முடிவுக்கான அறிகுறிகள்
 

இறுதி நாளின்
அறிகுறிகளென்ன ஆண்டவரே ?
சீடர்கள்
தூவிய கேள்விக்கு
தூயவன் பதில் சொன்னார்.

என் பெயரைச் சொல்லி,
நான் தான் மெசியா என்று
ஈசல் கூட்டங்கள்
எழும்பி அலையும்.
எச்சரிக்கையாயிருங்கள்.

போர் முழக்கங்களையும்,
மரணத்துக்கான பறையடியையும்
கேட்டு
கலங்கவேண்டாம்.
இவை நிகழவேண்டிய நிஜங்கள்.

இது
ஒரு முடிவின் துவக்கம் மட்டுமே.
இதுவே
முடிவின் முடிவொலி அல்ல.

நாடுகள் தாகம் கொண்டு
நாடுகளை
அழிக்க எழும்பும்.

அரசுகள் அரசு வெறி கொண்டு
அரசர்களோடு
ஆயுத போதனை நடத்துவர்.

நோய்களும்
பஞ்சங்களும்
உயிர் குடித்து
வீர்த்துக் கிடக்கும்.

உங்களை மக்கள்,
வேதனைக்கு விற்று விடுவார்கள்,
கொலைக் கயிறுகள்
உங்களுக்கு பரிசாக விழும்.
தெய்வத்தில் தைரியமாயிருங்கள்.

என்னை நேசிப்போரை
மக்கள் வெறுப்பார்கள்.
மக்கள் பலர்
இடறல் வெள்ளத்தில் வீழ்ந்து
மனுமகனை மறுதலிப்பர்.

ஒருவன் விரல்
இன்னொருவன் நெஞ்சுக்கு நேராய்
உயிர் கொல்லியாய்
உருமாறி நீளும்.

அக்கிரமங்களின் அணிகலன்கள்
மட்டுமே
அகிலம் முழுதும் அணியப்படும்.

உலகம் முழுதும்
விண்ணக போதனை
விரிந்த பின்னரே
இறுதி காலம் இறங்கிவரும்.

இறுதிவரை
உறுதிகொள்பவன்
பேறுபெற்றவன்.

 

ஏமாந்து போக வேண்டாம்

 

இயேசு
சீடர்களுக்கு
இறுதி நாள் நெருங்குகையில்
உறுதி உரையாற்றினார்.

யாரேனும் வந்து,
மனுமகன் அதோ
பாலைவனத்தில் பயணிக்கிறார்,
உள்ளறையில்
உட்கார்ந்திருக்கிறார்,
என்றால் நம்ப வேண்டாம்.

ஏனெனில்,
மின்னலின் வேகத்தில்
மனுமகன் வருகையும்,
ஒளியின் பாதையில் அவர்
பயணமும் இருக்கும்.

பிணம் எங்கேயோ,
அங்கே தான்
கழுகுகள் கூடும்.

உங்கள் உடலில்
பிணவாடை வராதபடி
பரிசுத்த எண்ணங்களால்
அழுக்ககற்றி வாழுங்கள்

வருகை நாட்களின்
வேதனைக்குப் பின்,
சூரியன் ஒளியிழந்து
இருட்டுக்குள் விழும்.

இருட்டுக்குள் சூரியன் விழுவதால்
இரவல் ஒளியின்றி
நிலவும் மங்கி அணைந்துபோகும்.

விண்மீன்கள் சருகுகளாய்
பூமிக்கு
பணியக்கும்.

அத்தி மர இலைகள்
அழகாய் மிருதுவாய் மலரும் போது,
கோடை இதோ
விரலிடை தூரம் என்பீர்கள்.

இறுதி நாளின் வருகையையும்,
இந்த
அறிகுறிகளால் அறியுங்கள்.

பாவிகள் அப்போது
புலம்பி அழுவார்கள்.
தூதர்கள் வந்து
நீதிமான்களை மட்டுமே
அழைத்துச் செல்வர்.

விழிப்பாய் இருங்கள்,
இதயத்தின் இமைகளை
கவனமாய் இமையுங்கள்,

ஒரு நாள் வரும்,
அது
மனுக்குலத்துக்குச்
சோதனைக் காலம்.

