அணிந்துரை
மோகன் சி. லாசரஸ், இயேசு விடுவிக்கிறார்.
“இறவாக் காவியம்”
இறைமைந்தன் இயேசுவை மகிமைப் படுத்தும்
மறவாக் காவியம்.
பரமனின் பாதங்களை ஆராதனை செய்ய
புதிய மலர் ஒன்று மலர்ந்துள்ளது கண்டு
மகிழ்கிறோம்.
மறவேன் என்றும் உன்னை
தருவேன் இரட்டிப்பான நன்மை
வருவேன் விரைவில்
என்றுரைத்த திருக்குமாரன் இயேசுவைக் குறித்து
கவிதை தந்த சேவியரை
வாழ்த்துகிறேன்,
இயேசுவின் ஈடில்லா நாமத்தில்.
பாவியாயினும் படு பாதகனாயினும்
பரமனின் போதனையைக் கடைபிடித்தால்
பாவம் பறந்திடும்
பரிசுத்தம் வந்திடும்
பரலோகம் கிட்டிடும் – என்னும் உண்மையினை
எளிய நடையில்
புதுமை படிக்கட்டுகளாக்கி
புதுக்கவிதை தந்து, அனைவரும்
படிக்கட்டுமே, படித்து மகிழட்டுமே
துடிக்கட்டுமே உள்ளுணர்வு,
கிட்டட்டுமே பரிசுத்தம்,
எழுந்து பிரகாசிக்கட்டுமே
இளையவர் கூட்டம் என
கவிதை படைத்த சேவியரை
மனதாரப் பாராட்டுகிறேன்.
“மனந்திரும்புங்கள்
மனிதராகுங்கள்
உள்ளத்தால் உள்ளவராகுங்கள்”
எனும் நற்செய்தியைப் பரப்பிட
புது வழியை
தேர்வு செய்த சேவியரை
வாழ்த்துகிறேன்.
“நானே வழி
நானே சத்தியம்
நானே ஜீவன்”
என மானிடர்க்கு வழிகாட்டியதோடு
வாழ்ந்து காட்டி,
தமது அடிச்சுவட்டை விட்டுச் செல்ல
விண்ணைத் துறந்து
மண்ணில் அவதரித்து
ஏழ்மையில் பிறந்து
தாழ்மையாய் மலர்ந்து;
பாவ
இருளகற்றும் ஒளியாய்
ஜீவ வழியாய்
மரண பரியந்தம்
வருத்தப்படுவோரின்
பாரம் சுமந்து, சிலுவை
மரத்தில் உயிர் துறந்து
உதிரத்தின் கடைசிச் சொட்டினையும்
நம்
பாவக்கறையினைக் கழுவிடவே
ஊற்றிக் கொடுத்து
பொல்லாங்கனால் பறிமுதல் செய்ய முடியாத
இரட்சிப்பின் சந்தோசத்தை நமக்குச் சொந்தமாக்கி
பரிசுத்தாவியின் நிறைவினால் நம்மை நிரப்பி,
தெய்வீக சமாதானத்தை
உலகிற்குத் தந்த உத்தமர்
இயேசுவின் கரங்கள்
சேவியரைக் காத்திட
வேண்டுகிறேன் கர்த்தரின் நாமத்தில்.
ஆவியின் கனி தருபவராக
புவியில் வாழ்பவரை மாற்றிட,
பரலோக வாழ்க்கைக்கு
பாதை காட்டிட சகோதரர்
சேவியர் எடுத்துள்ள முயற்சி
தொடரட்டும்
தூயவனைத் துதிக்கிறேன்.
மரணத்தின் கூர் ஒடித்து
பாதாளத்தின் திறவுகோலைக் கையிலெடுத்து
அலகைக்கு அடிமைகளாய், மரணபயத்தில்
பேடிகளாய் வாழ்ந்த மக்களை
மீட்டிடவே உயிர் துறந்து
விண்ணுலகை சிலகாலம் மறந்து,
விண்ணுலகு சென்று
மீண்டும் வருவேன்
திக்கற்றவர்களாக உங்களை விட்டுச் செல்லேன்
பரலோக பாக்கியம் தந்திடுவேன்
“வாழ்வின் இறுதிவரை உங்களோடிருப்பேன்” என
அறுதியிட்டுச் சென்றவரின் வரலாற்றை
இறவாக் காவியமாகப் படைத்த
சேவியரின் சேவையை
பாராட்டி மகிழ்கிறேன்.
நீவீர் பல்லாண்டு வளமுடன் வாழ்க
என வாழ்த்துகிறேன்.
வல்லவர் நாமம் பரவட்டும் பாரெங்கும்”
இதோ,
இறவாக் காவியத்தின்
மறவா உச்சரிப்புகள்.
இந்த உச்சரிப்புகளை
உச்சரித்து உச்சரித்து
நம்
நினைவுகளும் சிந்தனைகளும்
கிறிஸ்துவை தரிசித்துக் கொள்ளட்டுமே !.
” மன்னிப்பு
தண்டனைகளுக்கான
அனுமதிச் சீட்டல்ல.
விதையின் முடிவு
செடியின் விடிவு.
ஆடையின் சிவப்பும்
குருதியின் சிவப்பும்
இயேசுவை
சிவப்புச் சாயம் பூசிய
வெள்ளைப் புறாவாக வெளிக்காட்டியது.
உவமைகள்
அறிவுரைகளை ஏற்றிச் செல்லும்
அற்புத வாகனம்
வருகைக்குப் பின்
வாசல் பெருக்கத் துவங்காதீர்கள்.
இயேசு
சாவுக்குச் சாவுமணி அடித்தார்
வாழ்வுக்கு
வரவேற்புக் கம்பளம் விரித்தார்.
இவைகள் வார்த்தைகள் அல்ல
தேவனின் மகிமையைப் பேசுவதால்
வைரங்கள்
வைடூரியங்கள் !
சேவியரை ஆசீர்வதிக்கிறேன்.
ஆண்டவர் இயேசுவின்
உயிர்த்தெழுந்த வல்லமையினால்.