உவமைகள்
உவமைகள்,
அறிவுரைகளை ஏற்றிச் செல்லும்
அற்புத வாகனம்,
செய்திகளை செவிவழியாய்
உள்ளத்தில் ஊன்றும்
உன்னத வழி.
அறிவுரைகள் ஆழமானவை
உவமைகளோ அழகானவை.
வாசத்தை பூக்களில் ஊற்றி
நுகரவைக்கும் கலையே
உவமைகளில் உரையாடல்.
இயேசுவின் உவமைகள்
அழகானவை,
ஆழத்தைச் சுமந்ததால் அழகானவை.
எளிமையானவை,
எளியவரின் மனம் நோக்கிச் சென்ற
இலகுவானவை.
விண்ணரசு, விவசாயி
இயேசு
விண்ணரசு குறித்த
விளக்கங்களை
உவமை விளக்குகளாய்
ஏற்றி வைத்தார்.
விண்ணரசு
தன் விவசாய நிலத்தில்
நல்லவிதைகளை
பதியனிட்ட
ஒருவனுக்கு ஒப்பாகிறது.
பயிர் விதை விதைத்த
நிலத்தில்
களை விதை விதைக்கிறான்
பகைவன் ஒருவன்.
பூமிக்குள் பதுங்கும் வரை
விதைகளின் வித்யாசம்
வெளிச்சத்துக்கு வருவதில்லையே.
முளைகள் மெல்ல
காற்றைக் கிழித்து
பூமியைக் கடந்தபோது தான்
களைகள் கலந்திருப்பது
கண்களுக்குள் விழுந்தது.
வேலையாள் வருந்தினான்
பயிர்களின் உரத்தை
களைகள் களவாடுகிறதே
என்று
கவலைப்பட்டான்
களைகளைப் பிடுங்கி
களைந்திடவா என்றான்.
எஜமான் சொன்னார்.
வேண்டாம்,
களை பிடுங்கும் வேளை
நீ
பயிர் பிடுங்கக் கூடும்.
பயிர் ஒன்றேனும்
உயிர் விடுதலில்
எனக்கு
உடன்பாடில்லை.
அறுவடை வரை
இரண்டையும் இணைந்தே வளரவிடு,
அறுவடையின் போது
பயிரை
களஞ்சியத்துக்கும்,
களையை
தீக்குழிக்கும் அனுப்பு.
சுவர்க்கத்தின் வாசலுக்குள்
தீயவற்றின் மிதியடிகள்
கடந்து செல்ல முடிவதில்லை,
சுவர்க்கம்
பயிர்களுக்காய் பாதுகாப்பாய்
பத்திரப்படுத்தப் பட்டிருக்கின்றது.
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட
நல்ல விதை,
தானால் முளை விட்டு
தானாய் கிளை விட்டு
ஆழமாய் வேர் விட்டு
தானாய்
தானியங்களை தரும்.
இதயத்தில் ஊன்றப்படும்
நற்செய்திகளும் அவ்வாறே.
நீங்கள்
பூமியெனும் வயலில்
மனிதர்களாய் முளைத்தவர்கள்,
பயிரா ? களையா ?
என
உங்களையே கேளுங்கள்,
களையானால் பயிராகும்
வழிமுறையை நாடுங்கள்.
விண்ணரசு, விதை
விண்ணரசு
ஓர் சிறு விதைக்கு ஒப்பாகும்.
விதையைப் பாருங்கள்
அது
பறவையின்
ஒரு அலகு ஆகாரம்.
அது வளர்ந்தபின்போ
ஆயிரம் பறவைகள்
அடையுமிடம்.
நல்ல செய்திகளின்
விளைச்சலும் அவ்வாறே.
o
மண்ணின் மார்பில்
புதைக்கப்பட்ட
விதை
கதை முடிந்து போவதில்லை
விதைத்த பின்
நீ
விலகிச் செல்வாய்,
விதைவெடிக்கும் வேளையோ
முளை துப்பும் காலையோ,
உனக்குத் தெரிவதில்லை.
விதைகள் விடரும்,
வினியோகம் தொடரும்.
நிலங்கள் சில
விலகிச் செல்லும்
ஆயினும் விதைகள் அவற்றை
விடாமல் தொடரும்.
விண்ணரசு, மாவு
விண்ணரசை,
புளிப்புமாவோடும் பொருத்தலாம்.
மாவோடு கலக்கப்பட்டால்
அது
மொத்த மாவுக்கும்
புளிப்புச் சுவையை பகிர்ந்தளிக்கும்.
விண்ணரசு வெள்ளிக்காசு
இருட்டுக்குள் விழுந்து விட்ட
ஒரு வெள்ளிக்காசை
விளக்கின் கைகள்
இருட்டை
விலக்கித் தேடுவதில்லையா ?
மூலை முடுக்கில்
கதவின் இடுக்கில்
எங்கேனும் அதைக்
கண்டெடுத்தபின்
களிகூர்வதில்லையா ?
மனம் திருந்தும் மனிதன்
தொலைந்து போன
வெள்ளிக் காசே.
வெளிச்சக் கைகள்
அவனை
தேடித் திருகின்றன.
மனம் திரும்புதலே
மகத்துவமான மாற்றம்.
விண்ணரசு, புதையல்
விண்ணரசை,
பூமியில் புதைந்த
புதையலுக்கும் ஒப்பிடலாம்.
பூமியில் புதையலிருப்பதைப்
புரிந்து கொண்டவன்
தன்
சொத்துக்களை எல்லாம் விற்று
அந் நிலத்தைச்
சொந்தமாக்குவான்.
முழுதையும் இழந்து
முத்தமிடும் புதையலே
விண்ணரசு.
விண்ணரசு,
வியாபாரி தேடும்
விலைமதிப்பில்லா முத்து.
அதைக் கண்டவன்.
