவல்கள்
ஓவியமாகக் காத்திருக்கும்
காகிதங்களோடு தான்.
காவியமாய் காத்திருக்கும்
ஓவியங்களோடல்ல.

என் தேடுதல்கள்
குற்றம் விலகிய மனங்களல்ல,
குற்றம் விலக வேண்டிய
மனங்கள்.

நீதிமான்
நீதிமானாய் இருக்கட்டும் !
ஆனால்
பாவி பாவியாய் இருக்க வேண்டாம்.

பாவிகளின் பாதை மாற்றி
நீதிக்குள் அவர்களை
நடக்கவைப்பதே என் பணி,
மீன்களுக்கு நீச்சல்
பயிற்றுவிப்பதல்ல.

கறையற்றவர்களை தழுவுகிறேன்
அவர்கள்
நேசத்தில் நனைகிறேன்,
கறையுற்றோரைக் கழுவுகிறேன்.
அவர்களை
நேசத்தால் நனைக்கிறேன்.

இயேசுவின் விளக்கம்
தப்பாமல் வந்தது.
தப்பு சொன்னவர்கள்
தப்பி ஓடினார்கள்.

 
படைத்தவனுக்கு இடமில்லை

 

மறைநூல் அறிஞன் ஒருவன்
இயேசுவை அணுகி,
போதகரே,
உம் பயணம் தொடருமிடமெல்லாம்
இனி
என் பாதங்களும் படரும் என்றான்.

இயேசு அவரிடம்,
நரிகளுக்கு வளைகள் உண்டு.

பறவைகளுக்குக் கூட
சிறகு வலித்தால்
சங்கமிக்க கிளைகளிடையே
கூடுகள் காத்திருக்கும்.

மனுமகனுக்கோ
தலைச்சாய்க்கக் கூட
இடமிருக்காது,
தொடரத் தயாரென்றால் தொடரலாம்.
என்றார்.

இன்னொரு சீடர் அவரிடம்,
ஆண்டவரே,
என் தந்தை
இறந்துவிட்டார்,
அடக்கம் செய்துவிட்டு வரவா ?
என,

வாழ்வை முடித்தவர்க்காய் நீங்கள்
கவலைப் படுகிறீர்கள்,
வாழ்வை
துவங்காதவர்களுக்காய் நான்
துக்கப்படுகிறேன்,

உலகக் கவலைகள் உங்களை
உலுக்குகிறதென்றால்
உன்னதப் பணிக்கு
இன்னும் நீங்கள்
தயாராகவில்லை என்பதே பொருள்.
என்றார்.

 

இடம், பொருள், ஏவல் முக்கியம்

 
 
பழைய ஆடையில்
புதுத் துணியை
ஒட்டுப் போட உபயோகிக்காதீர்,
அது
கிழிசலைப் பெரிதாக்கி
ஆடையை அழித்துவிடும்.

புதிய இரசத்தை
புதிய சித்தைகளில் ஊற்று,
பழைய சித்தைகளில்
அதை ஊற்றினால்
எல்லாம் வீணாகும்.

சரியானதைச் செய்யுங்கள்
சரியான இடத்தில்.

 
 
மீண்டும் ஓய்வு நாள் சர்ச்சை

 

இன்னொருமுறை,
சூம்பியக்கையன் ஒருவனை
சுகமாக்கினார் இயேசு
ஓய்வு நாள் அது.
இன்னொரு குற்றச்சாட்டு குதித்தது.

ஓய்வு நாளில் என்ன
பிணி மாற்றும் பணி?
ஓய்வு மட்டுமே
ஓய்வு நாளுக்கான பணி
புரியாதவன் பரமனா ?

இயேசு சொன்னார்,
உன்
ஆட்டுக்குட்டி
குழியில் விழுந்தால்
ஓய்வு நாளெனில் அதை
சாக சம்மதிப்பாயா ?
சாகசம் செய்தாகிலும்
காப்பாற்றி கரையேற்றாயா ?

பள்ளத்தில் உன் பசு விழுந்தால்
ஓய்வு நாளெனில்
அதை
உதறிவிடுவாயா ?

ஆட்டைவிட மேலானவன்
மனிதன்,
இதை மறுதலிப்பவன் எவன் ?

நன்மைகளின்
விற்பனைக் கூடத்தில்,
முட்டுக் கட்டைகளை இட்டு
நிரப்பி வைக்காதீர்கள்.

வழக்கம் போல்
விளக்கம் கேட்டவர்
விலகினர்.
விளக்கம் பெற்றவர்
நெருங்கினர்.

 
விண்ணக இருக்கைக்கு விண்ணப்பம்
 

செபதேயுவின் மனைவி
தம் மக்களோடு வந்து
இயேசுவிடம்
விண்ணப்பம் ஒன்றை வைத்தாள்.

நீர் ஆட்சி அரியணையில்
அமரும்போது,
இவர்களை உம்
இரு பக்கங்களிலும்
இருக்கச் செய்யும் என்பதே
அவ்விண்ணப்பம்.

இயேசு
அவளைப் பார்த்தார்.
புரியாமல் பேசுகிறாய் நீ,
என்
துன்பக் கிண்ணத்தில் இவர்கள்
குடிப்பது சாத்தியமா ?
என்றார்.