நானே அவர் என்று சொல்லி
கடவுளாய் காட்டிக் கொண்டு
பல
கபட ஓநாய்கள்
மாசற்ற குருதியின் மேல்
குறிவைத்துப் பாயும்.
அவற்றின் நகக் கீறலுக்கு
பலியாகாதீர்கள்.

உள்ளத்தின் உறுதியை
உற்றுப் பார்த்து
இற்றுப் போகச்செய்யும்
பல
தந்திர வேலைகளைச் செய்து
தலைவன் என்று
சில
குள்ள நரிகள் உள்ளம் தாவும்.
பரிசுத்தத்தைப் பாதுகாத்துக்
கொள்ளுங்கள்.

தொலைதூரப் பயணத்துக்கு முன்
தலைவன்
பணியாளனிடம் ஒப்படைக்கும்
வீட்டுச் சாவி
பத்திரமாய் இருக்கட்டும்,
தலைவனின் வருகையின் போது
வாசல்
ஒளியாய் இருக்கட்டும்.

நீங்கள்
துயிலும் நேரம் தலைவன் வந்தால்
இப்போது
பயிலும் பாடங்களுக்கு
அப்போது
அர்த்தமிருக்காது.
 

தீயவற்றுக்கு எதிராக தீ மூட்டுவேன்

 

நான்
மண்ணுலகில்
தீ மூட்ட வந்தேன்.
இது
விண்ணகத் தீ.

கருத்துக்களோடு கருத்துக்கள்
மோதி
ஆழ்ந்து கிளம்பும் அக்கினியில்
இனி
குடும்பங்களிடையே
பிளவுகள் வரும்.

ஒன்றாயிருந்த ஐவரில்
மூவர் மனம் திரும்புவர்
இருவர்
எதிராவர்.

விபத்துக்களும் சாவுகளும்
தீயோருக்கானது
என்கிறீர்களே,
அவர்களை விடத் தீயோர்
உங்களிடையே உண்டு
என
உறுதியாய் சொல்லுகிறேன்.

அறிந்து கொள்ளுங்கள்
வாழ்வுக்கான வழியை.
விலக்கி விடுங்கள்
சாவுக்கான சாலையை.

  

விழித்திருப்பவன் விவேகி

 

விழிப்பாய் இருங்கள்.
உங்கள் செயல்களில் இனிமேல்
செத்த வாசம் வீசாமல்
சுத்த வாசம் வீசட்டும்.

இறுதி நாள்
அறிவிப்புகளோடு வருவதில்லை,
நினையாத நேரத்தில்
உங்கள் முன் வந்து நிற்கும்.

திருடனின் வருகை
வீட்டுத்தலைவனுக்குத் தெரிவதில்லை,
தெரிந்தால்
திருட்டு நடக்க விடுவதில்லை.

மனுமகன் வருகையும்,
முன்னறிவிப்பின்றி
பின்வரும்.

வயலில் இருவர்
வேலை செய்வர்.
அதில் ஒருவன் 
எடுக்கப்பட்டு மற்றவன் விடப்படுவான்.

இருவர் இருந்து
மாவாட்டுவர்,
அதில் ஒருத்தி எடுக்கப்பட்டு
மற்றவள் விடப்படுவாள்.

தலைவன் ஏற்படுத்திய
விசுவாச ஊழியன்,
நம்பிக்கைக்குள் நிற்கும் வரை
அனைத்துக்கும் அதிபதியாவான்.

தலைவன் வரும் வரை
கும்மாளமிட்டு கடமை தவறுபவன்,
நினையா நேரத்தில்
அழிவுக்குள் அனுப்பப்படுவான்.

விழிப்பாயிருங்கள்,
இன்றே… இப்போதே
உங்கள் செயல்களில்
வாழ்வின் வாசனை சேருங்கள்,
நிச்சயமாய் நேசனை சேர்வீர்கள்.

 

இறுதித் தீர்வு இது தான்

 

இறுதி நாளில்
பொதுத் தீர்வை நடக்கும்.

இறந்தவர் அனைவரும்
உயிருடன் எழுவர்
இறைவன் முன்னால்
பணிவுடன் தொழுவர்.

