நிகழ்வுகள்
யோவான் கொலையாகிறார்
ஏரோது மன்னன்
பிறர் மனை நோக்கிய
பாவத்தில் விழுந்தான்.
அவன் சகோதரன் மனைவி
ஏரோதியாளை,
மோகத்தின் வேகத்தால்
தன்
திருட்டு உறவில் திணித்திருந்தான்.
செய்தி அறிந்த யோவான்
மன்னனிடம் வந்தார்.
முதுகு நிமிர்த்த
மக்கள் மறுக்கும்
மன்னனின் அரியணை முன்
எதிர்ப்புக் குரலை எறிந்தார்
நீ
அவளை வைத்திருக்கலாகாது.
இச்சையின்
கச்சையைக் கழற்றி எறி.
பறவையை
உரிய இடத்தில் பறக்கவிடு.
யோவானின் அறிவுரை
ஈட்டிகள்
ஏரோதின் அரச கர்வத்தைச்
சீண்டியது.
அவன் கோபத்தின் திரியைத்
தூண்டியது.
ஆனாலும்
மக்களின் மனதில்
யோவான் இருந்ததால்
மலைகளை விழுங்கி அமைதியாய்
கிடக்கும்
பெருங்கடலாய் பொறுமை காத்தான்.
யோவான் திரும்பினார்
ஏரோது திருந்தவில்லை.
ஏரோதின் பிறப்பு விழாவில்
ஏரோதியாள் மகளின் நாட்டிய விருந்து.
சபையின் நடுவிலே
வானவில் வளையங்களை
விரித்தாடும் மயிலென
அவள்
நாட்டியச் சுடரில் அனைவரும்
நனைந்தனர்.
மன்னனின் ஆனந்தம்
கொழுகொம்பின்றி
அலைந்தது.
சிறுமியே
எது வேண்டும் கேள்
அதைத் தருவேன் நான்
என்றுரைத்தான் ஏரோது.
சிறுமி ஓடினாள்
தாயை நாடினாள்.
காமத்தில் கட்டுண்ட ஏரோதியாள்
சிறுமியின் நாவில்
நஞ்சு விண்ணப்பத்தை நட்டாள்.
சிறுமி
மன்னனின் முன்னால் வந்தாள்.
“யோவானின் தலையை
கழுத்திலிருந்து கழற்றி
தட்டில் தர வேண்டும்”
என்றாள்.
ஏரோது
திடுக்கிட்டான்.
வண்ணத்துப் பூச்சியின்
வாயிலிருந்து
எரிமலை எண்ணங்கள்
சிதறுமென்று
எதிர்பார்த்திருக்கவில்லை அவன்.
வேறேதும் கேட்கிறாயா?
தடுமாறிய
ஏரோதின் குரலுக்கு முன்
சிதறாத குரலில்
சிறுமி மீண்டும் அதையே சொன்னாள்.
ஏரோது
சங்கடத்துடன் சம்மதித்தான்.
சிறையில் யோவான்
சிரச்சேதம் செய்யப்பட்டார்.
தலையாய பரிசாய்
தலையொன்று தட்டில் விழுந்தது.
ஏரோதியாளின் மனதில்
நிம்மதிப் பூக்கள்
மெல்ல மெல்ல முளைவிட்டன.
யோவான்
தலை இழந்ததில்
நீதி
நிலை குலைந்தது.
தந்தையின் இல்லம் சந்தையல்ல
ஓர் முறை
ஆலய வாயிலில்
சந்தடியால்
உந்தப்பட்டால் இயேசு.
வழியை அடைத்து நிற்கும்
வியாபாரிகள்.
விற்பனைக்கு
பலி புறாக்கள்,
சில்லறை மாற்றித் தரும்
சின்னக் கடைகள்,
ஆதாய நோக்கத்தில்
அணி அணியாய்
விற்பனைத் தளங்கள்.
சாந்தத்தின் மைந்தன்
கோபத்தின் கொழுந்தானார்.
வணக்கத்துக்குரிய
இடத்தில்
வணிகமா ?
அமைதியின் இருக்கையான
தந்தையின் இல்லத்தில்
கூச்சல் குழப்பங்களின்
கூட்டுக் குடும்பமா ?
சத்தியத்தின் மைந்தன்
சாட்டையை
சுழற்றினார்.