தம் சிலுவைச் சாவையே
அவ்வாறு கேட்டார்.
அவளுக்கோ அது விளங்கியிருக்க
நியாயமில்லை.

ஆனாலும்
முடியும் என்றாள்.

இயேசுவோ
என்
பாடுகளைப் பகிர்தல்
ஒருவேளை சாத்தியமாகலாம்.

ஆனால்
விண்ணக வீட்டில்
என் பக்கத்தில் அமர்வது
என் தந்தையின் விருப்பத்தைப்
பொறுத்தது.
என்று பதிலளித்தார்.

 

சிறியவனே பெரியவன்

 

சீடர்கள் இயேசுவை அணுகி
வானுலகில்
பெரியவன் யார் ?
சற்றே எங்களுக்கு சொல்லும் என்றனர்.

இயேசு,
ஒரு சிறுவனைச் சுட்டி
சீடரிடம் சொன்னார்
இந்தச் சிறுவனைப் போல
தன்னைத் தாழ்த்துபவன்
விண்ணரசில் பெரியவனாய்
உயர்த்தப்படுவான்.

உங்களில்
பெரியவனாக இருக்க விரும்புகிறவன்
பணியாளனாய் பணியாற்றட்டும்,
ஆழ்கடல் ஆரவாரிப்பதில்லை
கரைகளில் மட்டுமே
அலைகள் அலையும்.

உங்களில் தலைவனாக
இருக்க விரும்புபவன்,
தொண்டனாய் முதலில்
தொண்டாற்றல் வேண்டும்.

தற்பெருமை கொள்பவன்
தகர்க்கப் படுவான்,
தாழ்ச்சி உள்ளவன்
தலைவனாக்கப்படுவான்.

மனுமகன் வந்தது
கிரீடம் சூட்டி அரசாள அல்ல,
மனுக்குலத்தை
தீய சிந்தனைகளிலிருந்து
கரையேற்றவும்,
அதற்காக சிலுவையில்
உயிர் அறையப்படவும் தான்.

பூமியின் பொருட்களில்
பற்றுக் கொள்வதை விட்டு விடுங்கள்,
ஆவியின் அருட் கொடையில்
பற்றிக் கொள்ளுங்கள்.
என்றார்.

 

ஒன்றா, தொன்னூற்று ஒன்பதா ?

 

மேய்ப்பனுக்குச் சொந்தமாய்
நூறு ஆடுகள்
இருந்தாலும்,

மேய்ச்சல் முடித்துத் திரும்புகையில்
ஆடு ஒன்று
திரும்பும் வழியில்
தொலைந்து போனால்,

ஒன்று போனால்
ஒன்றும் நேராதென்று
மெளனமாய் இருப்பதில்லை
மேய்ப்பன்.

மிச்ச
தொன்னூற்றொன்பது ஆடுகளையும்
மலையில் விட்டு விட்டு,
தொலைந்த ஆட்டைத்
தேடுவான்.

கண்டெடுத்து கட்டியணைப்பான்
ஆனந்த சத்தமிட்டு
முகம் தொட்டு முத்தமிட்டு
கூட்டத்தோடு கொண்டு சேர்ப்பான்.

அவனே உண்மை ஆயன்.

தவறிப்போகாத
மிச்ச ஆடுகளோடு
முடிந்துவிடுவதில்லை
நல்ல ஆயனின் பணி.
மேய்ச்சல் நிலத்தில்
தவறிப்போன சின்ன ஆட்டை
தேடிப் பிடித்து
தோள் தடவும் வரை அது தொடரும்.

மனுமகனும் அவ்வாறே,
யாரும் அழிவுறுதல்
ஆண்டவன் ஆசையல்ல.
மீட்பு என்பது
சிலருக்கு வழங்கப்பட வேண்டிய
சலுகைச் சலவை அல்ல.
 

திருந்துவதற்காய் திருத்து

 

யாரேனும் தவறிழைத்தால்,
அன்பான வார்த்தையில்
அவனை நீ
திருத்து.

மீண்டும் மீளாமல்
தவறான வழியில் அவன்
தவறாமல் சென்றால்,

இன்னும் இருவரை அழைத்து
அறிவுரை அளி.

பின்னும்
அவன் தடம்
தவறான இடம் எனில்,
திருச்சபைக்குச் சொல்.

திருச்சபைக்கும் மறுப்பவனை
ஓரமாய் ஒதுக்கிவிடு.
பொதுத் தீர்வையில்
அவனுக்கு
மன்னிப்பு மறுக்கப்படும்.

மண்ணுலகில்
ஒரு வேண்டுதலுக்காய்
மனமொத்து
சில இதயங்கள் செபித்தால்
அது வழங்கப்படும்.

பிறருக்காக வாழும்
வாழ்வின் அடித்தளம்
இயேசுவின் போதனையில்
புதுத் தளம்.

 

எத்தனை முறை மன்னிப்பது முறை ?

 

எத்தனை முறை மன்னிப்பது ?
ஏழு முறையா ?
சீடன் ஒருவன்
கேள்வியை வைத்தான்.

ஏழு முறை என்றல்ல,
எழுபது முறை ஏழு முறை
என்றார் இயேசு.

