இயேசு உயிர்க்கிறார்
 

இயேசுவின் உடல்
கல்லறைக்குள்
அடைக்கப்பட்ட
மூன்றாம் நாள் வந்தது.

உயிர்ப்பேன் என்று
இயேசு
உரைத்திருந்த
மூன்றாவது நாள் வந்தது.

காவலர்கள்
கவனம் கூட்டினார்கள்
ஆர்வலர்கள்
புலன்கள் தீட்டினார்கள்.

திடீரென
பெரிய நடுக்கம் நடந்தது.
மலைகளின் தலைகளிலிருந்து
கற்கள்
புரண்டோ டின.jesus_120

பிணியாளிகள் பலரின்
அகம்
சுகமானது.

வானத்திலிருந்து
ஓர்
பேரொளி பாய்ந்தது.

அது
கல்லறைக் கதவுகளை
சொல்லாமல் திறந்தது.
காவலர்கள்
கண்மைக்காமல் வியந்தனர்.
உயிரின் ஆழம் வரை பயந்தனர்.

இதோ,
ஆச்சரியங்கள் எல்லாம்
விழிகளை அகலத் திறக்க,
இயேசு
உயிர்த்துவிட்டார்.

மரணத்தின் மதில் சுவரால்
தனியாக்கப் பட்ட
உடலும் உயிரும்
உயிர்ப்பின் கதவால் ஒன்றாயின.

இது,
உடல் உயிர்கொண்ட
சம்பவமல்ல,
மனுமகன் மகிமை கண்ட
சம்பவம்.

கிறிஸ்தவத்தின் மையம்,
மனுமகனின் உயிர்ப்பு.

இதோ
எல்லோருக்கும் முடிவுரையாகும்
கல்லறை,
கிறிஸ்தவத்துக்கு முன்னுரையாகிறது.

எல்லோருக்கும்
அவமானச் சின்னமாயும்,
வெறுப்பின் விளக்கமாகவும் இருந்த
சிலுவை,
கிறிஸ்தவத்தின்
அடையாளமாகிறது.

இயேசு,
உயிர்த்து விட்டார்.
நீதியின் சாவு நிரந்தரமல்ல
என்பது
நிரூபிக்கப் பட்டது.

ஆணிகளுக்குள் அறையப்பட்ட
இயேசுவோடு
மறைந்தன முன் பாவங்கள்.
உயர்த்தப்பட்ட மனுமகனோடு
உயிர்த்தெழவேண்டும்
நற்செயல் நாற்றுகள்.

அன்னைக்கு முதல் காட்சி

 

கதிரவன்
கடலில் குளித்துக் கரையேறி
காலைப் பயணம் துவங்கிய போது
மதலேன் மரியாளும்,
இயேசுவின் தாயாரும்
கல்லறை நோக்கி வந்தனர்.

பகலவன் உதித்த செய்தி
அறிந்த அவர்கள்
பரமன்
உயிர்த்த செய்தியை
அறிந்திருக்கவில்லை.

இதோ,
கல்லறைக் கதவு திறந்திருக்கிறது !

நம்பமுடியா கண்கள்
இமைகளை இயக்க மறுத்து,
உதடுகள்
ஒன்றையொன்று
தொட்டுக் கொள்ள தயங்கி,
ஆச்சரியம் உள்ளுக்குள்
நீர் சரிக்க வியந்தனர்.

ஓடினர்,
உள்ளே
மரணத்தின் கட்டிலில்
காற்று மட்டுமே கெட்டியாய்
கிடந்தது.

இயேசு இல்லை.

கல்லறைக் கதவருகே
ஓர்
தேவ தூதர்.
சந்தோஷச் சிறகுகளை
சுமந்திருந்தார்.

வந்தவர்களின் வினாக்களுக்கு
பரவசப் பதிலை
பகிர்ந்தளித்தார்.

இயேசுவைத் தேடுகிறீர்களா ?
அவர்
உயிர்த்து விட்டார்.
மண்ணுலகப் பணியை
முடித்துவிட்டார்.

வாடாதீர்கள்
தேடாதீர்கள்.

புன்னகையோடு
தூதன் சொல்ல,
இருவரும் இதயத்தில்
பெருமிதம் கொண்டார்கள்.