இடையன் ஆடுகளை
தனித்தனியே பிரிப்பதுபோல்
மனுமகனின்
இனம்பிரித்தலும் இருக்கும்.

செம்மறிகளும் வெள்ளாடும்
இடையனுக்கு
பார்த்ததும் புரிவதுபோல்,
நல்லோரும் தீயோரும்
கடவுள் கண்ணுக்கு காட்சி தருவர்.

நல்லவர் வலப்பக்கமும்,
தீயோர் இடப்பக்கமும்
இருபிரிவாக இருப்பர்.

வலப்பக்கம் இருப்போரை
விண்ணக வாழ்வு
வரவேற்கும்.

மனுமகன் அவர்களுக்கு சொல்வார்,
வாருங்கள்,
நன்மையை விதைத்து
நல்லவற்றை அறுவடை செய்தவர்களே
வாருங்கள்.

உங்கள்
நேசத்தின் கிளைகளில்
என்னை
இளைப்பாற விட்டவர்கள்
நீங்கள்.

நான் பசித்தபோது
புசிக்கக் கொடுத்தவர்கள்,
என் தாகத்தின் நாவுக்கு
தண்ணீர் வடித்தவர்கள்,
என் நிர்வாணத்துக்கு
ஆடை உடுத்தவர்கள்,
என் தனிமைச் சிறையில்
ஆறுதல் கரமானவர்கள்,
என் நோயின் வலிகளில்
உடனிருந்தவர்கள் நீங்கள் தான்.
வாருங்கள் என்னோடு
என்பார்.

அப்போது நீதிமான்கள்,

இவையெல்லாம் எப்போது
நிகழ்ந்தது நாயகனே
என்பர்.

இதோ,
ஓர் சின்ன ஏழைக்கு நீங்கள்
செய்த நன்மைகள் எல்லாம்
எனக்காய் செய்த
தவங்களாயின.
இப்போது அதற்கான வரம்
வழங்கப்படுகிறது.

எப்போதெல்லாம்
சுயநல மிருகங்களை
சிறையில் அடைத்துவிட்டு
பொது நலப் புறாக்களோடு
பவனி வந்தீர்களோ,

எப்போதெல்லாம்
தனி மனித விருப்பங்களை
விலக்கி விட்டு
சமுதாய துயர் துடைக்க
கைக்குட்டை கொடுத்தீர்களோ

எப்போதெல்லாம்
தேவையின் தேடல்களுக்கு
நீங்கள்
விடையானீர்களோ
அப்போதெல்லாம்
என்னோடு உறவாடினீர்கள்.
என்பார்.

இடப்பக்கம் இருப்போரிடம்
கோபக் கண்களோடு
கடவுள் பேசுவார்.

சபிக்கப்பட்டவர்கள் நீங்கள்
என்னை
நிராகரிப்பதை மட்டுமே
நிராகரிக்காதவர்கள் நீங்கள்.

என்னை ஏற்றுக் கொள்வதை
மட்டுமே
ஏற்றுக்கொள்ளாதவர்கள்
நீங்கள்.

செல்லுங்கள்,
அணையா நெருப்பு
உங்களை அணைத்துக் கொள்ளும்.
மரணம் இல்லா
வேதனையின் விளைநிலமாகட்டும்
உங்கள் தேகம் என்பார்.

இடப்பக்கம் இருப்போர்
திடுக்கிடலோடு
இறைவனிடம்,

ஐயோ கடவுளே
எப்போது உம்மை நாங்கள்
நிராகரித்தோம்.
நீர் எங்களிடம்
வரவே இல்லையே
பின் எப்படி தரவே இல்லை என்கிறீர்
என்பார்கள்.

உன் அயலானின்
வலி களையா வினாடிகள் எல்லாம்
என்னை
அழவைத்த தருணங்களே.

எனவே,
மண்ணுலக மனிதரில்
என் பிம்பத்தைப் பார்ப்பவன்
பாக்கியவான்.
எதிர்பலன் எதிர்பாராமல்
நன்மை தூவுபவனே நீதிமான்.

அயலானைப் புறக்கணிக்கும்
ஆன்மீகப் பணிகள்
எதுவுமே
வான் வீட்டுக்கு உகந்ததல்ல
என்பதே
இறுதித் தீர்வை தரும் பாடம்.