எண்க்கை பாராமல்
மன்னிப்பு வழங்கு என்பதை
மறைமுகமாய்
வெளிப்படுத்தும் வாசகம் அது.

ஏழுமுறை தான்
மன்னிக்க வேண்டும் எனும்
பழைய சட்டங்களை இயேசு
தணிக்கைக்குள் தள்ளுகிறார்
எண்ணிக்கைக்குள்
ஏன்
மன்னிப்பை அடக்க வேண்டும்
திருந்தும் வரை மன்னிப்போம் என
திருத்தம் செய்கிறார்.

தொடர் மன்னிப்பின் பலன்
சில இதயம்  சரியாதல் தான்.
அதுவே
மன்னிப்பின் மையம்.
 

விலக்குதல் விலக்கு

 

மனைவியை விலக்குதல்
முறையா ?
மனுமகனிடம் கேள்வி ஒன்று
கொடுக்கப்பட்டது.

ஆதாம் ஏவாள்
காலத்து ஆரம்பம்
ஆண் பெண் இணைந்து வாழும்
உன்னதம்.

ஆணும் பெண்ணுமாய்
இணைந்து வாழ்தல்
இறைவனின் விருப்பம்
மனைவியோடு வாழ்தலிலே தான்
மனிதனுக்கு மகத்துவம்.

இரு மனங்கள்
ஒரு உயிரில் உற்பத்தியாதல்
தான்
தாம்பத்யம்.

விவாகரத்து அளிப்பது
விண்ணகத்துக்கு எதிரான குற்றம்,
நடத்தை கெட்ட பெண் தவிர
மற்றவரை
விலக்குபவன்
விபச்சாரப் பாவம் செய்கிறான்
விளங்கிக் கொள்ளுங்கள்.

பிரிவதற்குக் காரணங்களை
சட்டங்களின்
மூலை முடுக்குகளில் தேடாமல்,
வாழ்வதற்கான காரணங்களை
மனதின்
மூலை முடுக்குகளிலும்
நிரப்பி வைத்தலே
இயேசுவின் அறிவுரையின் சாரம்.

 

பகிர்ந்தளி, அதுவே மீட்பின் வழி

 

பணக்காரன் ஒருவன்
பரமனிடம் வந்தான்.

மீட்பின் வாசலுக்கு
நான் வர வேண்டும்,
என் கடமை என்னவென்று
கருணையில் சொல்வீர்.

இயேசு சொன்னார்
கட்டளைகளைக் கடைபிடி,
கொலை, விபச்சாரம், களவு, போன்றவை
செய்யாதே
உன்னைப்போல் அயலானை
அன்பு செய்.

இவையெல்லாம்
என்
சிறுவயதுப் பழக்கம்,
இம்மியளவும் நான் தவறியதில்லை,
வேறென்ன செய்யவேண்டும் ?
கேள்வி யில் மறுபடி
தொங்கினான் அவன்.

இயேசு அவனைப் பார்த்தார்.
நல்லவனுக்குரிய
ரேகைகள்
அவன் விழிகளில் நீந்தின.

ஒன்று உன்னிடம்
குறைவெனக் காண்கிறேன்.

உன்
சொத்துக்களை விற்று
ஏழைகளுக்குக் கொடு.

ஒருவனுடைய வாசலில்
பட்டினியின் பாயும்,
இன்னொருவனுடைய வீட்டில்
பட்டாபிஷேகமும் ஆகாது.

அயலானை
உன்னைப்போல் நேசி.

பணக்காரன்
விழிகள் சோர்ந்துபோய்
வெளியேறினான்.
அவனுக்குச்
சொந்தமாய் ஏராளம்
சொத்திருந்தது.

 

ஊசிக் காதுக்குள் ஒட்டகம்
 

உறுதியாக சொல்கிறேன்,
பணக்காரன்
விண்ணரசு வருவது
மிக மிக அரிதென்பதை
அகத்தில் எழுதுங்கள்.

பணக்காரனின் விண்ணகப்
பயணத்தை விட,
ஊசிக் காதுக்குள்
ஒட்டகம் நுழைவது எளிது.

ஒருவன்,
அயலானின் வியர்வை துடைக்க
விருப்பப்படால்,
பகிர்தலில் மிளிர்வான்,
பகிர்தலின் புதல்வர்கள்
பணக்காரர் ஆவதில்லை.
இதுவே இக்கருத்தின்
உட்கரு.

சமத்துவச் சிந்தனைகளை
அகத்தினில் கொள்வதே
ஆண்டவன் அறிவுரை.

 *
எனக்காய் நீங்கள்
இழப்பவை எல்லாம்,
தந்தையால் உங்களுக்கு
தவறாமல் தரப்படும்

  
சொல்லுக்கு விலை இல்லை

 

கேள்வியில் விடையை
கிளற வைப்பார் இயேசு.

ஒருவனுக்கு
பிள்ளைகள் இருவர் இருந்தனர்.

தோட்டத்தில் கொஞ்சம்
வியர்வைப் பணி
மிச்சமிருந்தது.
மகன்களை போகச் சொன்னார்
தந்தை.