தன் சொத்தெல்லாம் விற்று
முத்தைப் பெற்று முத்தமிடுவான்.
விண்ணரசு,
எதை இழந்தும் பெறத் தகுந்த
ஒரே
இலட்சிய இலக்கு.
விண்ணரசு, வலை
விண்ணக வாழ்வை
கடலில் வீசப்பட்ட
வலையெனக் கொள்க.
வலை
வேறுபாடுகளை விடுத்து,
தொடுத்தும் மீன்களை எல்லாம்
எடுத்து வரும்.
நல்லவை கூடைகளில்
அள்ளப்படும்,
தீயவை தெருவோரம்
தள்ளப்படும்.
சாவுக்குப் பின் சம்பவிப்பது
இதுவே.
நல்ல விதை, நல்ல நிலம்
விதைகளை வாரிக் கொண்டு
விதைக்கச் சென்றான்
ஒருவன்.
விதைகளில் சில
சுவடுகள் அலையும்
சாலைகளில் சிதறின.
அவை
பறவைகளின் அலகுகளால்
கொத்தப்பட்டு குற்றுயிராகி
உணவாக நிறம் மாறின.
முட்களிடையே
சில தெறித்தன,
முளைகள் வெளிவந்து
வெளி உலகைப் பார்த்தபோது,
முட்களின் முனைகளால்
நெறிபட்டு முறிபட்டு
உயிர்விட்டன.
பாறை மீதும் சில விதைகள்
விழுந்தன,
வேர் நுழையும் வழி இன்றி
வெயிலுக்கு உயிலெழுதி
சருகாகி செத்து மடிந்தன.
சில
உழவு நிலத்தில் விழுந்தன.
வயலில் விழுவது தானே
விதைக்கே விருது.
விழுந்தவை
எழுந்தன.
நூறுமடங்கு, அறுபது மடங்கு, முப்பது மடங்கு
என
அமோகமாய் அறுவடையாயின.
விதைப்பவன் நானே.
விதைகள் என் வார்த்தைகள்,
நிலம் உங்கள் மனம்.
வழியோர விதைகள்
என் வார்த்தைகளைப் புரியா,
புரிய முயலா
உள்ளங்களில் விழுந்தவை.
அவை தீமையின் தீனியாகி
தின்னப்பட்டு மறைந்து போகும்.
பாறை மீதான விதை
இதயம் தீண்டி முளைப்பவை,
ஆனால்
ஆணி வேரின்றி அறுபடுபவை.
இதயம் தீண்டிய விதைகள்
பதியம் ஆகாமல் புறக்கணிக்கப்படும்.
முள்ளிடையே விதை,
அரைகுறை இதயத்தின்
அழுத்தமான உதாரணம்.
உலக நெரிசல்களால்
என்
வார்த்தைகள் அங்கே
வலுக்கட்டாயமாய் கிழித்தெறியப்படும்.
நல்ல நிலம்,
வார்த்தைகளைக் கேட்டு,
வளமாய் இதயத்தில் ஊன்றி,
அதன் நிழலில் நடப்பவன்.
பலன் தருபவன்
அவன் தான்.
விண்ணக வாழ்க்கை அவனுக்கானதே.
அறிவற்ற செல்வன்.
ஒருவன்
பரமனை நெருங்கி,
பாகம் பிரிப்பதில் நடுவராக்கப்
பார்த்தான்.
இயேசு சொன்னார்,
நான்,
சொத்துப் பிரச்சனைகளின்
நீதிபதி அல்ல.
பணக்காரன் ஒருவன் இருந்தான்.
அவன்,
இரவு பகல் எல்லாம்
செல்வம் சேமிக்க செலவழித்தான்.
களஞ்சியத்தின்
அகலத்தை அதிகரித்து
தானியம் நிறைய சேமிப்பேன்.
பல்லாண்டு
உண்டு குடித்து
உல்லாசத்தில் உட்கார்வேன்
என்றான்.
பணம் ஈட்டுவதிலேயே
மனம் நாட்டியவன் அவன்.
அந்த அறிவிலியின்
உயிரை
அன்றிரவே இறைவன் எடுத்தால்
சேமித்ததை
எவன் வந்து சொந்தம் என்பானோ?
நெல் களஞ்சியங்களல்ல
நல் களஞ்சியங்களே தேவை.
களஞ்சியங்களில்
நற்செயல்களைச் சேமியுங்கள்.
சுற்றிக் கட்டி சேமிப்பதை விட
விற்று விற்றுப்
பகிர்ந்தளியுங்கள்.
இற்றுப் போகாத பைகள்
பெற்றுக் கொள்ளுங்கள்
அதில்
நற்செயல் நாணயத்தை
நாள்தோறும் சேமியுங்கள்.
கடவுளுக்கான
செயல்களை களைந்து,
பூமியின் பொருட்களை
கட்டிக் கொள்பவன்,
புயலில் பிழுதெறியப்படும்
தானியக் குவியலாய்
சட்டென்று கலைவான்
சிந்தையில் கொள்ளுங்கள்
உதவு, அதுவே வாழ்வுக்கான கதவு.
ஆத்மார்த்த அன்பை
அயலானுக்குச் செய்
என்றார் இயேசு ?
அயலான் யார் ?
ஓர்
உவமை வாய் திறந்தது.
நெடிய பயண நடுவே
கள்வர்களின் குருட்டு ஆயுதங்களில்
காயங்களின் கொள்முதல்
நிலையமாய்
குற்றுயிராய்க் கிடந்தான்
ஒருவன்.
போதகர் ஒருவர்
அவ்வழியே வந்தார்.
பார்த்தார் சில வினாடி,
போதனையே பெரிதென்று
பாதை மாறி பாதம் வைத்தார்.
லேவியன் ஒருவன் வந்தான்
கண்ணைக் கட்டி
கடந்து போனான்.
