வாசல்

jesus_185

மதங்களின் வேர் விசுவாசத்தில் தான் மையம் கொண்டிருக்கிறது. அதன் கிளைகள் மனிதத்தின் மீது மலர் சொரியவேண்டும். மனிதத்தின் மையத்தில் புயலாய் மையம் கொண்டு சமுதாயக் கரைகளைக் கருணையின்றிக் கடக்கும் எந்த மதமும் அதன் அர்த்தத்தைத் தொலைத்துவிடுகிறது.

கிறிஸ்தவம்,
அது எப்போதுமே அன்பின் அடிச்சுவடுகளில் பாதம் பதித்து அயலானின் கண்ணீர் ஈரம் துடைக்கும் கைக்குட்டையோடு காத்திருக்கும் மதம். பல்லுக்குப் பல் என்னும் பழி வாங்கல் கதைகளிலிருந்து விலகி வாழ்வியல் எதார்த்தங்களின் கரம் பிடித்து சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வியர்வையும், குருதியும் கலந்த வேதனைப் பிசு பிசுப்பை துடைத்தெறியத் துடித்தவர் தான் இயேசு.
கடவுளினின்று மனிதனாக, மனிதனிலிருந்து கடவுளாக நிரந்தர நிவாரணமாக, உலவுபவர் தான் இயேசு.

சமுதாயக் கவிதைகளின் தோள் தொட்டு நடந்த எனக்கு ‘இயேசுவின்’ வாழ்க்கையை எப்படி எழுதவேண்டும் என்று தோன்றியது, அதை எப்படி எழுதி முடித்தேன் என்பதெல்லாம் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. இந்த படைப்பிற்குள் நீங்கள் காண்பதெல்லாம் ஒரு சரித்திரக் கதாநாயகனின் சாதனைப் பயணம் தான்.

இயேசு யார் என்பதை அறியாத மக்களுக்கு அவரை எளிமையாக அழுத்தமாக அறியவைக்க வேண்டும் என்னும் எண்ணமே இந்தப் படைப்பு உருவாகக் காரணம்.

தோப்புக்குத் தெரியாமல் குருவிக்குக் கூடுகட்டிக் கூட கொடுக்காத ஒரு சமுதாயத்தினரிடம்,
‘நீ வலக்கையால் செய்யும் தானம் இடக்கைக்குத் தெரியவேண்டாம்’ என்று அன்பின் ஆழத்தை அகலப்படுத்துகிறார்.
எதிரியை நேசி – என்னும் அறிவுரையால் அன்பை ஆழப்படுத்துகிறார், 
இன்னும் இதயம் தொடும் ஏராளம் அறிவுரைகளை அளித்து அன்பை நீளப்படுத்துகிறார்.

0

சாரத்தைத் தொலைத்துவிட்ட
உப்பும்,
ஈரத்தைத் தொலைத்து விட்ட
மனசும்,
உபயோகமற்றுப்போன உதிரிகள்.

0

உன் வார்த்தைகளுக்குள்
செயல்களின் சுடரை ஏற்றி வை.
விளக்குக்குத் திரியிட்டு
திரிக்குத் தீப் பொட்டிட்டு,
அதை
மூடிவைப்பது முட்டாள் தனம்…

0

விபச்சாரம்
உடல்சார்ந்த வன்முறை
மட்டுமல்ல.
இச்சைப் பார்வையின் மிச்சம்
விபச்சாரத்தின் எச்சமே…

0

அயலானுக்காய்
நீ
தொங்க விடும்
தராசுத் தட்டில் தான்,
உனக்கானதும் நிறுக்கப்படும்.

0

தீமையின் நெடுஞ்சாலையை
நிராகரியுங்கள்,
நன்மையின் ஒற்றையடிப்பாதையை
கண்டு பிடியுங்கள்.

0

என்று சின்ன சின்ன வார்த்தைகளால் அவர் சொன்ன போதனைகளுக்குள் ஒரு சமுத்திரத்தின் ஆழம் ஒளிந்திருக்கிறது.
சின்ன வரிகளுக்குள் ஒரு சீனச் சுவரே சிறைப்பட்டிருக்கிறது

இந்தப் படைப்பு, என் கவிதைத் திறமையை சொல்வதற்காய் செய்யப்பட்ட ஒரு படைப்பு அல்ல. விவிலியம் ஒரு கவிதை நூல் தான். அதை முறைப்படுத்தி, எளிமையாய் புதுக்கவிதையில் இறக்கிவைத்திருப்பது மட்டுமே நான் செய்த பணி.

பைபிளின் பழைய ஏற்பாடுகளில் ஆண்டவர் மேகம், இடி மின்னல் , தீ என்று இயற்கைக்குள் இருந்து மனிதனிடம் நேரடியாய் பேசுகிறார். புதிய ஏற்பாட்டில் இயேசுவாய் அவதாரம் எடுத்து மனிதரோடு பேசுகிறார். நம்பிக்கை, அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, புதுமை என்று இயேசு தொடாத இடங்கள் இல்லை எனலாம்.

தீவிழும் தேசத்தில் இருந்துகொண்டு அவர் விதைத்த விசுவாச விதைகள் இன்னும் என் வியப்புப் புருவங்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வரவில்லை.  காலம் காலமாய் அடையாளங்களோடு வாழ்ந்து வந்த மதங்களின் அஸ்திவாரங்களில் கடப்பாரையாய் இறங்க அவரால் எப்படி இயன்றது ? சர்வாதிகாரிகளின் அரசபையில் எப்படி அவரால் சத்தமிட இயன்றது ? ஒதுக்கப்பட்டவரோடு எப்படி அவரால் ஒன்றிக்க இயன்றது ? எதிர்த்து நின்ற அத்தனை மக்களைளோடும் ‘பாவமில்லாதவன் முதல் கல் எறியட்டும்’ என்று எப்படி அவரால் சொல்ல முடிந்தது, ஆணிகளால் அறையப்பட்டு வலியோடு எப்படி பயணம் முடிக்க முடிந்தது. அத்தனை கேள்விக்கும் ஒரே பதில் ‘அவர் இயேசு’ என்பது தான்.

சாதாரணக் கவிதைகளை மட்டுமே எழுதிப் பழக்கப்பட்ட என் விரல்கள் ஒரு இறைமகனை எழுதியதால் இன்று பெருமைப் படுகிறது. ஆனால் இந்தப் பெருமை எல்லாம் என்னைச் சேராது என்னும் எண்ணம் மட்டுமே என்னை மீண்டும் இறைவனில் ஆழமாய் இணைக்கிறது.

இந்தப் படைப்பைப் தொடராய் வெளியிட்ட நிலாச்சாரல் இணைய தளத்தின் ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நான்கு ஆண்டுகளாக இந்தப் படைப்பை புத்தக வடிவில் பார்க்கவேண்டுமென்று நான் செய்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் முளைத்தபோதெல்லாம் எனக்கு ஆதரவாய் நின்ற இறைவனுக்கும், ஆறுதலாய் நின்ற பெற்றோருக்கும், தோள்கொடுத்து நின்ற துணைவிக்கும், ஊக்கம் தந்த உடன்பிறப்புக்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.

இயேசுவின் சமகாலத்தில், அவர் மடியில் தவழ்ந்த குழந்தைகளில் ஒன்றாய் வாழ இயலாமல் போன வருத்தம் நம்மில் பலருக்கும் இருக்கக் கூடும், அதற்கு அவரே சொல்லும் ஆறுதல் ‘என்னைக் காணாமல் விசுவசிப்பவன் பேறுபெற்றவன்’.