முதலானவன் முரண்டுபிடித்தான்.
முடியாது என்பதே
என் முடிவு என்று
கண்களை மூடினான்.

பின் மனம் திறந்தான்
தந்தை சொல் தட்டிய
தவறுணர்ந்தான்
தோட்டம் நோக்கி
ஓட்டம் கொண்டான்.

இரண்டாமவனிடமும்
தந்தை சென்றார்.
விழித்திருந்த மகனோ
இதோ என்றான்
ஆனால்
வார்த்தை உறுதிமொழியை
நிறைவேற்றத் தவறினான்.

இருவரில் யார்
இறைவனுக்கு ஏற்புடையவர் ?
இயேசுவின் கேள்வி
இலக்கைத் தொட்டது.

முதலானவன் என்ற பதில்
முண்டியடித்து முன் வந்தது.

இயேசு
புன்முறுவல் பூத்தார்.,
நீங்கள் சொன்னது சரியே.
செயல்களே முக்கியம்
வார்த்தைகள் எல்லாம்
செயலில்லையேல் செத்தவையே.

 
இரு வாழ்வும் தேவையே

 

செசாருக்கு வரிசெலுத்த வேண்டுமா ?
இயேசுவைப்
பொறிவைத்துப்
பிடிக்கப் பார்த்தது
பரிகாசப் பரிசேயர் கூட்டம்.

இயேசு
அவர்கள் உள்ளக் கிடங்கை
அகக்கண்ணால் ஆராய்ந்தார்.

வேண்டாம் என்றால்,
அரசனைப் பழிக்கிறான் என்று
நீண்ட வழக்கிடும்.

வேண்டும் என்றால்,
மனுமகனின் பணி
மண்ணுலகப் பதானோ என்று
காது வரை கேலி நீளும்.

இயேசு கேட்டார்,
உங்கள் நாணயத்தில்
பொறிக்கப்பட்டிருப்பது யார் பெயர் ?

செசார் என்றனர்,
செருக்குற்றவர்.

இயேசு இரண்டே வார்த்தை
இயம்பினார்.
செசாருக்குரியதை செசாருக்கும்
கடவுளுக்குரியதை கடவுளுக்கும்
கையளியுங்கள்.

கூட்டம்
திடுக்கிடலோடு திரும்பிச் சென்றது

 

மறு உலகில் யாருக்கு மனைவி ?

 

சதுசேயர் சிலர்
சதிக்கேள்வி கேட்டனர்,
இயேசுவை வார்த்தை வலையில்
வீழ்த்த எண்ணி.

ஒருத்தி மணமாகி
மகப்பேறுக்கு முன்பே
கணவன் மரணமடந்தால்
அவன் சகோதரன்
அவளைக்
கைப்பிடித்தல் மோயிசன் சட்டம்.

ஒருத்தி,
ஏழு சகோதரரை
ஒருவர் பின் ஒருவராய் மணந்து
எழுவரையும் இழக்கிறாள்.
பின்
உயிர்த்தெழுதலில் அவள் யார் மனைவி ?

அசத்தல் கேள்வியைக்
கேட்டதாய்
ஆனந்தத்தை
அசை போட்டது கூட்டம்.

இயேசு சொன்னார்,
சின்ன விசுவாசக் காரர்களே,
வேடதாரிகளே கேளுங்கள்.

உங்கள் அறியாமைக் கண்கள்
மூட மறுக்கின்றன,
வெளிச்சம் உங்கள்
ஊனக்கண்ணுக்கு உள்ளே வர
மறுக்கிறது.

விண்ணரசு,
சமகால வாழ்வின் நகல் அல்ல,
அங்கே
பெண் கொள்வதும் கொடுப்பதும் இல்லை.

எல்லோரும்
தேவதூதப் பிறவிகளே.

அசை போட்ட கூட்டம்
வசை கேட்டு விலகியது.

 

பெரிய கட்டளை

 

சதுசேயரின் சதிக்கேள்வி
சிதைந்ததும்,
பரிசேயரின் ஒரு கேள்வி
மிதந்தது.

திருச்சட்டத்தின் மிகப் பெரிய
கட்டளை என்ன ?
காதுகளைச் செதுக்கி
காத்திருந்தது கூட்டம்.

இயேசு சொன்னார்,
கடுகளவும் குறைவின்றி
முழு மனசோடும் ஆன்மாவோடும்
ஆண்டவனை அன்பு செய்.

உன் மீது
நீ காட்டும் அதே அன்பை
உன்
அயலான் மீதும் வை.

இவ்விரண்டு கட்டளைகளுமே
அத்தனை சட்டங்களுக்குமான
அச்சாணி.

 
விலங்குகளை விலக்குங்கள்
 

யூதர்களைப் பார்த்து
இயேசு சொன்னார்.
நீங்கள்
அடிமைகளாய் இருக்கிறீர்கள்
விலங்குடைக்காவிடில்
நீங்கள்
விலங்குகளே.

யூதர்கள் கொதித்தனர்.
நாங்கள் அடிமைகளா ?

ஆபிரகாம் முதல்
நாங்கள்
ஆணையிடும் வம்சம்
அடிமையின் வாரிசல்ல
என்றார்கள்.