புறாக்களை
பறக்கவிட்டு,
கடைகளை உடைத்து,
வியாபாரிகளை விரட்டி,
ஆலயத்தின் உள்
அமைதியை அடைத்தார்.
இது
என் வீடு.
என் செப வீடு.
தந்தைக்கான இல்லம்
இது
சந்தைக்கானது இல்லை.
இது
கள்வர்கள் கலந்துரையாடும்
குருட்டுக் குகையல்ல.
விலகிப் போங்கள்.
வெள்ளை மேகம் ஒன்று
வினாடி நேரத்தில்
பெருமழையாய் கொட்டியதாய்,
தென்றல் ஒன்று
கல் தடுக்கி விழுந்ததால்
புயலாய் புறப்பட்டதாய்,
வண்ணத்துப் பூச்சியாய்,
மென்மையான புறாவாய் திரிந்த
இயேசுவின்,
நிறமாற்றம் நிகழ்ந்தது
அங்கே தான்.
சலவை செய்யவேண்டிய கற்கள்
அழுக்கை விற்கும் அவலம் கண்டதால்
இயேசு
சலவைக் கற்களையே சலவை செய்யத்
துவங்கினார் அங்கே.
அமைதியின் சின்னமான
இயேசு
ஆவேச சிங்கமான
நிகழ்ச்சி அது.
யூதர்களின் கோபம்
தொண்டைக்குகை தாண்டி
கர்ஜித்தது.
எந்த அதிகாரம் உனக்கு
இப்படிச் செய்ய,
உன் அதிகாரத்தின் அடையாளம்
என்ன சொல்.
இயேசு சொன்னார்,
இந்தக் கோயிலை இடித்து விடுங்கள்,
மூன்றே நாளில்
கட்டி விடுகிறேன்.
யூதர்கள் சிரித்தனர்,
நாப்பத்து ஆறு ஆண்டுகள்
வியர்வையும் குருதியும்
சரி விகிதத்தில் கலந்து கட்டிய
கோயில் இது,
மூன்று நாளில் கட்டிவிடும் மணல்வீடல்ல.
அவர்கள்
கற்களால் கட்டப்பட்ட கோயிலையே
கர்த்தர் சொன்னார் என்று
சொற்களால்
சொல்லிச் சென்றார்கள்,
இயேசுவோ,
தம் உடலெனும் கோயிலையே
உருவகமாய் சொன்னார்.
தேவையானதைத் தெரிந்துகொள்
இயேசுவின்
பயணத்தின் வழியில்
மார்த்தா எனும் பெண்ணொருத்தி
இயேசுவை
இல்லம் வரப் பணித்தாள்.
பிழையில்லா
அழைப்புக்கு இணங்கி
பரமனும் வந்தார்.
மார்த்தாவுக்கு
மரியா எனும் சகோதரி,
இயேசுவைக் கண்டதும்
கால்களருகே அமந்து
காதுகளை
கருத்துக்களுக்காய்
திறந்து வைத்திருந்தாள்.
மார்த்தாவோ,
பணிவிடைப் பராமரிப்புகளுக்காய்
அறைகளெங்கும்
அலைந்து கொண்டிருந்தாள்.
வந்தவர்களுக்கு
பந்தி வேண்டும்,
உணவுப் பணிகள்
முடிக்க வேண்டும்.
மார்த்தாவால் தனியே
எல்லாம் செய்ய
இயலாமல் போகவே
கர்த்தரை நோக்கி,
‘இயேசுவே மரியாவை என்
உதவிக்காய் அனுப்பும்’
என்றாள்.
இயேசுவோ,
மார்த்தா…
நீ
தேவையற்றவைகளுக்காய்
உன்
ஆற்றலை அழிக்கிறாய்.
தேவையானது ஒன்றே,
அதை
மரியா தெரிந்து கொண்டாள்.
அது
அவளிடமிருந்து எடுக்கப் படாது.
என்றார்.
கனிகள் வினியோகம்
நடக்கையில்
விறகுகளிடையே துயில்பவன்
வீணனே என்பதை
இருவரும் புரிந்தனர்.
மகிழுங்கள்..
சீடர்கள்
உற்சாகத்தின் பொற்சாடிகளாய்
முகம் மின்ன
அகம் துள்ள
இயேசுவிடம் வந்தார்கள்.