இன்னும் சிலர் சென்றனர்,
பரிதாபப் பார்வைகளும்
அவசரப் பாதங்களும் சுமந்து.
சாராசரிச் சமாரியன் ஒருவன்
சரியாய் வந்தான்.
காயம் கண்டு கண்ணீர்
விட்டு கடந்து செல்லவில்லை.
கண்ணீர் காயத்தின் அடையாளமே
களிம்பல்ல என்பதை
புரிந்து நெருங்கினான்.
காயம் துடைத்து
கட்டுகள் இட்டு,
முதலுதவி முகம்கொண்டு
சாவடிக்கு தூக்கிச் சென்றான்.
வெள்ளிக்காசுகள் செலவிட்டு
வைத்தியம் செய்தான்.
நீங்கள்,
பட்டியலாளராய்
பார்வையிடல் வேண்டாம்,
பணியாளராய்
மண்டியிடுங்கள்.
அதுவே மனித மாண்பு.
விண்ணரசு, தோட்டத் தலைவன்
விண்ணரசு,
தன் திராட்சைத் தோட்டத்திற்கு
வேலையாள் தேடிய
வீட்டுத் தலைவன் போன்றது.
கதிரவன் வானத்தில்
கதிரறுக்கப் புறப்படுகையில்
தேடி வந்தான்
தலைவன்.
வழியில் கண்ட சிலரை அழைத்து
வேலைக்கு அனுப்பினான்.
நாளொன்றுக்கு
ஒரு வெள்ளிக்காசென்று
கூலி விவரத்தையும்
குறித்துக் கொள்ளச் சொன்னான்.
பின் ஒன்பது மணிக்கும்
பிற்பகல் மூன்று மணிக்கும்
அவ்வாறே
வேலையாட்கள் அழைக்கப்பட்டனர்.
மாலை
ஐந்து மணிக்கும்
வெளியே சென்றான் தலைவன்.
அப்போதும் சிலர்
வெறுமனே நின்றுகொண்டிருந்தனர்
பொழுதை
வீணாய்த் தின்று கொண்டிருந்தனர்.
ஏன் நீங்கள்
சோம்பித் திரிகிறீர்கள் ?
வாழாவிருப்பது வாழ்வுக்கு நல்லதா
என்றான்.
ஐயா..
வேலை தருபவர் இருந்தால்
நாங்கள் ஏன்
கவலையுடன் கைகோர்த்து
சோகத்தில் சுற்றித் திரிகிறோம் ?
வேலையிலமர்த்த
யாரும் வரவில்லை
பகல்
வேளையும் முடிகிறது
இனியென்ன செய்ய ?
தலைவன் இரங்கினான்
அவர்களையும்
வேலைக்காய்
திராட்சைத் தோட்டம் அனுப்பினார்.
மாலை
ஆறுமணி
கூலியின் நேரம்
வேலையாட்களின்
குதூகலத்தின் நேரம்.
ஐந்து மணி ஆட்கள்
வந்து நின்றனர்
வெள்ளிக்காசு ஒவ்வொன்றை
பெற்றுச் சென்றனர்.
விடியலில் வந்தவர்
அதிகம் கிடைக்குமென்று
ஆவல் கொண்டனர்,
ஆனால் ஆச்சரியமாய்
அவர்களுக்கும்
ஒரு வெள்ளிக்காசே தரப்பட்டது.
தலைவனிடம் அவர்கள்
தர்க்கம் செய்தனர்,
ஒரு மணி நேரம் உழைத்தவனுக்கும்
ஒரு நாள் முழுதும்
உழைத்தவனுக்கும்
ஒரே கூலியா ?
மாலை மட்டும்
வேலை செய்தவனுக்கும்,
வெயில் முழுதும்
உயிர் காய்ந்தவனுக்கும்
சரி நிகர் சம்பளமா ?
நியாயம் இல்லாத தலைவர் நீர்
எங்களுக்கு
அதிகமாய்த் தந்திருக்க வேண்டும்
இல்லையேல்
அவர்களுக்குக்
குறைவாய்க் கொடுத்திருக்க வேண்டும்.
தலைவன் சொன்னான்,
உனக்கான
வெள்ளிக்காசு,
வழங்கப்படவில்லையெனில்
வழக்கிடு.
ஒரு வெள்ளிக்காசு என்பது
உன்னிடம் நான் செய்த
ஒப்பந்தம்.
தப்பென்றால் சொல்.
இன்னொருவனுக்கும்
அதயே வழங்க
எனக்கு
உரிமையில்லை என்பது சரியில்லையே.
தலைவனின் விளக்கத்தால்
தலை குனிந்தனர்
அவர்கள்.
கடைசியானோர்
முதலாவர்.
தேவையின் அடிப்படையில்
தரப்படுவதே என் கூலி.
மூலைக்கல் எது ?
நேர்மையான தலைவன்
ஒருவனிடம்
திராட்சைத் தோட்டம்
ஒன்று இருந்தது.
அழகிய அத் தோட்டத்தில்
ஆழக் குழி தோண்டி
கோபுரம் ஒன்றை கட்டி
குத்தகைக்குக்
கொடுத்துவிட்டு
வெளியூர் சென்றான் தலைவன்.
குத்தகைக்காரர்கள்
நம்பிக்கைக்குக்
குந்தகம் விளைவிக்க மாட்டார்கள்
என்பது
தலைவனின் நம்பிக்கை.
பழக் காலம் வந்த போது
பலன் வாங்க
ஊழியரை அனுப்பினான்
உடையவன்.
குத்தகைக் காரர்கள்
சுயநலவாதிகள்.
கனிகளைக் கொய்வதை
விட்டு விட்டு
மரத்தையே கொள்ளையடிக்க
வழி தேடினர்.
தலைவன் அனுப்பிய
ஊழியர்களில்
ஒருவனைன்
குத்தகைக் காரர்களால்
குற்றுயிராக்கப் பட்டான்.