இயேசு சிரித்தார்.
பாவம் செய்யும் எவனும்
பாவத்துக்கு அடிமை !

விட்டொழியுங்கள்
இல்லையேல்
கெட்டழிவீர்கள் என்றார்.

 
தந்தையை நான் அறிவேன்
 

கடவுளைச் சார்ந்தவன்
கடவுளுக்குச் செவிகொடுப்பான்,
நீங்கள்
சார மறுக்கிறீர்கள்
சாரமற்றுப் போகிறீர்கள்
என்றார் இயேசு.

யூதர்கள்
குதித்தனர்
கோபத்தில் கொதித்தனர்.

வானத்தில் மிதக்கும்
நினைவுகளோடு வாழ்ந்தவர்கள்
பாதாளத்தில்
எறியப்பட்டதால் பதறினர்.

நீ பேய் பிடித்துப் பிதற்றுகிறாய்,
ஆதாரம் இல்லாமல்
சதிராடுகிறாய்.

உன் மனமெனும்
கூடாரம்,
சேதாரம் ஆகிவிட்டது.
என்றனர்.

இயேசு சொன்னார்,
நான்
எனக்குப் பெருமை தேடுபவனல்ல,
உங்கள்
விசாரணைகளுக்கு
விளக்கமளிக்கத் தேவையில்லை.

எனக்குப் பெருமை தருவது
தந்தையின் அருகாமையும்,
திருந்தும் மக்களின்
இருதயங்களும் தான்.

என்
மானிட வயது மிகச் சிறிதே.

ஆனால்
ஆபிரகாமுக்கு முன்பே
நான் இருக்கிறேன்.

வார்த்தையாயும்
இல்லாமையிலும் இருந்தேன்.

நான் தந்தையை அறிவேன்,
அவருக்காய் தருவதற்கே
நான்
வருவிக்கப் பட்டேன்.

என் உயிரைக் கூட
அவருக்கே தருவேன்
அவர்
அதை எனக்குத் திரும்பத் தருவார்.

என் நாவு
பொய் சொல்வதோ
எனக்குள்
பேய் செல்வதோ சாத்தியமில்லை.
என்றார்.

வார்த்தைகளைப் பொறுக்க
மறுத்து,
கற்களை மட்டுமே
எடுக்கப் பழகிய கூட்டம்
இயேசுவை நோக்கி
கற்களை எடுத்தது.

காற்றை எறிய
யாரால் கூடும்,
கர்த்தரைத் தாக்க
கற்களால் கூடுமோ ?

இயேசு
விலகிச் சென்றார்.
இடத்தை விட்டு
இதயங்களை விட்டல்ல.

 

எதிராய் இருப்பவனே எதிராளி

 
என் வார்த்தைகளை
நம்புங்கள்,
இல்லையேல் செயல்களையேனும்
நம்புங்கள்.

ஏன் இன்னும்
குருடாய் தான் இருப்பேனெனெ
முரட்டுப் பிடிவாதம்
பிடிக்கிறீர்கள் ?
முரடாய் தான் இருப்பேனென
குருட்டுப் பிடிவாதம்
பிடிக்கிறீர்கள் ?

0

இயேசுவின் அற்புதங்கள்
தலைமைக் குருக்களின்
நிலைமை தகர்த்தது.
பரிசேயரைப் பார்த்து
பரிகாசம் செய்தது.

அடக்கி விடு
இல்லையேல் அழித்து விடு
வட்டமிட்டது கூட்டம்.

இயேசுவை
வளைப்பது இயலாதென்பதால்
உடைத்திட திட்டமிட்டது.

அணையை உடைப்பது போல
கடலை உடைக்கலாமென
கங்கணம் கட்டியது .

கடலோ
சுயமாய் வற்றிப் போக
சம்மதித்தது
உள்ளுக்குள் கிடக்கும் வளங்களை
வெளிக்காட்டும் விதமாக.
 

இறைமகனென்றால் இறப்பில்லையே

 

மக்கள் கூட்டம்
இயேசுவைப் பார்த்து,

மெசியாவானால்
நிலைப்பார் என்பதே
நிலைப்பாடு.

மரணங்களைக் கடந்தவரே
மனுமகனாக முடியும்.
கையளவு நீர்
கடலென்ற பெயர் பெறாது.

நீர்
இறப்பேன் என்பதும்
உயர்த்தப் படுவேன் என்பதும்
ஆண்டவனுக்கான
அடையாளங்கள் அல்லவே ?
என்றது.

இயேசு சொன்னார்,
ஒளி
சிலகாலமே உங்களோடு இருக்கும்.
இருக்கும் போதே
பெற்றுக் கொள்ளுங்கள்.

இரவில் ஒளி வற்றிப் போகும்
வெளிச்சம் இருக்கும் போதே
வந்து
மனசுக்குள் ஊற்றிப் போங்கள்.

இற்றுப் போன மனசுக்காரர்கள்
தோற்றுப் போவார்கள்.

வாருங்கள்
ஒளியை பெற்றுக் கொள்ளுங்கள்.
வழியை
கற்றுக் கொள்ளுங்கள்.
என்றார்.

 

வல்லமையின் பிறப்பிடம்

 
இயேசுவின்
நோய்தீர்க்கும் செயல்களால்
காய்ச்சல் கண்ட
தலைமைக் கூட்டம்
இயேசுவை அணுகிக் கேட்டது.