இயேசுவே,
இதோ
உம் பெயரால் நாங்கள்
புதுமைகள் செய்கிறோம்,
பேய்களைத் துரத்துகிறோம்
என
மகிழ்ந்தார்கள்.
கடல்களை நோக்கிய
பயணத்தில்
துளிகளைக் கண்டே சீடர்கள்
துள்ளுவதைக் கண்ட
இயேசு
புன்னகையுடன் பேசினார்.
வானிலிருந்து விழும்
மின்னல் போல
சாத்தான் மறையக் கண்டேன்.
மகிழுங்கள்
களிகூருங்கள்.
பேய்களை துரத்தும்
பெருமைக்காக அல்ல,
விண்ணகத்தில் பெறப்போகும்
வாழ்க்கைக்காக
என்றார்.
குள்ளமான சக்கேயு உயரமாகிறான்
யெரிக்கோ வழியே
இயேசு சென்றார்.
சக்கேயு எனும் ஓர் செல்வன்
உருவத்தில் ஒரு குள்ளன்
உள்ளத்தால் அவன் கள்ளன்.
இயேசுவைக் காண
சாலைகளெங்கும்
மனித கூட்டம்
மதில்களாய் நின்றது.
சக்கேயு சிந்தித்தான்.
அருகில் நின்ற
அத்தி மரத்தின்
உச்சியில் ஓர்
பறவையைப் போல பதுங்கினான்.
பரத்திலிருந்து வந்த
இயேசுவை
மரத்திலிருந்து பார்க்க
ஆயத்தமானான்.
இயேசு அவ்விடம் வந்து
நின்றார்.
மேல் நோக்கி அழைத்தார்.
சக்கேயு
இறங்கி வா.
இன்று
விருந்து எனக்கு
உன் வீட்டில் தான் என்றார்.
முண்டியடித்த கூட்டம்
முணுமுணுத்தது.
பாவியோடு பந்தியமர்வதே
இவர் பணியா என்றது.
சக்கேயு விருந்தளித்தான்.
விருந்தின் முடிவில்
மனம் திருந்தினான்.
வெளிச்சம் புகும் இடத்தில்
இருட்டு இருக்க முடிவதில்லையே.
கடவுள் நுழைந்ததும்
களவு வெளியேறி ஓடியது.
உள்ளத்தை வெற்றிடமாய்
விட்டு விட்டு
களஞ்சியத்தை நிறைத்த
பேதமையைப் புரிந்தான்.
பரிவு பற்றிப் பேசிய இயேசுவிடம்
பரிகாரம் பற்றிப் பேசினான்
சக்கேயு.
என்
சொத்தில் பாதியை
ஏழைக்காய் எழுதுகிறேன்.
பிறரை
ஏமாற்றிய பணத்தை
நான்கு மடங்காய் திருப்பிக் கொடுக்கிறேன்.
என்றான்.
உருவத்தில் குள்ளமான சக்கேயு
உருமாற்றத்தால் உயர்ந்தான்.
இயேசு மகிழ்ந்தார்.
இன்றே இவ்வீடு
இறை மீட்பில் இணைந்ததென்றார்.
இயேசு உருமாறுகிறார்
பேதுரு,யாக்கோபு,யோவான் இவர்களோடு
உயர்ந்த மலையின்
உச்சந்தலைக்கு
இயேசு சென்றார்.
அங்கே
உருமாற்றம் ஒன்று உருவானது,
ஓர் ஒளி வெள்ளம்
இயேசுவைச் சுற்றியது.
அவர் ஆடைகள்
தூய வெண்மையாய் பளிச்சிட்டன.
அங்கே அவர் முன்
மோசேவும், எலியாவும்
உயிரோடு வந்து
உரையாடிக்கொண்டிருந்தனர்.
வானம் திடீரென்று
வார்த்தை ஒன்றுக்கு வழிவிட்டது.
இவரே என் அன்பார்ந்த மகன்
இவருக்கு
செவிசாயுங்கள் என்ற குரல்
வானத்திலிருந்து எழுந்து
பூமியில் விழுந்தது.
சீடர்கள் மூவரும்
சிரசுக்குள் சில்லிட்டனர்.
உங்களுக்காய் நாங்கள்
கூடாரங்கள் எழுப்பவா ?
உதறிய சீடர்கள்
உளறினர்.
