மகனுக்கு ஒரு வாழ்த்து !
தாசையன்
உலகனைத்தும் தனதாக்கிக் கொண்டு
ஒப்பற்ற தன்னாத்மா இழந்து போனால்
வளமேது நலமேது.
இறைமகன் இயேசுவின் வாழ்க்கையையும், நற்செய்தியையும்
பாமரருக்கும் புரியும் படி,
எளிய நடையில் கவிதை படைத்து
வாழ்வு தனை வளமாக்கிடவும்
இறை ஒளியைப் பரப்பிடவும் முயன்று
வெற்றி பெற்றிருக்கும் என் மகனை வாழ்த்துகிறேன்.
வளரும் பயிர் முளையிலேயே தெரியும்,
பயிர் மட்டுமல்ல
விளையும் மூளையும் கூட முளையிலேயே தெரிய வரும்.
இளமையிலேயே
பாடக் குறிப்பேடுகளின் பக்கங்களில்
கவிதைகள் தான் குறிக்கப்பட்டிருக்கும்.
“கிறுக்குவதைக் கோத்தெழுது பலனளிக்கும்” என
அறிவுரைகள் கூறுவதுண்டு.
கல்லூரி வாழ்க்கையிலே அவன்
பரிசுகள் பல பெறுவதுண்டு
புத்தகங்களிலும் இடம் பெறுவதுண்டு அதனால்
உவகை மிக அடைவதுமுண்டு.
ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும்
மனவிளிம்புகள்
இரண்டையுமே படித்த போது
மகனுக்குள் கவிஞனைத் தேடவில்லை
கவிஞனுக்குள்ளிருந்த மகனை தேடினேன்.
ஆகா என்ன வளர்ச்சி.
பெற்றோரிடம் அவனுக்குப் பெரும்பாசம்
அதிலும் தாயிடம் தனிப்பாசம்.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் நிலைக்குள்
இரண்டு மனங்களும் நீராடுகின்றன இப்போது.
இறவாக் காவியம் !
அதொரு நிறைவுக் காவியம்.
ஒரு வாழ்க்கை முறையின் கவிதை முளை.
பிறர் உனக்கு என்ன செய்ய விரும்புகிறாயோ
அதையே நீ பிறக்குச் செய்யத் தவறாதே என்னும்
இறைவார்த்தையல்லவா இருக்கிறது இதிலே.
சேவியரை மேலும் மேலும் வாழ்த்துகிறேன்
முதல்வனைப் பாடும் இந்தக் காவிய உருவாக்கத்தில்
மனையாளின் செயலாக்கம் உடனுண்டு
அதிலே உயர்வுக்கு வழியுண்டு.
கவிதைகள் பல படைத்திடு உன்
திறமைகளை பலப்படுத்து.
மக்கள் மனம் பண்பட உன்
கவிதைகளைப் புலப்படுத்து.
நீ… எல்லா நூல்களிலும் வளர்கிறாய்.
ஆனாலும் இன்னும் அதே மகனாய்த் திகழ்கிறாய்.
வாழ்த்துகிறேன் உன்னை.
வேண்டுகிறேன் இறைவனிடம்,
இறவாக் காவியத்தின் படப்பாளியைப் பாதுகாத்திட..
.
தாசையன்