இன்னொருவன்
கற்களால் நொறுக்கப்பட்டான்.
இன்னொருவன்
கொல்லப்பட்டு
வேலிகளுக்கப்பால் வீசப்பட்டான்.
கதை சொன்ன இயேசு
இடைவேளை விட்டார்.
ஒரு கேள்வியோடு.
குத்தகைக்காரர்களைத்
தலைவன்
என்ன செய்வான் ?
நம்பிக்கைத் துரோகிகள்
கண்டிக்கப் படவேண்டியவர்கள்
கருணையின்றி
தண்டிக்கப் படவேண்டியவர்கள்.
பதில் வந்தது.
இயேசு சொன்னார்,
உண்மை தான்.
தலைவன்
குடியானவரை கொடுமையாய்
தண்டித்து,
தரமான தரப்பினருக்கு
திராட்சைத் தோட்டத்தைத் தருவான்.
நீங்கள்,
திராட்சைத் தோட்டத்தின்
குத்தகைக் காரர்கள்,
பூமி
மனித தலைமுறைக்கு உரியதல்ல
தலைவனுக்கு உரியது.
தலைவனுக்குரிய
பலனைக் கொடுக்காமல்
அவன்
ஊழியர்களை நிராகரிப்பவன்
அழிக்கப்படுவான்.
உங்கள் விவசாய காலத்து
வியர்வை
அறுவடை காலத்தில்
அளக்கப்படும்.
வாசனையை நுகரச் சொன்னால்
பூக்களைப்
பிழிந்து விடும் கூட்டம்
திகிலுடன் கேட்டுக் கொண்டிருந்தது.
இயேசு தொடர்ந்தார்.
கட்டுவோன்
விலக்கிய கல்லே
வீட்டுக்கு
மூலைக்கல்லாயிற்று.
இரு விழிக்கு வியப்பே
இது இறையின் செயலே.
விண்ணரசு, மணமகனின் தந்தை
இளவரசனுக்கு
தடபுடல் திருமண விருந்த
ஏற்பாடு செய்த
அரசன் எனலாம்
விண்ணரசை.
மணவிருந்து தயாரானபின்,
பந்திகள் பரிமாறத் தயாராயின
ஆனால்
அழைக்கப்பட்டவர்களோ
விருந்தை நிராகரித்தனர்.
கொழுத்தக் கன்றுகள்
அடித்தாகிவிட்டது,
விருந்துக்காய் எல்லாம்
சமைத்தாகிவிட்டது,
அழைக்கப்பட்டோ ரை
அழைத்துவாருங்கள்,
அரசன் ஆணையிட்டான்.
அழைக்கப்பட்டோ ரோ
அவரை
அவமானப்படுத்தினர்.
தோட்டத்தில்
எனக்கின்று
வேலை இருக்கென்று
ஒருவனும்,
வியாபார இருக்கும்போ
விருந்தென்ன விருந்தென்று
இன்னொருவனும்,
சாக்குப் போக்கு எனும்
போர்வை போர்த்தி
பார்வை விட்டு விலகினர்.
பழமரத்தைப்
பறவைகள் நிராகரிப்பதை
ஆத்திரத்தோடு
பார்த்தான் அரசன்.
பணியாளர்களை அழைத்தான்.
செல்லுங்கள்,
அழைக்கப்படோ ர்
விருந்துண்ணும்
தகுதியை தவற விட்டனர்.
நீங்கள் போய்
பார்வையில் படுவோரையெல்லாம்
திரட்டி வாருங்கள்.
வீதியில் நடப்போர்
முடமாகிக் கிடப்போர்
வறுமையில் உழல்வோர்
பெருமையில் சுழல்வோர்
எல்லோரையும் கூட்டி வாருங்கள்.
சமத்துவ விருந்து
சமைத்தாகி விட்டது.
என்றார்.
ஊழியர் சென்றனர்,
வழியில் தங்கள்
விழியில் விழுந்தோரையெல்லாம்
ஆராயாமல் அழைத்து வந்தனர்.
அதில் ஒருவன்
திருமண ஆடையின்றி இருந்தான்.
அரசன் பந்தி அருகே
வந்து நின்றான்.
கூட்டத்தைப் பார்த்து
ஆனந்தமடைந்தான்.
சுற்றுமுற்றும் பார்த்த
அரசனின் பார்வை
ஓவியத்தில் குறைகண்ட
ஓவியனின் கண் போல
சுருங்கியது.
அங்கே நின்றிருந்தான்
திருமண ஆடையின்றி வந்தவன்.
அரசன்
தாமதிக்கவில்லை.
பொருத்த ஆடை அணியாதவனை
புறந்தள்ளினார்.
அரச விருந்து
ராஜ கிரீடம் போல
கம்பீரமாய் இருந்தது.
விருந்து உண்டவர்கள்
தெரிந்து கொண்டவர்கள்.
சதுரங்க விளையாட்டுக்கு
மட்டையோடு செல்பவன்
மடையனாய் தான்
இருக்க முடியும்.
அதுபோலவே இறையரசு.
தீமையோடு
யுத்தம் செய்யாமல்,
தேவையான
ஆயத்தம் செய்யாமல்
விண்ணக வாழ்வு வருவதில்லை.
விண்ணரசின் அழைப்பு
மண்ணகத்துக்கு அனுப்பியாயிற்று.
அசுத்தமாயிராமல்
ஆயத்தமாயிருங்கள்
தயாராய் இல்லாத எவரும்
தரிசனம் பெறல் இயலாது.
அழைக்கப்பட்டோ ர் பலர்
தேர்ந்து கொள்ளப்பட்டோ ர் சிலர்.
கனி கொடு, இல்லையேல் வரும் கேடு
ஒருவன்
அத்திமரம் ஒன்றை நட்டு
பத்திரமாய் வளர்த்தான்.