இது தேவ சந்திப்பு
என்
உயிர்த்தெழுதல் வரை
இந்தக் காட்சி
உங்களுள் புதைபட்டிருக்கட்டும்.
என்றார் இயேசு.
மோசேவும், எலியாவும்
மறைந்தனர்
சீடர்கள் உயிர் உறைந்தனர்.
குழந்தை இதயம் கொள்ளுங்கள்
குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு
பரமன் பாதம் வந்தனர் பலர்.
சீடர்கள் சிறுவர் மேல்
சினம் கொண்டனர்.
இயேசுவோ,
சிறுவர்களை தடுக்காதீர்,
விண்ணரசு இத்தகையோரதே
என்றார்.
மழலைகளின் மனதை
எடுத்துக் கொள்ளுங்கள்,
அவர்களின்
நிர்மல நேசத்தை
உடுத்துக் கொள்ளுங்கள்.
அதுவே
பெரியவனாவதற்கான முதல் படி.
குழந்தை மனதில்
ஓர்
வெள்ளை விண்ணகம் இருக்கிறது
அதை
குழந்தையாய் மாறுபவன்
கண்டு கொள்வான்
குருத்தோலை அங்கீகாரம்
யெருசலேம் வந்த இயேசு
கழுதை மேல் போர்வை போர்த்தி
அதில் அமர்ந்து
ஊருக்குள் ஊர்வலம் வந்தார்.
ராணி தேனீயை
பற்றிக் கொள்ளும் தேனீக்களாய்
பெருங்கூட்டம்
இயேசுவை சூழ்ந்து கொண்டது.
அவர்கள் கரங்களில்
ஒலிவ மரக் கிளைகள்
முளைத்திருந்தன.
குருத்தோலைகள் அசைந்தன
தாவீதின் மகனுக்கு ஓசான்னா
எனும்
வாழ்த்தொலிகள்
தூர வான்
மேகங்களைத் தட்டி எழுப்பின.
இயேசு,
தலைவராக அங்கே
அங்கீகரிக்கப் படுகிறார்,
மறை நூல் தலைவர்களில்
தலைகளுக்குள்,
பய பாம்புகள்
அடுக்கடுக்காய் புற்று கட்டின,
சட்ட வல்லுநர்களின்
அங்கிகளுக்குள்
சில
அவஸ்தைப் பூச்சிகள் நெளிந்தன.
சராசரி மக்களின்
குடிசைகளுக்குள்
இயேசு எனும் சிகரம்
சிரம் கொண்டது,
மாளிகையின் இருக்கைகள்
திடீர் ஜுரம் கண்டது.
இறைவாக்கினர்களின்
தீர்க்கத் தரிசனத்தை
உண்மை எனச் சொல்லும்
தீர்மான நிகழ்வாய்
அந்த உற்சாக ஊர்வலம் அமைந்தது.
பாதைகளின் மேல்
போர்வைகள் படர்த்தி,
கிளைகளை வெட்டி
தோரணம் கட்டி,
வழிமுழுதும் வாழ்த்துக்கள் ஒலிக்க
இயேசு
பரபரப்புப் பயணம் நடத்தினார்.
வெளிவேடக்காரர்களுக்கு எச்சரிக்கை
பிரித்தறியுங்கள்
இயேசு,
மக்கள் கூட்டத்திற்கு
வெளிவேடக்காரரை
வெளிச்சமாக்கினார்.
மறைநூல் அறிஞர்களும்,
பரிசேயர்களும் போதிப்பதை
கேளுங்கள்,
ஆனால் அவர்கள்
நடக்கும் பாதையில் நடக்கவேண்டாம்.
அவர்கள்
பரம்பரை பரம்பரையாய்
விளம்பரப் பிரியர்கள்.
அறிவுரைகள் சொல்ல மட்டுமே
ஆயத்தமாகும் அவர்கள்,
நேர் வழியில் நடப்பதற்கு
ஆர்வம் கொள்வதில்லை.
பாரங்களின் பழுவை
பாமரர் தோளில் சுமத்துகிறார்கள்.
ஆனால்
விரல்களால் கூட அதை
அசைக்க மறுக்கிறார்கள்.
வெளியே விளக்கெரித்து
இதயத்துள்
இருட்டு விற்பவர்கள் அவர்கள்.