எந்த அதிகாரத்தால்
இதைச் செய்கிறீர் ?

நம்பிக்கை இல்லா
அவர்களிடம்
விளக்கம் கூற விரும்பாமல்
இயேசு,
கேள்விக்குப் பதிலாய்
இன்னோர் கேள்வியை வைத்தார்.

யோவான்
திருமுழுக்கு அளித்தது
எந்த வல்லமையால் ?
விண்ணகமா ?
மண்ணகமா என்றார்.

கூட்டம் கேள்வியில்
மறைந்திருந்த
கண்ணிவெடியைக்
கண்டு கொண்டது.

விண்ணகம் என்போமெனில்
ஏன்
யோவான் விளம்பிய
விண்ணக வார்த்தையை
நம்பவில்லை என்ற கேள்வி வரும்.

மண்ணகம் என்றால்
நம்பிக் கொண்டிருக்கும்
மக்கள் கூட்டம்
கோபத்தில் கல் எறியும்.

சொல்லைக் கொடுத்து
கல்லை வாங்க
விருப்பப் படாத,

இருதலைக் கொள்ளி எறும்பாபென
உஷ்ணத்தில்
உழன்ற தலைவர்கள்
‘தெரியாது’ என்று தப்பித்தனர்.

இயேசு
எதிர்பார்த்த பதிலையே
எதிர்த்தவர்கள் கொடுத்தனர்.

அப்படியே,
இதுவும் உங்களுக்கு
தெரிவிக்கப் படாது என்றார்
இயேசு.

 
பாவமில்லையேல் கல் எறி
 

ஆலய வாசலில் ஒருமுறை
அலையாய் அலையும்
ஆட்களின் கூட்டம்.

விபச்சாரத் தவறுக்காய்
தீர்ப்பிடலின் திடுக்கிடலில்
பெண்ணொருத்தி
சபைநடுவில்.

பரிசேயரும்,
மறைநூல் வல்லுனரும்
இயேசுவை சோதிக்க
இக்கட்டாய் கேட்டனர்.

நீர் மதிக்கும் மோயீசன்
விபச்சாரக் குற்றம்
கல்லடி மரணத்துக்கானதென்று
கட்டளையிட்டார்.
நீர்
என்ன சொல்கிறீர்.

மோயிசனையே மறுதலிப்பீரா
இல்லை
இவளை
கல்லெறிந்து கொல்வதை
வழிமொழிவீரா ?

பெண்ணோ
காற்றில் அலையும்
முகிலாய்
திகில் அலையும் கண்களோடு
நடுங்கி நின்றாள்.

இயேசு
தலை தாழ்த்தி
தரையில் விரலால்
வரையத் துவங்கினார்

கேள்விகள்
மீண்டும் மீண்டும்
கர்த்தரின் காதுக்குள்
கொட்டப்பட்டது.

இமை நிமிர்த்திய
இயேசு,
வெறியரின் வேகம் பார்த்தார்.

எல்லோருடைய கைகளிலும்
கற்கள்.
கல்லெறிந்தால் அவளுக்குக்
கல்லறைதான்.

உங்களுள்
பாவமில்லாத கரம்
முதல் கல்லை
இப்பெண்மீது எறியட்டும்.

சொல்லியவர் மீண்டும்
தரையில் எழுதத் துவங்கினார்

ஆணிவேர் வெட்டுண்ட
அவஸ்தையில்,
கோடரி வீச்சில்
நிலை குலைந்த நாணல்
மண் மோதும் வேகத்தில்,

அவர்கள்
ஒருவர் பின் ஒருவராய்
கற்களை போட்டு விட்டு
கடந்து சென்றனர்.

தனிமையில் இருந்த பெண்ணிடம்
பரமன் கேட்டார்,
மாதே
யாருமே தீர்ப்பிடவில்லையா?

இல்லை என்றாள்
மரண வாசல் வரை சென்று
மறுபடியும்
உயிர் கொண்டவள்.

நானும் தீர்ப்பிடேன்.

பிறப்பின் சிறப்பு
இறப்பிலும் இருக்கட்டும்.
தவறுதல் தவிர்த்து
திருந்துதலே தெய்வீகம்.

மன்னிப்பு
தவறுகளுக்கான
அனுமதிச் சீட்டல்ல.
இனிமேல் நீ பாவம் செய்யாதே.

பாடம் கற்றுக் கொண்ட
பெண்
பாதம் பணிந்தாள்.

 

உள்ளம் வெளுக்கட்டும்

 

நல்லவற்றின்
கருவூலத்தில்
தீயவை இடப்படுவதில்லை,
தீயவற்றின்
தோட்டத்தில்
நல்லவை நடப்படுவதுமில்லை.

உள்ளத்தில் உள்ளவை
நல்லவை எனில்,
எடுக்கப்படுபவையும் நல்லவையாகும்.

உன் வார்த்தைகள்
உள் மனசின் சத்தங்கள்.

உன் வார்த்தைகள்
உன்னை வாழ்த்தும் ஒலிகள்,
அல்லது
உன்னை வீழ்த்தும் பொறிகள்.