அது
வேர்விட்டுக் கிளைவிட்டு
வளர்ந்தாலும்,
கனிவிட மட்டும் மறுத்தது.
கனிகள் தராத மரங்கள்
விருதுக்கானவையல்ல
வெறும்
விறகுக்கானவையே.
தலைவன்
மூன்று ஆண்டுகள்
முயன்றான்.
முடியவில்லை,
கனிகளைப் பெறும் வழியும் புரியவில்லை.
தண்ணீர் இல்லாத ஏரி போல
யாருக்கும்
பயனே இல்லாமல் கிடக்கும்
மரத்துப் போன
மரத்தின் மீது வெறுப்பு கொண்டான்.
வேலையாளை
அழைத்தான்,
வெட்டி விடு இதை
கனிதராத இந்த மரம்
மண்ணின் வளத்தை விழுங்கி
ஏமாற்றத்தைக் காய்க்கிறது.
பறவைகளின் பட்டினிக்கும்
இதனிடம் பழமில்லை,
உரிமையாளனின் தேவைகளும்
எந்தக் கிளையிலும்
முளைவிடவில்லை.
வேண்டாம் இது என்றான்.
வேலையாளோ,
தலைவரே,
இன்னும் ஓராண்டு போகட்டும்.
நிலத்தை இன்னும்
பதப்படுத்துவேன்,
வேருக்கு
எருவைத் தருவேன்.
ஒருவேளை
மண்ணின் மாற்றங்கள்
கிளையில் பூக்களை வரவைக்கலாம்
பூவில் கனியைத் தரவைக்கலாம்.
மாற்றங்களும்
ஏதும் மாற்றம் தராவிடில்,
அழித்திடலாம் என்றான்.
தலைவன்
கனிக்காய் காத்திருக்கிறான்,
வேலையாள்
தன் பணியை பழுதின்றிச் செய்கிறான்.
கனி தராதவர்க்கு
அக்கினி தரப்படும்.
மனிதனின் பணியை
மரத்தோடு ஒப்பிட்டுப் பேசி
மனிதரின்
சிரங்களுக்குப் புரியவைத்தார்
இயேசு.
எருசலேமே,
எருசலேமே.
கற்களோடு நற்செயல்களை
எதிர்கொள்ளும்
பதற்களே.
எத்தனையோ முறை
ஏங்கினேன்,
குஞ்சுகளாய் உங்களை
சிறகின் கீழ் மூடினேன்,
நீங்களோ
சிறகைத் தாண்டி வெளிவந்து
பருந்துக்கு
பந்தியாகிக் கொண்டிருக்கிறீர்கள்.
சொல் கொண்டு வரும்
இறைவாக்கினர்களை
கல்கொண்டு கொல்கிறீர்கள்.
மருந்தை அருந்துங்கள்
இல்லையேல்
நோய்க்கு விருந்தாவீர்கள்.
என்றார்.
பெற்றுக் கொண்டதை பயன்படுத்து
செல்வன் ஒருவன்
பயணம் சென்றான்.
பயணம் துவங்கும்
மணிக்கு முன்,
ஊழியரை அழைத்து
செல்வத்தை அவர்களுக்குப்
பகிர்ந்தளித்தான்.
ஒருவனுக்கு ஐந்து,
இன்னொருவனுக்கு இரண்டு,
மூன்றாமவனுக்கு ஒன்று
என
தாலந்துகளை தந்து சென்றான்.
ஐந்து பெற்றவன்,
வியர்வைக்குள் விழுந்து
உழைத்தான்
மேலும் ஐந்து சம்பாதித்தான்.
இரண்டு பெற்றவன்,
இரவும் பகலும் இடைவிடாமல்
உழைத்து
மேலும் இரண்டு சம்பாதித்தான்.
ஒன்று பெற்றவன்
ஒன்றுக்கும் உதவாதவன்,
அவன்
தாலந்தை மண்ணுக்குள்
புதைத்து வைத்து தூங்கினான்.
புதைத்தது விதையானால்
முளைக்கும்,
பணம் என்ன செய்யும்?
தலைவன் திரும்பினான்
ஊழியரை பார்க்க விரும்பினான்.
ஐந்து தாலந்துக்காரன்
பத்தோடு வந்தான்,
தலைவன் உச்சி குளிர்ந்தான்.
நீ
நல்ல ஊழியனின் உதாரணம்.
உன்னை
அதிக பணிகளுக்கு
அதிபதியாக்குவேன்
என்று பாராட்டினான்.
இரண்டு பெற்றவன்
நான்கோடு வந்தான்
தலைவன் பெருமிதப்பட்டான்.
நீ
பெருமைக்குரிய பணியாளன்
சிறியவற்றில்
நம்பிக்கை காத்தாய்
பெரியவற்றிற்கு
உரியவன் ஆவாய் என்றான்.
ஒன்று பெற்றவன்
ஓரமாய் வந்தான்,
ஐயா,
நீர் விதைக்காத இடத்தில்
அறுவடை செய்வீர்,
தூவாத இடத்தில் சேர்ப்பீர்.
இதோ
உமக்குப் பயந்து நான்
நிலத்தில் புதைத்த
உம் தாலந்து.
நீர் கொடுத்தது
அப்படியே இருக்கிறது.
பாழாக்கவில்லை
என்றான்.
வந்த தலைவன் நொந்தான்.
கெட்ட ஊழியன் நீ.
வட்டிக்காவது என்காசை
விட்டிருந்தால்
வட்டியோடு நான்
பெற்றிருக்கக் கூடும்.
உன்மேல் வைத்த நம்பிக்கை
எனக்கு
வருத்தம் வருத்துகிறது.
நீ
எதிர்பார்ப்புகளை
எரித்துவிட்டாய்.