வானகம் வரை
விளம்பரம் செய்துவிட்டு
வார்த்தைகளை நெய்கிறார்கள்,
செயல்களின் நகங்களால்
நன்மையின் கழுத்தைக் கொய்கிறார்கள்.
வேத வாக்கியங்களை
வரைந்த சீட்டுப் பட்டங்களை
சிரம் முதல் கால் விரல் வரை
அகலமாய் கட்டுகிறார்கள்.
ஆனால்
மனசுக்குள் அதை நட்டு வைப்பதில்லை.
பட்டாடைகளின் விட்டங்களை
அதிகப்படுத்தி,
பொதுவிடப் பெருமையை
விரும்பி நடக்கிறார்கள்.
ஏழைகளின் மிச்சத்தையும்
சுரண்டிச் சேர்த்துவிட்டு,
பார்வைக்கு
முச்சந்தியில் மறையுரைக்கிறார்கள்.
நீங்கள்,
ஆடைகளோடு சேர்த்து
ஆன்மாவையும் சலவை செய்யுங்கள்.
பெரியவனாகும் தகுதி,
பணியாளனாகப் பிரியப்படுபவனுக்கே.
உயர்த்தப்படும் உரிமை
தன்னை
தாழ்த்துகிறவனுக்கே.
வேஷங்களின் வால் பிடித்து
கோஷங்களில் கழிந்த காலங்கள்
போதும்,
இனிமேல்
மனசின் நிழல் மட்டும்
மண்ணில் விழ நடங்கள்.
வெளி வேடக்காரர்கள்
வெளியேற்றப்படுவார்கள்
என்றார்.
திருந்துங்கள்
இயேசு
வேஷதாரிகளை நோக்கி
ஏவுகணைகளை ஏவினார்.
வெளிவேடக்காரரே
உங்களுக்கு
அழிவு ஆரம்பமாகிவிட்டது.
விண்ணக வாசலுக்கான
வரவேற்புச் சீட்டு
உங்களுக்கு அளிக்கப்படாது.
நீங்கள்,
விண்ணகம் வருவதுமில்லை,
அதன் வாயிலில்
வருவோருக்காய் வழிவிடுவதுமில்லை.
ஒருவனை,
கடல், காடு கடந்து
மதத்தில் இணைக்கிறீர்கள்,
பின்
அவனுக்கு
நரகத்தின் நடுவே நிற்கவே
இடம் கொடுக்கிறீர்கள்.
மதக் கதவுகளுக்குள்
நுழைவதால் மட்டுமே
ஒருவன்
மதவாதி ஆகிவிடுவதில்லை.
ஆலயத்தின் மீதும்
ஆண்டவன் மீதும் ஆணையிட்டால்
மன்னிப்பும்,
பொன் மீதும், பொருள் மீதும்
ஆணையிட்டால் தண்டனையும்
தருகிறீர்கள்.
மேகத்தை விட பெரியது
வானம் அல்லவா ?
உங்கள் கலனில்
கடலை அடைக்க நினைப்பதேன் ?
பொருள் மீது காட்டும்
பேராசையின் ஆழம்,
அருள் தரும் ஆண்டவனிடம் காட்டுங்கள்.
மீட்பு,
பொன்னால் வருவதல்ல
மனுமகனால் வருவதே.
நீங்கள்,
இருட்டுக்கு மக்களை
இழுத்துச் செல்லும்,
குருட்டு வழிகாட்டிகள்.
காணிக்கையாய் காய்கறிகள்
கேட்கிறீர்கள்,
நீதி,
விசுவாசம்,
இரக்கம் இவற்றை
இறக்க விட்டு விடுகிறீர்கள்.
வயிற்றுக்கான வாழ்வை விட
வாழ்வுக்கான
இதயத்தை வாழவையுங்கள்.
உங்கள்,
தினசரி வாழ்வின் தேடல்களில்,
கொசுவை வடிகட்டி
ஒட்டகத்தை விழுங்குவதை
கட்டோ டு களையுங்கள்.
எப்போதுமே நீங்கள்,
கிண்ணத்தின் வெளிப்புறத்தை
வெள்ளையாக்கும்
பிள்ளைத்தனத்துள் உழல்கிறீர்கள்,
உள்ளுக்குள்
அழுக்கை அழகாய் மறைக்கிறீர்கள்.