வான தூதன் விலக,
சற்று நேர மெளனமும் கண்ணீரும்
இருவரையும்
இறுக்கிக் கட்டியது.

அப்போது
அவர்கள் முன்
இயேசு தோன்றினார்.

இருவரும்
மகிழ்வின் மலையில்
விழுந்தார்கள்,
ஆனந்த அலையில் மிதந்தார்கள்.

மனிதனாய் மண்ணில் வந்த
இயேசு
கடவுளாய்
முதன் முதலாய்
கண்ணுக்கு முன் வந்தார்.

 

உயிர்ப்பு உறுதிப்படுகிறது

 

எம்மானூஸ்,
செல்லும் வழியில்
சீடர் இருவரைச் சந்தித்து
உரையாடினார் இயேசு.

அவர்கள்
அவரை அறிந்ததும்,
ஆச்சரியமானார்கள்,
ஓர்
பிரபஞ்சப் பாக்கியம் பெற்றார்கள்.

*

இன்னும் சில சீடர்களுக்கு
இயேசு
காட்சியளித்தார்,
கலிலேய மலையிலும்,
திபேரியக் கடற்கரையிலும்.

மரணத்தின் ரணத்தை
தாண்டிய
மனுமகன்
திபேரியக் கடற்கரையில்
தோன்றினார்.

பேதுரு, தோமா, நத்தனியேல்
செபதேயுவின் மக்கள்
இன்னும் இரு சீடர்
என
கூட்டமான இடத்தில்
இயேசு தோன்றினார்.

சீடர்கள்
இரவு முழுதும்
வலைகளை வீசி
தண்ணீரை மட்டுமே
பிடித்துக் கொண்டிருந்தார்கள்
மீன்கள் எதுவும்
வலைகளுக்குள் வரவில்லை.

விடியற்காலையில்
இயேசு
கடற்கரையில் தோன்றினார்.

மனிதரைப் பிடிக்க
தான் தயாராக்கிய மனிதர்
மீன்களோடு போராடுவதைக்
கண்டார்.

வெற்று வலைகளோடு
தொற்றிக் கொண்டிராமல்,
இடப்பக்கமாய்
வலை வீசுங்கள் என்றார்.

வீசினர்,
அதுவரை
மீன்களில்லா பிரதேசமாய்
தோன்றிய இடம்,
இப்போது மீன் பண்ணையாய்
மாறி விட்டிருந்தது.

வலைகளால்
பழுவைத் தாங்க இயலவில்லை.

அப்போது தான்
உருவத்தை அவர்கள்
உற்றுப் பார்த்தனர்.
ஆண்டவனைக் கண்டு
ஆனந்தப் பட்டார்கள்.

இயேசு அவர்களோடு பேசினார்,

சீமோனை அழைத்து
“நீ என்னை நேசிக்கிறாயா ”
என வினவ,

ஆம் ஆண்டவரே
என்ற சீமோனிடம்
தயக்கம்
தங்கியிருக்கவில்லை.

என்
ஆடுகளை பேணி வளர்.
இயேசு பணித்தார்.

“என்னை அன்பு செய்கிறாயா
என் அன்புச் சீடனே”
மீண்டும் வினா
சீமோனைச் சந்தித்தது.

ஆம்
என்பதை அறிந்த
ஆண்டவர் நீரல்லவா ?

சீமோன்
சற்றே சங்கடப்பட்டுச்
சொன்னார்.

என்
ஆடுகளைக் கண்காணி

மூன்றாம் முறையாகவும்
அதே கேள்வி
இயேசுவிடமிருந்து எழ,

சீடரின் விழிகள்
உப்புக் கடற்கரையில்
கண்ணீர் விட்டன.

இயேசுவே
உம்மை நேசிக்கிறேன் என்பதை
அறிவீர் அல்லவா

என் ஆடுகளை
கவனமாய் காத்துக் கொள்.
இயேசு மூன்றாம் முறையாக
சொன்னார்.

மூன்று ஆணிகளில்
தொங்கிய இயேசு
மூன்று முறை சீமோனிடம்
உறுதிமொழி வாங்குகிறார்.