வார்த்தைகளை அன்பில்
வார்த்தெடு.

உன்
வார்த்தைகளின் நெறியில்
நீ
தீர்ப்பிடப்படலாம்.
இயேசு சொன்னார்.

உண்மை தான்.
தாழம்பூக் கூடையில்
வாழைப்பூ வாசம் வருவதில்லையே.

வாசம்
வாசம் செய்யும் மனம் தானே
நேசர் நம்மிடம் வேண்டுவது.

 
உண்மையான செபம்

 

இருவர் ஆலயம் சென்று
ஆண்டவனிடம் செபித்தனர்.
ஒருவன்
பரிசுத்தனாய் பறைசாற்றப்படும்
பரிசேயன்
ஒருவன் பாவியென்று அழைக்கப்படும்
ஆயக்காரன்

பரிசேயன் செபித்தான்.
ஆலய பீடத்தைத்
தொடும் தூரத்தில் நின்று
அலட்சியமாய் செபித்தான்.

அவனுடைய செபம்
அகந்தையின்
அறிவிப்புக் கூட்டமாய்
கர்வத்தின்
திருவிழாவாய் தெரிந்தது.

ஆண்டவரே
நான் நல்லவனாய் இருப்பதற்கு
நன்றி.

நோன்புகளில் நான்
நாள் தவறியதில்லை,
காணிக்கையில் நான்
கணக்கு தவறியதில்லை.

ஆயக்காரனைப் போல
பாவியாய் என்னை
படைக்காததற்கு நன்றி.

ஆயக்காரன் செபித்தான்
ஆலயத்துள் நுழையாமல்
முற்றத்தில் நின்றே
குற்றத்தை ஒப்புக்கொண்டு
தலைகுனிந்தான்.

மார்பில் அடித்து
மண்டியிட்டான்.

ஆண்டவரே
நான் பாவி
என்மேல் இரக்கம் வையும்.

இருவரின் செபத்தில்
இந்த
இருவரி செபமே
இறைவனுக்கு ஏற்புடையதாயிற்று.

தன்னை
புனிதனென்று சொல்லிக் கொள்பவன்
பித்தனாய் இருக்கிறான்,
பாவி என்று ஒத்துக் கொள்பவன்
மனிதனாய் பிறக்கிறான்.

விளம்பரங்களின் விளக்கு வெளிச்சம்
இதயத்தை இன்னும்
இருட்டாக்கிவிடும்.
தாழ்ச்சியின் பீடத்தில் மட்டுமே
தலைசாயுங்கள்
 

புறம் அல்ல அகமே அவசியம்
 

இயேசுவின் மேல்,
இன்னொரு குற்றச்சாட்டு
எறியப்பட்டது.

உம் சீடர்கள்,
உணவு உண்ணும்போது
கை கழுவுவதில்லை.
இது
பரம்பரைச் சட்டம்
மீறுவோர் எல்லாம் மட்டம்.

அடையாளங்களால்
அடையாளம் காட்டப்பட்டவர்கள்
ஆண்டவனிடம்
படபடத்தனர்.

இயேசு சொன்னார்,
ஆண்டவன் கட்டளையை
நீங்கள் தான்
அவமதிக்கிறீர்கள்.

தாய் தந்தையரை
போற்றச் சொன்னது
கடவுளின் வேதம்
நீங்களோ
மாற்றுக் கொள்கை காட்டுகிறீர்கள்.

என் சொத்தெல்லாம் ஆண்டவனுக்கு
என்று
நேர்ச்சி கொடுத்தால்,
நோயில் அமிழ்ந்து
பெற்றோர்
பாயில் படுத்தாலும்,
உயிர் விட்டாலும் பாவமில்லை
என்கிறீர்கள்.

உண்மை அன்புக்கு முன்
உங்கள் சட்டங்கள் செல்லாது.

நீங்கள்,
தவறான வரைபடம் வைத்துக் கொண்டு
இல்லாத தேசம்
தேடிக்கொண்டிருக்கிறீர்கள்.

வெளிவேட வாழ்க்கைக்காரர்களே
உங்கள்
உதடுகளுக்கும்
உள்ளத்துக்குமிடையே,
ஏன் இத்தனை தூரம் ?

குருடனுக்கு வழிகாட்டும்
குருடனாய் இருக்கிறீர்கள்
நீங்கள்.
உங்கள் சட்டங்களுக்கோ
கண்களே இல்லை

அன்பே முக்கியம்.

மனிதனுள் செல்வது
மனிதனை மாசுபடுத்தாது.
உள்ளத்திலிருந்து
புறப்படும் ஊனமான உண்மைகளே
அவனை
மாசு படுத்தி அழிவில் தள்ளும்.

களைய வேண்டிய
களவு,
போக்க வேண்டிய
பேராசை,
தீர்க்க வேண்டிய
தீச்செயல்,
விலக வேண்டிய
வஞ்சகம்,
விலக்க வேண்டிய
விபச்சாரம்,
செல்ல வேண்டிய
செருக்கு
மறைய வேண்டிய
மதிகேடு

பொல்லாத பொறாமை
இழுக்கு தரும் பழிப்புரை
எல்லாமே
உள்ளிருந்து வெளிவந்து
மனிதனை
தீயவனாக்கி பழிவாங்கும்.