நீங்கள்,
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்,
நினைவுச்சின்னங்கள்
அழகாய் இருந்தாலும்
உள்ளுக்குள் கிடப்பது
உளுத்துப் போன உடலும் எலும்புமே.
சுத்தம்,
சுற்றி இருப்பதை விட
உள்ளுக்குள் இருப்பதே
உன்னத வாழ்வு.
அடையாளங்கள் தேவையில்லை ஆதவனுக்கு
மறைநூல் அறிஞர்கள்
எழுந்து,
ஏதேனும் அடையாளம் காட்டும்
என்று
இயேசுவைக் கேட்டனர்.
இயேசுவின் பாதை முழுதும்
அடையாளச் சுவடுகள்
ஆழப் பதிந்திருந்தும்,
அந்தத் தலைமுறை
திருப்திப் படவில்லை.
இயேசு திரும்பினார்.
வானம் சிவந்திருந்தால்
கால நிலை நன்று என்பீர்கள்.
மந்தாரமாய் இருந்தால்
மழை வரும் இன்று என்பீர்கள்,
வானத்தின் மாற்றத்தை உணர்வீர்கள்
காலத்தின் மாற்றத்தை அறியீர்களா ?
வெறும்
அடையாள வாழ்க்கையில்
அடைந்து கிடந்தவர்களை
அர்த்த வாழ்க்கை வாழ
அழைப்பவரல்லவா இயேசு.
மூன்று நாட்கள்
மீனின் வயிற்றில் இருந்தார்
யோனா,
மனுமகனும்
மூன்று நாள் நிலத்தின் வயிற்றில்
இருப்பார்.
சாலமோனின்
வார்த்தைகளிலும்,
யோனாவின் செய்திகளிலும்
மனசின்
துரு விலக்கியவர்கள்
ஏராளம் பேர் இருக்கிறார்கள்.
மனுமகன்,
அவர்களை விடப் பெரியவர்.
ஒருவனின்,
இதயம் விட்டு வெளியேறும்
தீய ஆவி,
ஊரின் எல்லைகளெங்கும்
சுற்றி அலைந்து
தங்கும் இடம்
எங்கும் இல்லாமல்
பழைய இடத்துக்குத் திரும்பும்.
பழைய இடம்,
ஆளில்லாமல் சுத்தமாய் இருந்தால்,
இன்னும் ஏழு
பேய்களோடு வந்து
சத்தமாய் குடியேறி
பலமடங்கு பாதிப்பு தரும்.
உங்களுக்கு,
இதுவே நேரும்.
நீங்கள் உள்ளுக்குள் இருக்கும்
பேய்களைப் பிரிய
பயப் படுகிறீர்கள்,
மனுமகன்
நுழையாத இதயங்களெல்லாம்
பேய்களுக்குப் புகலிடங்களே.
பாம்புகளுக்கு எச்சரிக்கை
பாம்புகளே,
விரியன் பாம்புக் குட்டிகளே,
பற்களில் விஷம் வார்த்து
தலைமுறையைக் கடிப்போர்களே
கேளுங்கள்.
வெள்ளைப்புறாக்கள்
உங்களிடம் வந்தபோது
கற்கள் வீசி விரட்டினீர்கள்.
உங்களிடம் அனுப்பும்
ஞானியரையும், நல்லோரையும்,
அடித்தும்,
அறைந்தும் கொல்வீர்கள்.
இப் பழியெல்லாம்
உங்கள் சந்ததியினரின்
சொத்தாய் வந்து சேரப் போகிறது.
ஜெருசலேமே,
ஜெயத்தோடும் ஜெபத்தோடும்
பகைமை பாராட்டும்
கல் நெஞ்ச நகரமே.
கோழி
இறக்கைக்குள் அணைத்துக் கொள்ள
குஞ்சுகளைத் தேடுவது போல்
உங்களைத் தேடினேன்,
நீங்களோ,
உடன்படாமல் தீய
உடன்படிக்கை செய்தீர்கள்.
இதோ,
கூரைகளின் மேல் சாரைகள் ஊரும்
அழிவுக்குள் நீங்கள்
அமிழ்ந்தாக வேண்டுமோ ?
ஏற்றுக் கொள்ளும் வரை
உங்கள் வாழ்வு
உன்னதத்துக்கு உள்ளே வராது.