பாறையில் பெய்த
பருவ மழைபோல
வீணாய் போன தாலந்து
வெறுமனே இருந்தது.
இதோ,
பயன் படாத இவன் தாலந்தைப்
பிடுங்கி,
பத்து இருப்போனுக்கு கொடுங்கள்.
இவனை
வெளியிருளில் தள்ளுங்கள்,
அங்கே அவன்
அழுகையை அள்ளட்டும்
பற்கடிப்பை மேற்கொள்ளட்டும்.
பயன்படுத்தத் தந்தவற்றைப்
பயன்படுத்தாததும்
பாவமே.
உள்ளவனுக்குக் கொடுக்கப்படும்
இல்லாதவனிடமிருந்து
உள்ளதும் பறிக்கப்படும்.
காலம் உங்களை
கால்களில் சக்கரம் கட்டி
கடத்திச் செல்கிறது,
நீங்கள்
நன்மையின் அச்சாயை
நழுவவிடாதீர்கள்
திரும்பி வா, திருந்தி வா
மனந்திரும்பும் மானிடனை
இன்னோர் உவமையால்
இயேசு சொன்னார்.
தந்தை ஒருவனுக்கு
இரு புதல்வர்கள்
இருந்தனர்.
தரமற்ற தம்பி
சொத்தைப் பிரிக்க
தந்தையோடு தர்க்கமிட்டான்.
கைகளில் கரன்சி இருந்தால்
உலகத்தின்
இன்பங்களையெல்லாம்
சட்டைப்பையில்
சுருட்டிக் கொள்ளலாம்
என்பது அவன் எண்ணம்.
தந்தையின் அறிவுரைகள்
எருமையில் காலில் மிதிபட்ட
பறவை முட்டையாய்
பயனற்றுப் போயின.
வேறு வழியின்றி
தந்தையும்
இருந்த சொத்தை
இரண்டாக்கினார்.
பாதி சொத்தை
இளையவனுக்குக் கொடுத்தார்.
அவன்
சுவர்க்கத்தையே தன்
சுருக்குப் பைக்குள்
சொருகிக் கொண்டதாய் ஆனந்தித்தான்.
சொத்துக்களை விற்று
பணமாக்கினான்,
ஊதாரி நண்பர்களே
ஆதாரமென்று நம்பினான்.
நண்பர்களோடு
தூரதேசம் சென்று
பணத்தைப் பாய்ச்சி
ஆனந்தத்தை அள்ளினான்.
மதுவின் கரைகளில்
கண்ணயர்ந்து
மாதுவின் கரங்களில்
விழித்தான்.
தகாத பாதைகளில்
தவறாமல் நடந்தான்.
மதகு திறந்த
அணையில்
தண்ணீர் தீர்வது எளிதல்லவா.
அதுவும்
தண்ணீர் வரத்தே இல்லாத
அணையெனில் ?
சொத்துக்கள்
தீப்பந்தம் பட்ட
பனித்துளி போல
உலர்ந்து மறைந்தது.
ஊதாரித்தனத்தின் உச்சத்தில்
உறங்கி
விழித்தவனிடம்
உணவுக்கே மிச்சமில்லை.
தண்ணீர் பாயாத
அருவிகளில்
குளிப்பதற்கு ஆளிருக்குமா ?
பணம் தீர்ந்தது புரிந்ததும்
நண்பர்கள்
இரவோடு இரவாக
கூடு மாறி ஓடினர்.
உணவுக்காய்
வேலை தேடி அலைந்தான்
பன்றி மேய்க்கும் வேலை
பரிதாபத்துடன்
கொடுக்கப்பட்டது அவனுக்கு.
வறுமை துரத்த
பட்டாடை உடுத்தியவன்
பன்றிகளோடு புரண்டான்.
பட்டினி துரத்த
மதுவில் நீந்தியவன்
பன்றி உணவை பகிர்ந்துண்டான்.
பின்
அதற்குக் கூட வழியின்றி
அவதித் தீயில் விழுந்தான்.
வேதனைகளின்
வேல் குத்தியதில்
நிஜம் தெளிந்து வருந்தினான்.
தந்தையின் நேசம்
நெஞ்சுக்குள் நெளிய,
புத்தி தெளிந்தான் புத்திரன்.
மனதுக்குள் மொழியுரைத்தான்.
என் தந்தையிடம் செல்வேன்,
பாவங்களின் மேல்
படுத்துக் கிடந்த என் மேல்
அவர்
பரிதாபம் கொண்டால்,
‘வேலையாளாய் இருந்து
வேளை நகர்த்தவா’ என்று
வேண்டுவேன் என
உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான்.
அவமானம்
தலைமேல் அமர
தலை கவிழ்ந்தான்.
இல்லம் நோக்கி
இளையவன் வந்தான்.
தொலைவில் அவன்
நிழல் கண்டதும்,
தந்தையின் கரம் நீண்டது.
அவர் மனம்
மகிழ்ச்சித் தோட்டத்தில்
மலர் கொய்தது.
மண்ணை நோக்கிப் பாயும்
மழையாய்
மகனை நோக்கிப் பாய்ந்தார்
அவர்,
திரும்பியவன்
திருந்தியிருந்தான்.
அப்பா,
உமக்கும் வானகத்துக்கும்
எதிரான பாவம் ஏராளம் செய்தேன்.
மகனெனும் மரியாதை
என் உரிமையில்லை இப்போது.
வேலையாள் ஒருவனாக்கி
வேளைக்கு உணவளிப்பாயா
என்றான்.
கண்களில் சோகக்கடல் கொந்தளிக்க
இமைகளை உடைத்துக் கொண்டு
உப்பு அலை
கன்னங்களில் குதித்தது.
தந்தையோ
மகனைக் கட்டியணைத்தார்.
ஆனந்தக் கண்ணீரால்
அவன் முகம் நனைத்தார்.