சீமோனை
அருளினால் நிரப்பி
நற்செய்தி பரப்பும் பணிக்காய்
தேர்ந்தெடுத்தார் இயேசு.

சீமோனே,
இளைஞனாய் இருந்தபோது
உனக்குத் தேவையானதை
நீ
செய்தாய்.

உன் பணிக்கால முடிவில்
உன் கைகள் விரிப்பாய்
யாரோ உன்னை
இழுத்துச் செல்வார்கள்.

இறுதி வரை
உறுதியில் நில்லுங்கள்.
உறுதி உடையும் நிலை
இறுதி எனக் கொள்ளுங்கள்.
என்றார்.

 

தாழிட்ட அறையில் காட்சி

 
அரசனுக்குப் பயந்து
தனிமை அறையில்
தாழிட்டுக் கிடந்த தன்
அப்போஸ்தலர்களை சந்தித்தார்
இயேசு

அவர்கள்,
ஆளும் அரசாங்கத்தின்
தண்டனைக்குத் தப்ப
வெளிச்சத்தையே வடிகட்டும்
தாழ்ப்பாளுக்குள்
ஒளிந்து கிடந்தார்கள்.

கதவுகள் காற்றையும்
தடைசெய்யும் இறுக்கத்தில்
அடைக்கப்பட்டிருக்க,

இயேசு
அவர்கள் முன்னால்
ஒளிச் சிற்பமாய் நின்றார்.

உங்களுக்குச் சமாதானம்
என்றார்.

சீடர்களின் நரம்புகளுக்குள்
அத்தனை அணுக்களும்
சுத்தமாயின,
பயத்தின் பற்கள் பிடுங்கப்பட்டன,
தைரியத்தின் கால்கள்
திடீரென முளைத்தன.

சீடர்கள் மகிழ்ந்தனர்,
தங்கள் இயேசு
சாதாரண மனிதனல்ல,
மரணம் வந்து முத்தமிட்டதும்
சுவடு தெரியாமல்
சிதைந்து போகவில்லை !

சாவு
எல்லோருடைய சரித்திரத்தையும்
முடித்து வைக்கிறது,
இயேசுவுக்கு அது
ஆரம்பித்து வைக்கிறது.
என்று அகமகிழ்ந்தனர்.

இயேசு அவர்களிடம்,
செல்லுங்கள்
உண்மையின் வார்த்தைகளை
உலகுக்கு சொல்லுங்கள்,
நற்செய்தி அறிவித்தலை
ஆரம்பமாக்குங்கள்.
என்றார்.

தோமையார் மட்டும்
அன்று
அவர்களோடு இல்லை.

தோமையார் விசுவாசத்தில்
ஆமையானார்.
விரைவான விசுவாசம்
அவரிடம் இல்லை.
குறைந்த விசுவாசத்தால்
குறுகினார்.

சந்தேகத்தின்
சொந்தக்காரர் அவர்.
சீடர்கள் சொன்னதையும்
நம்பாமல் பார்த்தார்.

என் கண்கள் அவரைக் கண்டு
அவர்
ஆணிக் காயங்களை
என் விரல்கள்
ஆழம் பார்த்து,
அவர்
விலாக் காயத்தை என் கைகள்
ஆழம் பார்த்தால் மட்டுமே,
எனக்குள்
நம்பிக்கை பூக்கும்,
அப்போது தான் ஆசுவாசமாவேன்
தப்பாமல் நான்
விசுவாசம் வளர்ப்பேன் என்றார்.

இயேசு
பிறிதொரு நாள்,
பன்னிருவருக்கும் காட்சியளித்தார்.
தோமையாரும் இருந்தார்.

இயேசு தோமையாரை அழைத்தார்

வா,

வந்து என் கைகளின் காயங்களில்
உன் விரல்களால் தொடு.
என்
விலாவின் காயத்துள்
கைகளை இடு.
நம்பு…
அது தான் பணிவாழ்வுக்குத் தெம்பு.

என் காயங்களை தழுவு
மனச் சாயங்களைக் கழுவு
என்றார்

தோமையார் நம்பினார்,
என் ஆண்டவரே,
என் தேவனே என்று
உற்சாகக் குரலெடுத்தார்.