உள் செல்லும் உணவோ
செரிமானம் ஆகி மறையும்.

கரங்களை அல்ல
மனங்களைக் கழுவுங்கள்,
அழுக்கு
உள்ளங்கையில் உள்ளதல்ல
உள்ளங்களில் உள்ளது.

 

நான் யார் அறிவீர்களா ?

 நான் யாரென்று
மக்கள் சொல்கிறார்கள் ?
ஒரு பொழுதில்
இயேசு வினவினார்.

போதகர் என்கிறார்கள்
பலர்,
தீர்க்கத்தரிசி என்கிறார்கள்
சிலர்
சொன்னார்கள் சீடர்கள்.

நீங்கள் ?
கேள்வி பிறந்தது இயேசுவிடமிருந்து.

நீர் மெசியா,
கடவுளின் மகன்.
வினாடிக்கும் குறைவான நேரத்தில்
விடைசொன்னார் சீமோன்.

இயேசு அகமகிழ்ந்தார்
அவரை
ஆரத் தழுவினார்.

சீமோனே,
உன்னில்
நான் பெருமை கொள்கிறேன்,
உன் விசுவாசத்தின் விழுதுகளில்
என்
திருச்சபையைக் கட்டுவேன்.

உன் பெயர் இனிமேல்
பாறை.
உன்மேல் கட்டப்படுபவை
அஸ்திவாரம் இல்லாமல்
அழிக்கப்படமாட்டாது.

வானகத்தின்
திறவுகோல்கள் இனிமேல்
உன் விரல்களுக்கு
வழங்கப்படும்.

நீ,
மண்ணகத்தில் கட்டுபவை
விண்ணகத்தில் உனக்காய்
கட்டப்படும்.

இங்கே நீ
அவிழ்ப்பவை எல்லாம்
விண்ணகத்திலும் அவிழ்க்கப்படும்.

இயேசுவின் வலிமை வார்த்தைகள்
சீமோனுக்கு அளிக்கப்பட்டது.
திருச்சபையின்
வாசல் திறக்கும் வல்லமை
சீமோனுக்கு இங்ஙனம்
சொந்தமானது.

 சுயபுராணம் செல்வதில்லை

 

நீர் இறைமகனா
கேட்டது கூட்டம்.

அதெப்படிச் சாத்தியம் ?
என்னைப் பற்றி
நானே
சான்று பகர்தல் ?

நான் சுயபுராணச்
சக்கரங்களில்,
சுழன்று கொண்டிருப்பவனல்ல,
என்
வருகைக்கான தயாரிப்பாளன்
யோவான்.

விண்மீன் நடக்க
மின்மினியின்
விளக்கொளி தேவையில்லை

கடலுக்குக்
கால்வாயின்
சாட்சிகள் தேவையில்லை.

ஆனாலும்,
உங்கள் விசுவாசத்துக்காய்
அவர் வார்த்தைகளை
கேளுங்கள். என்றார்.

யோவான்
விடியும் வரை விளக்கெரிப்பவர்,
நானோ
உலகம் முடியும் மட்டும்
உடனிருப்பவன்.

அவர்
சில காலத்துக்காய்
செலுத்தப்பட்டவர்,
நானோ
காலங்களையே செலுத்துபவன்.

நீங்கள்
துருவித் துருவித் தேடும்
மறைநூலுக்குள்
மறைந்திருக்கிறது எனக்கானச்
சான்று.

நீங்கள்
கேட்டிராத பார்த்திராத
வானகத் தந்தையிடமிருந்து
வருகிறது
எனக்கான சான்று.

மோசே என்னைப் பற்றியே
பேசினார்.
யோவான் என்னைப் பற்றியே
பேசுகிறார்.
நீங்களோ
மரத்தைப் பாராட்டி விட்டு
நிலத்தை நிராகரிக்கிறீர்கள்.

மழையில் மகிழ்ந்து விட்டு
வானத்தை விரட்டுகிறீர்கள்.

நம்புங்கள்
என்னை நம்புபவன்
மீட்படைவான்.
மறுப்பவன் மீட்படையான்.
என்றார்.

மெய்யைப் புறக்கணிக்கும்
கூட்டம்,
பேய் பிடித்திருப்பதாய்
பிதற்றியது.

மெய் மெல்ல
புன்னகைத்து நகர்ந்தது.

 

பாதத்தில் பூசப்பட்ட பாசம்

 

பரிமளத் தைலத்தை,
இயேசுவின் பாதத்தில்
பூசினாள் பெண்ணொருத்தி.

இயேசுவின்
பொதுநலப் போதனைகளை
புரிந்து கொண்டிருந்த
சீடர்கள் அவளிடம்
இதை விற்று ஏழைகளுக்கு
அளித்திருக்கலாம்,
இதன் விலை ஏராளம் என்றனர்.

இயேசுவோ,
வேறு விளக்கம் வைத்திருந்தார்.

ஏழைகள் உங்களோடு
என்றும் உள்ளனர்.

இது,
என் சாவுக்கான ஓர்
முன்னுரையே.
அவளை தடுக்கவேண்டாம்
என்றார்.