கொழுத்த கன்றைக்
கொன்றார்
விருந்தொன்றை அமைத்தார்.
முதல்தர ஆடையணிவித்து
மிதியடி மோதிரம் தருவித்து
மகனை உச்சி மோந்து
உச்சத்தில் உலாவினார்.
மூத்தவன் வந்தபோது
ஆடல் சத்தத்தில் ஆடிப்போனான்,
விவரம் அறிந்து
கோபத்தில் குதித்தான்.
தந்தையை நோக்கி கேள்விகளை
எறிந்தான்.
தகாத உறவுக்காரனுக்கு
தரமான விருந்தா,
தவறாமல் இருந்த எனக்கு
தந்ததென்ன தந்தையே…
மூத்தவன் மூச்சில் வெப்பமிருந்தது.
தந்தை சொன்னார்.
உன் தம்பி
இறந்திருந்தான்
இப்போது உயிர்த்துவிட்டான்.
காணாமல் போயிருந்தான்
கிடைத்துவிட்டான்.
அதற்கே இந்த விருந்து.
நீயோ,
என்னுடனே இருக்கிறாய்
பிரியாத பிரியத்துடன்.
எனக்குள்ளதெல்லாம்
உன்னுடையதே.
தொலைந்தவை கிடைக்கையில்
ஆனந்தப்படு.
தவறுதல் மனித இயல்பு,
மீண்டு வருதலே
மனிதனின் மாண்பு.
என்றார்.
எண்ணையற்ற விளக்குகள்
விழிப்பாய் இருப்பதன்
தேவையை
விளக்கினார் இயேசு.
விண்ணரசை,
மணமகனை எதிர்கொள்ளச் சென்ற
பத்துக் கன்னியருக்கு
ஒப்பிடலாம்.
மணமகன் வருகையில்
விளக்குடன் சென்று
வரவேற்கவேண்டும்,
அவருடன்
மணவீட்டில்
பிரவேசிக்க வேண்டும்.
இரவின் ஆரம்பத்தில்
விளக்குடன்
காத்திருந்தார்கள் காரிகைகள்.
காத்திருந்த பத்துபேரில்
ஐவர் அறிவிலிகள்.
அவர்கள்
விளக்கை எடுத்தார்கள்
அழுக்கைத் துடைத்தார்கள்.
திரியை சரி செய்தார்கள்
கரியை சரி செய்தார்கள்
ஆனால்
எண்ணை எடுக்க மறந்தார்கள்.
மிஞ்சிய அஞ்சு பேர்
விவேகிகள்.
அவர்கள்
விளக்கும் எண்ணையும்
தனித் தனியே எடுத்தார்கள்.
திரிக்கும் ஒளிக்குமான
உறவு
எண்ணையின் வழி என்பதை
விவேகிகள் விளங்கியிருந்தார்கள்.
இதோ,
இரவு அடர்த்தியாகிறது
மணமகனை காணவில்லை.
தூக்கம்
மங்கையரை திருடிக் கொள்ள
இருட்டு
விளக்குகளை இழுத்துக் கொள்ள
அடர் தூக்கத்தில்
அனைவரும் அடங்கினார்கள்.
நள்ளிரவு மெல்ல
நகர்ந்து வந்த போது,
‘ மணமகன் வருகிறார்
எதிர் கொள்ள வாருங்கள் ‘
அழைப்பு கன்னியர்க்கு
அனுப்பப்பட்டது.
விவேகிகளின் விளக்குகள்
கம்பீரமாய் எரிய
அறிவிலிகளின் விளக்குகள்
அணைந்து போயின.
விவேகிகளின் விளக்குகள்
தீபத்தை விழிக்க வைத்தன,
அறிவிலிகளின் விளக்குகளில்
இரவு உறங்கிக் கிடந்தது.
எண்ணையின் தேவை
அப்போது தான் புரிந்தது
அவர்களுக்கு.
அணையும் எங்கள்
விளக்குகளைப் பாருங்கள்
கொளுத்திக் கொள்ள கொஞ்சம்
எண்ணை தாருங்கள்.
அறிவிலிகளின் விண்ணப்பம்
நிராகரிக்கப்பட்டது.
இல்லை
உங்களுக்கு எண்ணையளித்தால்
எங்கள் விளக்குகளும்
இருட்டைப் போர்த்திக் கொள்ளும்
குருடாகிப் படுத்துக் கொள்ளும்
கடைக்குக் செல்லுங்கள்
தேவையைச் சொல்லுங்கள்
பின்
விளக்குகளை
கொளுத்திக் கொள்ளுங்கள்
என்றார்கள்.
அறிவிலிகள் கடைகளைத் தேடி
நடந்தார்கள் அந்த
நள்ளிரவில்.
காத்திருந்த கன்னியர்
மணமகனை வரவேற்று
மணவீட்டில் புகுந்தார்கள்
வாசல் கதவுகள்
பூட்டப்பட்டன.
காலம் கடந்து
கதவு தட்டும் ஓசை,
வெளியே
அறிவிலிகளின் அவல ஓசை.
ஆண்டவரே எங்களுக்காய்
கதவுகளைத் திறந்து விடும்.
மணமகன் பதில் சொன்னார்,
கதவைத் திறப்பது
கனவிலும் நடக்காது.
நீங்கள் யாரென்பதே
எனக்குத் தெரியாது.
விழிப்பாய் இருப்பவரே
விண்ணரசிலும் இருப்பார்.
விதைக்கையில் தூங்கியவன்
அறுவடையில்
விழித்தெழுந்தாலும்
களஞ்சியம் காலியாகவே கிடக்கும்.
மனுமகன் வருகை
எப்போதும் நடக்கலாம்,
இதயங்களை நீங்கள்
இருக்கைகளாக்குங்கள்.
வருகைக்குப் பின்
வாசல் பெருக்கத் துவங்காதீர்.