இயேசு
மென்மையாய் பதிலளித்தார்,
உன் கண்கள் சொன்னதால்
நம்பினவன் நீ,
இதயம் சொல்வதை
நம்புபவன் இன்னும் பாக்கியவான்.

கண்டதால் நீ விசுவசித்தாய்
காணாமல் விசுவசிப்பவன்
இன்னும் பாக்கியவான்.

 

மனிதப் பணி முடிகிறது. விண்ணேற்பு

 உயிர்த்த இயேசு
சீடரின்
உள்ளங்களில் உலாவினார்,
தூய்மையான
கருத்துக்களால் துழாவினார்.

இறந்த நாட்களின்
அனுபவப் பாடங்களில்
அலைக்கழிக்கப்பட்ட சீடர்கள்,
உயிர்ப்பின் உவகையின்
உட்கார்ந்திருந்தார்கள்.

அவர்களின் மத்தியில்
ஆண்டவர்
உறுதியான செய்திகளை
இறுதியாய் சொன்னர்.

எத்தனை அருவிகள்
கலந்தாலும்
கடல் ஒன்று தான்.

எத்தனை நாசிகள்
நுகர்ந்தாலும்
காற்று ஒன்று தான்.

எத்தனை மேகங்கள்
நகர்ந்தாலும்
வானம் ஒன்று தான்.

செல்லுங்கள்,
உயிருள்ள போதனைகளை
உடுத்திக் கொள்ளுங்கள்,
செத்த போதனைகளின்
சுடுகாட்டுச் சந்ததியினரை
பூத்திருக்கும்
புது போதனையால் கழுவுங்கள்.

உலகெங்கும்
நற்செய்தியை நம்புவோன்
பாக்கியவான்.

அவன்,
நோயுற்ற உடலிலிருந்து
நோயை பிரித்தெறிவான்,
நச்சுப் பாம்பையும்
புன்சிரிப்போடு பிடித்தெறிவான்,
பேய்களை
வன்மையாய் அறுத்தெறிவான்,
கடைசிவரை
என்னுடைய அருள் பெறுவான்.

நற்செய்தி அறிவியுங்கள்,
உண்மையின்
உலைக்களத்தை மக்களுக்கு
அறிமுகம் செய்யுங்கள்,
தீமையின்
கொலைக்களத்திலிருந்து
அவர்களை பறிமுதல் செய்யுங்கள்.

சட்டங்களின்
பாம்புத்தோலுக்குள்
பதுங்கிக் கிடக்கும்
கட்டுவிரியன்களை கண்டறியுங்கள்,
அவர்களின்
விஷப் பற்களை
போதனைகளால் பிடுங்குங்கள்.

என் போதனைகள்
ஆணிகள் அறையும்
அச்சுறுத்தல் போதனைகள் அல்ல,
நம்
தீர்ப்பிடல் கொலைக்களத்திலும் அல்ல.
அன்பே நம் தீர்ப்பு
அன்பே அனைத்திற்கும் தீர்வு.

உங்களுக்கு
என் வல்லமையின் ஆடைகளை
வழங்குகிறேன்,
மனங்களில் என்
கருத்துக்களை இருத்துங்கள்
மனிதர்களை
என் இருக்கைக்கு அனுப்புங்கள்.

சொன்னபின்,

இதோ…
சீடர்களின் கண்கள் சிலிர்க்க
உயிரோடு விண்ணுலகம்
சென்றார் இயேசு.
அங்கே
தந்தையின் அரியாசனம் அருகே
மீட்பின் மகன் அமர்ந்தார்.

இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர்கள்
இதயத்தால் தெளிவு பெற்றார்கள்.

காட்சிகள் கண்டவர்கள்
சாட்சிகள் ஆனார்கள்,
போதனைகளைப் பரப்பும்
பாதங்கள் பெற்றார்கள்.
விதையின் முடிவு
செடியின் விடிவு.

இயேசு,
மரணத்திற்கு மறுப்பெழுதியவர்.
உயிர்ப்புக்கு உரையெழுதியவர்.
அந்த சிலுவை மரம்
ஓரு சகாப்தத்தின் முதலெழுத்தானது,
கிறிஸ்துவின் உயிர்ப்பு
கிறிஸ்தவ மதத்துக்கு உதயமானது.