ஏழையை நேசி
மெல்லிய ஆடையால்
மேனி பொதிந்த
பகட்டுப் பணக்காரன்
ஒருவன் இருந்தான்.
அவன்
மிதியடிகள் கூட
செல்வத்தைப் பறைசாற்றின.
அவன் வீட்டு வாசலில்
புண்களின் புகலிடமான
பழுத்த உடல் ஏழை ஒருவன்
பசிக்கு உணவு கேட்டு
படுத்திருந்தான்.
பட்டினியோடு
ஆயுட்கால ஒப்பந்தம் கொண்டிருந்த
அவன் பெயர்
லாசர்.
பந்தியில் சிந்திய உணவு கூட
பாவம் இவனுக்கு
உணவாகவில்லை.
பணக்காரனோ
உண்டு குடித்து
உல்லாசத்தின் உச்சியில்
நில்லாமல் நாட்டியமாடினான்.
ஏழை லாசரோ
பருக்கைகளுக்காய்
இருக்கைகளை நோக்கி
இரு கைகளை ஏந்திக் கிடந்தான்.
நாய்களின் நாக்குகள்
இவன் புண் கழுவும்.
வேதனையின் நாவுகள்
இவன் உயிர் கவ்வும்.
ஏழை இறந்தான்
தேவதூதரின் தேரிலேறி
விண்ணரசில் அமர்ந்தான்.
பணக்காரனும் மடிந்தான்
எரியும் நெருப்பில்
எறியப்பட்டான்.
ஏழையவன் இறைவனின்
அருகே இருப்பதை கண்டு
பணக்காரன் கதறினான்.
ஆண்டவரே,
ஏழையின் விரல் நுனியின்
ஒரு சொட்டு ஈரத்தை அனுப்பும்.
அனலுக்குள் அழிகிறேன்
இரக்கம் கொண்டு
அவனை இறங்கச் சொல்லும்.
ஆண்டவர் சொன்னார்,
வாழும்போது நீ
சுயநல சிந்தனைகளில்
சுருக்கு மாட்டிக் கிடந்தாய்,
சொகுசுப் பெட்டிகளில்
அடைகாக்கப்பட்டாய்
இவனோ
வலியோடு மட்டுமே வாழ்ந்தான்.
அங்கே நீ
செல்வங்களின் வாசனையில்
மயங்கிக் கிடந்தாய்
இவன்
உன் வீட்டு வாசலில்
பசியில்
மயங்கிக் கிடந்தான்.
இப்போது
வலி உனக்கு
வாழ்வு இவனுக்கு.
இங்கே
தீர்வுகளே தீர்ப்புகள்.
பணக்காரன் பதறினான்.
அப்படியென்றால் அவனை
என் வீட்டுக்கு அனுப்பும்,
என் சகோதரர்களாவது
சாபத்துக்கு அப்பால் சஞ்சரிக்கட்டும்.
என்னைப் போல் அவர்களும்
எரியும் நெருப்பில்
கரிய வேண்டாம்.
பயத்திலாவது கொஞ்சம்
பொதுநலம் பேணட்டும்.
இறந்த ஒருவன்
இறங்கிச் சொன்னால்
நம்புவர் அவர்.
பணக்காரன் விண்ணப்பித்தான்.
கடவுள் மறுத்தார்.
இல்லை.
அவர்களுக்கு
இறவா
இறைவாக்கினர் உள்ளனர்.
மோயீசனை மறுதலிப்போர்
லாசரையும் மறுதலிப்பர்.
அவர்களின் முடிவு
அவர்களின்
செயல்களைச் சார்ந்ததே.
மனிதாபிமான முளைவிடாத விதைகள்,
பயனற்ற பதர்கள்.
அவற்றின் புகலிடம்
தீயின் நாக்குகளே
என்றார்.
பணக்காரன்
வழியின்றி அனலில் அழுதான்
ஏழை
வலியின்றி சுவர்கத்தில் சிரித்தான்.
தொடர் செபம் இடர் தீர்க்கும்
தொடர் செபம்
இடர் தீர்க்கும் என்பதை
சுடர் விடும் ஓர் உவமையால்
பரமன் இயேசு உரைத்தார்.
கடவுளுக்கு அஞ்சாமல்,
மனிதனையும் மதிக்காமல்
ஓர்
நீதியற்ற நடுவன் இருந்தான்.
எதிரியைத் தண்டிக்கச் சொல்லி
ஓர்
கைம்பெண் அவரை
தொடர்ந்து விண்ணப்பித்தாள்
நீண்ட நாள்
நடுவன்
தன் கொள்கையிலிருந்து
நகரவேயில்லை.
கைம்பெண்ணுக்கு
நீதி கைவரவில்லை.
அவள்
கண்ணீர் விண்ணப்பங்கள்
அவன் வீட்டுக்
கதவை விட்டு விலகவுமில்லை.
தொடர்ந்து தட்டினாள்
பாதி ராத்திரியிலும்
நீதி கேட்டாள்.
அவள்
தொந்தரவினால்
உந்தப்பட்டு தன்
உதவும் கரத்தை
கதவுக்கு வெளியே நீட்டினான்
அவன்.
அவள்
நிம்மதி நித்திரை கெடுக்கிறது
என்று சொல்லி
நீதி வழங்கினான்
நிம்மதியாய்த் தூங்கினான்.
நீதியற்ற நடுவனே
இப்படி
இதயம் மாறினான் என்றால்,
நீதியின் தேவன்
கருணை மழையை
கணக்கின்றி பொழியாரோ ?
எனவே
வேண்டுதல்கள் தொடரட்டும்,
வேண்டுவன தரப்படும்.
என்றார்.
செய்தி கேட்ட மக்கள்
நிம்மதியுடன் நடந்தனர்.
உதடுகளில்
செபத்தை உடுத்தியபடி.